சங்கீதம் 41 : 1-4                                      18 நவம்பர், 2019 திங்கள்

“…நாங்களும் உங்களைப் போன்ற தன்மையுள்ள மனுஷர்தானே….” – அப்போஸ்தலர் 14 : 15

நமது தியான வசனத்தின் சந்தர்ப்பத்தைக் கவனிப்போம். பவுலும், பர்னபாவும் லிஸ்தீரா என்ற ஊரில் இருந்தனர். கால் ஊனமடைந்த ஒருவரைக் குணமாக்கினார் பவுல். ஜனங்கள் இதைக் கண்டு `தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கிறார்கள்’ என்று கூக்குரலிட்டனர். அவர்களின் கால்களில் விழுந்தனர். அவர்களுக்குப் பூசை செய்யத் துவங்கினர். இந்த நேரத்தில் தான் பவுல் தியானப்பகுதி வரியைச் சொன்னார்.

ஆளுகை செய்தல், பிரசங்கித்தல், கற்பித்தல், சுகமளித்தல், பகிர்ந்தளித்தல் எல்லாமே கர்த்தர் நமக்குக் கொடுத்த ஆவியின் வரங்கள். `உன்னைக் குணமாக்கும் கர்த்தர் நானே’ என்று கடவுள் சொல்கிறார். கடவுளின் அன்பு, இரக்கம், கரிசனையை மக்கள் விளங்கிக் கொள்ள வியாதியஸ்தர்களை இயேசு குணமாக்கினார். குணமானவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்தினர். இயேசுவின் சீஷர்களுக்கும் இந்த வரம் தரப்பட்டது. அப்போஸ்தலர்களும், `இயேசு உன்னைக் குணமாக்குகிறார்’ என்று ஜெபம் செய்து, கைவைத்து குணப்படுத்தினர். தங்களை விளம்பரம் செய்ய, தங்களுக்கு ஆதாயம் தேட, `குணமாக்கும் ஊழியத்தை’ புதிய ஏற்பாட்டு காலத்தில் எவரும் பயன்படுத்தவில்லை. தூய ஆவியானவரின் வரங்களில் குணமாக்குதலும் ஒன்று. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியைக் குணமாக்கும்! விசுவாசத்துடன் ஜெபிக்கிற மக்கள் குணப்படுத்தும் மக்கள். குணமாக்கும் வகைகளில் ஒன்று ஜெபம். மனோதத்துவத்தால், மருத்துவத்தினால் என்று பலமுறையில் குணமாக்குதல் நடைபெறும். ஆனால் குணமாக்குகிறவர் கர்த்தர். இதற்கு ஊடகமாக, காரணமாக இருக்கும் மனிதன் பெருமைப்படுவது ஒருவகை தீய சலனமே.

குணமாக்கிட, கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஊழியக்காரன் தன்னை முன்நிலைப்படுத்துவது பாவமே. இந்த வரமுடையவர்கள் தங்களைத் தெய்வங்களாக்க முயல்கிறார்கள். குணமாக்கும் வரம் இல்லாதவர்களைக் குறைவாக மதிக்கிறார்கள். குணமாக்கும் ஊழியத்தின் வழியாக மக்களின் கவனம் கடவுள் பக்கம் திருப்பப்பட வேண்டும். பெருமையால் சலனப்பட்டு, அவரது வல்ல செயல்களை, சுய லாபத்திற்கும் புகழுக்கும் பயன்படுத்தல் பாவம். இயேசு குணமாக்குகிறார் என்ற விசுவாசத்தை வளரச் செய்தலே ஊழியத்தின் மேன்மை. இந்த ஊழியத்தினால் புறப்படும் துதியும், கனமும் அவருக்காக இருத்தல் வேண்டும். பிற தொழில்கள் செழிப்படைய `குணமாக்கும் ஊழியத்தை உபதொழிலாக்குவதும்’ பாவந்தானே.

எங்கள் பரம வைத்தியரே! பரம பிதாவே! திருச்சபைக்கு நீர் பகிர்ந்தளித்திருக்கும் பலவகை வளங்களுக்காக, குறிப்பாக குணமாக்கும் வரத்திற்காக நன்றி செலுத்துகிறோம். இந்த வரம் உள்ளவர்கள் தங்களை உயர்த்துகிற தீமையிலிருந்து எமைக் காத்தருளும். குணமாக்கும் ஆண்டவர் இயேசு வழியே. ஆமேன்.