1 தீமோத்தேயு 1 : 12-15                                            28 பிப்ரவரி, 2020-வெள்ளி

“…நான் அறியாமல் அவிசுவாசத்தில் அப்படிச் செய்த படியினால் இரக்கம் பெற்றேன்.” – 1 தீமோத்தேயு 1 : 13

சவுல் இஸ்ரவேலரின் பென்யமீன் கோத்திரத்தில் பிறந்தவர். மத காரியங்களில் மிகவும் வைராக்கியமாயிருந்தார். தங்களுக்கு எதிராக வருவோரை அவர் துன்புறுத்தினார். குறிப்பாக கிறிஸ்தவம் வளர்ந்து வந்த காலங்களில் அதை நசுக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தன்னுயிரை ஈந்த முதல் இரத்த சாட்சி ஸ்தேவானின் மரணத்திற்கு இவர் சாட்சியாக இருந்தார்.

கிறிஸ்தவத்தை அழிக்கத் துடித்த சவுலை இயேசு கிறிஸ்து சந்தித்தார். ‘நீ ஏன் என்னை துன்புறுத்துகிறாய்?’ என்று கேட்டார். கிறிஸ்தவர்களை துன்புறுத்துவது கிறிஸ்துவை துன்புறுத்துவதற்கு சமமா என்ற கேள்வி சவுலுக்குள் எழுந்தது. பாடுபடுகிற கிறிஸ்தவர்களோடு தன்னை இணைத்துக் கொள்கிற இயேசுவே எனது இரட்சகர் என்பதை புரிந்து கொண்ட சவுல் மனமாறி கிறிஸ்தவரானார். அன்று முதல் அவர் பிறருக்கு கிறிஸ்துவைக் குறித்தும் தன் மனமாற்றத்தைக் குறித்தும் சாட்சி பகர்ந்து வந்தார். தான் ஆண்டவரை அறிவதற்கு முந்தைய காலம் அறியாமையின் காலம் என்று கூறினார். தான் செய்த அக்கிரமம் அனைத்தும் அறியாமல் செய்தது என்று மனங்கலங்கி சொல்லி வந்தார். அவருடைய உண்மையான மனவருத்தம் அவரை ஆண்டவரிடம் சேர்த்தது. கடவுளின் இரக்கத்தினால் அவரைத் தண்டனையிலிருந்து விடுவித்தது.

எந்த அளவிற்கு கிறிஸ்தவர்களை அவர் பாடுபடுத்தினாரோ அந்த அளவிற்கு தன்னை அர்ப்பணித்தார். இன்று இதை வாசிக்கும் நாம் அறியாமல் செய்து வந்த தவறுகளை அறிந்தும் செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். தெரிந்தும் செய்கிற தவறுகளை கடவுள் மன்னிப்பாh என்றும் சிந்திக்க வேண்டும். எப்படியாயினும் பாவங்களுக்காக மனந்திரும்பி இயேசுவிடம் வருவோம். தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்லாதிருப்போம். இயேசுவில் பாவமன்னிப்பைப் பெறுவோம். நித்திய வாழ்வின் சுதந்திரவாளிகளாவோம்.

அனைவரையும் அரவணைக்கும் இறைவா! உமக்கு விரோதமாய் செய்த பாவங்களை மன்னித்தருளும். அறியாமல் செய்த தவறுகளுக்கு மனம் வருந்துகிறோம். உம் இரக்கப் பார்வையை எங்கள் மேல் வீசி எங்களை ஏற்றுக் கொள்ளும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.