யோசுவா 17 : 3-5                                12 பிப்ரவரி, 2020-புதன்

“இப்படியாக மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்…” – யோசுவா 17 : 5

தற்காலத்தில் பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவதை காண்கிறோம். ஆண்களுக்கு நிகராக பல்வேறு பணிகளில் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். தங்களுக்கு உரிய கௌரவத்தைப் பெற இன்னும் பாடுபட்டு வருகின்றனர். மோசே மற்றும் யோசுவா காலத்திலேயே தங்கள் உரிமைக்காகப் பாடுபட்ட பெண்கள் குறித்து தியானப்பகுதி குறிப்பிடுகிறது. தங்கள் உரிமைக்காக போராடியவர்கள் மனாசே கோத்திரத்தைச் சார்ந்த சிலொப்பியா குமாரத்திகள் ஆவர்.

அக்காலத்தில் நிலங்களின் மேலுள்ள உரிமையை ஆண்கள் மாத்திரமே வைத்திருந்தனர். ஆண்கள் இல்லாத குடும்பத்தின் சொத்துக்கள், பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கே போய்ச் சேர்ந்தது. இதனால் அப்பெண்களின் பெற்றோரின் பெயர் இல்லாமலாகும் நிலை ஏற்பட்டது. இதை யோசுவா கேட்டு அப்பெண்களின் சொத்துக்கள் மேலுள்ள உரிமையை அவர்களுக்கே கொடுத்தார். அவர்கள் எந்த ஆணைத் திருமணம் செய்தாலும் சொத்துக்கள் இவர்கள் பெயரிலேயே இருந்தது. ஆணையும் பெண்ணையும் சமமாக சம உரிமையுடன் கடவுள் படைத்தார். உலகை ஆளும் உரிமையை இருவருக்குமே கொடுத்தார். ஏனோ காலப் போக்கில் ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்தி தாங்களே ஏக போக உரிமையுள்ளவர்களாக்கி கொண்டனர்.

இறைவனின் படைப்பில் ஆண் பெண் இருவருமே சமம். கிறிஸ்துவுக்குள் ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை என்கிறார் பவுல். உடன் பிறந்த சகோதரிகளுக்கு சொத்தில் உரிமை இல்லை என்று எத்தனையோ சகோதரர்கள் கூறி பரம்பரைச் சொத்துக்களை அபகரிக்கும் நிலை மாற வேண்டும். நம்முடைய உரிமையை நாம் விட்டுக் கொடுப்பதில்லை. தற்காலத்தில் அரசும் நீதிமன்றங்களும் பெண்களுக்கான சொத்துரிமையை நிலை நாட்டியிருக்கின்றன. பெண்ணுரிமைகளுக்கும் முக்கியத்துவம் தருவோம். அவர்கள் உரிமையைக் காப்போம்.

கிருபை நிறைந்த கடவுளே! ஆண் என்றாலோ பெண் என்றாலோ அவரவர் உரிமைகளை பெற்றுக் கொள்ள ஏற்புடைய காரியங்களைச் செய்ய உதவும். பிறர் உரிமைகளைத் தட்டிப் பறிக்கின்ற செயலை செய்யாதபடி எங்களை காத்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.