நம்மை விட்டு விலகாத கடவுள்
ஏசாயா 54 : 7-10 21 ஜனவரி, 2020-செவ்வாய்
“மலைகள் விலகினாலும் குன்றுகள் அசைந்து போனாலும் என் கிருபை உன்னை விட்டு விலகாமலும்…” – ஏசாயா 54 : 10
ஒருவனுக்கு பல உறவுகள் இருக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் உறவு அவன் மனைவி மட்டுமே. இது ஒரு பெண்ணுக்கும் பொருந்தும். விலகாத இணை பிரியாத இலட்சிய தம்பதிகளாக சாகும்வரை வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் உண்டு. அது போல சிறுசிறு தவறுகளுக்கும் விலகிச் செல்லும் கணவன் மனைவியரும் உண்டு. திருமணமான சில நாட்களிலே பிரிந்து கடைசி வரை சேராத தம்பதியரும் உண்டு.
ஆனால் நம்மை விட்டு ஒரு போதும் விலகாத உறவு உண்டென்றால் அது இறை உறவே. இறைவன் கூறுவதுதான் நமது தியானபகுதி. மலைகள் குன்றுகள் நிலைபெயர்ந்தாலும் அவருடைய கிருபை நம்மை விட்டு விலகாது என்பதே. மலைகள் குன்றுகள் பொதுவாக நிலை மாறாமல் உறுதியாக நிற்பவை. பூமியதிர்ச்சியில்கூட குன்றுகள் அதிகம் அசைவதில்லை. அப்படி அசையாதவை அசைந்தாலும் என் கிருபை விலகாது என்கிறார் கடவுள்.
இஸ்ரவேலர் தண்டிக்கப்பட்டு சிறையிருப்புக்கு சென்றது கர்த்தரின் கிருபையின்மையினால் அல்ல. அது அவர்கள் பாவங்களின் விளைவு. தமது மக்கள் தண்டிக்கப்படுவது கடவுளின் விருப்பமுமல்ல. அவர்கள் பாடம் கற்றுக் கொள்ள சிறையிருப்பு சரியான இடமாக அமையும் என்று கடவுள் நம்பினாதாலேயே இது நிகழ்ந்தது. இருப்பினும் தன் கிருபையை விலக்காத கடவுள் அவர்களை விடுவித்தார். அரவணைத்துக் கொண்டார். ஆசீர்வதித்தார். தம்மோடுள்ள உறவில் பலப்படுத்தினார். உலகமே நம்மை வெறுத்து ஒதுக்கினாலும், கைவிட்டாலும், கைவிடாத கடவுள் நமக்கு உண்டு. நமக்கு பலமாக இருக்கும் என்று நாம் எண்ணுகிற நமது ஆஸ்திகளோ அதிகாரங்களோ எப்போதும் நம்மிடம் இருப்பதில்லை. அவற்றால் நமக்கு ஒருபோதும் நிலையான பாதுகாப்பான வாழ்வைத் தர முடியாது. எப்போதும் நம்மோடு இருக்கும் இறைவனைப் பற்றிக்கொண்டு உறுதியாக வாழ்வோம்.
கைவிடாத இறைவா! இவ்வுலக உறவுகள், செல்வங்கள் எங்களைக் கைவிட்டாலும் நீர் எங்களைக் கைவிடுகிறதில்லை. உமது உறவில் மகிழ்ந்து உம்மோடு எப்போதும் வாழும் பாக்கியத்தை எங்களுக்கு அருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
