1 சாமுவேல் 1 : 26-28 26 ஜூலை, 2019 வெள்ளி
“கடவுளுக்கு நீ ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே;…” – பிரசங்கி 5 : 4
இறைவா! என் மகளுக்கு வேலை கிடைத்தால் முதல் மாதச் சம்பளம் உமக்கு…. மகன் பரீட்சையில் பாஸ் பண்ணினால் கோவிலுக்கு எங்கள் செலவில் வெள்ளையடிப்போம்…. என்பது போன்று பலவாறு பொருத்தனைகளை அள்ளி வீசுகிறோம். எத்தனை பொருத்தனைகளைத் தவற விட்டிருக்கிறோம்? நினைத்துப் பாருங்கள். நம்மால் இயலும் என யோசித்த பின்னரே எந்தப் பொருத்தனையையும் செய்வது நல்லது. பின்பு அதைச் செயல் வடிவாக்குவதில் அவ்வளவு கடினம் ஏற்படாது. எங்கள் திருச்சபையைச் சார்ந்த ஒருவர் ஓர் வியாபாரி `ஐயா ஒரு மாதத்திற்குள் இங்கு ஓர் ஆலயம் கட்டுவீர்கள்’ என்றார் என்னிடம். நானோ `அது எப்படி’ என்றேன், `ஐயா நான் 1 லட்சம் ரூபாய் தருவதாகப் பொருத்தனை செய்துள்ளேன்’ என்றார். `இது உம்மால் முடியுமா?’ என்றேன். உடனே ஒரு லாட்டரி டிக்கெட்டை எடுத்துக் காட்டி, `10 லட்சம் விழுந்தால் 1 லட்சம் திருச்சபைக்கு’ என்றார்.
`கற்பனையான பொருத்தனை’, `பொருந்தா பொருத்தனை’, `பேரம்பேசும் பொருத்தனை’ என்று பொருத்தனைகள் பல வகைப்படும். வகை எதுவாக இருந்தாலும் `எண்ணித் துணிக பொருத்தனை’ என்பது பொருத்தனைக்கும் பொருந்தும். கடவுளுக்குப் பொருத்தனை செய்வது மனிதர்களின் வழக்கம். பொருத்தனைகளில் மனிதர் பார்வையில், சிறியது, பெரியது, விலை உயர்ந்தது, விலை குறைந்தது என்று வித்தியாசம் இருக்கலாம். எதுவானாலும் அதைச் செயல்வடிவில் காட்டுவதை இறைவன் விரும்புகிறார்.
பொருத்தனை செய்வது, இறையவரின் கட்டாயக் கட்டளையல்ல. நீ பொருத்தனை செய்தாய். ஆகவே நிறைவேற்றத் தாமதியாதே என்றே கூறுகிறார். எல்லாவற்றையும் தட்டிக் கொட்டிக் கவிழ்த்துவிடுகிற சக்தி தாமதத்திற்கு இருக்கிறது. நன்றி உணர்வின் பிரதிபலிப்பைக்கூட, தாமதம் கெடுத்துவிடும். தாமதிக்காமல் நன்றியின் பொருத்தனைகளை நிறைவேற்றுவோம். பொருத்தனை செய்வதில் ஒரு வேகம் இருக்கும். காரியம் ஆக வேண்டுமே என்ற தவிப்புதான் இந்த வேகத்துக்குக் காரணம். பொருத்தனை செலுத்துவதில் தாமதத்தைத் தவிர்ப்போம். பொருத்தனையானது எப்படிப்பட்டதாக இருந்தாலும் உடனே செலுத்த வேண்டும். தாமதம் கூடாது. ஒவ்வொரு நிமிட தாமதமும் நமக்கு கிடைக்கும் அருளின் தாமதம். எனவே உடனுக்குடன் செலுத்துவோம். அருள் அனுபவத்தைத் தாமதத்தால் கெடுத்து விடாமலிருப்போம்.
ஆண்டவரே! நான் செய்த பொருத்தனைகளில் ஜாக்கிரதையாய் இருக்க ஞானம் தாரும். நன்றி செலுத்துவதில் கூட, நாளை பார்க்கலாம் என்ற தாமத மனநிலையை என்னிடமிருந்து மாற்றியருளும். இயேசு வழியே ஆமேன்.
