யாத்திராகமம் 3 : 9-10 01 பிப்ரவரி, 2020-சனி
“இஸ்ரவேலராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்திற்கு அனுப்புவேன் வா என்றார்.” – யாத்திராகமம் 3 : 10
எஜமான் ஒருவரிடம் ஒரு மனிதர் வேலைக்குச் சேர்ந்து வீட்டு வேலை தோட்ட வேலை என்று அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். எஜமான் கொடுப்பதை மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொண்டார். அவருக்கு திருமணமாகி குடும்பமான பிறகும் அவரிடமே வேலை பார்த்து வந்தார். ஏற்கனவே பெற்று வந்த சம்பளமே அவருக்கு கிடைத்தது. தன் பிரச்சனையை அவர் தன் சக நண்பரிடம் சொல்லி வருத்தப்பட்டார். அவர் ‘நீ இதை உன் முதலாளியிடம் சொன்னாயா?” என்றார். இல்லை என்றார் இவர். முதலில் பேசு. பின்னர் இரண்டொரு நாள் வேலைக்குச் செல்லாதே என்று அவர் ஆலோசனை கொடுத்தார். ஆரம்பத்தில் வேலைக்காரனின் பேச்சைக் கேட்க மறுத்த எஜமானன், அவர் இரண்டொரு நாட்கள் வேலைக்கு வராததைக் கண்டு மனம்மாறினார். வேலையாளுக்குப் போதுமான சம்பளத்தைக் கொடுத்தார். பிரச்சனை தீர பேசுவது முதல்படி. மிக முக்கியமான படியுங்கூட.
இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்து வந்தனர். போதிய சம்பளமின்றி உணவின்றி, உறக்கமின்றி மிகவும் துன்புற்றுக் கொண்டிருந்தனர். இவர்கள் ஆபிரகாமின் சந்ததியார். மீட்பின் திட்டத்திற்காக கடவுள் இவர்களைத் தெரிந்தெடுத்திருந்தார். அவர்கள் கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக எகிப்துக்குப் போனார்கள். காலப் போக்கில் எகிப்து மன்னன் பார்வோன் இவர்களை அடிமைப் படுத்தியிருந்தார். கடவுள் இதைக் கண்டு மனமிரங்கி அவர்களை விடுவிக்கத் திட்டமிட்டார். அதற்காக மோசே என்பவரை அழைத்து பார்வோனிடம் பேசச் சொன்னார். பேச்சில் ஆரம்பித்த விடுதலைப் பணி பல கட்டங்களை கடந்து விடுதலையாகும் வரை சென்றது.
பிரச்சனைகள் தீர நாம் முதலில் பேச வேண்டும். அமைதியாயிருப்பதால் பிரச்சனைகள் தீர்வதில்லை. குடும்பப் பிரச்சனை, அலுவலகப் பிரச்சனை, சமூகப் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் பேசினால் தீரும் என்று எண்ணினால் ஏன் பேசக் கூடாது! பேசுவோம். பிரச்சனைக்குத் தீர்வு காண்போம். ஒடுக்கப்படுகிற, புறக்கணிக்கப்படுகிற அனைவருக்காகவும் பேசுவோம். அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தூண்டு கோலாயிருப்போம்.
விடுதலை நாயகரே! அடிமைத்தனத்திற்குட்பட்டு துன்புறும் மக்களுக்காக பேசவும் அவர்கள் விடுதலைக்காக முயற்சிக்கவும் எங்களை பயன்படுத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
