vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

சலனங்கள்-அச்சம்

சங்கீதம் 27 : 1-5                                12 நவம்பர், 2019 செவ்வாய்

“….பயப்படவேண்டாம். அநேக அடைக்கலான் குருவிகளிலும் நீங்கள் விசேஷமானவர்கள்.” – லூக்கா 12 : 7

அச்சம் என்ற உணர்வு, உடலில், மனதில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. உடலில் சில சுரபிகள் தேவைக்கும் அதிகமான அமிலங்களைச் சுரக்கச் செய்கின்றது அச்சம். இவர்களின் உடல்நிலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

`அச்சப்படாதீர்’ என்கிறார் இயேசு. அவரது திருப்பணியைத் தொடர்ந்து செய்யப் போகிறவர்கள் சீடர்கள். துன்பம், துயரம், பாடு, விசாரணை, மரணம் போன்ற பயங்கரமான சூழ்நிலைகள் சீடர்களுக்கு ஏற்படும். அப்போது அவர்கள் பயப்படாமல் தைரியத்துடன் ஊழியம் செய்ய, சீடர்களை இயேசு ஆயத்தப்படுத்தினார். பயப்படாதீர்கள் என்றார். பயப்படாதிருங்கள். நீங்கள் என் சந்நிதியில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். எனக்கு விசேஷமானவர்கள் நீங்கள் என்றார் இயேசு. இயேசு இப்போது உங்களைப் பார்த்துச் சொல்கிறார், `பயப்படாதீர்! என் சந்நிதியில் இருக்கிறீர். எனக்கு விசேஷமானவர். எந்தச் சூழலில் நீங்கள் இருந்தாலும் இந்தத் தியானம் வழியே இயேசு உங்கள் அருகே வந்து நிற்கிறார். சிட்டுக் குருவியிலும் சிறந்தவர்கள் நீங்கள். `நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார் இயேசு.

ஏழ்மையோ, உடல் ஊனமோ, ஜாதியோ, எழுத்தறிவின்மையோ, வயதோ, சுகவீனமோ எதையோ பார்த்து உலகம் உன்னை ஏளனம் செய்யலாம். நீயும் இந்த நிலையில் நான் எப்படி வாழப் போகிறேன்… என் பிள்ளைகள் எப்படி முன்னேறுவார்கள்… என்று தவிக்கலாம். இந்த நிகழ்கால நிலையில் இயேசு உனக்குச் சொல்கிறார், `பயப்படாதே! நீ விசேஷித்தவன்.’ சோர்ந்திருக்கிற உன்னைப் பலப்படுத்தி எழுந்து நிற்க வைக்கிறார் இயேசு. இயேசு எனக்காக மரித்தார். ஆகவே நான் சிறப்புப் பெற்றுள்ளேன். இயேசு என்னை மன்னிக்கிறார். நான் சிறப்பு விருந்தினர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறேன். நான் புதிய வாழ்வு பெற்றிருக்கிறேன். கிருபையால் மறுபடியும் பிறந்திருக்கிறேன். இதை விட வேறு என்ன சிறப்பு எனக்கு வேண்டும்? பயப்படாதே, கலங்காதே, திகையாதே சலனப்படாதே! சிறப்புப் பெற்றிருக்கிறாய் நீ. உன்னில் காணப்படும் குறைகளை மறந்து, உனக்குள் மறைந்து இருக்கும் சிறப்புகளை வெளிக் கொண்டு வர முயற்சி செய். ஆண்டவரின் பிள்ளை அச்சப்படலாகாது.

எங்கள் கடவுளே! நீர் எங்களைப் படைத்து ஜீவசுவாசம் தந்தீர். நாங்கள் விசேஷமானவர்கள். நாங்கள் சிறப்புப் பெற்றிருக்கிறோம். நாங்கள் பெற்றுள்ள சிறப்பை நினைத்துப் பார்த்து, எதற்கும் அஞ்சாத சலனமற்ற வாழ்வு வாழ்ந்திட அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

சலனங்கள்-அச்சம்2019-11-11T09:06:44+00:00

கிறிஸ்துவால் மாத்திரம்- புது நட்பு

2 கொரிந்தியர் 5 : 18-21                                     28 அக்டோபர், 2019 திங்கள்

“கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி…..” – 2 கொரிந்தியர் 5 : 18

பாவ மன்னிப்பின் அர்த்தத்தைக் காண வேண்டுமா? அவசரத்தில் ஒருவர் தவறு செய்து விட்டார். அது கண்டு பிடிக்கப்பட்டது. போலீஸ், நீதிமன்றம், சிறைவாசம் என்று தொடர வேண்டிய நிலை. தவறு செய்தவர் நிம்மதியிழந்தார். குடும்பம் நிம்மதி இழந்தது.

மனிதர்களுக்குள்ள உறவில் உண்டான விரிசல், மனிதனை நடைபிணம் ஆக்குகிறது. அப்படியானால் இறைவனோடு மனிதருக்கு உள்ள நல்லுறவில் விரிசல் ஏற்பட்டால் எத்தனை கேடுகள் விளையும்? ஆதாம் ஏவாள் பாவம் செய்தனர். ஓடி ஒளிந்தனர். மறைந்து கொண்டனர். இன்றும் மனிதன் இறைவனுக்கு எதிர் நிற்கும் போதெல்லாம் ஓடி ஒளிகிறான். இந்நிலையிலிருந்து மாற வேண்டும் என்பது மனிதனின் ஆசைதான். எந்தச் சமய சடங்குகளாலும் மனிதர் செய்த பாவத்தின் தண்டனைக்குத் தப்பிவிட முடியாது. இதனால்தான் இறைவனே வலிய வந்து உதவினார். பாவ விமோசன வழியும் ஆனார். மனிதரின் பாவங்களைத் தன் மகனாம் இயேசு மேல் ஏற்றினர். சிலுவையில் இயேசு அறையப்பட்டார். இயேசுவின் பலியைப் பரம தந்தை ஏற்றுக் கொண்டார்.

கிறிஸ்து நமது பாவப் பரிகாரி-இவர் வழியாக மன்னிக்கிற மனமுடைய தெய்வத்தின் அன்பு எனக்குக் கிடைத்தது. இப்போது இயேசுவால் நானும் தேவ பிள்ளை ஆக்கப்பட்டிருக்கிறேன். அணுக முடியாத இறைவனை உரிமையுடன் `அப்பா’ என்று அழைக்கும் உரிமை எனக்குக் கிடைத்துள்ளது. நான், நீங்கள், நாம் சிலபொழுது இதை மறந்துவிடுகிறோம். நாமே நமது இரட்சிப்பைச் சம்பாதிக்கத் திட்டமிடுகிறோம். பாவிகளாகிய நம்மைப் பரம பிதாவிற்கு ஏற்புடையவர்கள் ஆக்கிவிட்டார் கிறிஸ்து. இந்தச் செய்தியின் தாக்கம் நமது தின வாழ்வை ஆதிக்கம் செய்வது அவசியம். பாவம் நம்மை அதிகாரம் செய்யாதிருக்க, கிறிஸ்து மட்டுமே நமது ஆதாரம். பாவத்தின் தண்டனை பற்றிய பயம் நம்மை உறுத்தாமலிருக்க, கிறிஸ்துவின் சிலுவையே நமக்கு ஆறுதல், கிறிஸ்துவாம் ஆதாரத்திலும், ஆறுதலிலும் பரம தகப்பனுக்கு ஏற்புடையவர்களாக வாழுவோம்.

கருணையின் பெருக்கால் உமது நேசக்குமாரன் இயேசுவை எனது பதிலாளாகச் சிலுவை மரணத்திற்குக் கையளித்த பரமதந்தையே! உமக்கு ஸ்தோத்திரம். உமது அன்பின் பரிசை நான் அவமதித்து விடாதபடி, என் மனதில் தாழ்மையுடன் கூடிய பக்தியை, உணர்வை உருவாக்கியருளும். மரித்தும் உயிர்த்த இயேசு பெயரில். ஆமேன்.

கிறிஸ்துவால் மாத்திரம்- புது நட்பு2019-10-25T06:10:33+00:00

விசுவாசத்தினால் இரட்சிப்பு

அப்போஸ்தலர் 16 : 23-32                                    17 அக்டோபர், 2019 வியாழன்

“…ஐயன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.” – அப்போஸ்தலர் 16 : 30

பவுலும் சீலாவும் பிலிப்பி பட்டணத்தில் நற்செய்தியை முதன்முறையாக அறிவித்துக் கொண்டிருந்தனர். குறி சொல்லும் ஆவியையுடைய பெண் ஒருத்தி, அந்த ஊரில் வாழ்ந்தார். பவுலையும் சீலாவையும் இவள் பின் தொடர்ந்து சென்றாள். `இவர்கள் உன்னதமான கடவுளின் அடியார், இரட்சிப்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறார்கள்’ என்று சத்தம் போட்டுச் சொன்னாள்.

தேவையற்ற இந்த அறிமுகத்தைக் கண்டு எரிச்சலுற்ற பவுலும் சீலாவும் அவளை அதட்டினர். குறிசொல்லும் ஆவியை அவளிடமிருந்து விரட்டினர். பவுலின் இந்தச் செயல், அந்தப் பெண்ணைக் குறி சொல்ல வைத்து பிழைப்பு நடத்திய அவளுடைய எஜமானர்களுக்கு எரிச்சலூட்டியது. தங்கள் பிழைப்பில் மண்ணைக் கொட்டிய பவுலையும், சீலாவையும் சிறையிலிடச் செய்தனர். கடவுளின் அடியார் இதனால் மனம் தளர்ந்து விடவில்லை. மாறாக நள்ளிரவிலும் கடவுளைத் துதித்துப் பாடி மகிழ்ந்தனர். சிறையில் அவர்கள் விசுவாசத்தைச் சிறையிட முடியவில்லை. இரவுவேளையில் சிறையின் இரும்புக் கதவுகள் தானாய் திறந்தன. இவர்கள் கைகளில் பூட்டியிருந்த விலங்குகள் கழண்டு விழுந்தன. சிறைச்சாலைத் தலைவர் தடுமாறிப் போனார். தனது கவனக் குறைவினால் இப்படி நடந்ததோ என்று நினைத்துத் தற்கொலைக்குத் துணிந்தார். வாளை உருவினார். தன்னை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். மறுபடியும் ஒரு எதிர்பாராச் சம்பவம்! தண்டனை பெற்று, கைதிகளாக இருந்தவர்களே தனக்கு ஆறுதல் கூறும் அபூர்வ அனுபவம் பெற்றார் சிறைத்தலைவர். இவையெல்லாம் சிறைச்சாலைத் தலைவரைச் சிந்திக்கத் தூண்டியது.

இந்தக் கைதிகளின் மகிழ்ச்சியின் இரகசியம் என்ன என்று அறியத் துடித்தார் சிறைத்தலைவர். இவர் கூறிய வார்த்தைகள் இன்றைய தியான வசனம். `இரட்சிக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்’ – இரட்சிப்பு என்பதன் பொருள் புரிகிறதா? இயேசுவால் கிடைக்கும் மகிழ்ச்சியும் சமாதானமும்தான் இரட்சிப்பு. இந்த மகிழ்ச்சியும் சமாதானமும் இந்த உலக வாழ்வில் தொடங்கி நம்முடைய மரணத்திற்குப் பிறகும் நித்திய வாழ்விலும் தொடர்கிறது. நமது இரட்சிப்பிற்கு ஒரே வழி இயேசுவில் வைக்கும் விசுவாசமே. இயேசுவை விசுவாசி! நீ மட்டுமல்ல… உன்னோடு சேர்ந்தவர்களையும் விசுவாசத்துக்குள் வழி நடத்து.

அன்பின் இறைவா! நீர் எனக்குத் தந்துள்ள இரட்சிப்பின் மனமகிழ்ச்சிக்காக நன்றி. உமது நேச குமாரன் இயேசு கிறிஸ்துவில் நான் நிலைத்து வாழத் துணை புரியும். இரட்சண்யச் செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கும் மனத்துணிவையும் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

விசுவாசத்தினால் இரட்சிப்பு2019-10-16T10:22:33+00:00

திருச்சபை சீர்திருத்தல்

எரேமியா 23 : 5-6                    01 அக்டோபர், 2019 செவ்வாய்

“….கடவுளின் நீதி விசுவாசத்தில் தொடங்கி….. சுவிசேஷத்தில் வெளியாக்கப்படுகிறது.” – ரோமர் 1 : 17

15ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ நாடுகள் என்று கருதப்பட்டவைகூட `கடவுளின் வார்த்தை’யை மறந்திருந்தன. சமயச் சடங்குகள் மட்டுமே சபையில் மதிக்கப்பட்டு வந்தன. மறைத்து வைக்கப்பட்டிருந்த திருமறையின் வெளிச்சம், மார்ட்டீன் லுத்தர் என்பவர் மூலம் மறுபடியும் உலகில் ஒளி வீச இறைவன் திட்டமிட்டார். ஒரு நாளைத் தெரிந்தெடுத்தார். அது 1517ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் நாள். உலகம் எங்குமுள்ள பல திருச்சபைகள் `சீர்திருத்தல் நாள்’ என்று இதற்கு பெயர் சூட்டி, இந்த நாளைக் கொண்டாடி மகிழுகின்றனர். கர்த்தருக்கு நன்றி செலுத்துகின்றனர். திருச்சபை சீர்திருத்தலுக்கு வித்தாய் அமைந்தது கடவுளின் வசனமே. இதற்கு ஒரு கருவியாக பயன்பட்டவர் தான் மார்ட்டீன் லுத்தர்.

மார்ட்டீன் லுத்தர், ஒரு அகுஸ்தீனிய துறவி. ஜெர்மனி நாட்டில் வித்தன்பர்க் எனும் ஊரில் உள்ள குருமடம் ஒன்றில் குருத்துவ மாணவர்களுக்குப் பேராசிரியராக இருந்தார். மாணவர்க்குப் பாடம் நடத்திட, திருமறையை ஆழமாகப் படிப்பது அவர் கடமையாக இருந்தது. ரோமர் நிருபத்தை வாசிக்கும் போதெல்லாம் அதில் வருகிற `கடவுளின் நீதி’ என்ற வார்த்தை அவருக்குப் பயத்தை உருவாக்கியது. ஏனெனில் லுத்தரைப் பொறுத்தவரை, `கடவுளின் நீதி’ என்பது கடவுளின் பரிசுத்தம்-மனிதனின் பாவம்-இதனால் உண்டாகும் கடவுளின் கோபம்-தண்டனை இவைதான்.

ஒரு நாள் மாலை, ஓர் உண்மையை வேதவசனத்தில் அவர் கண்டு கொண்டார். இதை `The Tower Experience’ என்று அழைக்கிறார்கள். அந்த வசனம் தான் சீர்திருத்தலின் வித்தாய் மாறியது. அதுவே இன்றைய தியானவசனம்.

கடவுளின் நீதியை காண்பது எங்கே? நீதிச்சட்டங்களில் அல்ல-இயேசு கிறிஸ்துவில் வெளியாக்கப்பட்ட சுவிசேஷத்தின் வழியாகத்தான் கடவுளின் நீதி வெளிப்படுகிறது. எனது பாவத்துக்கான தண்டனையைக் கடவுள் தாமே கிறிஸ்து மீது சுமத்தி விட்டார். இயேசுவின் சிலுவைப் பலி எனது பாவமன்னிப்பிற்கான இறைவனின் திட்டத்தின் நிறைவேற்றம்.

கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் பாவம் மன்னிக்கப்பட்டவன்-இதுவே கடவுளின் நீதி. கிருபையால் பாவத்தை மன்னிப்பதே, பாவியை நீதிமானாகத் தீர்ப்பிடுவதே கடவுளின் நீதி. விசுவாசத்தினால் மாத்திரமே! கடவுளின் கிருபையினால் மாத்திரமே! கடவுளின் வார்த்தையினால் மாத்திரமே! இயேசு கிறிஸ்துவில் மாத்திரமே! இந்த நீதி வழங்கப்படுகிறது. இதையே இந்த மாதம் முழுமையும் இவற்றை நாம் தியானிக்க இருக்கிறோம்.

உமது கிருபையால் இயேசு கிறிஸ்துவில் எம்மை மீட்டுக் கொண்ட கர்த்தாவே! உமது கிருபையில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை வைத்து உமது வார்த்தையில் நிலை நின்று இயேசுவில் என்றென்றும் வாழ உமது ஆவியால் எம்மை நடத்தும். ஆமேன்.

திருச்சபை சீர்திருத்தல்2019-09-30T11:04:44+00:00

பொல்லார் வாழ்தல்

லூக்கா 23 : 33-34                                    27 செப்டெம்பர் 2019, வெள்ளி

“பொல்லாதவர் பிழைத்திருப்பானேன்?….” – யோபு 21 : 7

வாழ்க்கை வாழ்வதற்கே. ஆனால் நல்லவர் மட்டுமே வாழ்வர் என்றும், தீயர் விரைவில் அழிவர் என்றும் பலர் நம்புவது இயற்கை. யோபு என்பவராலும், தீயவர் வாழ்வதைப் பொறுக்க முடியவில்லை. தீயவர் வாழக் கூடாது என்பது யோபுவின் முடிவு. பொல்லானையும் கடவுள் வாழ வைக்கிறார் என்பதை யோபு அறிந்தார். இந்த அறிவினால் மனம் சலனப்பட்டது. கடவுளின் அறிவைப் புரிந்து கொள்ளவோ, கடவுளுக்குக் கற்றுக் கொடுக்கவோ மனிதரால் முடியாது என்று யோபுவால் ஒத்துக் கொள்வது கடினமாயிருந்தது. யோபு நல்லவர்தான் என்றாலும் `நான் நல்லவன்’ என்ற பெருமை யோபுவை ஆட்டிப் படைத்தது எனலாம். ஆகவே கடவுளின் பரம அறிவை, யோபு குறைத்து மதிப்பிட்டார்.

நல்லவன் வாழ்வான் என்பதும் தீயவன் அழிவான் என்பதும் மனித கணிப்பு. சுயநீதிச் சலனத்தால் வரும் எண்ணம் இது! நல்லவன் மட்டும் வாழ்வதானால் மற்றவர் கதி என்ன? கடவுள் பார்வையில் ஒருவரும் நல்லவர் இல்லை. ஆனால் தன்னை நல்லவன் என்று எண்ணும் ஒருவன், `நான் ஏன் துன்பப்படுகிறேன். வேறே எல்லாரும் நன்றாக வாழ்கின்றனரே…. குறிப்பாய் எவ்வளவோ மோசமானவர்களும் வாழ்கின்றனரே’ என்று சலசலக்கின்றான்.

இப்படிப்பட்டவரிடம், `நான் துன்புறக் கூடாது. வேறு எவர் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது! `நான் யோக்கியன், என்னைவிட பல அயோக்கியர் இருக்கின்றனர். இவர்கள் தண்டிக்கப்படவில்லையே….ஏன்?’ என்று கடவுளிடம் இப்படிப்பட்டவர்கள் கேள்வி கேட்கின்றனர். கடவுள் எல்லாருக்கும் ஆண்டவர்! யாவரையும், தீயவரையும் கூட கடவுள் நேசிக்கிறார். தீயவர், மனந்திருந்தி வாழ்ந்திடக் கடவுள் காத்திருக்கிறார். பொல்லாதாரும் மனம் திருந்தக் கடவுள் வாய்ப்பு கொடுக்கிறார். கடவுளின் மன்னிக்கிற கிருபை மனித இனத்திற்குத் தேவை. தண்டிக்கிறவராக, கடவுள் இருந்தால், இந்த தியானத்தை எழுதிய நானும், படிக்கிற நீங்களும் மீந்திருக்க முடியாது. ஆகவே, எனக்குக் கிடைத்தது போல மன்னிப்பு, கடவுளால் எல்லாருக்கும் சொந்தமாக்கப்பட்டுள்ளது! பாவியில் `சிறிய பாவி-பெரிய பாவி’ என்று நாம் பேதம் காணவேண்டாம்.

இயேசுவின் சிலுவை மரணம் யோபுவின் கேள்விக்கு விடையாகிவிட்டது. பொல்லாதவரின் பாவத்தையும் இயேசு சுமந்தார். நோயாளிக்குத்தான் வைத்தியம் தேவை. பொல்லாதவருக்குத்தான் அதிகம் மன்னிப்பு தேவை. என்னை மன்னிக்கிறார் கர்த்தர்! பொல்லாதவரையும் மன்னிக்கிறார் கர்த்தர். பொறாமையால் நம் மனங்கள் சலனப்படவேண்டாம்.

பொல்லாதவர் வாழ்வு கண்டு பொறாமைப்படுகிறேன் கர்த்தாவே. என்னைப் போல பிறரும் மன்னிக்கப்படுகிறார்கள் என்ற மனச் சந்தோஷத்iதை எனக்குத் தாரும். பொல்லாதவர் மனந்திருந்துவதற்காக ஜெபிக்கிற சலனமற்ற மனம் தாரும். இயேசு வழியே. ஆமேன்.

பொல்லார் வாழ்தல்2019-09-26T16:21:58+00:00

சகோதர பகை

ஆதியாகமம் 27 : 41-43                                            24 செப்டெம்பர் 2019, செவ்வாய்

“…என் சகோதரன் யாக்கோபைக் கொன்று போடுவேன் என்று ஏசா தனக்குள் சொல்லிக் கொண்டான்.” – ஆதியாகமம் 27 : 41

பழிவாங்குதல் ஆரம்பத்தில் இனிக்கும், பின் கசக்கும், எய்தவனை திருப்பி வந்து கொல்லும் என்கிறார் புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் ஜாண் மில்ட்டன். குடும்பத்தில் உள்ள சகோதர பகை குடும்பத்தில் வேதனையையும், சமாதானம் இல்லா சூழ்நிலையையும் அதிகரிக்கச் செய்யும். மறத்தலாலும் மன்னிப்பதாலும் மட்டுமே குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமையும்.

யாக்கோபு தன்னுடைய சகோதரன் ஏசாவை ஏமாற்றினார். ஏசாவின் செல்வத்தை தனதாக்கி தலைமறைவாய் வாழ்ந்தார். யாக்கோபு தன்னுடைய சகோதரன் ஏசா தன்னை கொல்ல வருகிறான் என்று கேள்விப்பட்டு மனக்கலக்கம் அடைந்தார். தன் சகோதரனை சமாதானப்படுத்த தன் அறிவு கொண்டு திட்டம் போட்டார். பரிசு பொருட்களை சகோதரனுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார். ஆனாலும் பயம் குறையவில்லை. இறுதியில் கடவுளின் துணையை நாடினார். கடவுள் யாக்கோபை சந்தித்து ஆசீர்வதித்தார். ஏசா-யாக்கோபு சந்திப்பு நிகழ்ந்தது. யாக்கோபு அஞ்சியது போல் ஏசா அவரைத் தாழ்த்தி அவரின் செல்வத்தை அழிக்க வரவில்லை. மாறாக ஏசாவே அவருக்கு எதிர்கொண்டு ஓடி அவனை அரவணைத்து இறுக்க கட்டித் தழுவி முத்தம் இட்டார். சினத்தை குறைப்பதற்காக கொடுக்கப்பட்ட பரிசுப் பொருள்களை ஏசா ஏற்றுக் கொள்ளவில்லை. வற்புறுத்தலினால் யாக்கோபின் பரிசுகளை அன்பளிப்பாக ஏற்றுக்கொண்டார். யாக்கோபு `இரண்டாவது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பது போல் இருக்கிறது.’ ஏனெனில் நீர் எனக்கு கனிவு காட்டி உள்ளீர் என்கிறார் அவர்.

கடவுளின் முகம் சகோதரன் முகத்தில் பார்க்கப்படுகிறது. இதுதான் உண்மையான இறையாசி. சொத்துக்களுக்காக சண்டை போடாமல் வீணான வீம்புகளுடன், மனதில் பகை உணர்வுகளுடன் வாழாமல் சகோதரர்கள் ஏற்படுத்திய காயங்களை ஏசாவைப் போல் மறந்து மன்னித்து வாழ்வோம். யாக்கோபை போல சகோதரர்களில் கடவுளின் முகம் காண்போம். குடும்ப வாழ்வு ஆசீர்வாதமாய் அமையும்.

சமாதானம் அருளும் கடவுளே! சகோதரர்களின் தவறுகளை மறந்து மன்னித்து உமது முகத்தை சகோதரர்களில் காண செய்தருளும். கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே. ஆமேன்.

சகோதர பகை2019-09-23T12:42:22+00:00

பொருளாசை தீமை

நீதிமொழிகள் 30 : 7-9                                               18 செப்டெம்பர் 2019, புதன்

“பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்….” – நீதிமொழிகள் 15 : 27

பொருட்களினால் வரும் இன்பத்தால் வாழ்வின் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ள முயற்சி எடுப்பது வைக்கோலினால் நெருப்பை அணைக்க முயற்சிப்பதற்கும் சமம் என்கிறது சீனப் பழமொழி. நாம் பணம், பொருள், வசதி இவை தான் மகிழ்ச்சி தருகிறது என்று தவறாக எண்ணுகிறோம். மகிழ்ச்சியைத் தேடுவது மனித இயல்பு. நிலையற்ற பொருட்கள் நிலையான மகிழ்ச்சியைக் கொடுக்க இயலாது. இதை உணராமல் ஆசையுடன் பொருட்களையும் பணத்தையும் வசதிகளையும் தேடுகிறோம்.

இயேசு கிறிஸ்து கர்த்தருடைய ஜெபத்தில் இவ்வுலக வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உடை, உறைவிடம் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்காக ஜெபிக்க கற்று தருகிறார். தேவையான உணவைத் தாரும் என்று விண்ணப்பிக்கும்போது, தேவைக்கு அதிகமானதைத் தரவேண்டாம் என்றும் நாம் கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய வாழ்க்கைக்கு அவசியமானதைத் தாரும். சொகுசு வாழ்க்கைக்கு தேவையானவற்றை அல்ல என்ற உணர்வோடு பிரார்த்தனை செய்ய கற்பிக்கிறார். `எனக்கு செல்வம் வேண்டாம். வறுமை வேண்டாம் எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். (நீதிமொழிகள் 30:8,9) என்று சாலமன் ஞானி ஜெபிக்க சொல்லுகிறார்.

மனிதனுடைய உலக வாழ்க்கை குறுகியது. நாளை நாம் இருப்போமா என்பதைக் குறித்து நமக்கு நிச்சயமில்லை. தூரத்திலுள்ள எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படாமல், வருங்காலத்திற்குரிய ஆசைகள் இல்லாமல் எதிர்காலத்தைக் கடவுளின் கரத்தில் விட்டு வாழ்வோம். உடலோடு தொடர்புடைய வசதியான வாழ்வு, பொருளாதாரச் செழிப்பு, ஏராளமான பணம், பதவி, புகழ் போன்ற ஆசைகளைத் துறப்போம். பொதுநலம், அறிவுத் தேடல், கடவுளை உணர்ந்து அவரை வாழ்வில் அனுபவிக்க வேண்டும் என்ற மேல்மட்ட ஆசைகளுடன் வாழ்வோம்.

`நிறைவானது வரும்போது குறையானது ஒழிந்து போகும்.’

                                                              – 1 கொரிந்தியர் 13 : 10 என்றார் புனித பவுல். நமது வாழ்வு மேம்பட்ட ஆசைகளால் நிரம்பினால், கீழ்ப்பட்ட ஆசைகள் நம்மை விட்டுத் தானே அகல ஆரம்பிக்கும். பொருளாசையை விட்டு விடுவோம். கடவுள் தந்தவற்றில் நிறைவு கொள்ளுவோம். இயேசுவில் மகிழ்ச்சியாய் வாழுவோம்.

சகல ஆசீர்வாதங்களுக்கும் ஆதாரமாகிய கடவுளே! இவ்வுலக இன்பத்தை நாடாமல் உம்மை அடைக்கலமாக கொண்டு வாழும் பேரின்ப வாழ்வை பெற எங்களை வழி நடத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.

பொருளாசை தீமை2019-09-17T13:14:08+00:00

கண்டித்துப் பேசு

கலாத்தியர் 6 : 1-5                                17 செப்டெம்பர் 2019, செவ்வாய்

“…உன் சகோதரன் பாவஞ்செய்தால் அவனைக் கண்டித்துப் பேசு….” – லூக்கா 17 : 3

நம்முடைய அன்பு உண்மையற்றதாக, சுயநலம் மிக்கதாக இருக்கிறது. இப்படி தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சகோதரன் பாவம் செய்தால் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறோம். நமக்கு ஏன் வம்பு. ஒரு வேளை உறவு முறிந்து விடக்கூடும் என்ற சுயநல எண்ணம் காரணமாக நம்மை மட்டுமே சிந்திக்கிறது நம் மனம். சகோதரனுடைய பாவம் அவனை பாதிக்கும், அவனை நல்வழி படுத்த வேண்டும் என்ற உண்மையான அன்பு இல்லாமல் வாழுகிறோம்.

இயேசு கிறிஸ்து ஏழு எழுபது முறை மன்னிக்கக் கூறும்போது மன்னித்தல் எல்லை அற்றதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். யூத மரபில் ஒருவர் பிறருடைய குற்றங்களை மூன்று முறை மன்னிக்க வேண்டும். இது முழுமையின் அடையாளம் என்று எண்ணினார்கள். கிறிஸ்து இந்த எண்ணத்தை தகர்த்து மன்னித்து அன்பு செய்தல் எல்லையற்றதாக இருக்க வேண்டுமென்று கூறுகிறார்.

கிறிஸ்தவ வாழ்க்கை ஆபத்து நிறைந்த பாதையில் பயணிப்பது தான். சமூகத்தில் சறுக்கல் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் ஏராளம் உண்டு. மறுபடியும் இத்தகைய மக்களை தூக்கி நிற்க வைப்பது கிறிஸ்தவர்களின் கடமையாய் இருக்கிறது. மறப்பதாலும் மன்னிப்பதாலும் மட்டுமே இது சாத்தியமாகும். சகோதரனின் பாவத்தைக் கண்டித்து பேசுதல் அவனை குற்றப்படுத்துவதற்காக அல்ல. அவன் மனம்மாறி புதுப்பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக அமைய வேண்டும். அவமானப்படுத்தவோ, காயத்தை அதிகரிக்கச் செய்வதோ நோக்கமாக இருக்கக் கூடாது. பாவிகளுக்காக இயேசு தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்து அவர்களில் அதிகமாக அன்பு செய்து நமக்கு முன்மாதிரியை வைத்துப் போயிருக்கிறார். நாமும் இயேசுவின் மாதிரியை பின்பற்றி பாவம் செய்கிற சகோதரர்களுக்கு மன்னித்து அவர்களில் அன்பு கூர்ந்து அவர்களை நல்வழிப்படுத்துவோம். ஏனெனில் நமக்கு சகோதரர்களை அல்லது சகோதரிகளை ஆண்டவர் கொடுத்ததற்கு ஒரு நோக்கம் இருக்குமே. கடவுளால் தரப்பட்ட உறவுகளை, உடன்பிறந்தவர்களை நேசித்து, அனுசரித்து இறையவரோடு வாழ அவர்களை ஊக்கப்படுத்துவோம்.

அன்பான கடவுளே! அன்பினால் பிறரைக் கடிந்து கொள்ளும் மனநிலையைத் தாரும். பிறர் நலன்களுக்காக தவறுகளை சுட்டிகாட்டும் மனவலிமையைத் தாரும். பிறரை நல்வழிப்படுத்தும் கரிசனையை தாரும். உம்மில் மன்னிப்பைப் பெற்ற நாங்கள் பிறருக்கு மன்னிக்க உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.

கண்டித்துப் பேசு2019-09-16T05:56:17+00:00

நீடித்த வாழ்வுக்கு ஆதாரம்

எபேசியர் 6 : 1-4                                      12 செப்டெம்பர் 2019, வியாழன்

“…நீ உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணவேண்டும்….” – உபாகமம் 5 : 16

கடவுள் மனிதனை தம்முடைய சாயலாகப் படைத்தார். அவன் கடவுளுக்கும் சமூகத்திற்கும் ஏற்புடையவனாக வாழுவதற்கு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். நியாயப் பிரமாணத்தை அவன் இருதயத்தில் எழுதினார். மனுக்குலம் பலுகிப் பெருகினபோது கடவுள் சில சட்ட திட்டங்களை இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். கற்பனைகளின் நோக்கமே மனுக்குல வாழ்வுதான். மனிதன் இவ்வுலகில் நீடித்த நாட்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அதற்கு கடவுள் தாம் கொடுத்த கற்பனைகளில் வழி சொல்லியிருக்கிறார். அதுவே நமது தியானப் பகுதி. `நீ உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணவேண்டும்’ என்று சொல்லாமல் அப்படி கனம் பண்ணினால் உன் கடவுளாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்தில் நீ நெடுநாளிலிருந்து வாழ்வடைவாய் என்கிறார்.

பவுலடிகளார் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் `நீ நன்றாயிருப்பதற்கும், பூமியில் நீ நெடுநாள் இருப்பதற்கும், உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டுமென்பதே வாக்குத்தத்தத்தோடு கூடிய, முதல் கற்பனை’ என்று எழுதுகிறார். இந்தக் கற்பனை வழியாக பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டிய அவசியத்தைச் சொல்லுகிறார். நம்மைப் பெற்று வளர்க்கிற பெற்றோருக்குத் தான் நமக்கு எது தேவை, எப்போது தேவை என்பது தெரியும். குழந்தைகளாய் நாம் நம் விருப்பப்படி வாழ்ந்தால் நம் வாழ்வையே இழக்க நேரிடும்.

பிள்ளைகள் கடவுள் அருளும் ஈவு. அவர்களை கடவுளுக்கேற்ற பிள்ளைகளாக வளர்ப்பது பெற்றோரின் கடமை. எனவே தான் பவுலடிகளார் ஆண்டவருக்குள் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பிள்ளைகளை கடவுள் அருளுகிறார். இந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொல்லுகிற செய்கிற காரியங்கள் நம் வாழ்வுக்கானவை என்பதை முழுமையாக நம்பவேண்டும். அவர்களுக்கு கீழ்படிய வேண்டும். அதே வேளையில் பெற்றோர் பிள்ளைகளை கோபப்படுத்தாமல் வளர்க்க வேண்டும். தவறு செய்யும் போது தண்டிக்க வேண்டும், எச்சரிக்கவேண்டும். இவை பிள்ளைகளின் மீது கொண்ட கரிசனையில், அன்பில் அமைய வேண்டும். பிள்ளைகளே வருங்கால குடும்பம், சமூகம், திருச்சபை ஆகியவற்றின் தூண்கள். எனவே அவர்கள் கடவுளையே நம்பி அவரைச் சார்ந்து வாழ இறையவர் வலியுறுத்துகிறார். இறை வார்த்தையில் பிள்ளைகளை வளர்ப்போம். நாட்டின் நல்ல குடிமக்களாக மாற்றுவோம். பிள்ளைகளைக் கொண்டு புது சமூகத்தை படைக்க உறுதி ஏற்போம்.

அன்பின் கடவுளே! நீர் தந்த எங்கள் பிள்ளைகளுக்காக நன்றி. அவர்களை நல்ல குடிமக்களாக விசுவாசிகளாக மாற்ற எங்களுக்கு உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நீடித்த வாழ்வுக்கு ஆதாரம்2019-09-11T12:30:13+00:00

கடவுள் வீட்டைக் கட்டுகிறார்

2 சாமுவேல் 7 : 8-11                                             06 செப்டெம்பர் 2019, வெள்ளி

“கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா…” – சங்கீதம் 127 : 1

மனிதர்கள் அனுபவங்கள் வழியாக பாடங்கற்றுக் கொள்ளுகிறார்கள். அனுபவங்கள் ஆலோசனைகளாக வெளிவருவது இயல்பு.

தாவீது இஸ்ரவேலின் இரண்டாம் அரசன். தான் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டதே கடவுளின் கிருபை என்பதை அறிந்திருந்தார். கோலியாத்தை வெற்றி கண்டது தன் திறமை அல்ல. கடவுள் அருளிய வெற்றி என்பது கோலியாத்தோடு பேசிய பேச்சுகள் காட்டின. தாவீது சந்தித்த யுத்தங்களில் கிடைத்த வெற்றிகளும் தன் சாமர்த்தியத்தால் அல்ல என்பது தாவீதுக்குத் தெரியும். தாவீது எருசலேமை தலை நகராக்கினார். தீரு அரசன் உதவியோடு தனக்கு அழகிய அரண்மனையை கட்டினார். பட்டணத்தை அழகுபடுத்தினார். கடவுளின் பெட்டகம் கூடாரத்தில் இருந்தது. இதனால் கடவுளுக்கு அழகிய ஆலயம் கட்ட விரும்பினார். பெட்டகம் கூடாரத்தில் இருப்பது தாவீதுக்கு குறையாக தோன்றியது. எனவே நாத்தான் தீர்க்கரை அழைத்து ஆலயம் கட்டுகிற திட்டத்தை விவரித்தார். நாத்தான் தீர்கன் இசைவளித்தார். ஆனால் கடவுள் இத்திட்டத்தை தடுத்தார். பின் நாளில் தாவீதின் மகன் சாலமோன் வழியாக அதை செயல்படுத்தினார்.

கடவுள் தன் வாழ்வில் நடப்பித்த ஒவ்வொரு செயல்களையும் ஆய்ந்தறிந்தார் தாவீது. எல்லாவற்றையும் செம்மையும் அழகுமாய் நிறைவேற்றிய கடவுளுக்கு ஒரு நோக்கம் இருக்கும் என்பதை தாவீது அறிந்து கொண்டார். எனவே தான் ஆலயம் கட்ட தேவையான எல்லா பொருட்களையும், பொன்னையும் கூட சேர்த்து வைத்தார். தாவீதின் இந்த மனதை அறிந்த கடவுள் அவன் என் வீட்டைக் கட்ட விரும்பியதால் நான் அவன் வீட்டைக் கட்டுவேன் என்று வாக்களித்தார்.

நம்முடைய குடும்பம் உறவுகள் பிள்ளைகள் அனைத்தும் கடவுள் அருளும் ஈவு. அதுபோலவே நம் வாழ்வு, கைகளின் பிரயாசம் அனைத்தும் கடவுள் அருளுபவை. நம் பாதுகாப்பு, பராமரிப்பு அனைத்தும் கடவுள் அருளும் ஆசீர்வாதம். இதை உணர்ந்த தாவீது கர்த்தர் வீட்டைக் கட்டாவிட்டால் அதை கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா என்று தீர்க்கமாகச் சொல்லுகிறார். சிலர் வீடுகட்ட விரும்புகிறார்கள். ஆனால் கட்ட முடியவில்லை. சிலர் வீடுகட்ட ஆரம்பிக்கிறார்கள் ஆனால் முடிக்க முடியவில்லை. சிலர் வீடு கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதில் வாழ முடியவில்லை. இது வீட்டை கட்டுவதில் மட்டுமல்ல வாழ்வில் ஒவ்வொரு துறைக்கும் பொருந்தும். கடவுளின் ஆசீர்வாதம் இல்லை என்றால் மனித முயற்சிகள் வீணாகும். நாம் எப்பொழுதும் கடவுளையே சார்ந்து நிற்போம். அவர் அருளைத் தேடி அவர் பாதத்தில் அமர்ந்து அவர் சித்தத்தை அறிய முற்படுவோம். அவர் சித்தத்திற்கு கீழ்படிந்து வாழுவோம்.

எல்லாவற்றையும் வாய்க்கப் பண்ணும் கடவுளே, உம் சித்தத்தை அறிந்து எங்கள் காரியங்களை ஆரம்பிக்கவும் நிறைவு செய்யவும் வழி நடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

கடவுள் வீட்டைக் கட்டுகிறார்2019-09-05T12:32:40+00:00
Go to Top