லேவியராகமம் 19 : 30-37                                                    06 மே, 2019 திங்கள்

“…அவனிலும் அன்பு கூருங்கள்; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியராயிருந்தீர்களே;…” – லேவியராகமம் 19 : 34

இஸ்ரவேலர் நானூற்று முப்பது ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்தார்கள். அடிமை வாழ்வில் இவர்கள் அனுபவித்த வேதனைகளை பட்டியலிடுவது கடினம். கடவுள் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். வேதனைகளை அறிந்தார். மக்களின் கூக்குரலைக் கேட்டார். இறங்கி வந்தார். மோசேயை பயிற்றுவித்து இந்த மக்களை விடுதலை செய்தார். விடுதலைப் பயணத்தில் சிவந்த கடல் எதிர்பட்டது. கடவுள் அற்புதமாக கடலைப் பிளந்து அடுத்தக் கரை சேர்த்தார். சீனாய் மலை அடிவாரத்தில் வந்தார்கள். கடவுள் மோசேயை மலைமீது அழைத்தார். பத்து கற்பனைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். கூடவே சமய, சமூக கட்டளைகளையும் கொடுத்தார். அவையே நாம் வாசிக்க வேண்டிய பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

நம் தியான வாக்கியப் பகுதி கடந்த கால அனுபவங்களை ருசித்த இஸ்ரவேலர் அதனடித்தளத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. இவர்கள் கடவுளின் கிருபையை உணர வேண்டும், பட்டபாடுகளை அறிய வேண்டும். அதனடித்தளத்தில் பிறரிடம் அன்பு கூர வேண்டும். இதுவே கடவுளின் எதிர்பார்ப்பு. நம் அன்பின் அடித்தளத்தில் அவர்கள் கடவுளின் அன்பை அறியவேண்டும் என்பது கடவுளின் விருப்பம். நியாயப் பிரமாணம், விடுதலை பெற்ற மக்கள் எப்படி கடவுளின் சித்தத்தை வாழ்க்கையில் செயல்படுத்தவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அயலானிடம் அன்பு கூறுவதும் அவனுக்கு தர்மம் கொடுப்பதும் ஆகிய அனைத்தும் கடவுள் நம் தந்தை என்றும் நாம் அவர் பிள்ளை என்கிற உடன்படிக்கையின் உறவில் நிகழ வேண்டும். அதனால் தான் ஓய்வு நாளை ஆசரிக்க வேண்டும் என்றும் கடவுள் வாசம் பண்ணும் இடத்தைக் குறித்து பயபக்தியாய் இருக்கவும் வலியுறுத்துகிறார்.
அத்துடன் கடவுள் விலக்குகிற அஞ்சனம் பார்த்தல், குறி சொல்லுதல், குறி கேட்டல் போன்றவற்றால் நம்மை அசுத்தமாக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார்.

நாம் நம் நிலையை உணரவேண்டும். நம் தெரிந்தெடுப்பு கிருபையானது என்பதை உணருவோம். கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறார் என்பதை வாழ்க்கை அனுபவங்கள் வழியாகத் தெரிந்து கொள்ளவேண்டும். இவற்றை சரியானபடி உணர்ந்து கொண்டால் நாம் பிறருக்கு தர்மம் செய்யாமல் இருக்கமாட்டோம். கடவுள் வரலாற்றில் செயலாற்றுகிறார். இந்த செயலாக்கத்தில் நம்மையும் பங்கு பெற அழைக்கிறார். முழுமனதுடன் சகோதரரில் அன்பு கூறுவோம். தர்மம் செய்து மகிழ்ச்சியாய் வாழுவோம்.

வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! எங்கள் மகிமையையும் மேன்மையையும் உணர்ந்து எங்கள் சகோதரர்களும் எங்களைப் போல வாழ தர்மம் கொடுத்து கைதூக்கிவிட கிருபை செய்தருளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.