யோவான் 19 : 32-37                                 25 மார்ச், 2020-புதன்

“ஆகிலும், போர்ச்சேவகரில் ஒருவன் அவர் விலாவில் ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிப்பட்டன.” – யோவான் 19 : 34

இரத்தம் என்பது மாம்சத்தின் உயிர் என்று திருமறை கூறுகிறது. இரத்தத்தை சாப்பிடக்கூடாது என்றும் ஆத்ம பிராயச்சித்தம் செய்ய இரத்தம் பயன்படுத்தபட வேண்டும் எனவும் திருமறை விளக்குகிறது.

இயேசுவின் பாடுகளில் அவரது உடலில் இருந்து சிந்தப்பட்ட இரத்தம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சாட்டை அடிகள் இயேசுவின் உடலை கிழத்தபோதும், கை கால்களில் ஆணிகள் அடிக்கப்பட்ட போதும், தலையில் முட்கிரீடம் தைக்கப்பட்டபோதும், அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்பட்ட வேளையிலும், இயேசுவின் இரத்தம் இம்மண்ணில் சிந்தப்பட்டது.

இயேசுவின் இரத்தத்தினாலேயே ஒருவன் நீதிமான் ஆக்கப்படுகிறான். இயேசுவின் இரத்தம் சகல பாவமும் நீங்க நம்மைச் சுத்திகரிக்கிறது. இயேசுவின் இரத்தத்தை நிந்திக்கிறவன் ஆக்கினைத் தீர்ப்பைப் பெறுகிறான். இறைவார்த்தைகள் இவற்றைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும் ரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்பதை நினைத்துக்கொள்வோம். இயேசு கிறிஸ்துவின் இந்த இரத்தம் விசுவாசத்தில் திருவிருந்தில் நமக்கு அருளப்படுகிறது. இயேசுவின் திருவிருந்தில் பங்குபெறுவது நமக்கு கிடைத்திருக்கும் மாபெரும் பாக்கியமே!

இயேசுவின் இரத்தம் நம்மை இக்காலத்தில் சுத்திகரிக்கட்டும். பாவம் நீங்கிட கழுவப்படுவோம். இந்தத் தவக்காலம் நம்மை நித்திய வாழ்வுக்கு ஆயுத்தம் செய்கிற காலமாயிருக்க கடவுளிடம் மன்றாடுவோம்.

உயிர் காக்கும் காவலனே! கடவுளே! உமது குமாரனின் இரத்தம் சிந்துதலுக்காய் தோத்திரம். அந்த இரத்தினால் எங்களை தூய்மையாக்கும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்!