யாக்போபு 5 : 13-16                                                  19 ஜுன், 2019 புதன்

“உங்களில் ஒருவன் துன்பப்படுகிறானா? அவன் ஜெபம் பண்ணக் கடவன்…” – யாக்கோபு 5 : 13

மனிதன் எப்பொழுதும் சுகத்தோடும் பலத்தோடும் செல்வச் செழிப்போடும் வாழவே விரும்புகிறான். மனிதர்களுக்குப் பொதுவாக வாழ்வில் நிறைவு வருவதில்லை. அதே வேளையில் வாழ்வில் பிரச்சனைகளும் சுகவீனங்களும் இயற்கையானவை, இயல்பானவை என்பதை உணரவேண்டும். பாவம் உலகில் வந்த வரலாறில், பாவத்தின் தண்டனைகளை வாசிக்கும்போது மேற்கூறியவை நமக்குப் புரியும். அத்துடன் துன்பங்களாலும், வியாதியாலும் அல்லல்படும்பொழுது இது ஏன் எனக்கு வந்தது. கடவுளுக்கு கண் இல்லையா, காது இல்லையா என்று முறுமுறுக்கிறோம். நாம் இயேசுவில் கடவுளின் பிள்ளைகள். அவரை அப்பா பிதாவே என்று அழைக்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். எந்தத் தகப்பனும் தன் பிள்ளைகள் துன்பப்படுவதை பார்த்து ரசிப்பவர் அல்ல. பிள்ளைகளுக்குத் துன்பம் வரும்போது துடித்துப் போவான்.

கடவுள் நமக்குத் துன்பத்தைத் தருபவரல்ல. அப்படியானல் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு நம் பாவங்களே காரணமாகின்றன. சில வேளைகளில் நம் விசுவாசத்தை சீர்குலைக்க சாத்தான் யோபுவுக்கு கொடுத்தது போல துன்பங்களை வரச்செய்வான். நாம் துன்பங்களை அனுபவிக்கும் போது சலிப்பும், முறுமுறுப்பும் கொள்ளலாம். நிதானமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். சலிப்பும் முறுமுறுப்பும் அவிசுவாசத்தின் வெளிப்பாடுகள். எனவே பொறுமையாக இருந்து துன்பங்களை எதிர் கொள்ளுகிற ஆற்றலை கடவுளிடமே கேட்டுப் பெறவேண்டும். இங்கு யாக்கோபு ‘அப்போஸ்தலன் ஒருவன் துன்பப்பட்டால், கடவுளையோ பிறரையோ குற்றப்படுத்தாது ஜெபம் செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார். ஊக்கமான ஜெபம் வல்லமையுள்ளது. அத்துடன் அது கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்.

கடவுளிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள அவரை முழுமையாக நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுள்ள ஜெபம் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை தரும். இந்தச் சிந்தனையுடன் நம் வாழ்வில் ஏற்படுகிற துன்பங்களை எதிர்கொள்ளுவோம். நம் தந்தையாகிய கடவுள் நம்பிக்கையுள்ள ஜெபத்தைக் கேட்டு நம் துன்பங்களை மாற்றுவார்.

ஜெபத்தைக் கேட்பவரே! எங்கள் துன்ப நேரத்தில் நம்பிக்கையோடு உம்மிடம் வரவும் ஜெபத்தில் எல்லாவற்றையும் தெரிவித்து விடுதலை பெறவும் உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.