மத்தேயு 10 : 40-42 19 மே, 2019 ஞாயிறு
“இச்சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்க கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமற்போகான்…” – மத்தேயு 10 : 42
மனிதன் சமூகமாக வாழும்படி படைக்கப்பட்டவன். அவனால் தனித்து வாழ இயலாது. அவன் வாழுகின்ற சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கின்றன. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கின்றது. ஏழைகள் தீராத நோயாளிகள், பலவீனமானவர்கள், விதவைகள், கைவிடப்பட்டவர்கள் அனாதைகள் இப்படி அடுக்கிக் கொண்டுப் போகலாம். இத்தகைய சமூகத்தில் தான் நாம் வாழுகிறோம். இந்த சமூகத்தின் அங்கமான நாம் எப்படி வாழவேண்டும் என்பதை நமது தியானப் பகுதி விவரிக்கின்றது. கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதன் பாவத்தால் அந்தச் சாயலை இழந்து போனான். மனுக்குலத்தின் மீது அன்பு வைத்தார் கடவுள். மனுக்குலத்தை மீட்டெடுக்க திட்டம் வகுத்தார். இயேசுவில் அதைச் செயல்படுத்தினார். மனுக்குலத்திற்காக தன் ஜீவனை கல்வாரி சிலுவையில் அற்பணித்து, இரத்தஞ்சிந்தி மீட்டுக் கொண்டார். இறையரசுக்கு சுதந்தரவாளிகளாக மாற்றினார்.
கடவுள், தம் ஒரே குமாரனை கல்வாரி சிலுவையில் பலியிட்டதால் அவர் அன்பு வெளிப்பட்டது. இந்த அன்பை பெற்றிருக்கும் நாம் இதை பகிர்ந்தளிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். பகிர்ந்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதுவே கடவுளுக்கு ஆற்றும் பணியாகும். நாம் இயேசுவில் பெற்ற அன்பை, ஆசீர்வாதங்களைப் பகிர்ந்தளிக்கவே தேவையில் இருப்போர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டோர், விதவைகள், அநாதைகள் திக்கற்றவர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் போலும். நம்மை சுற்றி, நம் உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு செய்யும் உதவி கடவுளுக்குச் செய்யும் உதவியாகும். நம் ஆண்டவர் இத்தகைய மக்களுக்கு விலையின்றி, எளிதில் கிடைக்கும் ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும் அதற்கு கடவுள் பலன் கொடுப்பார் என்கிறார். ஒரு கலசம் தண்ணீருக்கு இந்த வெகுமதி என்றால் ஏழையின் வாழ்வுக்காக, ஜீவனத்துக்காக செய்யும் உதவிக்கு கடவுள் மிகப்பெரிய பதில் செய்வார் என்பதை இதன் வழியாக இயேசு நமக்குச் சொல்லுகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக இறையரசில் நமக்கு இடம் உண்டு என்று உறுதியளிக்கிறார். ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளிடமிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதங்களைப் பெறுகிறான். இதை மனதில் நிறுத்துவோம். அழியாத நிலையான வாழ்வைப் பெறுவோம்.
அன்பின் கடவுளே, உம் நேசகுமாரனில் உம் அன்பை வெளிப்படுத்தினீர். இந்த அன்பை ருசித்த நாங்கள் எங்களை சூழ்ந்திருக்கிற சமூகத்தில் சிறியவர்களுக்கு உதவி செய்து நித்திய வாழ்வில் பிரவேசிக்க கிருபை தாரும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
