அப்போஸ்தலர் 17 : 22-24 20 நவம்பர், 2019 புதன்
“…அறியப்படாத கடவுளுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்…” – அப்போஸ்தலர் 17 : 23
கிரீஸ் நாட்டில் ஏதென்ஸ் அறிஞர்கள் நிறைந்த நகரம், ஆயினும் இங்கேயும் மூடநம்பிக்கை இருந்தது. தாங்கள் தொழுது கொள்வது இன்னது என்று அறியாமல் தொழுகை செய்வது மூடநம்பிக்கைதானே! கடவுள் உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தவர். மானிடர் அனைவரையும் படைத்தவர்! அவர் நமக்குத் தூரமானவரல்ல!
நாம் அவருக்குள் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். யாவரும் மனம் திரும்பி கடவுளிடம் வரவேண்டும் என்று பவுல் மூட நம்பிக்கையில் இருந்த ஏதென்ஸ் நகர் மக்களுக்குப் பிரசங்கித்தார். பவுலின் பிரசங்கத்தின் வழியாக இயேசுவின் இரட்சிப்பைப் பற்றிப் புரிந்து கொண்ட சிலர், ஏதென்ஸ் நகரில் இயேசுவின் விசுவாசிகளானார்கள். நமது காலத்திலும், ஒரு சிலர் தவிர யாவரும் கடவுளை வழிபடுகின்றனர். ஆனால், `வழிபடு கடவுளின்’ பண்பு, செயற்பாடு போன்றவை எதுவும் அறிந்து கொள்ளாமல் அவரை வழிபடுவது எப்படி? கடவுளைக் குறித்து, ஒருவர் ஒன்றுமே அறியவில்லை என்றால், `கடவுள் பலி, பீடம்’ இவற்றிற்கு அவசியம் இல்லையே.
என்னை நினைத்துப் பார்த்தேன். எனது வழிபாடு அர்த்தமுள்ள தொழுகை! ஏனென்றால் நான் வணங்கி ஆராதிக்கும் கடவுள் இன்னார் என்று அறிவேன். அவர் தன்னை `பங்கு பங்காக வகை வகையாக’ நான் அறியப் பண்ணியிருக்கிறார். அவர் என் தந்தை, நான் அவர் பிள்ளை. அவர் என்னை நேசிக்கிறார், யாவரையும் நேசிக்கிறார். நான் அவர் பார்வையில் அருமையானவன். என்னை அனுதினமும் போஷித்துக் காத்து வருகிறார். இம்மையிலும், மறுமையிலும் மனிதர் இன்பமாய் வாழ வழி வகுத்தவர் நான் ஆராதிக்கும் கடவுள். மனிதனின் இகபர வாழ்வுக்குத் தடையாக இருக்கிற மனுக்குலத்தின் பாவத்தை மன்னிக்கிறார் கடவுள். மனுக்குலத்தின் பாவத்தை, நிரபராதியான தமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் மீது சுமத்தினார். அவரைச் சிலுவையில் மரிக்கும்படி செய்தார். கடவுளின் நீதியில் அவர் மனுக்குலத்தின் மீது கொள்ளும் உன்னத அன்பு வெளிப்படுகிறது.
எத்தனையோ பேர் தாங்கள் வழிபடும் கடவுள் இன்னார் என்பதை அறியாமல் வழிபடுகின்றனர். பாரம்பரியம், குடும்ப ஒழுங்கு, கிராமக் கட்டுப்பாடு, ஜாதி ஒழுக்கம் என்று பல காரணங்களைச் சொன்னாலும், நீங்கள் அறியாத கடவுளை-தன்னைப் பற்றி அறிவிக்காத கடவுளை, யாராலும் அறியப்படாத கடவுளை வழிபடலாமா? இதில் என்ன பயன்? உங்களை நேசிக்கும் கடவுளை அறிந்து கொள்ளுங்கள். அவரையே வணங்கி ஆராதித்துப் பயன் அடைந்து வாழ்வீர்.
அன்பு நிறைந்த கடவுளே! இன்னும் உம்மை நான் அதிகமாய் அறிந்து கொள்ளக் கிருபை செய்யும். உம்மையே வணங்கிச் சேவித்து இம்மையிலும் மறுமையிலும் இன்ப வாழ்வு பெற அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.
