2 தினவர்த்தமானம் 31 : 1-10 23 மே, 2019 வியாழன்
“…தங்கள் கடவுளாகிய கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தவைகளாகிய தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள்.” – 2 தினவர்த்தமானம் (2 நாளாகமம்) 31 : 6
`முன் ஏர் போகிற வழியே பின் ஏர் போகும்’ என்பர். சரியான தலைமைத்துவமும், முன் மாதிரியும் மக்களுக்கு மிக மிக அவசியம். கி.மு. எட்டாம் நூற்றாண்டின் இறுதி காலத்தில் யூதா நாட்டின் அரசனாயிருந்தவர் எசேக்கியா. இவர் தலைமைத்துவமும் முன்மாதிரியும் பாராட்டும்படியாக அமைந்திருந்தது. கடவுள் பயத்துடன் யூதா நாட்டு மக்களுடன் இணைந்து எசேக்கியா பஸ்கா கொண்டாடினார். கடவுளின் சித்தப்படி ஆலயத்திற்கும், ஆசாரியத்துவத்துக்குமுரிய காணிக்கை மற்றும் தசமபாகம் செலுத்துவதில் காட்டிய முன்மாதிரியை விளக்கும் பகுதியே நமது தியானப்பகுதி.
அரசன் காட்டிய முன்மாதிரிப்படி அந்நாட்களில் யூதா நாட்டு மக்களும் தாங்கள் கடவுளுக்கென்று பிரதிஷ்டை செய்த தசமபாகக் காணிக்கைகளை கடவுளின் ஆலயத்தில் உண்மையாய், மனப்பூர்வமாய், மகிழ்வுடன் கொண்டு வந்தார்கள். கொண்டு வந்த தசமபாகக் காணிக்கைகளை குவியல் குவியலாக வைத்தார்கள். இதனால் ஆசாரியர்கள், லேவியர்கள் வாழ்வு வளம் பெற்றது. மட்டுமல்ல மீதமிருந்தது என்று தியானப் பகுதி விளக்குகிறது.
நன்றிப் பெருக்குடன் இறைச் சமூகத்தில் தசமபாகக் காணிக்கையும், பொருத்தனைக் காணிக்கைகளையும் கொண்டு வருவது ஒவ்வொரு மனிதருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது என்பதற்கு யூதா மக்கள் சாட்சி. மக்கள் இம்மகிழ்வை அனுபவித்த போது எசேக்கியாவும் அதிபதிகளும் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள் என்று வசனம் சுட்டிக்காட்டுகிறது. கடவுளின் ஆலயத்தில் நன்றியுணர்வுடன் படைக்கும் அனைத்து காணிக்கைகளும் குறிப்பாய் தசமபாகக் காணிக்கை கடவுளின் சமூகத்தில் சுகந்த வாசனையாக எரிக்கப்படுகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கடவுள் அனைத்தையும் காண்கிறார். நாம் வேண்டிக் கொள்ளுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதிக்கிறார்.
கடவுள் நம்மை கிருபையாக இயேசு கிறிஸ்துவில் தெரிந்தெடுத்திருக்கிறார். நம்மை எல்லா நிலையிலும், துறையிலும் ஆசீர்வதித்திருக்கிறார். இயேசுவின் வழியே கடவுளை தந்தையே என்று அழைக்கிற பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். நன்றி உணர்வோடு மனப்பூர்வமாய் கடவுள் அருளிய எல்லா ஈவுகளிலும் அவருக்கு காணிக்கைகளை குவியல் குவியலாகப் படைப்போம்.
எங்கள் பரம தந்ததையே! நீர் தருகிற அபரிமித ஆசீர்வாதங்களை நன்றியோடு பெறவும் அதில் உமக்கென்று ஒரு பங்கை படைக்கவும் கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
