கொலோசேயர் 4 : 2-6                                   24 ஜுன், 2019 திங்கள்

“சுவிசேஷம் செல்லும்படியான வாசலை கடவுள் திறந்தருளும்படி எங்களுக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்.” – கொலோசேயர் 4 : 4

மனுக்குலம் பாவத்தால் கடவுளோடு வாழ்கிற வாழ்வை இழந்து போனது. பாவத்திற்கு பரிகாரம் தேடி கடவுளோடு வாழ வேண்டும் என்று எல்லா மனிதர்களும் விரும்புகின்றனர். இதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளை நாடித் தேடி ஓடுவதைப் பார்க்கிறோம்.

ஆனால் திருமறை பாவம் வந்த விதத்தையும் அதைத் தீர்ப்பதற்கான பரிகாரங்களையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. கடவுள் தம் ஒரே மகன் இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பினார். இரத்தம் சிந்தாதபடி பாவ மன்னிப்பில்லை. எனவே இயேசுவை கல்வாரி சிலுவையில் பலியிட்டார். அவர் இரத்தத்தால் மனுக்குல மீட்பை உறுதி செய்தார். கடவுளோடுள்ள உறவை நமது நற்செயல்களால் பெற முடியாது. அது கிருபையாக நமக்கு அருளப்படுகிறது.
இயேசுவின் பாடு மரணத்தால் நமக்கு இரட்சிப்பு. அவரில் வைக்கிற விசுவாசமே கடவுளோடுள்ள வாழ்வை அருளுகிறது. இந்த செய்தி முழு உலக மக்களுக்கும் சொல்லப்படவேண்டும். வசனத்தைக் கேட்டு, விசுவாசித்து, கடவுளைத் தொழுது கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசத்திற்கு ஆதாரம் கடவுளின் வசனம். வசனத்தின் வழியாய் தூய ஆவியானவர் விசுவாசத்தை உருவாக்குவார். மனுக்குலம் விசுவாசத்தை அடையாதபடி அதற்குத் தடைகள் உண்டு. பிசாசும் தடைகளை ஏற்படுத்துகிறான். அதனால் வசனம் சொல்ல வாசலைத் திறக்கும்படி ஜெபம் செய்யுங்கள் என்று கேட்கிறார். ஜெபம் சிறைச்சாலைக் கதவைத் திறக்கக் காரணமாயிருந்தது. அநேகருடைய கல்நெஞ்சை திறக்கக் காரணமாய் இருந்தது. இவ்வழியில் ஜெபம் நற்செய்தி சொல்லும் வாசலை திறக்கும் என்கிற நம்பிக்கையில் பவுலடிகளார் இந்த வேண்டுகோளை வைக்கிறார்.

இன்றைய சூழ்நிலையில் பல நாடுகளில் கடவுள் திறந்த வாசலை வைத்திருக்கிறார். சீனா போன்ற நாடுகளில் நற்செய்தி வேகமாகப் பரவி வருகிறது. அதே வேளையில் நம் நாட்டில் நற்செய்திப் பணிக்கு வாசல்கள் அடைபடுகின்றன. நற்செய்தி பணியாளர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆலயங்கள் இடிக்கப்படுகின்றன. பவுலடிகளார் கொலோசேய சபையாருக்கு விடுத்த வேண்டுகோள் நம் காதுகளில் ஒலிக்கிறது. முழங்கால் படியிடுவோம். ஒருமனதோடு முழு நம்பிக்கையோடு ஜெபிப்போம். நம் ஆண்டவர் நிச்சயமாய் நம் வேண்டுதலைக் கேட்டு வாசல்களைத் திறப்பார்.

எல்லாரும் இரட்சிக்கப்பட விரும்புகிற கடவுளே! உம் நேச குமாரனில் இரட்சிப்பின் பணியைச் செய்து முடித்தற்காக நன்றி. இச்செய்தி உலகமெங்கும் செல்ல வாசலை திறந்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.