யோவான் 10 : 1-6 01 ஜனவரி, 2020 புதன்
“அவன் தன் ஆடுகள் எல்லாவற்றையும் வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்து போகிறான்; ஆடுகளுக்கு அவன் குரல் தெரிந்திருக்கிறபடியினால், அவைகள் அவனுக்குப் பின்செல்லும்.”
– யோவான் 10 : 4
வான்மலரின் புத்தாண்டு வாழ்த்துக்கள். இறையாசிகள்.
அமெரிக்க தேசத்தவர் சிலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தனர். அவர்களுடைய வழிகாட்டி `தங்கள் ஆடுகளை நாயின் உதவியோடு மேய்ப்பர்கள் விரட்டிக்கொண்டு, ஆடுகளுக்குப் பின்னால் மேய்ப்பர்கள் நடப்பதை, அமெரிக்கர்களாகிய நீங்கள் உங்கள் நாட்டில் பார்த்திருப்பீர்கள். இஸ்ரவேல் நாட்டில் முற்றிலும் மாறுபட்ட காட்சி கிடைக்கும். இங்கு மேய்ப்பர்கள் ஆடுகளுக்கு வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்வார்கள். பைபிள் கூறுவதுபோல ஆடுகள் மேய்ப்பனின் குரலை அறிந்திருப்பதால், அவனுக்குப் பின்னால் அவை செல்லும்’ என்றார்.
இந்த செய்தியை கேட்ட பின்பு, அவர்கள் முதலில் பார்த்த ஆட்டு மந்தையின் மேய்ப்பன், மந்தைக்கு முன்னால் செல்லவில்லை. பின்னால்தான் சென்று கொண்டிருந்தான். உடனே அமெரிக்க பயணிகள் சிரித்தனர். அவர்களது வழிகாட்டி வெட்கத்துடன் மேய்ப்பனிடத்தில் போய் `ஏன் ஆடுகளை விரட்டிக் கொண்டு பின்னால் போகிறாய்?’ என்று கேட்டான். அவர்கள் இரண்டுபேரும் பேசிக்கொண்டது அமெரிக்கர்களுக்குப் புரியவில்லை. பின்பு அவன் பயணிகளிடம் `அந்த மனிதன் மேய்ப்பனைப் போல உடை உடுத்தியிருக்கிறான். மேய்ப்பனைப்போல் தோன்றுகிறான். ஆனால் மேய்ப்பன் இல்லை. அவன் ஆடு வெட்டுபவன். ஆடுகளைச் சந்தையிலிருந்து ஓட்டிக்கொண்டு போகிறான்’ என்றான்.
இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டின் முதல் நாளில் மனுக்குலம் இரண்டு கூட்டமாகப் பிரிந்திருப்பதை அறியலாம். மீட்பரின் பின் செல்கிறவர்கள், கசாப்புக் கடைக்காரனால் விரட்டப்படுபவர்கள். இயேசுவைத் தங்கள் ஆண்டவராக அறிந்துகொண்ட மக்கள் புதிய வருஷத்தில் என்ன வந்தாலும் மனச் சமாதானத்தோடு வாழ்வார்கள். வேதனைகளும், சோதனைகளும் நிச்சயம் வரும். ஆனால் உங்களுக்கு அருகில் உங்களைப் பாதுகாக்கும் ஆண்டவர் இருக்கின்றார். அவருடைய அன்பின் அடைக்கலத்தில் நீங்கள் அவருடைய ஆடுகளாகப் புதிய ஆண்டில் நுழைந்திருக்கிறீர்கள்.
ஒருவேளை கசாப்புக்காரனால் நீங்கள் விரட்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் இன்றே இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். இது புதிய வருஷம். புதிய காலம். எல்லாவற்றையும் புதிதாக்கும் எஜமானுடன் ஆரம்பியுங்கள். அவருடைய அளவற்ற அன்பில் சார்ந்து கொள்ளுங்கள். அவர் உங்களை கரடுமுரடான பாதைகளில் பத்திரமாய்க் கடந்து செல்லச் செய்வார். அவர் எங்கு சென்றாலும் அவரோடே செல்லுங்கள். எல்லா ஆண்டுகளிலும் மிகபெரிய சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுப்பவரிடம் விசுவாசம் கொள்ளுங்கள். அவரே நூற்றாண்டுகளின் மீட்பர். மேய்ப்பராம் இயேசு இனிவரும் காலங்களில் உங்களை மேய்த்து நடத்துவாராக.
காலங்களைக் கடந்து நின்று எங்களை கருணையுடன் ஆட்சி செய்கிற கர்த்தாவே! நீர் அருளியிருக்கிற புதிய ஆண்டிற்கு நன்றி. உமது குமாரனாம் இயேசுவின் பின்னே செல்லும் அருளைத் தாரும். புதிய காலம், புதிய கிருபைகளைச் சுமந்து கொண்டு எம்மிடம் வரட்டும். என்றும் வாழ்ந்திருக்கிற இயேசு வழியே பிரார்த்திக்கிறோம். ஆமேன்.
