சங்கீதம் 38 : 10-12                                      13 ஜனவரி, 2020-திங்கள்

“…உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்…” – சங்கீதம் 32 : 8

அரசர்கள் காலத்தில் அரசவையில் பல மந்திரிகள் இருப்பர். படைத்தலைவர் இருப்பார். இவர்களோடு அரச குழு என்ற ஒரு குழுவும் இருக்கும். பல்வேறு துறைகளில் உள்ள அறிவிற்சிறந்தோர் இக்குழுவில் இடம்பெற்றிருப்பர். அரசர் இக்குழுவின் ஆலோசனையை அவ்வப்போது கேட்டு அதன்படி அரசாட்சி செய்வார். ஒரு அரசனை அல்லது நாட்டை வாழ வைக்கவும் அழிக்கவும் இந்தக் குழுவால் முடியும். அரசாட்சி முறையில் இந்த குழுக்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

நல்லாலோசனை கிடைத்தால் அரசாட்சி சிறந்து நிற்கும். தீய ஆலோசனைக்கு செவிமெடுத்தால் அழிந்து போகும். நமக்கு ஆலோசனை தருகிற அனைவரும் நல்லவர்கள் அல்ல. அவர்கள் ஆலோசனையில் சில சமயங்களில் சுயநலம் கலந்திருக்கும். அது நம்மை தாழ்வடையச் செய்யும்.

ஒருவர் ஒரு வயலை வாங்க முடிவு செய்து தன் உறவினர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். வயலைப்பார்த்த உறவினர் அந்த வயலை தான் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி அதை வாங்க வேண்டாம் என்று ஆலோசனை கூறினார். இவரும் விட்டு விட்டார். சில காலங்களுக்குப் பின் உறவினர் அந்த வயலை வாங்கி விட்டார் என்று அறிந்தார். மனிதரை நாம் நம்ப இயலாது. ஆனால் இறைவனை நம்பலாம். நம்பித்தான் ஆக வேண்டும். அவர் உன் மேல் என் கண்ணைச் சாய்த்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்கிறார்.

சங்கீதக்காரர் தாவீது கடவுளின் ஆலோசனைப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். போருக்குப் போகும் போதும் அல்லது எதையும் செய்யும்முன்னும் கர்த்தரிடமே ஆலோசனை கேட்பார். சாதகமான பதில் வரும் வரை எதையும் அவர் செய்கிறதில்லை. கர்த்தரின் ஆணைப்படி நடப்பதால் வெற்றியே வரும் என்பதை அவர் அறிந்திருந்தார்.
நாம் ஆலோசனைகாரர்களாக நமக்குப் பலரை வைத்திருக்கிறோம். நம்மீது உண்மை அன்பு கொண்டவர்களே நமக்கு நல்ல ஆலோசனைகளைத் தருவார்கள். இறைச்சித்தம் பலப்பொழுதில் இவர்கள் வழியே நமக்குப் பகிரப்படும். அப்படிப்பட்டவர்களை கர்த்தர் நமக்குத் தர கேட்டுக்கொள்ளுவோம். கர்த்தரை ஆலோசனை கர்த்தாவாகக் கொள்ளுவோம். அவர் வார்த்தைகளை கேட்போம். வெற்றியுள்ள வாழ்வு அமையும்.

ஆலோசனை கர்த்தரே! உலகில் நாங்கள் பெறும் ஆலோசனைகளில் பெரும்பான்மை நல்லவைகளல்ல. சுயநலம் மிக்கவை. இவற்றைக் கடந்து வாழ்வு சிறக்க உமது ஆலோசனைகள்படி நடக்க வழி நடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.