மாற்கு 15 : 33-41                                  14 மார்ச், 2020-சனி

“…எதிரே நின்ற நூற்றுக்கதிபதி அவர் இப்படி ஜீவனை விட்டதைக் கண்டபோது : மெய்யாகவே இந்த மனுஷன் தேவ குமாரன் என்றான்.” – மாற்கு 15 : 39

இயேசுவின் சிலுவையின் அடியில் காணப்பட்ட சிலரில் நூற்றுக்கதிபதியும் ஒருவராகும். நூறு சேவகர்களுக்கு அதிபதியான இவர் ரோமப் பேரரசின் பொறுப்பில் இருந்தவர். இயேசு சிலுவையில் தொங்கும் நிலையைச் கண்டு மனம் நொந்தார். இயேசு சிலுவையில் இருந்து பேசிய வார்த்தைகள், அவரது பொறுமை, சகிப்புத்தன்மை துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் உறுதி இவைகள் நூற்றுக்கதிபதிக்கு வியப்பைக் கொடுத்தன.

மேலும் சிலுவையில் அறையப்பட்டவர்கள் மரணம் அடைவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். அவர்கள் தப்பித்துவிடாதபடிக்கு காவலும் போடப்படும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட அன்றே உயிர் பிரிந்தது நூற்றுக்கதிபதிக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்திருக்க வேண்டும். இயேசு தாமே உயிரை பிதாவிடம் ஒப்படைத்தார் என்ற உண்மையை அறிந்த நூற்றுக்கதிபதி இயேசு உண்மையாகவே அவர் தேவ குமாரன் என்று அறிக்கையிட்டார். நூற்றுக்கதிபதி இறைவனுக்கு பயந்து வாழ்ந்தவர். அனைத்து சிலுவை நிகழ்வுகளையும், கல்வாரி மலையில் நடந்த செயல்களையும் நேரில் பார்த்துக்கொண்டு இருந்தவர். சிலுவையைப் பற்றிய நினைவுகளும், சிந்தனைகளும் நம் உள்ளத்தில் மலரட்டும். தியானம் ஆகட்டும். இயேசுவே தேவ குமாரன் என்று தவக்காலத்தில் ஓங்கி அறிக்கை செய்வோம். தேவ குமாரன் அருள் நம்மோடு இருந்து இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா, அவரே தேவகுமாரன் என்று விசுவாசத்தில் வாழ உதவட்டும்.

எங்கள் உயிரே ஜீவனே! கடவுளே! எங்கள் ஜீவன் உமது கரத்தில் இருக்கிறது. அதை உம்முடைய கரங்களில் ஒப்புவிக்கும் நாள்வரை காத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில்! ஆமேன்.