லூக்கா 23 : 39-43                                26 மார்ச், 2020-வியாழன்

“சிலுவையில் தொங்கின குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துதானே! உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரைத் தூஷித்தான்.” – லூக்கா 23 : 39

கொள்ளையடித்தல், திருட்டு, வழிப்பறி என பாவச் செயல்கள் உலகெங்கும் பெருகிவிட்டன. நாட்டின் சட்டங்களும் சிறைச்சாலைகளும் வருந்தும் அளவிற்கு குற்றவாளிகளும் பெருகிவிட்டார்கள். குற்றம் செய்தல் பற்றிய மக்களுடைய மனநிலை பெரிய அளவில் மாறுதல் அடைந்துவிட்டதை இது காட்டுகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிய பொழுது அவரது இருபக்கங்களிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்ட இரு கள்ளர்கள் அறையப் பட்டிருந்தார்கள். இவ்விருவரும் சிலுவையில் இயேசுவை குறித்து பேசிக்கொண்டே தொங்கினர். ஒருவன் இயேசு எந்த குற்றமும் செய்யாதவர். ஆனால் அவர் தண்டிக்கப்படுகிறாரே என்று அவருக்காக கவலைகொள்கிறான். மட்டுமல்ல தனக்குக் கிடைத்த தண்டனைக்கு தான் முழுமையாகத் தகுதியுடையவன் என்பதையும் ஒப்புக்கொண்டான். இன்னொரு கள்வனோ இயேசுவை இகழ்ந்தான். நீர் எங்களைச் சிலுவையிலிருந்து விடுவிக்கலாமே என்று பரிகாசம் பண்ணினான். ஆனால் மற்ற கள்ளனோ தனக்கு பரலோகத்தில் இடம்வேண்டும் என்று இயேசுவிடம் வேண்டிக்கொண்டான்.

தன்னிலை உணர்ந்து நான் குற்றவாளி என்பதையும் அறிக்கை செய்து, மன்னிப்பு கேட்ட குற்றவாளியான கள்ளனுக்கே பரதீஸில் இடம் கொடுத்தார் இயேசு கிறிஸ்து. இந்தத் தவக்காலங்களில் நாம் அனைவரும் குற்றங்களை உணரவும் அறிக்கையிடவும் மனந்திரும்பவும் கடவுள் விரும்புகிறார். நம்மில் காணப்படும் அத்தனை கள்ளத்தனங்களும் மாறிப்போகட்டும்.

கள்ளக் கணக்குகள், கள்ளக் கையெழுத்துக்கள், கள்ளத் தொடர்புகள், கள்ள ஆவணங்கள் அனைத்தும் நம்மைவிட்டு நீங்கிட சிலுவையண்டையில் வருவோம். மன்னிப்பைப் பெறுவோம். கள்ளனுக்கு கிடைத்த கிருபையும், இரட்சிப்பும் நமக்கும் கிடைக்கும். இயேசுவின் கிருபை நம்மை வாழ்விக்கும். சிலுவையண்டை வருவோம். கிருபையாக வாழ்வுபெறுவோம்.

மன்னிக்கிற கடவுளே, உண்மையின்றி நேர்மையின்றி, ஒழுக்கமின்றி வாழும் எங்களை கண் பார்த்து மன்னியும், இரட்சியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.