உரிமையுடன் ஜெபம்
லூக்கா 23 : 44-47 11 ஜுன், 2019 செவ்வாய்
“…பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று… சொன்னார்.” – லூக்கா 23 : 46
கடவுள் நாம் காண்கிற காணாத அனைத்தையும் தம் வாயின் வார்த்தையால் படைத்தார். தாம் படைக்கப்போகிற மனிதன் குறையின்றி நிறைவாக வாழ வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். எல்லாம் படைத்து முடித்த பின் நிலத்தின் மண்ணை எடுத்து பக்குவப்படுத்தி பிசைந்து நல்ல ஓர் சிற்பியாக மனிதனைப் படைத்தார். அவனுக்கு தம் ஆவியையும் பகிர்ந்து கொடுத்தார். மனிதன் என்னுடைய பிள்ளை என்று முழு உரிமையோடு சொல்ல கடவுளுக்கு முழு உரிமையுண்டு. அவனுக்குத் துணையையும் கொடுத்தார். வாழவேண்டிய வழிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.
படைப்பின் மகுடமான மனிதன் கடவுளின் கட்டளைகளை மீறியதால் கடவுளைப் பிரிந்தான். கடவுளின் சமூகத்திலிருந்து துரத்தப்பட்டான். அன்புள்ள கடவுள் அவனை மீட்டு தம்மோடு நித்திய வாழ்வில் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இரத்தம் சிந்தாதபடி பாவமன்னிப்பு இல்லை. எனவே தம் குமாரன் இயேசுவை பாவம் இல்லாதவராக இவ்வுலகிற்கு அனுப்பினார். அவரை கல்வாரி சிலுவையில் கடவுள் பலியிட்டார். சிலுவையில் தொங்கி தன் ஜீவனை விடுகிற நேரத்தில் தம் பரம தந்தையை உரிமையோடு பிதாவே என்று அழைத்தார். அவர் கைகளில் தம் ஆவியை ஒப்புவித்தார்.
இயேசு தான் வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதை அவருடைய உயிர்த்தெழுதலே உறுதி செய்தது. இயேசு பிதாவிடம் தம் ஆவியை ஒப்புவித்தார். மூன்றாம் நாளில் பிதாவாகிய குமாரனான இயேசுவை உயிருடன் எழுப்பினார். இதன் வழியாக, மரணம் என்பது முடிவல்ல. அதன் பின்னேயும் வாழ்வு இருக்கிறது. அந்த வாழ்வு கடவுளோடிருக்கிற வாழ்வு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உலகில் பிறக்கும் யாவரும் இறந்தே ஆக வேண்டும். மரணம் எல்லாருக்கும் இயல்பானது, இயற்கையானது. இயேசு கடவுளை தகப்பனே, பிதாவே என்று அழைக்க கற்றுக் கொடுத்திருக்கிறார். இயேசு என் பாவப் பரிகாரி, எனக்காக என் பாவங்களை சுமந்து தீர்த்தவர் என்கிற விசுவாசம் நமக்கு பாவமன்னிப்பைக் கொண்டு வருகிறது.
இயேசுவைக் கண்டு அவரில் விசுவாசம் வைக்கிறவர்கள் நித்திய ஜீவனை உடையவர்கள் என்று யோவான் நற்செய்தியாளர் எழுதுகிறார். நம் மரண வேளைகளில் இயேசு ஜெபித்த இந்த ஜெபத்தை ஜெபிப்போம். பல பரிசுத்தவான்கள் இவ்வாறு ஜெபித்து தங்கள் வாழ்வை நிறைவு செய்தார்கள். நாமும் இயேசுவில் வைக்கிற அசையாத நம்பிக்கையில் நம் வாழ்வை நிறைவு செய்வோம். நித்திய வாழ்வைப் பெறுவோம்.
விண்ணகத் தந்தையே! உம் நேசகுமாரனில் எங்களை மீட்டுக் கொண்டதற்கு நன்றி. இயேசுவில் வைக்கிற திட விசுவாசத்தில் வாழ்ந்து எங்கள் வாழ்வை நிறைவு செய்ய கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
