லூக்கா 22 : 54-62 08 மார்ச், 2020-ஞாயிறு
“அப்பொழுது ஆண்டவர் திரும்பிப் பேதுருவை நோக்கிப்பார்த்தார்….” – லூக்கா 22 : 61
பேதுருவின் இயற்பெயர் சீமோன் என்பதாகும். விசுவாசத்தில் அவன் பாறை போன்றவன் என்பதால் பேதுரு (பாறை) என்று இயேசு அவனை அழைத்தார். இயேசுவின் சீடர்களில் முதல் மூன்று சீடர்களில் ஒருவராக எண்ணப்பட்டார். உயிருள்ளவரை இயேசுவை பின்பற்றி இயேசுவைப்போல் சிலுவையிலே தலைகீழாகத் தொங்கி மரணம் அடைந்தார். யார் இயேசுவை விட்டு பின்வாங்கிப் போனாலும் நான் பின் வாங்கிப் போக மாட்டேன் என்று உறுதியாய் கூறினாவர் பேதுரு. இயேசு ஒருபோதும் தன் பாதங்களைக் கழுவக் கூடாது என்று மறுத்தவர் பேதுரு. இயேசு கைது செய்யப்பட்டபோது அவருக்காக பட்டயத்தை எடுத்து வெட்டியவர் பேதுரு.
இப்படிப்பட்ட வைராக்கியமும், பக்தியும் உடையவர்கள் சில வேளைகளில் மாறி விடுவதுண்டு. இவர்கள் விசுவாசத்தை விட்டு விடும் சூழ்நிலைக்கும் வந்து விடுகிறார்கள். இன்று பேதுருவை முன் நிறுத்தி தூய ஆவியானவர் நம்மை எச்சரிக்கிறார். சூழ்நிலைகள் மாறும்போது இன்று நம்மோடு இருக்கிறவர்களும் மாறிப்போவதைக் காண்கிறோம். பேதுரு இயேசுவை விட்டுத் திரும்பும் நிகழ்வு பிரதான ஆசாரியனின் அரண்மனை முற்றத்தில் நிகழ்ந்தது. இயேசுவை மூன்று முறை மறுதலித்த பேதுருவை இயேசு திரும்பிப் பார்த்தார். அந்தப் பார்வை பேதுருவின் பாவங்களை அவனுக்கு உணர்த்தின. மனம் வருந்தினான் மனந்திரும்பினான். இயேசுவின் பார்வையில் அவனுக்கு மன்னிப்பும் கிடைத்தது.
இந்த தவக்காலத்தில் நாம் எங்கே இருக்கிறோம்? எப்படி இருக்கிறோம்? இயேசு நம்மைத் திரும்பிப் பார்கிறார். அவரது பார்வையில் அன்பும், மன்னிப்பும் இறங்கி வருகிறது. இயேசுவை விட்டுத் திரும்பியவர்கள் அவர் முகமாய் திரும்புவோம். புது ஆற்றல் பெறுவோம். புது வாழ்வு வாழுவோம்.
பாவிகளை நேசிக்கிற இறைவா! எங்கள் துரோகங்களையும், மறுதலிப்புகளையும் எண்ணாமல் நீர் எங்களை நோக்கிப் பார்த்து மன்னியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
