உபாகமம் 15 : 7-11                                           09 மே, 2019 வியாழன்

“கொடுக்கும் போது உன் இருதயம் விசனப்படலாகாது.” – உபாகமம் 15 : 10

இயற்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும், நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது. ஆலய வழிபாட்டிலும் இதை அறிந்து கொள்ளலாம். ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலுவை. சிலுவையில் மரித்து தம் சரீரத்தையும் இரத்தத்தையும் கூட தந்துவிட்ட தியாகத்தை சொல்லுகிறது. பீடத்தில் எரிகின்ற மெழுகுவர்த்தி, நான் என்னையே அழித்து ஒளிவீசுகிறேன். விசுவாசியாகிய உன்னை அழித்து பிறருக்கு வாழ்வு கொடு என்கிறது.

நாம் சமூகமாக, கூட்டமாக வாழுகிறவர்கள். கிராமமானாலும், நகரமானாலும், கூடிவருகிற இடங்களானாலும் ஏழைகள், வறியோர், விதவைகள், அனாதைகள், திக்கற்றோர் போன்ற பலதரப்பட்ட மக்களை சந்திக்கிறோம். இதில் தேவையிலிருக்கும் சகோதரரும் இருப்பர். நம்மை நாடி, தேடி தர்மம் கேட்கும் போது, உதவி கேட்கும் போது எப்படி தர்மம் கொடுக்க வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதை இன்றைய தியான வாக்கியம் தெளிவுபடுத்துகிறது. ‘உன் நடுவே இருக்கிற ஏழை சகோதரனுக்கு கொடுக்கும்படி உன் இருதயத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடாதே. அவனுக்குத் தாராளமாய் கொடு. கேட்டுவிட்டானே என்கிற வேதனையில் விசனப்பட்டு கொடுக்காதே என்கிறார். காரணம் தேவையிலிருக்கும் உன் சகோதரன் எதிர்பார்த்தது கிடைக்காமல் மனவேதனையோடு கடவுளிடம் முறையிட்டால் அது உனக்குப் பாவமாகும்.

கடவுள் ஆபிரகாமை ஆசீர்வதிக்கும் போது `நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னில் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்’ என்றார். கடவுள் இயேசுவில் நம்மைத் தம் பிள்ளைகளாக மாற்றியிருக்கிறார். தந்தை என்ற நிலையில் எல்லா ஈவுகளையும் அருளுகிறார். இவை நமக்கு மட்டுமல்ல நம் சகோதரர்களுக்கும் பயன்படும்படியே கடவுள் அருளுகிறார். கடவுள் தம் ஒரே மைந்தனை நமக்காகத் தந்தார். கல்வாரி சிலுவையில் அவரை முழுமையாக நமக்காக அழித்தார். இயேசுவில் இன்று அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கடவுள் தன்னலமின்றி தம் மகனைக் கொடுத்தார். இதை அறிந்து ருசித்து நாமும் சுயநலத்தை விட்டு பிறருக்குக் கொடுப்பதற்காகவே என்பதை உணருவோம். இந்த உணர்வு நமக்குள் இருந்தால் வருத்தப்படாமல் கொடுக்க ஏவப்படுவோம். இருதயத்தை கடினப்படுத்தி கொடுக்காமல் இருக்கக் கூடாது என்று கடவுள் சொல்லுகிறார்.

தன்னையே அழித்து, நாம் வாழ்வுபெற எல்லாம் அருளியவர், இன்றும் எல்லா ஈவுகளையும் அருளுகிறார் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம். நம் அயலாருக்கு மனப்பூர்வமாய் வேதனையின்றி மகிழ்ச்சியோடு தர்மம் வழங்குவோம்.

நாங்கள் வாழ உம் குமாரனைத் தந்த கடவுளே! உம் நேசகுமாரனின் தியாகத்தை கண்டு, அனுபவித்து நாங்களும் பிறர் வாழ தர்மம் செய்ய உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.