vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

பொருத்தனை… பொதுப் பொருத்தனை

சங்கீதம் 22 : 24-26                                    23 ஜூலை, 2019 செவ்வாய்

“…அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.” – சங்கீதம் 22 : 25

பொருத்தனை செலுத்தினால்தான், இறைவன் ஆசீர்வதிப்பாரா? இறை ஆசிபெற, இறைவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமா? கேள்விகளுக்கு `ஆம்’ என்று விடை கொடுத்தால் இறைவன் ஓர் ஊழல் பேர்வழி எனலாம். பொருத்தனையை நாம் இறைவனுக்குப் படைக்கிறோம். பொருத்தனை செய்வது விசுவாசியின் விருப்பம். அதை இறை பயம் கொண்டவர்களுக்கு முன்பாக, ஊழியர் முன்பாக செலுத்துவதில் எந்தவிதத் தவறுமில்லை. பொருத்தனைச் செயல்கள் பலருக்கு ஒரு முன் மாதிரியும் ஆகிறது. விசுவாசிகளின் கூடுகையில் பொருத்தனை செலுத்துவது பலருக்கு ஆசீர்வாதமாகும்.

இறைவன் எளியவரின் குரல் கேட்கிறார். நம்முடைய துயர வாழ்விலிருந்து தெய்வத்தை நோக்கி முறையிடுகையில், ஏதாவது ஒரு வகையில் அவருடைய சித்தத்திற்கிசையக் கடவுள் கைதூக்கிட முன் வருகிறார். அன்னாளின் விசுவாச மனம் கண்டு தீர்க்கதரிசி சாமுவேலின் வழியே தேவன் வாக்குறுதி தந்தார். ஆகாரின் கண்ணீர் துளிகளுக்குப் பதிலாகத் தேவன் தண்ணீர் தந்தார். நம் வாழ்வு முள்ளில் சிக்கிய மலர் போல் இருக்கையில், இறைவனை நோக்கிக் கெஞ்சுகையில் நம் குரல் பரலோகக் கதவைத் தட்டும் என்பது உறுதி.

இறைவன் நமக்குப் பதில் தருவார், மற்றவர்கள் சிரிக்கும்படி விடமாட்டார், வெட்கப்படுத்த மாட்டார். காரணம், நம் எளிய பொருத்தனைகளை அவர் ஏற்கிறார். அது நமக்கு இன்பமே! சிறுமைப்பட்டவர்கள் – திருப்தியடைவர்! கர்த்தரைத் தேடுகிறவர்கள்-திருப்தியாவார்கள்! இந்த உண்மைகளின் மற்றொரு பார்வைக்கோணம், சிறுமையானவன்-பொருத்தனை செலுத்துகிறவன் என்பது! `என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்’ என்று திருக்கவிஞர் தாவீது எழுதினார். சிறுமையானவனின் சிறுமையைக் கடவுள் அற்பமாய் எண்ணவில்லை. அருவருக்கவுமில்லை, தமது முகத்தை மறைக்கவுமில்லை’ என்ற காரண காரியங்களைச் சொல்லிவிட்டுப் பொருத்தனைகளைச் செலுத்துவேன் என்றார் தாவீது.

பொருத்தனை செய்து அதை உடனுக்குடன் நிறைவேற்றுவது நல்லதொரு முன் மாதிரி. சிறுமைப்பட்டவரின் மகிழ்ச்சி பொருத்தனை செய்தலில் வெளிப்படும். ஆனால் அதையே பெருமையாக்கிவிடக் கூடாது. பொருத்தனை செய்வோம். அதை இறை பயம் உள்ளவர் முன்பாக படைப்போம். அது தற்பெருமைக்கல்ல, பரம்பொருள் தந்தவற்றின் நன்றி உணர்வாகப் படைப்போம். அப்போது தெய்வீக பிரசன்னம் நமது வாழ்வில் பூரணமாகும்.

ஏழைக்கு இரங்கும் கர்த்தாவே! உமக்குப் பயப்படும் பிள்ளைகள் முன் பொருத்தனைகளைப் படைக்கிற மனம் தாரும். என்னையும் என் பொருத்தனைகளையும் ஏற்றருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

பொருத்தனை… பொதுப் பொருத்தனை2019-07-23T05:34:09+00:00

பொருத்தனை… உரிமை

சங்கீதம் 56 : 10-13                                             15 ஜூலை, 2019 திங்கள்

“கடவுளே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என் மேல் இருக்கின்றன.” – சங்கீதம் 56 : 12

மனிதர்கள் தெய்வத்திற்குப் பொருத்தனை செய்வது இன்று, நேற்றல்ல, தொன்றுதொட்டே கையாளப்படுகிறது. மழை பெய்து நன்றாக விளைந்தால் 2 மூட்டை திருச்சபைக்குக் காணிக்கை கொடுப்பேன்… மகள் ஐ.ஏ.ஸ் தேர்வில் பாஸ் செய்தால் மாதந்தோறும் 1000 ரூபாய் கொடுத்து ஊழியத்தைத் தாங்குவேன்… இறைவா! கடலுக்குள் போகிறேன். மீண்டும் கரைக்கு நல்ல முறையில் கொண்டு வந்தால் நான் பிடிக்கும் மீன்களில் நான்கில் ஓர் பங்கினை உமக்கு வழங்குவேன்… என்பது போன்ற பொருத்தனைகள் இன்றைக்கும் தொடருகின்றன.

இறைமக்கள் பொருத்தனை செய்வதில் தவறு ஏதுமில்லை. ஆனால் வேண்டிக்கொண்டது போலவே, கை மேல் பலன் கிடைத்த பிற்பாடு, பொருத்தனைகளை செய்ய நம்மில் பலர் மறந்து விடுகிறோம். பொருத்தனை செலுத்த வேண்டிய சமயத்தில், பொருளாதார நிலை, மனநிலை, சபைநிலை போன்றவற்றைச் சார்ந்து சிலபொழுது நமது பொருத்தனைகள் கைவிடப்படுகின்றன. இறைவன் ஆபத்தில் நம்மைக் காப்பாற்றுகிறார், நம்முடன் வாழ்கிறார். நம் செயல்களைக் கவனிக்கிறார், நம்மைப் பார்த்துக் கொள்கிறார். நாம் செய்த பொருத்தனைகள் அவருக்கு ஞாபகத்தில் இருக்கும். இதைத்தான், `நாம் செய்த பொருத்தனைகள் நம்மேல் இருக்கிறது’ என்கிறது தியான வசனம்.

திருமணத்தில் கூட, தேவ சந்நிதியில் பொருத்தனை செய்கிறோம். `மரணம் நம்மைப் பிரிக்குமளவும்… நான் உன்னைக் கவனித்துக் கொள்வேன்… நான் உன்னிடம் அன்புடன் இருப்பேன். நீ என்னிடம் அன்பாக இருப்பாய்’ என்று கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பொருத்தனை செய்கிறார்கள். இந்தப் பொருத்தனை குடும்ப வாழ்வின் இணைப்பு என்பதை மறக்காமல் இருப்போம். என் கண்ணீர் உமது கணக்கில் இருக்கிறது. என் அலைச்சலை கணக்கிட்டிருக்கிறீர்.(சங்கீதம் 56:8) என்றெல்லாம் தாவீது கூறினார். நமது பொருத்தனைகளும் கடவுளின் கணக்கில் இருக்கும் என்பது தெளிவு.

நமது பாவத்தின் சுமையைக் கடவுள் கணக்கிலெடுத்ததினால்தான், பாவப்பரிகாரியாக இயேசுவை அனுப்பினார். இயேசு நமது பாவக்கடனைச் செலுத்தித் தீர்த்தார். நாமும் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டோம். நாம் கடவுளின் பிள்ளைகளாக வாழுவோம் என்று திருமுழுக்கில், திடப்படுத்தலில் பொருத்தனை பண்ணினோம். இந்தப் பொருத்தனையைச் சாவு வரை நாம் சுமந்து செல்கிறோம். நாம் செய்த பொருத்தனை நாம் சுமந்து திரியும் உரிமைகள். இவற்றை நிறைவேற்ற விழிப்புடன் இருப்போம். பொருத்தனைப் பாரத்தைச் சுமக்க, கடவுளின் கிருபை பலம் தரட்டும்.

மனிதனை மீட்க இயேசுவை அனுப்பியவரே! இயேசுவை விசுவாசித்து உமது பிள்ளையாக வாழுவேன் என்று நான் செய்த பொருத்தனை என் மீது உள்ளது. அதை நிறைவேற்றுகிற ஆவியின் பலத்தைத் தாரும். இயேசு வழியே ஆமேன்.

பொருத்தனை… உரிமை2019-07-12T06:49:31+00:00

பொருத்தனை… மன்றாடுதல்

சங்கீதம் 51 : 16-19                         08 ஜூலை, 2019 திங்கள்

….அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையில் சௌரக்கத்தி படுவதில்லை என்று பொருத்தனை பண்ணினாள்.” – 1 சாமுவேல் 1 : 11

அன்னாள் என்பவருக்குக் குழந்தை இல்லை. இதனால், அவர் அடைந்த துன்பங்கள் பல. தனக்குக் குழந்தை பிறக்குமானால், அவனை வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன் என அன்னாள் ஜெபித்தார், பொருத்தனை பண்ணினார். இறைவன் அவளுக்கு ஒரு குழந்தையைக் கட்டளையிட்டார்.

இங்கு பொருத்தனை ஒரு வேண்டுதல். மன்றாடுதல்- பிரார்த்தனை என்ற அளவில் பொருள் பெறக் காணலாம். கர்த்தருடைய பாதப்படியில் நான் நின்று, மன்றாட்டுகளை ஏறெடுப்பதும், முறையிடுவதும் ஒரு வகையில் பொருத்தனை என்று நம்புகிறேன். இதன் மூலம் நான் எனது முழு ஆவியையும் அவர் சமூகத்தில் ஊற்றி விடுகிறேன். எனது ஐம்புலன்களும் இறைவனிடத்தில் அடைக்கலமாகி விடுகின்றன. இந்தத் தியானங்களை வாசிக்கும் போது கூட, சில நிமிட நேரங்கள் நான் இறைவனின் காலடியில் நிற்கிற உணர்வு பெறுகிறேன். பொருத்தனை என்பது வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கப்படுகிற ஓர் தொடர் நிகழ்ச்சி என்ற செய்தியைத் தியானப்பகுதி எனக்குக் கொடுக்கிறது. கடவுளுக்குச் சேவை செய்ய முன் வரும் பொருத்தனை மிகவும் போற்றுதற்குரிய பொருத்தனை என்ற மேலோங்கிய உணர்வு என்னை நிறைக்கிறது.

வாழ்நாள் முழுவதும் இறைவனை நினைக்க, வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கே சேவை செய்ய நான் அர்ப்பணிக்கப்பட்டவன். நான் பெற்ற ஞானஸ்நானத்தின் அர்த்தம் இதுதானே. இயேசு எனக்காகத் தன்னையே கொடுத்தார். இதன் விளைச்சலாக, நான் என்னை இயேசுவுக்குக் கொடுக்கிறேன் என்றெல்லாம் நினைக்கையில் பொருத்தனையில் ஒரு பதிற்செயலும் அடங்கியிருக்கிறது என்றும் தெரிகிறது. பொருத்தனை சேவை செய்ய ஒரு மூலதனம். எனது பொருத்தனைக்கு முன்பே கடவுள் என்னைச் சொந்தமாக்கினார். எனது பொருத்தனையில் எனக்குக் கிடைத்த இந்த உறவை நான் உறுதிப்படுத்துகிறேன். ஆகவே பொருத்தனை எனது தேவ சேவைக்கு மூலதனம். பொருத்தனை மூலம் சேவை செய்ய மனிதர்களைக் கடவுள் அழைக்கிறார். இதனையே `அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம் என்றும் சுட்டிக் காட்டுகிறாரோ என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை இந்த தியானத்தைப் படிக்கிற யாராவது தேவ ஊழியத்துக்குத் தங்களை ஒப்புக் கொடுக்கலாமே என்று கூட என் மனதில் ஒரு மகிழ்ச்சி எழுகிறது.

ஆண்டவரே! வாழ்நாள் எல்லாம் என்னை உமக்கு ஒப்புக் கொடுக்கும் துணிவை எனக்குத் தாரும். என் பணியை ஆசீர்வதியும். உமக்குப் பணி செய்யும் பொருத்தனைத் துணிவை தந்திடும். இரட்சகர் வழியே ஆமேன்.

பொருத்தனை… மன்றாடுதல்2019-07-05T09:41:05+00:00

பொருத்தனை… நினைவு

சங்கீதம் 143 : 2-5                      06 ஜூலை, 2019 சனி

“…எனக்குப் பொருத்தனை பண்ணின பேதேலிலே உனக்குத் தரிசனமான கடவுள் நானே;…” – ஆதியாகமம் 31 : 13

யாக்கோபுக்கு, கடவுள் திருகாட்சி கொடுத்திருந்தார். இதைக் கடவுள் அவருக்குப் பிற்காலத்தில் நினைப்பூட்டுகிறார். கடவுள் எப்பொழுதும் மனிதர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பலவற்றை நாம் மறந்து விடுகிறோம். ஆனால் யாக்கோபு கல்தூண் நிறுத்தி அபிஷேகம் செய்தது; கடவுளுக்கு ஓர் பொருத்தனை செய்தது; இவை நடைபெற்ற இடத்திற்கு பேதேல் எனப் பேரிட்டது போன்ற யாவற்றையும் கடவுள் நினைத்துப் பார்க்கிறார். ஒருவேளை, யாக்கோபு மறந்து விட்டாரோ? இதனால்தான், கடவுள் இவற்றை நினைவுபடுத்தி, தன்னை அறிமுகம் செய்கிறாரோ? மறக்கும் குணம் மனிதனுக்கு உண்டு என்பதைக் கடவுள் அறிவார். இதனால்தான், கடவுள் தம்மை மனிதர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தமது பிரசன்னத்தை, திருவசனத்தின் வழியே தினமும் நினைவுபடுத்துகிறார். கடவுளை நாம் நினைக்கவும் அடிக்கடி நம் சிந்தனைகளில் வைத்து கொள்ளவும் பொருத்தனைகள் நமக்கு உதவுகின்றன. கடவுளும் நமது பொருத்தனைகளை மறக்காது நினைவில் வைத்திருக்கிறார். பொருத்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்கிறார். நாம் செய்த பொருத்தனைகளை நினைவில் வைத்திருப்பதை, விசுவாசப் பண்பாக இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

தினமும் கடவுள் நம்மை நினைக்கிறார், காக்கிறார், மன்னிக்கிறார், புது ஜீவன் தருகிறார். ஆகவே தினமும் நம் கடவுள் நினைக்கப்படவேண்டுமே. பொருத்தனைகளை நிறைவேற்றிய பிறகும் நமக்குக் கடவுள் அவர்தானே. பொருத்தனைகளை நிறைவேற்ற மறக்கும்போது, நினைவுபடுத்துபவரும் அவர்தானே! பொருத்தனைகளை நிறைவேற்ற விசுவாச பலம் தருபவரும் அவர்தானே. கடவுள்-மனிதன்-பொருத்தனை-கடவுள்… என்று இந்த மூன்றில் எது முந்தியது என்று நினைத்துப் பார்ப்பது தேவை இல்லை. பொருத்தனைகளில் நமது கடவுள் நினைக்கப்படட்டும், துதிக்கப்படட்டும்! பொருத்தனைகளால் விசுவாச ஞாபகம் வளரட்டும்.

இறைவா! நாங்கள் உம்மைத் தினமும் நினைக்க எங்கள் செயல்களை துரிதப்படுத்தும்! செயலுள்ள விசுவாசத்திற்கு பொருத்தனைகள் படிக்கற்களாகிட உமது அருளை இயேசுவின் வழியே பெருகிடச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

பொருத்தனை… நினைவு2019-07-05T07:29:11+00:00

பொருத்தனை… மீட்பு

சங்கீதம் 145 : 8-14                         04 ஜூலை, 2019 வியாழன்

“யாதாமொருவர் ஒரு பொருத்தனை செய்து அதை நிறைவேற்ற வரும்போது……” – லேவியராகமம் 27 : 2

இஸ்ரவேல் மக்களிடையே, `பொருத்தனை’ என்பது பக்திக்குரிய செயலாகவே எண்ணப்பட்டு வந்தது. கடவுள் நமது விருப்பங்களை நிறைவேற்றுகிறார். நாம் அவருக்குப் பிரியமானதைச் செலுத்தி நமக்குப் பிரியமானதைப் பெறுவோம் என்ற எண்ணமே `பொருத்தனையாக’ வெளிப்பட்டது. லேவியர் புத்தகத்தில், நமது தியானப்பகுதி ஒரு சிறப்பான பொருத்தனை பற்றிக் கூறுகிறது. இஸ்ரவேலரில் சிலர், ஆலயத்துக்கென கூடாரப்பணிக்கென பிள்ளைகளை அடிமைகளாக நேர்ச்சை செய்யும் பழக்கம் வைத்திருந்தனர். ஆலயப்பணி செய்தல், லேவி கோத்திரத்தாருக்கு உரிமையானதாகும். அப்படியானால் நேர்ச்சை செய்தவர்களை என்ன செய்வது? இதற்கும் ஓர் ஒழுக்கம் இருந்ததைத் தியானவசனம் சுட்டிக் காட்டுகிறது. ஆலயத்திற்காக நேர்ந்து விடப்பட்டாலும், ஆலயத்தின் சட்டதிட்டத்திற்கு ஏற்புடையதல்லாததாக நேர்ச்சைப் பொருள் இருந்தால், அதற்கு ஈடாகப் பணம் கொடுத்து நேர்ச்சைப் பொருளை மீட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது. ஏழைகளுக்கு, இல்லாதவர்களுக்கு பொருத்தனைச் சலுகைகள் வழங்கப்படலாம். தங்கள் திராணி, திறமைக்கு ஏற்றாற் போல் பொருத்தனை செலுத்த உரிமைகளும் தரப்படலாம் என்பதை இந்த `பொருத்தனை மீட்பு’ ஒழுக்கம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

பொருத்தனை செலுத்துவோரின் தேவைகள், வேண்டுகோள் விடுப்பவரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவது கடவுளின் சுத்த இரக்கத்தினாலேயே என்பதை உணர்தல் வேண்டும். கடவுள் தமது இரக்கத்தினால் மனிதரிடம் செயலாற்றும் முறையை ஏற்றுக் கொள்கிற பக்தி செயல்களில் ஒன்று பொருத்தனை என்று கூறலாம். பொருத்தனைகளை இறைவன் ஒருபோதும் கட்டாயப் படுத்துகிறதும் இல்லை என்பதையும் `மீட்பு ஒழுக்கம்’ சுட்டிக் காட்டுகிறது. தேவ இரக்கம், தேவ மீட்பு நேர்ந்து விடுதலிலும் – பொருத்தனை செலுத்தலிலும் எத்தனை தெளிவாக விளங்குகிறது? இறைவனது இரக்கங்கள் நமக்கு இன்றும் கிடைக்கின்றன. தோத்திரம் செலுத்துவோம். பொருத்தனை செய்யமுடியாவிட்டாலும் அச்சம் கொள்ளாதிருப்போம். பொருத்தனை பெரிதல்ல. பொருத்தனையையே மீட்கின்ற கடவுளின் இரக்கத்திற்குள் அடைக்கலம் புகுவோம்.

கடவுளே! உமது இரக்கம் எங்கள் தேவைகளில் அதிகமாய் ஊறிப் பெருக அருள்தாரும். பொருத்தனை கட்டாயமல்ல என்ற உணர்வைத் தந்ததற்காகவும், உமது இரக்கத்தின் விளக்கத்தை உணரச் செய்ததற்காகவும் தோத்திரம். அயேசுவின் வழியே ஆமேன்.

பொருத்தனை… மீட்பு2019-07-03T11:22:48+00:00

ஆட்சியாளர்களுக்காக ஜெபம்

1 தீமோத்தேயு 2 : 1-4                                       30 ஜுன், 2019 ஞாயிறு

“…ராஜாக்களுக்காகவும் அதிகாரிகள் யாவருக்காகவும் அப்படிச் செய்ய வேண்டும்.” – 1 தீமோத்தேயு 2 : 2

மனிதன் ஓர் சமூகப் பிராணி என்று சொல்லுவார்கள். அவனால் தனித்து வாழ முடியாது. சமூகமாக வாழ்ந்து பழக்கப்பட்டவன். சமூகம் தனி மனிதனையும், தனி மனிதன் சமூகத்தையும் சார்ந்தே வாழ வேண்டும்.

ஆதித் திருச்சபை கூடி வழிபட்டது. கூடி ஒருமனதோடு ஜெபித்தது. அதே சமயம் நாட்டு மன்னர்களுக்காக, அதிகாரிகளுக்காகவும் ஜெபித்தது. அவர்கள் கொடுங்கோலர்களாக இருந்தாலும் நேர்மையற்றவர் களாயிருந்தாலும் அவர்கள் வாழ்வுக்காகவும் நல் ஆட்சிக்காகவும் ஜெபித்தது. கிறிஸ்தவம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் நல்ல குடி மக்களாக வாழவே விரும்புகிறது. ஆதித் திருச்சபைப் பிதாக்களான ‘தெர்துல்லியான், கிளமென்று’ போன்றவர்கள் நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஜெபத்தை முக்கியப்படுத்தினார்கள். பக்தி என்பது கடவுளுக்குப் பயந்து வாழும் வாழ்வையே குறிக்கும். நல்லொழுக்கம் என்பது கண்ணியமான வாழ்வையே குறிக்கும்.

நாம் வாழும் இடங்களில் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ விரும்புகிறோம். இதற்காக கடவுளே சகல அதிகாரங்களையும் ஏற்படுத்துகிறார். அவராலன்றி ஒரு அதிகாரமுமில்லை. அரசர்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் யாவரும் கடவுளின் பிரதிநிதிகள். எனவே நமக்கு இவர்களைக் குறித்த கரிசனை மிக அவசியமானது. நம் ஜெபங்கள் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். இதைத் திருமறையும் உலக வரலாறும் நமக்குத் தெளிவு படுத்துகின்றன. நாமும் நம்மைச் சுற்றி வாழுகிற மக்களும் நலமாக சமாதானமாக வாழ வேண்டும். கடவுளே எல்லாவற்றையும் அரசாளுகிறார். இந்த உணர்வோடு யாவருக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும்.

கடவுள் ராஜாதி ராஜா. அவர் உலகை ஆளுகிறவர். தம் மக்கள் வழியாக இதைச் செய்கிறார். இந்த எண்ணம் இருக்க வேண்டும். அதனால் கடவுள் அமைத்துத் தருகிற ஆளுகையில் மகிழ்ச்சி காண்போம். நம்மை ஆளுகிறவர்களுக்காக ஜெபிப்போம். நம் வாழ்வு பிறருக்கு உதவ வேண்டும். பிறர் வாழ்வு நமக்கு உதவ வேண்டும்.

ராஜாதி ராஜாவே! உமது ஆளுகையில் உமது நேசகுமாரன் வழியாக எங்களைக் கொண்டு வந்திருக்கிறீர். நன்றி. அது போலவே உலக ஆளுகைகளையும் ஏற்படுத்துகிறீர். அவர்களுக்காக, நல்லாட்சிக்காக ஜெபிக்க உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

ஆட்சியாளர்களுக்காக ஜெபம்2019-06-28T10:49:09+00:00

கவலை நீக்க ஜெபம்

பிலிப்பியர் 4 : 4-7                                                          25 ஜுன், 2019 செவ்வாய்

“நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லா விஷயத்திலும் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடுகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” – பிலிப்பியர் 4 : 6

சந்தோஷமாயிருங்கள் என்று ஏற்கெனவே வலியுறுத்துகிற கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். எப்பொழுதும் என்ற சொல் எல்லா சூழ்நிலைகளிலும் என்று பொருள்படும். அது போலவே சாந்த குணம் என்னும் கிறிஸ்தவனுடைய சிறந்த நடத்தை எல்லா மக்களுக்கும் வெளியரங்கமாக இருக்க வேண்டும். எல்லா மக்களும் ஏற்கும் குணமுடையவராக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. காரணம் கடவுள் எல்லாருக்கும் அருகில் எப்பொழுதும் இருக்கிறார் என்பதே.

கவலைப்படாமல் என்ற சொல் எதிர்காலம் இல்லையோ என்று அஞ்சி துவண்டு விடாமல் இருங்கள் என்றும் பொருள்படும். சபையார் தங்கள் தேவைகள் பிரச்சனைகள் எதுவாயிருந்தாலும் அவற்றைக் கடவுளிடம் கூற அழைக்கிறார். நாம் நமது விண்ணப்பங்கள் தனியான தேவைகள் பிறரின் தேவைகள் எல்லாவற்றையும் கடவுளுக்கு ஜெபத்தின் வழி தெரியப்படுத்த வேண்டும். விண்ணப்பங்களுக்கு முன் கடவுளிடம் நாம் பெற்ற அனைத்து ஈவுகளுக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் கடவுள் அருளிய ஈவுகளை அவரின் கிருபைகளை நினைத்துப் பார்க்காமல் இருப்பது தவறு. அதை அறிந்தால் எதிர்கால ஆசீர்வாதங்களின் நிச்சயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
சமாதானம் என்று பொருள்படும் சாலோம் என்ற சொல்லுக்கு கடவுளுடனும் பிற மக்களுடனும் சரியான உறவு நிலையை ஏற்படுத்தி முழுமையான வாழ்வு வாழ்வதைக் குறிக்கும். பிறருடன் சரியான உறவு நிலை உருவாக்குதல், சமத்துவம் அளித்தல், சரியான தொடர்பு இல்லாதிருத்தல் இவை சமாதானத்தைக் கொண்டுவராது. இங்கே சமாதானம் என்ற சொல் இராணுவ வீரர்களின் பாசறையில் காவல் காப்போரின் செயலைப்போன்றது. கடவுளின் சமாதானம் நம்மைக் காவல் காக்கும். கிறிஸ்து நமக்கு விட்டுச் சென்ற சொத்து சமாதானம்.

விண்ணப்பம் – தோத்திரம் – ஜெப வேண்டுதல் இவையெல்லாம் நம் பிரச்சனைகள் வேதனைகள் போன்றவற்றை கடவுளுக்குத் தெரியப்படுத்தும் முறைகள். நன்றி கூறல் இல்லாமல் ஜெபம் இல்லை. அதனால்தான் நாம் எல்லா விஷயங்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் ஜெபங்கள் கேட்கப்படாவிட்டாலும் அதிலும் கடவுளுக்கு ஒரு நோக்கம் இருக்கும். இதை உணர்ந்து நன்றி செலுத்தி வாழுவோம்.

இயேசுவில் எங்களை அழைத்திருக்கிற கடவுளே! நாங்கள் பெறுகிற அனைத்திற்கும் நன்றி செலுத்தவும் தேவையானவற்றை நம்பிக்கையோடு கேட்க, உம் சித்தப்படி பெற கிருபைசெய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

கவலை நீக்க ஜெபம்2019-06-24T11:17:36+00:00

நற்செய்திப் பணிக்காக ஜெபம்

கொலோசேயர் 4 : 2-6                                   24 ஜுன், 2019 திங்கள்

“சுவிசேஷம் செல்லும்படியான வாசலை கடவுள் திறந்தருளும்படி எங்களுக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்.” – கொலோசேயர் 4 : 4

மனுக்குலம் பாவத்தால் கடவுளோடு வாழ்கிற வாழ்வை இழந்து போனது. பாவத்திற்கு பரிகாரம் தேடி கடவுளோடு வாழ வேண்டும் என்று எல்லா மனிதர்களும் விரும்புகின்றனர். இதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளை நாடித் தேடி ஓடுவதைப் பார்க்கிறோம்.

ஆனால் திருமறை பாவம் வந்த விதத்தையும் அதைத் தீர்ப்பதற்கான பரிகாரங்களையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கடவுள் தம் ஒரே மகன் இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பினார். இரத்தம் சிந்தாதபடி பாவ மன்னிப்பில்லை. எனவே இயேசுவை கல்வாரி சிலுவையில் பலியிட்டார். அவர் இரத்தத்தால் மனுக்குல மீட்பை உறுதி செய்தார். கடவுளோடுள்ள உறவை நமது நற்செயல்களால் பெற முடியாது. அது கிருபையாக நமக்கு அருளப்படுகிறது.
இயேசுவின் பாடு மரணத்தால் நமக்கு இரட்சிப்பு. அவரில் வைக்கிற விசுவாசமே கடவுளோடுள்ள வாழ்வை அருளுகிறது. இந்த செய்தி முழு உலக மக்களுக்கும் சொல்லப்படவேண்டும். வசனத்தைக் கேட்டு, விசுவாசித்து, கடவுளைத் தொழுது கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசத்திற்கு ஆதாரம் கடவுளின் வசனம். வசனத்தின் வழியாய் தூய ஆவியானவர் விசுவாசத்தை உருவாக்குவார். மனுக்குலம் விசுவாசத்தை அடையாதபடி அதற்குத் தடைகள் உண்டு. பிசாசும் தடைகளை ஏற்படுத்துகிறான். அதனால் வசனம் சொல்ல வாசலைத் திறக்கும்படி ஜெபம் செய்யுங்கள் என்று கேட்கிறார். ஜெபம் சிறைச்சாலைக் கதவைத் திறக்கக் காரணமாயிருந்தது. அநேகருடைய கல்நெஞ்சை திறக்கக் காரணமாய் இருந்தது. இவ்வழியில் ஜெபம் நற்செய்தி சொல்லும் வாசலை திறக்கும் என்கிற நம்பிக்கையில் பவுலடிகளார் இந்த வேண்டுகோளை வைக்கிறார்.

இன்றைய சூழ்நிலையில் பல நாடுகளில் கடவுள் திறந்த வாசலை வைத்திருக்கிறார். சீனா போன்ற நாடுகளில் நற்செய்தி வேகமாகப் பரவி வருகிறது. அதே வேளையில் நம் நாட்டில் நற்செய்திப் பணிக்கு வாசல்கள் அடைபடுகின்றன. நற்செய்தி பணியாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆலயங்கள் இடிக்கப்படுகின்றன. பவுலடிகளார் கொலோசேய சபையாருக்கு விடுத்த வேண்டுகோள் நம் காதுகளில் ஒலிக்கிறது. முழங்கால் படியிடுவோம். ஒருமனதோடு முழு நம்பிக்கையோடு ஜெபிப்போம். நம் ஆண்டவர் நிச்சயமாய் நம் வேண்டுதலைக் கேட்டு வாசல்களைத் திறப்பார்.

எல்லாரும் இரட்சிக்கப்பட விரும்புகிற கடவுளே! உம் நேச குமாரனில் இரட்சிப்பின் பணியைச் செய்து முடித்தற்காக நன்றி. இச்செய்தி உலகமெங்கும் செல்ல வாசலை திறந்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

நற்செய்திப் பணிக்காக ஜெபம்2019-06-24T05:31:50+00:00

புது வாழ்வு பெற ஜெபம்

ஏசாயா 38 : 1-5                                                 21 ஜுன், 2019 வெள்ளி

“நீ போய் எசேக்கியாவைப் பார்த்து…. உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்;…. இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்;” – ஏசாயா 38 : 5

மனிதன் பிறக்கும் போது மரணத்தோடு பிறக்கிறான். வாழும்போது மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறான். மரணம் எல்லாருக்கும் இயற்கையானது. இயல்பானது. உலகில் பிறக்கிற ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும். அதே வேளையில் தான் இன்ன நாளில் இறப்பேன் என்பதை அறிந்தால் அது அந்த மனிதனுக்கு வேதனையைக் கொண்டு வரும். பிணை கைதிகளாக தீவிரவாதிகளால் பிடிக்கப்படுகிறவர்கள் விமான கடத்தலில் அகப்படுகிறவர்கள் அனுபவிக்கும் வேதனை பயம் இவை சொல்லி மாளாது.

மருத்துவர்கள் கைவிடும் நோயாளிகளுக்கும் இந்த மனநிலை ஏற்படும். இப்படிப்பட்ட ஓர் நிலையை எசேக்கியா அரசர் சந்தித்தார். அவர் வியாதி நீண்டு கொண்டு போனது. கடவுள் ஏசாயா வழியாக நீ இனி பிழைக்க மாட்டாய், உன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்து என்று சொன்னார். இச்செய்தியை தீர்க்கர் வழியாகக் கேட்ட எசேக்கியா தன் முகத்தை சுவர் பக்கமாய்த் திருப்பி கடவுளை நோக்கி அழுது ஜெபித்தார். கடவுளே நான் உமக்கு முன்பாக முழு மனதோடும் உண்மையுள்ளவனாய் நடந்தேன். உமது பார்வையில் நலமானதைச் செய்து வந்தேன். இவற்றை நீர் நினைத்தருளும் என்று உள்ளமுருக அழுது ஜெபித்தார். கடவுள் எசேக்கியாவின் கண்ணீரைக் கண்டார். ஜெபத்தை ஏற்றுக் கொண்டார். மனதுருகினார். மனம் மாறினார். எசேக்கியாவுக்கு வாழ்நாளை கூட்டிக் கொடுக்க தீர்மானித்தார். ஏசாயாவை அழைத்து நீ போய் எசேக்கியாவைப் பார்த்து உன் தகப்பனாகிய தாவீதின் கடவுளாகிய கர்த்தர் சொல்லுவதைக் கேள்: உன் ஜெபத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ உன் நாட்களோடே பதினைந்து வருடங்களை கூட்டுவேன் என்று சொல்லுகிறார் என்று சொல்லச் சொன்னார். எசேக்கியா புதுவாழ்வு பெற்றார்.

மனிதனின் வாழ்நாள் எழுபது வருடம். பலத்தின் மிகுதியால் எண்பது வருடம். முடிவு மரணம். நாம் ஒவ்வொரு நாளும் வாழ்வது கடவுளின் கிருபையே. இயேசுவில் நமக்கு நித்திய வாழ்வு உண்டு. இந்த நிச்சயத்தில் மரண பயமின்றி வாழ்வோம். நம் எல்லா வேண்டுதல்களையும் உண்மையான மனதோடும் கண்ணீரோடும் ஆண்டவரிடம் கேட்போம். கடவுள் மனதுருகி கேட்டு நமக்கு பதிலளிப்பார். புது வாழ்வு தருவார்.

ஜெபத்தைக் கேட்கிறவரே! உம் நேசகுமாரனில் வைக்கிற விசுவாசத்தில் நித்திய வாழ்வை வாக்களித்திருக்கிறீர். மரணத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றலை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

புது வாழ்வு பெற ஜெபம்2019-06-21T06:00:30+00:00

துன்பம் நீங்க ஜெபம்

யாக்போபு 5 : 13-16                                                  19 ஜுன், 2019 புதன்

“உங்களில் ஒருவன் துன்பப்படுகிறானா? அவன் ஜெபம் பண்ணக் கடவன்…” – யாக்கோபு 5 : 13

மனிதன் எப்பொழுதும் சுகத்தோடும் பலத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழவே விரும்புகிறான். மனிதர்களுக்குப் பொதுவாக வாழ்வில் நிறைவு வருவதில்லை. அதே வேளையில் வாழ்வில் பிரச்சனைகளும் சுகவீனங்களும் இயற்கையானவை, இயல்பானவை என்பதை உணரவேண்டும். பாவம் உலகில் வந்த வரலாறில், பாவத்தின் தண்டனைகளை வாசிக்கும்போது மேற்கூறியவை நமக்குப் புரியும். அத்துடன் துன்பங்களாலும், வியாதியாலும் அல்லல்படும்பொழுது இது ஏன் எனக்கு வந்தது. கடவுளுக்கு கண் இல்லையா, காது இல்லையா என்று முறுமுறுக்கிறோம். நாம் இயேசுவில் கடவுளின் பிள்ளைகள். அவரை அப்பா பிதாவே என்று அழைக்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். எந்தத் தகப்பனும் தன் பிள்ளைகள் துன்பப்படுவதை பார்த்து ரசிப்பவர் அல்ல. பிள்ளைகளுக்குத் துன்பம் வரும்போது துடித்துப் போவான்.

கடவுள் நமக்குத் துன்பத்தைத் தருபவரல்ல. அப்படியானல் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு நம் பாவங்களே காரணமாகின்றன. சில வேளைகளில் நம் விசுவாசத்தை சீர்குலைக்க சாத்தான் யோபுவுக்கு கொடுத்தது போல துன்பங்களை வரச்செய்வான். நாம் துன்பங்களை அனுபவிக்கும் போது சலிப்பும், முறுமுறுப்பும் கொள்ளலாம். நிதானமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். சலிப்பும் முறுமுறுப்பும் அவிசுவாசத்தின் வெளிப்பாடுகள். எனவே பொறுமையாக இருந்து துன்பங்களை எதிர் கொள்ளுகிற ஆற்றலை கடவுளிடமே கேட்டுப் பெறவேண்டும். இங்கு யாக்கோபு ‘அப்போஸ்தலன் ஒருவன் துன்பப்பட்டால், கடவுளையோ பிறரையோ குற்றப்படுத்தாது ஜெபம் செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார். ஊக்கமான ஜெபம் வல்லமையுள்ளது. அத்துடன் அது கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்.

கடவுளிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள அவரை முழுமையாக நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுள்ள ஜெபம் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை தரும். இந்தச் சிந்தனையுடன் நம் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களை எதிர்கொள்ளுவோம். நம் தந்தையாகிய கடவுள் நம்பிக்கையுள்ள ஜெபத்தைக் கேட்டு நம் துன்பங்களை மாற்றுவார்.

ஜெபத்தைக் கேட்பவரே! எங்கள் துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு உம்மிடம் வரவும் ஜெபத்தில் எல்லாவற்றையும் தெரிவித்து விடுதலை பெறவும் உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

துன்பம் நீங்க ஜெபம்2019-06-18T08:25:50+00:00
Go to Top