ஏசாயா 38 : 1-5                                                 21 ஜுன், 2019 வெள்ளி

“நீ போய் எசேக்கியாவைப் பார்த்து…. உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்;…. இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்;” – ஏசாயா 38 : 5

மனிதன் பிறக்கும் போது மரணத்தோடு பிறக்கிறான். வாழும்போது மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறான். மரணம் எல்லாருக்கும் இயற்கையானது. இயல்பானது. உலகில் பிறக்கிற ஒவ்வொருவரும் இறந்துதான் ஆக வேண்டும். அதே வேளையில் தான் இன்ன நாளில் இறப்பேன் என்பதை அறிந்தால் அது அந்த மனிதனுக்கு வேதனையைக் கொண்டு வரும். பிணை கைதிகளாக தீவிரவாதிகளால் பிடிக்கப்படுகிறவர்கள் விமான கடத்தலில் அகப்படுகிறவர்கள் அனுபவிக்கும் வேதனை பயம் இவை சொல்லி மாளாது.

மருத்துவர்கள் கைவிடும் நோயாளிகளுக்கும் இந்த மனநிலை ஏற்படும். இப்படிப்பட்ட ஓர் நிலையை எசேக்கியா அரசர் சந்தித்தார். அவர் வியாதி நீண்டு கொண்டு போனது. கடவுள் ஏசாயா வழியாக நீ இனி பிழைக்க மாட்டாய், உன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்து என்று சொன்னார். இச்செய்தியை தீர்க்கர் வழியாகக் கேட்ட எசேக்கியா தன் முகத்தை சுவர் பக்கமாய்த் திருப்பி கடவுளை நோக்கி அழுது ஜெபித்தார். கடவுளே நான் உமக்கு முன்பாக முழு மனதோடும் உண்மையுள்ளவனாய் நடந்தேன். உமது பார்வையில் நலமானதைச் செய்து வந்தேன். இவற்றை நீர் நினைத்தருளும் என்று உள்ளமுருக அழுது ஜெபித்தார். கடவுள் எசேக்கியாவின் கண்ணீரைக் கண்டார். ஜெபத்தை ஏற்றுக் கொண்டார். மனதுருகினார். மனம் மாறினார். எசேக்கியாவுக்கு வாழ்நாளை கூட்டிக் கொடுக்க தீர்மானித்தார். ஏசாயாவை அழைத்து நீ போய் எசேக்கியாவைப் பார்த்து உன் தகப்பனாகிய தாவீதின் கடவுளாகிய கர்த்தர் சொல்லுவதைக் கேள்: உன் ஜெபத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ உன் நாட்களோடே பதினைந்து வருடங்களை கூட்டுவேன் என்று சொல்லுகிறார் என்று சொல்லச் சொன்னார். எசேக்கியா புதுவாழ்வு பெற்றார்.

மனிதனின் வாழ்நாள் எழுபது வருடம். பலத்தின் மிகுதியால் எண்பது வருடம். முடிவு மரணம். நாம் ஒவ்வொரு நாளும் வாழ்வது கடவுளின் கிருபையே. இயேசுவில் நமக்கு நித்திய வாழ்வு உண்டு. இந்த நிச்சயத்தில் மரண பயமின்றி வாழ்வோம். நம் எல்லா வேண்டுதல்களையும் உண்மையான மனதோடும் கண்ணீரோடும் ஆண்டவரிடம் கேட்போம். கடவுள் மனதுருகி கேட்டு நமக்கு பதிலளிப்பார். புது வாழ்வு தருவார்.

ஜெபத்தைக் கேட்கிறவரே! உம் நேசகுமாரனில் வைக்கிற விசுவாசத்தில் நித்திய வாழ்வை வாக்களித்திருக்கிறீர். மரணத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளும் ஆற்றலை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.