ரோமர் 9 : 20-22 11 பிப்ரவரி, 2020-செவ்வாய்
“பூமி தன் வாயைத் திறந்து.. கோராகுக்குரிய எல்லா மனிதரையும் அவர்களுக்குரிய சகல பொருட்களையும் விழுங்கி விட்டது.” – எண்ணாகமம் 16 : 32
பூகம்பமோ, பூமி அதிர்ச்சியோ ஏற்பட்டால் அந்த இடத்திலுள்ள அனைவரையும் கொல்லும். ஆனால் ஒரு சிலரை மாத்திரம் அது கொல்லுகிறதென்றால் அது ஆச்சரியமாக தோன்றுமே. மோசே காலத்தில் பூமி தன் வாயைத் திறந்து கோராகு என்பவரையும் அவன் கூட்டத்தாரையும் விழுங்கியது. இது ஏன் என்பது குறித்து இத்தியானத்தில் காண்போம்.
பொதுவாக ஊரில் எந்த ஒரு நல்ல காரியம் நடைபெற்றாலும் அதை ஒன்றிரண்டு பேர் எதிர்த்துக் கொண்டே இருப்பர். தங்களை மீறி எதுவும் நடக்கக் கூடாது என்ற சுயநலமே இதற்குக் காரணம். வேறு எந்த காரணமும் இதற்கு இராது. மோசேயும் அவர் சகோதரர் ஆரோனும் இஸ்ரவேலரை வழிநடத்தி வந்ததைக் கண்டு கோராகு என்பவரும் அவரைச் சார்ந்த ஒரு சிலரும் பொறாமை கொண்டனர். இதைக் கேள்விப்பட்ட மோசே கடவுளுக்கு முன் முகங்குப்புற விழுந்தார். பின்னர் அவர்களை விசாரிக்க கடவுளின் பிரசன்னத்திற்கு முன் வருமாறு அழைத்தார். ஆனால் வர முடியாது என்று கூறி விட்டனர். இதைக் கண்ட கடவுள் மிகவும் கோபமுற்றார். மோசே கடவுளிடம் மன்றாட அவருடைய பிரசன்னம் காணப்பட்டது. கர்த்தர் இவர்களை விட்டு விலகுங்கள். நிமிட நேரத்தில் அழிப்பேன் என்றார். மக்கள் அனைவரும் விலக பூமி பிளந்து அவர்களை தன்னகத்தே இழுத்துக் கொண்டது. அவர்கள் குடும்பத்தோடு அழிந்தனர்.
நம்முடைய செயல்களை ஒருவருக்கொருவர் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம். இறைவனின் ஏற்பாட்டை யாருமே எதிர்க்கக் கூடாது. மோசேயும் ஆரோனும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள். எந்த ஒரு காரணமும் இன்றி எதிர்த்த கோராகு கூட்டம் மடிந்தது. இறை ஊழியத்தையும் ஊழியர்களையும் மதிப்போம். குறை சொல்லாதிருப்போம். குற்றம் காணாதிருப்போம். பொறாமை கொள்ளாதிருப்போம். கடவுளின் கோபம் நம்மேல் வரும் என்ற பயத்தோடு வாழுவோம்.
சர்வவல்ல கடவுளே! உமது திருப்பணியைச் செய்ய நீர் பலரை அழைத்திருக்கிறீர். அப்படி அழைக்கப் பட்டவர்களை எதிர்த்துச் செயல்படாதபடி எங்களை தடுத்தாட்கொள்ளும். ஊழியங்களை ஊழியர்களை ஆதரிக்கும் நற்பண்பினைத் தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
