vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

காப்பாற்றும் கடவுள்

சங்கீதம் 107 : 1-6                                                                 31 ஆகஸ்ட், 2019 சனி

“கர்த்தர் நல்லவர்… தம்மை நம்புகிறவர்களைக் காப்பாற்றுவார்.”– நாகூம் 1 : 7

நள்ளிரவில் மலைச்சரிவில் வழி தவறி விழுந்தான் ஒருவன். ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கினான். எத்தனை அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கே தெரியாது. ‘காப்பாற்றும் ஆண்டவரே. எந்த மனிதனும் உதவி செய்ய முடியாது! ஆண்டவரே நீர்தான் காப்பாற்ற வேண்டும்’ என உரக்க ஜெபித்தான்.

‘கையை விடு… காப்பாற்றப்படுவாய்’ என்று ஒரு சத்தம் கேட்டதாம். சில நிமிடங்கள் மௌனம், பயம், நம்பிக்கையின்மை. ஆண்டவரை நம்பி, கையை விட்டுவிட அடுத்த வினாடி அவன் தரையில் நின்றான். அதாவது அவன் தொங்கி இருந்த மரக்கிளை, தரையிலிருந்து சில அடி உயரத்தில் தான் இருந்தது. இருட்டில் அவனுக்கே இது தெரியாது. கடவுளை நம்பி, தனது ஒரே ஆதாரத்தையும் விட்டு விட்டான். காப்பாற்றப்பட்டான்.

நாகூம் இதைத்தான் சொல்கிறார் – தம்மை நம்புகிறவர்களைக் காப்பாற்றுகிறார் கடவுள்! காப்பாற்றப்படுவதற்குக் காரணம், மனித நம்பிக்கையல்ல… கடவுளின் நல்ல தன்மை. கடவுள் நல்லவராக இருப்பதால் மனிதனைக் காப்பாற்றுகிறார். பிறரை நம்பி ஏமாந்தவன் நான். என்னை நம்பி ஏமாந்தவர்கள் ஏராளம். திட்டமிட்டுப் பிறரை நம்ப வைத்துக் கழுத்தறுத்திருக்கிறேன்.

இவை காட்டும் உண்மை என்ன தெரியுமா? நம்பிக்கை இருந்தால் போதாது. நம்பிக்கை வைக்கும் நபர் நம்பத் தகுந்தவராக இருப்பதுதான் முக்கியம். கர்த்தர் நல்லவர், நம்பத் தக்கவர். நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசுவைக் கொடுத்தவர்.

ஆகவே தின வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்தும் கர்த்தர் விடுவிக்க வல்லவர். கர்த்தர் என்றைக்கும் எவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ததில்லை. கர்த்தரை நம்பு. நீ வாழ்ந்திருப்பாய்.

கர்த்தாவே! வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற உமக்கு நன்றி. நீர் பொய் சொல்வதில்லை. நல்லவர். என்னைத் தினமும் காத்து நடத்தும். அவநம்பிக்கையிலிருந்து காத்து விசுவாசத்துக்குள் வழி நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

காப்பாற்றும் கடவுள்2019-08-30T15:37:05+00:00

கடவுளில் நிலைத்திருத்தல்

யாக்கோபு 1 : 19-23                                           29 ஆகஸ்ட், 2019 வியாழன்

“நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளைப் பற்றி ஜாக்கிரதையாயிருந்து இவைகளில் நிலைத்திரு.” – 1 தீமோத்தேயு 4 : 15

வாலிபம் சோதனை மிகுந்த காலம். ஆடம்பரம், ஆசை, சோம்பல் மிகுந்து காணப்படும் வாழ்க்கைப் பகுதி வாலிபம்தான். துணிவு, புதுமை காணல் போன்ற உணர்வுகள் மேலோங்கி இருப்பதும் வாலிபப் பருவத்தில்தான். பெரியவர்களின் கூற்றைவிட, நண்பர்கள் சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் தருவதும் வாலிப நாட்கள்தான்.

தேவ ஊழியன் தீமோத்தேயு ஒரு வாலிபன். தீமோத்தேயுவின் வாழ்க்கை முன்மாதிரியான வாழ்க்கையாக அமைய, வர இருக்கும் சோதனைகளைச் சந்திக்க ஜாக்கிரதையாக இருக்கக் கூறுகிறார் மூத்த தேவ ஊழியர் பவுல். ஜாக்கிரதையாக வாழ்க்கையை அமைக்க, வேத வசனம் நம்மைப் பலப்படுத்துகிறது. கடவுளின் பிரமாணம் நமது பாவத்தை, பாவம் செய்வதற்கான காரணத்தையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. நாம் செய்யாமல் விட்ட நன்மைகள் ஏராளம். தெரிந்து செய்த தீமைகள் எண்ணிலடங்கா. தெரியாமலே செய்த தவறுகளுக்குக் கணக்கே இல்லை. ஒவ்வொரு வினாடியும் நாம் ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும்.

‘ஒரு வழிப்பாதை’ என்ற அறிவிப்பைப் பார்த்தால் போலீஸ்காரருக்குப் பயப்படுகிறோம். கண்ணாடியில் முகம் பார்க்கும் போது அழுக்கிருந்தால் துடைத்துக் கொள்கிறோம். வேத வசனம் நம்மை எச்சரிக்கிறது. நமது பாவங்களைச் சுட்டிக் காட்டுகிறது. பாவக் கறையைக் கழுவித் துடைக்க இயேசுவாம் மீட்பரிடம் செல்ல சுவிசேஷம் நம்மை அழைக்கிறது.

இளமையானாலும் முதுமையானாலும் எச்சரிப்பாக வாழ்வதற்குத் தேவ வசனத் துணை நமக்குத் தேவை. முன்மாதிரியாக வாழ, கர்த்தரின் அருள் தேவை. எச்சரிப்புத் தருகின்ற கடவுளே முன்மாதிரியான வாழ்க்கை நடத்த பலத்தையும் தருகின்றார். மனந்திரும்புவதற்கான உறுதியைக் கடவுள் தருகின்றார். உங்கள் குணத்தில் தேர்ச்சியடையுங்கள். உங்கள் நற்செயலில் முதிர்ச்சி அடையுங்கள். விசுவாசத்தில் வளருங்கள். கிருபையில் நிலைத்திருங்கள்.

ஆண்டவரே, நாங்கள் திருவசனத்தைக் கேட்கிறவர் களாய் மாத்திரம் இல்லாமல், அதன்படி நடந்து, பலருக்கு முன் மாதிரியாக வாழ எங்களுக்கு உதவி செய்யும். தினமும் எங்கள் வாழ்வில் தேர்ச்சி காணப்பட கிருபை தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளில் நிலைத்திருத்தல்2019-08-28T07:47:42+00:00

வெட்கப் படுவதில்லை

சங்கீதம் 91 : 11-16                                   23 ஆகஸ்ட், 2019 வெள்ளி

“என்னைக் காப்பாற்றி என்னை விடுவித்தருளும்; நான் வெட்கப்படாத படி செய்யும், உம்மிடத்தில் அடைக்கலம் புகுந்தேன்.” – சங்கீதம் 25 : 20

மனிதன் வெட்கப்பட பலகாரணங்கள் இருக்கின்றன. நிர்வாணம், உடல் ஊனம், முதலிய சரீர நிலையினால் வெட்கமுண்டாகலாம். இகழ்ச்சி, தாழ்மை, குறைவு, கிண்டல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டும் வெட்கம் உண்டாகலாம்.

சங்கீதக்காரன் கூறுகின்ற வெட்கம் எது? எதிரிகளினால் சூழப் பட்டிருந்தார் தாவீது. பகைவர்களிடம் மாட்டிக் கொள்வது வெட்கத் தகுந்த காரியம். ஆகவே வெட்கப் படாதபடி செய்யும் என்று ஜெபிக்கிறார். ‘உம்மை நோக்கிக் காத்திருக்கிறவன் எவனும் வெட்கப்படான்’ என்று தாவீது தனது உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறார். பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் வெட்கப்பட்டிருக்க வேண்டும். கடவுளின் பிள்ளையாக ஞானஸ்நானம் பெற்றிருக்கின்ற நான், எனது செயல்களைப் பார்த்து வெட்கப்பட வேண்டுமே! ‘இவனெல்லாம் ஒரு கிறிஸ்தவனா’ என்று பிறர் கூறும் அளவுக்கு மட்டமாக நடந்து கொண்டது குறித்து வெட்கப்பட வேண்டும். ஆனால், எனது மதி கெட்ட வாழ்வு குறித்து நான் வெட்கப்பட்டதாக எனக்கு நினைவில்லை. இது மட்டுமல்ல, சுவிசேஷம் கூற வெட்கப்பட்டிருக்கிறேன். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் என்னைக் கிறிஸ்தவன் என்று காட்டிக்கொள்ள வெட்கப்பட்டிருக்கிறேன்.

நான் பாவம் செய்தேன். என் மீறுதல்கள் கணக்கற்றவை. நான் கடவுளின் முன்னால் எப்படி வருவது என்றுகூட வெட்கப்பட்டிருக்கிறேன்.

எத்தனைக் குறைகள் உன்னிடமிருந்தாலும் இயேசு என் மீட்பர், கிறிஸ்து என்னை விடுவித்தார் என்று நம்புகிறாயா? நீ வெட்கப்பட அவசியமே இல்லை. ஏனெனில் நீ கிறிஸ்துவிடம் அடைக்கலம் புகுந்து விட்டாய். இயேசுவின் வெட்கமும் வேதனையும் சிலுவை மரணமும் உனக்கு அடைக்கலமாகி விட்டது. நீ வெட்கத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் இயேசுவால் விடுவிக்கப்பட்டிருக்கிறாய். கடவுளில் நம்பிக்கை வைத்திருக் கிறவனைக் கடவுள் ஒரு போதும் வெட்கம் அடையச் செய்கிறதில்லை. நம்மோடு கடவுள் இருக்கிறபடியால் நாம் எதற்காகவும் வெட்கப்பட அவசியமுமில்லை. தூயவரின் பிள்ளைகள் வெட்கப்படமாட்டார்கள்.

எங்கள் இறைவா! இவ்வுலகில் உம் பிள்ளைகளாகிய எங்களை வெட்கத்திற்குரிய காரியங்களிலிருந்து விடுதலையாக்கும்! உம்மிடத்தில் அடைக்கலம் புகுந்து விட்டோம். எங்களைக் காத்து நடத்துவீர் என்று உம்மை மட்டுமே நம்பிக் காத்திருக்கிறோம். இயேசுவின் வழியே ஆமேன்.

வெட்கப் படுவதில்லை2019-08-22T15:42:34+00:00

இலவச சுதந்திரம்

1 யோவான் 5 : 18-20                                       20 ஆகஸ்ட், 2019 செவ்வாய்

“…விசுவாசத்தின் மூலமாய்க் கடவுளின் வல்லமையினால் காக்கப்பட்டு வருகிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.” – 1 பேதுரு 1 : 5

தகப்பனின் சொத்து தனக்குக் கிடைத்து விட்டது என்பதற்காக தலைகால் புரியாமல் வாழ்ந்து கெட்டவர் பலர். உழைக்காமல் கிடைத்த செல்வத்தை உயர்வாகப் பேணிக் காத்தவரும் சிலர்.

பாவத்தின் பிடியிலிருந்து விடுபடுவதே இரட்சிப்பு எனும் இலவச இறைச் செல்வம். இயேசு கிறிஸ்துவின் வழியாகப் பாவமன்னிப்பு என்கிற இந்த விடுதலை இலவசமாகக் கடவுளால் தரப்படுகிறது. விசுவாசத்தினால் இந்த சிலாக்கியத்தை நாம் ஏற்று அனுபவிக்கிறோம். அனுபவிக்கின்ற இந்த சிலாக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? என்னால் அது முடியுமா? நிச்சயமாக என் சுயபலத்தால் இது முடியாது. ஏனென்றால் தீய சக்திகளை நான் நேசிக்கிறேன். நல்லவைகளைச் செய்ய வேண்டும் என்று பல பொழுது நினைத்தேன். ஆனாலும் தீயவற்றைச் செய்கிறேன். மீட்கப்பட்ட பிறகும் ‘விழுந்து விடும்’ இந்த நிலை என்னிடம் மட்டுமல்ல நம் எல்லோரிடமும் உண்டு. கடவுளின் கிருபை நம்மைப் பலப்படுத்துகிறது. கர்த்தரின் ஆவியானவர், கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதைத் திரும்பத் திரும்ப தேவ வசனத்தின் வழியே நினைவுபடுத்துகிறார். கடவுளின் பிள்ளைகள், கடவுளின் சொத்தின் சுதந்திரவாளிகளல்லவா! இந்தப் பரலோகச் சுதந்திரத்தை நிறைவாக அனுபவிக்கும் வரை, கடவுளின் கிருபை நம்மைக் காத்துக் கொள்ளுகிறது. சுதந்திரவாளிகளாக்கிய ஆண்டவர், பெற்ற சுதந்திரத்தைப் பத்திரமாக அனுபவிக்கவும் நமக்குத் துணையாக -பலமாக இருக்கிறார். கிறிஸ்துவின் வாரிசுகளாகிய நாம், தீயோனின் வலைக்குள் சிக்கி விடாதபடி கர்த்தர் தாமே நம்மைப் பாதுகாக்கிறார்.

பிள்ளைகள் என்ற உரிமை பெற்றோம். உண்மையான பிள்ளைகளாய் வாழ தேவ கிருபையில் சார்ந்திருப்போம். விசுவாசம் எனும் கிருபையைச் சார்ந்து வாழ்கின்ற நிலை கடவுளின் இலவச அருட்கொடை. இதை வீணாக்காதிருப்போம்.

அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியம் தந்தவரே! நன்றி செலுத்துகிறோம். உமது பிள்ளைகளாக வாழ வளர பலம் தாரும். கிருபையிலே நிலைத்து வாழுகின்ற ஆவலையும் அருளையும் வீணாக்காதிருக் கின்ற ஆவியையும் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இலவச சுதந்திரம்2019-08-19T08:12:02+00:00

பயமுறுத்தாதீர்

அப்போஸ்தலர் 9 : 1-6                                     07 ஆகஸ்ட், 2019 புதன்

“எஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்கு …பயமுறுத்துவதை விட்டுவிடுங்கள்.” – எபேசியர் 6 : 9

சவுல் மூர்க்கங்கொண்டவன். கிறிஸ்தவர்களைப் பயமுறுத்தவும், கொலை செய்யவும் முயற்சித்தான் என்று வாசிப்புப் பகுதியில் காண்கிறோம். சவுல் தனக்குத் தரிசனம் கொடுத்த ஆண்டவரிடம், ‘நீர் யார்’ என்று கேட்டான். அதற்கு ‘நீ துன்பப்படுத்துகிற இயேசுவே நான்’ என்றார் இயேசு! துன்பப்படுபவர்களில் இயேசுவைக் கண்டார் பவுல்.

துன்பப்படுகிற வேலைக்காரருக்கு எஜமானர் உண்டு. துன்பப்படுத்தும் எஜமானருக்கும் எஜமான் உண்டு. எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் எஜமான் கிறிஸ்துவே என்பதை பவுல் இங்கே நினைவுபடுத்துகிறார். ஆகவே, எந்த முதலாளியும் தனக்குக் கீழே இருப்பவர்களைத் துன்பப் படுத்துவது பயமுறுத்துவது தெய்வீகப் பண்பல்ல எனப் பவுல் கூறுகிறார். அதிகாரம் செய்ய நமக்குப் பிடிக்கும். பிறரைப் பயமுறுத்துவதில் நமக்கு சந்தோஷம். பிறரைக் குறைத்துப் பேசுவதில் ஆனந்தம். ஆனால் இதைப் பார்க்கும் இயேசு கண்ணீர் வடிக்கிறார் என்பதை நாம் உணரவில்லை.

ஆண்டவர் அதிகாரம் பண்ணினால் நம்மால் தாங்க முடியுமா? ஆண்டவர் பயமுறுத்தினால், நீ யாரிடம் போவாய்? குடும்பத்திலோ, திருச்சபையிலோ, சமூகத்திலோ நான் எந்த நிலைமையில் வைக்கப்பட்டிருக்கிறேன்? பிறரை வழி நடத்தும் அதிகாரம் உங்களுக்கு உண்டெனில், அவர்களை அன்போடு நடத்துங்கள். பிறருக்குக் கீழ்ப்படியும் நிலையில் இருந்தால் கீழ்படியுங்கள். ஏனெனில் எல்லாருக்கும் எஜமானர் கிறிஸ்துவே. கிறிஸ்து முரட்டு ஆடுகளையும் சாதுவான ஆடுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் மேய்க்கின்ற மேய்ப்பர். பயமுறுத்துவதை விட பாசம் காட்டுவதில் பயன் அதிகம். பாசமிகு இயேசு, பாசத்துடன் இப்பொழுதும் நம்மிடையே இருக்கிறார்.

எல்லோருக்கும் எஜமானராக இருக்கும் ஆண்டவரே! எங்களது நிலைமைக்கும் மேலாக உள்ளவர்களுக்கு நாங்கள் கீழ்ப்படியவும், எங்கள் நிலைமையிலும் தாழ்வானவர்களை அன்போடு நடத்தவும் எமக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

பயமுறுத்தாதீர்2019-08-06T11:22:56+00:00

தீட்டுகளுக்கு விலகுவோம்

மார்க்கு 7 : 14-23                                            05 ஆகஸ்ட், 2019 திங்கள்

“…மனுஷனுக்குள்ளிருந்து வெளிப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்துகிறவைகளாம்.” – மார்க்கு 7 : 16

‘உள்ளத்தின் நிறைவை வாய் பேசும்’ என வேதாகமம் கூறுகிறது. மனிதனின் இதயத்தில் தோன்றும் எண்ணங்கள்தான், செயலாக வெளிப்படுகின்றன. மனிதனின் இதயத்தில் நிலை கொண்டுள்ள தீய எண்ணங்களே அவனைத் தீட்டுள்ளவனாக மாற்றுகின்றது, என்பதை இன்றைய தியானப்பகுதி தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மனித உள்ளம் தான் நன்மைக்கும் தீமைக்கும் ஊற்று! உள்ளம் இறைவனின் இருப்பிடம். ஆனாலும், உள்ளத்தில் சாத்தானும் உறங்கியெழ நாம் இடங்கொடுத்து விடுகிறோம்.

சிறு வயது தொடங்கியே நன்மையைவிட பொல்லாத எண்ணங்கள் மனதில் எளிதில் நுழைந்து விடுகின்றன. பொல்லாத செயல்கள், எண்ணங்கள் முதலில் சொந்தக்காரனைச் சேதப்படுத்துகின்றன. பின்பு சுற்றம், சூழல் அத்தனையையும் அவன் கெடுத்து விடுகிறான். நம்மிடமிருந்து புறப்படும் தீமைகள் பெருந்தீ! புகை பிடிப்பதைவிட அலங்கார மயக்கம் பிறரைக் கெடுக்கும். மது அருந்துவதைவிட, புகழ்மயக்கம் பிறரை அழிக்கக் காரணமாகி விடும். உள்ளே செல்லும் அனேகம் உன்னை மட்டும் கெடுக்கும்! உன்னிடமிருந்து புறப்படும் தீமை, உன்னை மட்டுமல்ல பிறரையும் கெடுக்கும் – அழிக்கும் வலிமை பெற்றது. எனது பெருந்தீனி, பெருமை, அன்பின்மை, பொறாமை எத்தனை பேரைக் கெடுத்திருக்கின்றது?

உங்கள் எண்ணம், செயல், எப்படிப்பட்டவைகளாக இருக்கின்றன? உங்களிடமிருந்து வெளிப்படும் தீயசெயல்கள் பிறரைப் பாதிக்கும் ‘தீட்டுகள்’ என்பதை மறக்காதீர். உங்களை மாற்றி அமைக்கவே இயேசு, சிலுவை மரணத்தை வலிந்து ஏற்றுக் கொண்டார். தீய வழிகளை மறக்க, தீமைகளை வெறுக்க, மனதில் நன்மை துளிர்விட, நல்வழி வாழ இயேசு தனது இரட்சிப்பின் திட்டத்தின் வழியே நம்மை அழைத்து, பலப்படுத்துவார். நீங்கள் திருந்த மறுத்தால்….உங்களுக்கு விடியல் வராது. உங்கள் தீட்டு உங்களையே தின்று விடும்.

இறைவா, சுத்த இதயம் உடையவர்களாக உமது வழியில் நடந்து, தூயவற்றைச் சிந்தித்து நற்காரியங் களைச் செய்ய அருள் தாரும். தினமும் எங்களில் தேவரீர் செயல்பட்டுக் கொண்டிரும். இயேசுவின் வழியே ஆமேன்.

தீட்டுகளுக்கு விலகுவோம்2019-08-04T16:11:32+00:00

பரிசுத்த ஆவி-நிலைப்பவர்

யோவான் 14 : 12-26                                            31 ஜூலை, 2019 புதன்

“….என்றென்றைக்கும் உங்களோடிருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு சகாயரை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.” – யோவான் 14 : 16

மனிதன் தனித்து வாழ முடியாதவன். ஒருவரை ஒருவர் சார்ந்த வாழ்வே மனித வாழ்வு. மனித வாழ்வில் கிடைத்திருக்கிற மற்றொரு துணைவரை வசனம் நினைவுபடுத்துகிறது.

இயேசுவின் இறுதிகாலத்தில், சீடர்களிடம் கூறிய ஆறுதல் வார்த்தைகள் இன்றைய தியானப்பகுதி, `உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு சகாயரை உங்களுக்குத் தந்தருளுவார்’ என்றார் இயேசு! என்றைக்கோ ஒரு நாள் எனக்கு ஆவியானவர் தந்தருளப்படுபவர் அல்ல. என்றைக்கும் என்னோடிருக்க அருளப்படுபவர் ஆவியானவர். இறைவன் இயேசு சீடர்களை தனியே விட்டுச் செல்லவில்லை. இயேசுவை நம்புகிறவர்களும் தனிமையில் தவிக்க விடப்பட்டவர்களல்ல. பழைய ஏற்பாட்டுக் காலத்திலும், ஆவியானவர் இறைமக்களோடு தங்கியிருந்தார். ஆவியானவர் நிரந்தரமாக இறை மக்களுடன் இருக்கிறார் என்பதைப் பலர் உணராதிருந்தனர்.

சிம்சோனிடம் ஆவியனாவர் இறங்கினார். அவன் சிங்கத்தைக் கொன்றான். கடவுளின் ஆவி இறங்கியது. பெலிஸ்தியரை முறியடித்தான். கடவுளின் ஆவி இறங்கியது. கட்டுகளை அவிழ்த்தான் என்று பல இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆவியானவர் வந்து போகிறவர் போலக் காட்டப்பட்டுள்ளார். ஆனால் என்றைக்கும் நம்மோடிருக்கிற ஆவியானவரை உணராதவர் நாம்தான் என்பதை நாம் உணருதல் நன்று.

பெந்தேகோஸ்தே நாள் வந்தபோது எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். விசுவாசத்தோடு ஜெபித்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் ஆவியானவர் நிரம்பினார். பயந்து பதுங்கி இருந்த சீடர்கள் ஆவியானவரால் பலப்படுத்தப்பட்டனர். சாட்சிகள் ஆனார்கள். புது வாழ்வின் அனுபவத்தைப் பெற்றார்கள். ஆவியானவரின் இறங்குதல்-ஊற்றப்படுதல்-நிரப்பப்படுதல் நடைபெறுகிறது. வெளிப்படையாக, உலகம் அறிய, பலரும் அறிய சிறப்பு நோக்கத்திற்காக இப்படி நடைபெறுகிறது. இதனால், இதற்கு முன்போ, இதற்குப் பின்போ ஆவியானவர் நிலைத்திருப்பதில்லை என்றாகி விடாது. ஆவியானவர் நம்மோடு வசிக்கிறார். நமக்குள்ளும் இருக்கிறார். ஆவியானவர் நம்மோடிருப்பதால் நாம் கலங்கவும், வியப்படையவும் வேண்டாம். ஆவியானவரால்தான் நாம் விசுவாசிக்கிறோம். ஆவியானவர் நம்மோடு சேர்ந்து ஜெபிக்கிறார். புதிய ஜீவன் உள்ளவர்களாக, நற்கனி கொடுத்திட ஆவியானவரின் பிரசன்னத்தைத் தினமும் உணருவோம்.

எங்களோடு வாசமாயிருக்கும் ஆவியானவரே! விசுவாசத்தால் எங்களைப் பலப்படச்செய்யும். கிருபை அருளுகின்ற, பாவ மன்னிப்பின் காரணராகிய இயேசுவின் வழியே ஆமேன்.

பரிசுத்த ஆவி-நிலைப்பவர்2019-07-31T07:14:21+00:00

பரிசுத்தாவி – ஊர்ப் பெரியவர்

ரோமர் 8 : 14-17                                 29 ஜூலை, 2019 திங்கள்

“….அப்பா பிதாவே என்று கூப்பிடும் தம்முடைய குமாரனின் ஆவியைக் கடவுள் உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.” – கலாத்தியர் 4 : 6

ஜப்பான் நாட்டில் பள்ளிக் குழந்தைகள் தற்கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். பெற்றோரின் கண்டிப்பான நிலை இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பிள்ளைகள் கீழ்ப்படிகிறதில்லை என்கின்றனர் பெற்றோர். `எப்போதும் எங்கள் பெற்றோர் கோபிக்கிறார்கள்’ என்கின்றனர் பிள்ளைகள். இந்தியக் குடும்பங்களிலும் விரிசல்கள் தோன்றத் துவங்கியிருக்கிறது.

கடவுளின் குடும்பத்தில் நான் ஒரு அங்கம். தந்தையாம் இறைவனுக்கும் பிள்ளையாகிய எனக்கும் எத்தகைய உறவு இருக்கிறது என்று யோசிக்கிறேன். இறைவன் எனக்குத் தாயும் தந்தையுமாயிருக்கிறார் என்பதைச் சரியாக என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லையோ? எட்டாத இடத்தில் வைத்து, எட்டி நின்று கடவுளைப் பார்ப்பது எனது வழக்கமாகச் சிலபொழுது இருக்கிறது. சிலபொழுது கடவுளுக்கு மறைவாக வாழ விரும்புகிறேன். ஆனால் இறைவனை நமக்குத் தந்தையாகக் காட்டியவர் நமதாண்டவர் இயேசுவே. உலகில் இயேசு வாழ்ந்த போது, `தந்தை மகன் உறவில்’ இயேசுவும் பிதாவாம் இறைவனும் இணைந்து வாழ்ந்து காட்டினார். துன்பத்தில், சோதனையில் இந்த நல்லுறவுக்கு எந்தத் தடையுமில்லை. சிலுவையில் மரிக்கும் முன்பும், மரிக்கும் நேரத்திலும் `பிதாவே’ என்றழைத்தார் இயேசு. இயேசுவின் வழித்தோன்றல்களாகிய நமக்கு இறைவன் தந்தையாக இருக்கிறார். இந்த உறவையே தூயாவியானவர் நினைவுபடுத்துகிறார். பல ஆண்டுகளுக்குப் பின்பு, ஒருவர் தனது சொந்த ஊருக்குப் போனார். ஊரே மாறி இருந்தது. `இவர் உன் சித்தப்பா… இது உனக்குத் தங்கை உறவு…. இவன் உனது பெரியப்பா மகன்’ என்று உறவுகளை நினைவுபடுத்தினார் ஒரு பெரியவர்.

நமக்கு இருக்கிற `தெய்வீக உறவு’ ஆவியானவரால் நினைவு படுத்தப்படுகிறது. ஆவியானவர், ஊர் பெரியவர் போல், நமது உறவைச் சொல்லிக் கொடுக்கிறார். வீடு சரியில்லையெனில் மாற்றிக் கொள்ளலாம். வேலை சரியில்லையெனில் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம். தந்தையை மாற்ற முடியுமா? முடியாதே! கிடைத்தற்கரிய உறவு நமக்குக் கிடைத்திருக்கிறது. இறைவனை அப்பா-பிதாவே-னுயனனல என்று அழைக்கிற பேறு ஆவியானவர் கொடுத்திருக்கிறார். அப்பா பிதாவே எனக் கூப்பிடுவது எதற்கு? ஜெபிக்கத்தானே! ஜெபத்தின் துவக்கத்திலேயே ஆவியானவர், நமது நல்லுறவை நிலைப்படுத்துகிறார். உறவில் உறுதியாக நிலைத்திருப்போம். உரிமையுடன் வாழ்ந்து சிறப்போம்.

அன்புள்ள இறைவா! எங்களுக்குத் தாயும் தந்தையுமாக நின்று, எங்களைப் பேணிக் காக்கிறவரே! உமது நல்லுறவில் நிலைத்திருக்க பரிசுத்தாவி யானவரின் பலத்தைத் தந்திருக்கிறீர் என்ற உணர்வு எமது மனதை விட்டு அகலாதிருக்க அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

பரிசுத்தாவி – ஊர்ப் பெரியவர்2019-07-25T11:15:59+00:00

பொருத்தனை… தாமதிக்காதே

1 சாமுவேல் 1 : 26-28                                       26 ஜூலை, 2019 வெள்ளி

“கடவுளுக்கு நீ ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே;…” – பிரசங்கி 5 : 4

இறைவா! என் மகளுக்கு வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளம் உமக்கு…. மகன் பரீட்சையில் பாஸ் பண்ணினால் கோவிலுக்கு எங்கள் செலவில் வெள்ளையடிப்போம்…. என்பது போன்று பலவாறு பொருத்தனைகளை அள்ளி வீசுகிறோம். எத்தனை பொருத்தனைகளைத் தவற விட்டிருக்கிறோம்? நினைத்துப் பாருங்கள். நம்மால் இயலும் என யோசித்த பின்னரே எந்தப் பொருத்தனையையும் செய்வது நல்லது. பின்பு அதைச் செயல் வடிவாக்குவதில் அவ்வளவு கடினம் ஏற்படாது. எங்கள் திருச்சபையைச் சார்ந்த ஒருவர் ஓர் வியாபாரி `ஐயா ஒரு மாதத்திற்குள் இங்கு ஓர் ஆலயம் கட்டுவீர்கள்’ என்றார் என்னிடம். நானோ `அது எப்படி’ என்றேன், `ஐயா நான் 1 லட்சம் ரூபாய் தருவதாகப் பொருத்தனை செய்துள்ளேன்’ என்றார். `இது உம்மால் முடியுமா?’ என்றேன். உடனே ஒரு லாட்டரி டிக்கெட்டை எடுத்துக் காட்டி, `10 லட்சம் விழுந்தால் 1 லட்சம் திருச்சபைக்கு’ என்றார்.

`கற்பனையான பொருத்தனை’, `பொருந்தா பொருத்தனை’, `பேரம்பேசும் பொருத்தனை’ என்று பொருத்தனைகள் பல வகைப்படும். வகை எதுவாக இருந்தாலும் `எண்ணித் துணிக பொருத்தனை’ என்பது பொருத்தனைக்கும் பொருந்தும். கடவுளுக்குப் பொருத்தனை செய்வது மனிதர்களின் வழக்கம். பொருத்தனைகளில் மனிதர் பார்வையில், சிறியது, பெரியது, விலை உயர்ந்தது, விலை குறைந்தது என்று வித்தியாசம் இருக்கலாம். எதுவானாலும் அதைச் செயல்வடிவில் காட்டுவதை இறைவன் விரும்புகிறார்.

பொருத்தனை செய்வது, இறையவரின் கட்டாயக் கட்டளையல்ல. நீ பொருத்தனை செய்தாய். ஆகவே நிறைவேற்றத் தாமதியாதே என்றே கூறுகிறார். எல்லாவற்றையும் தட்டிக் கொட்டிக் கவிழ்த்துவிடுகிற சக்தி தாமதத்திற்கு இருக்கிறது. நன்றி உணர்வின் பிரதிபலிப்பைக்கூட, தாமதம் கெடுத்துவிடும். தாமதிக்காமல் நன்றியின் பொருத்தனைகளை நிறைவேற்றுவோம். பொருத்தனை செய்வதில் ஒரு வேகம் இருக்கும். காரியம் ஆக வேண்டுமே என்ற தவிப்புதான் இந்த வேகத்துக்குக் காரணம். பொருத்தனை செலுத்துவதில் தாமதத்தைத் தவிர்ப்போம். பொருத்தனையானது எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடனே செலுத்த வேண்டும். தாமதம் கூடாது. ஒவ்வொரு நிமிட தாமதமும் நமக்கு கிடைக்கும் அருளின் தாமதம். எனவே உடனுக்குடன் செலுத்துவோம். அருள் அனுபவத்தைத் தாமதத்தால் கெடுத்து விடாமலிருப்போம்.

ஆண்டவரே! நான் செய்த பொருத்தனைகளில் ஜாக்கிரதையாய் இருக்க ஞானம் தாரும். நன்றி செலுத்துவதில் கூட, நாளை பார்க்கலாம் என்ற தாமத மனநிலையை என்னிடமிருந்து மாற்றியருளும். இயேசு வழியே ஆமேன்.

பொருத்தனை… தாமதிக்காதே2019-07-25T11:14:01+00:00

பொருத்தனை… மொட்டை போடுதல்

அப்போஸ்தலர் 18 : 18-23                              24 ஜூலை, 2019 புதன்

“பவுலோ….தனக்குப் பொருத்தனை இருந்தபடியால்…. தலைச் சவரம்பண்ணிக் கொண்டு…” – அப்போஸ்தலர் 18 : 18

பவுலின் தலைச்சவரம் பற்றி வாசிக்கின்ற போது ஓர் சம்பவம் நினைவுக்கு வருகிறது. திருச்சபைப் போதகர் ஒருவருக்கு இளமைப்பெயர் `நாகராஜன்’! அவரது குடும்பத்தினருக்கு, குலதெய்வத்திற்கு வருடந்தோறும் பொருத்தனை செய்து, மொட்டையடிப்பது என்பது வழக்கமாக இருந்தது. தலைச்சவரம் என்பது பழமை வாய்ந்தது. மேலும் அது இஸ்ரேல் தேசத்திலிருந்து இறக்குமதியான ஆன்மீகப் பழக்கம் என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. மொட்டையடிக்கிற பொருத்தனை பற்றி விசாரிக்கிறவர்களிடம் `இந்த நோக்கத்திற்காக மொட்டை போட்டேன்’ என்று `சாட்சி சொல்ல’ இது உதவுகிறது.

பவுல் கெங்கிரேயா எனும் இடத்தில் மொட்டை போட்டுக் கொண்டார். இதற்கு ஒரு காரணம் இருந்தது. கொரிந்து, மக்கதோனியா, எபேசு போன்ற இடங்களில் இயேசுவே கிறிஸ்து-மேசியா என்று யூதருக்கு வற்புறுத்திக் கூறினார். வாக்குவாதம் வலுத்தது. தர்க்கம் செய்ய வேண்டியதாயிற்று. இந்த யூதருக்கு முன்பு தன்னை ஓர் யூதன் என்று பவுல் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யூத கலாச்சாரப் பின்னணியில், `பொருத்தனை மொட்டை’ போட்டுக்கொண்டது பவுலின் சுவிசேஷ வேலைக்கு உதவியது எனலாம். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பவுல் யூத மொட்டை போடலாமா? கிறிஸ்துவைப் பிரசங்கித்த பவுல், யூத ஒழுக்கத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டைப் பின்பற்றலாமா?

கிறிஸ்துவுக்காக, `எல்லாருக்கும் எல்லாம்’ ஆனவர் பவுல் என்று அறிவோம். நமது வாழ்க்கைச் சூழலில், விசுவாசத்திற்கு முரண்படாத, சேதம் வருவிக்காத சில பண்பாட்டு ஒழுக்கங்களை ஞானத்தோடு கடைபிடிக்க இந்தச் சம்பவம் `ஒரு வேத அனுமதி’ என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். கடினமான சிந்தனை இது. குறை சொல்லாமல் இருக்க முடியாது! இந்த `அனுமதி’ கிடைத்ததால் எப்படியும் வாழுவேன் என்றும் சொல்ல முடியாது. நமது வாழ்வையே பொருத்தனைப் பொருளாக்குவோம். அதுவே மிகச் சிறந்த பொருத்தனையாகும்.

தூயாதி தூயவரே! மேலோட்டமாக அல்ல இதயத்தையே பொருத்தனையாகப் படைக்க அருள்தாரும். பண்பாடு, சலாச்சாரப் பின்னணியப் பழக்கவழக்கங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தும் ஞானம் தாரும். மீட்பர் பெயரில் ஆமேன்.

பொருத்தனை… மொட்டை போடுதல்2019-07-23T11:17:55+00:00
Go to Top