ரோமர் 6 : 20-23 13 பிப்ரவரி, 2020-வியாழன்
“…அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலில் கட்டி வைத்தாள்.” – யோசுவா 2 : 21
மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் யாரும் பயணத்தைத் தொடர விரும்ப மாட்டார்கள். எப்படியாவது அதிலிருந்து தப்பும் வழியை மட்டுமே யோசிப்பார்கள், அல்லது மிதப்பான் போன்றவை கிடைத்தால் அதன் மூலம் தப்பி விடலாம் என்ற எண்ணம் ஏற்படும்.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து பயணமாகிய கானான் நாட்டை நோக்கிச் சென்றனர். இதுதான் கடவுள் உங்களுக்கு வாக்களித்த நாடு. இதைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள் என்று மோசே கூறி விட்டு இறந்து போனார். பின்னர் யோசுவா தலைமையில் இஸ்ரவேலர் கானான் நாட்டிலுள்ள நகரங்களைப் பிடித்தனர். முதலாவது அவர்கள் எரிகோ நகரைப் பிடிக்கத் திட்டமிட்டனர். அதற்காக இரண்டு பேரை வேவு பார்க்க அந்நகருக்கு அனுப்பினர். அவர்கள் வேவு பார்த்து விட்டு அங்குள்ள ராகாப் என்ற பெண் வீட்டில் தங்கினர். அவள் அவர்களை உபசரித்து அனுப்பினாள். அப்போது தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்ற கேட்டுக் கொண்டாள். அதற்கு அடையாளமாக தன் வீட்டு ஜன்னலில் சிவப்பு நூலைக் கட்டி வைத்தாள்.
இஸ்ரவேலர் எரிகோவைப் போரிட்டுக் கைப்பற்றிய போது சிவப்புக் கயிறு கட்டியிருந்த அந்த வீட்டை விட்டு விட்டு ராகாப்பையும் அவன் வீட்டாரையும் காப்பாற்றினர். ராகாப் தன் ஊராருக்கு வர இருந்த அழிவிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாள். பாவத்தின் சம்பளம் மரணமாயினும் அதிலிருந்து தப்பும் வழியைப் பாராதவனே சாவான். இயேசு நமக்காக பாடுபட்டு சிலுவையில் இறந்து, இரட்சிப்பை சம்பாதித்திருக்கிறார். அவரை விசுவாசிக்கிறவன் பிழைப்பான், விசுவாசியாதவன் அழிவான். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். அழிவு பல நிலைகளில் நம்மை அணுகலாம். கர்த்தரின் கிருபையோ அதற்குத் தப்பும் வழியைக் காட்டுகிறது. நாம் அழிவது ஆண்டவரின் விருப்பமல்ல. வாழ்வதே அவர் விருப்பம். அதன்படி வாழும் வழியை நோக்குவோம்.
இரக்கம் நிறைந்தவரே! வருகிற அழிவிற்கு தப்பத் துடிக்கும் நாங்கள் பாவத்தினால் வரும் மரணத்தை தவிர்க்க இயேசுவை நோக்கிப் பார்க்க உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
