கலாத்தியர் 6 : 2-5 08 பிப்ரவரி, 2020-சனி
“…ஆரோனும் கூரும், ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் அவன் (மோசேயின்) கைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள்.” – யாத்திராகமம் 17 : 12
வில்லுக்குறிக்கருகே ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடும்பம். அக்குடும்பத்தின் தலைவர் திடீரென இறந்து போனார். மூத்த மகளின் திருமணம் பேசி முடிக்கப்பட்ட அந்த சூழலில் மரணம் குடும்பத்தாருக்கு பேரிழப்பாக இருந்தது. தாய் தன் மகளுடைய நிலையை எண்ணி கலங்கினாள். அக்குடும்பச் சூழலை அறிந்த அவ்வூரார், பணத்தாலும் பொருட்களாலும் உதவி செய்து அந்த மகளின் திருமணத்தை நடத்தி வைத்தனர். அக்குடும்பத்தின் பாரத்தை தங்கள் மேல் ஏற்றுக் கொண்ட அவ்வூராரின் செயல் பாராட்டப்பட்டது.
தியான வசனத்தில் ஆரோன் என்பவரும் கூர் என்பவரும் விடுதலை நாயகன் மோசேயின் கைகளைத் தாங்கிக் கொண்டிருந்ததாக வாசிக்கிறோம். எந்தச் சூழலில் அப்படித் தாங்கினார்கள் என்று பார்ப்போம். இஸ்ரவேலர் எகிப்தினின்று விடுதலைபெற்று செங்கடலைக் கடந்து வனாந்திரத்தில் பயணமாகிக் கொண்டிருந்தனர். அப்போது அமலேக்கியர் அவர்களோடு யுத்தம் செய்யப் புறப்பட்டு வந்தனர். அப்போது, மோசே யோசுவா என்பவருடைய தலைமையில் அவர்களை எதிர்த்துப் போரிடச் செய்தார். போரிட்டுக் கொண்டிருந்த சமயம் மோசே தன் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார். அப்போது இஸ்ரவேலர் எதிராளிகளை மேற்கொண்டனர். மோசேயின் கைகள் தளர்ந்து தாழ விழுகையில் அமலேக்கியர் மேற்கொண்டனர். இதைக் கண்ட ஆரோனும் கூரும் மோசேயின் கைகள் தாழ வராமல் உயர்த்தியே இருக்க தாங்கிக் கொண்டனர். இஸ்ரவேலர் முடிவில் வெற்றி பெற்றனர்.
ஒருவர் கடினப்பட்டு ஒரு பணியைச் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கு உதவியாக யாராவது வருவது நல்லது. இது அவர் பாரத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்குச் சமம். வீட்டு கஷ்டங்களில் பெற்றோரைத் தாங்கும் பிள்ளைகள் வேண்டும். சகோதரரைத் தாங்கும் சகோதரர்கள் வேண்டும். நிறுவனத்தைத் தாங்கும் ஊழியர்கள் வேண்டும். திருச்சபையைத் தாங்கும் விசுவாசிகள் வேண்டும். நம் பாவங்களை சிலுவையில் தாங்கிய இயேசு நம்மை பிறர் பாரங்களில் பங்கெடுக்க அழைக்கிறார். தாங்குவோம். தோள் கொடுப்போம். துணை நிற்போம்.
நல்ல கடவுளே! பிறர் துன்பங்களில் பங்கெடுக்கும் நல்ல பண்புகளை எங்களில் உருவாக்கும். ஒருவர் பாரங்களை ஒருவர் சுமந்து அதை நிறைவேற்ற உதவும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
