சங்கீதம் 143 : 2-5 06 ஜூலை, 2019 சனி
“…எனக்குப் பொருத்தனை பண்ணின பேதேலிலே உனக்குத் தரிசனமான கடவுள் நானே;…” – ஆதியாகமம் 31 : 13
யாக்கோபுக்கு, கடவுள் திருகாட்சி கொடுத்திருந்தார். இதைக் கடவுள் அவருக்குப் பிற்காலத்தில் நினைப்பூட்டுகிறார். கடவுள் எப்பொழுதும் மனிதர்களை நினைத்துக் கொண்டே இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்றாகும்.
கடந்த காலங்களில் நடைபெற்ற பலவற்றை நாம் மறந்து விடுகிறோம். ஆனால் யாக்கோபு கல்தூண் நிறுத்தி அபிஷேகம் செய்தது; கடவுளுக்கு ஓர் பொருத்தனை செய்தது; இவை நடைபெற்ற இடத்திற்கு பேதேல் எனப் பேரிட்டது போன்ற யாவற்றையும் கடவுள் நினைத்துப் பார்க்கிறார். ஒருவேளை, யாக்கோபு மறந்து விட்டாரோ? இதனால்தான், கடவுள் இவற்றை நினைவுபடுத்தி, தன்னை அறிமுகம் செய்கிறாரோ? மறக்கும் குணம் மனிதனுக்கு உண்டு என்பதைக் கடவுள் அறிவார். இதனால்தான், கடவுள் தம்மை மனிதர்களுக்கு வெளிப்படுத்துகிறார். தமது பிரசன்னத்தை, திருவசனத்தின் வழியே தினமும் நினைவுபடுத்துகிறார். கடவுளை நாம் நினைக்கவும் அடிக்கடி நம் சிந்தனைகளில் வைத்து கொள்ளவும் பொருத்தனைகள் நமக்கு உதவுகின்றன. கடவுளும் நமது பொருத்தனைகளை மறக்காது நினைவில் வைத்திருக்கிறார். பொருத்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்கிறார். நாம் செய்த பொருத்தனைகளை நினைவில் வைத்திருப்பதை, விசுவாசப் பண்பாக இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.
தினமும் கடவுள் நம்மை நினைக்கிறார், காக்கிறார், மன்னிக்கிறார், புது ஜீவன் தருகிறார். ஆகவே தினமும் நம் கடவுள் நினைக்கப்படவேண்டுமே. பொருத்தனைகளை நிறைவேற்றிய பிறகும் நமக்குக் கடவுள் அவர்தானே. பொருத்தனைகளை நிறைவேற்ற மறக்கும்போது, நினைவுபடுத்துபவரும் அவர்தானே! பொருத்தனைகளை நிறைவேற்ற விசுவாச பலம் தருபவரும் அவர்தானே. கடவுள்-மனிதன்-பொருத்தனை-கடவுள்… என்று இந்த மூன்றில் எது முந்தியது என்று நினைத்துப் பார்ப்பது தேவை இல்லை. பொருத்தனைகளில் நமது கடவுள் நினைக்கப்படட்டும், துதிக்கப்படட்டும்! பொருத்தனைகளால் விசுவாச ஞாபகம் வளரட்டும்.
இறைவா! நாங்கள் உம்மைத் தினமும் நினைக்க எங்கள் செயல்களை துரிதப்படுத்தும்! செயலுள்ள விசுவாசத்திற்கு பொருத்தனைகள் படிக்கற்களாகிட உமது அருளை இயேசுவின் வழியே பெருகிடச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.
