லூக்கா 2 : 36-38                                           10 ஜுன், 2019 திங்கள்

“…அவள் தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம் பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்.” – லூக்கா 2 : 37

இஸ்ரவேலர் கடவுளின் மீட்பின் திட்டத்தை நிறைவேற்றும்படி தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் மத்தியில் கடவுள் தம் உறைவிடத்தை ஏற்படுத்தினார். கடவுளின் அறிவுரைப்படி மோசே கடவுளின் கூடாரத்தை அமைத்தார்.

அரசமைந்த காலத்தில் சாலமன் அரசன் எருசலேமில் அழகிய ஆலயம் கட்டினார். இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளிலிருந்து நேபுகாத் நேச்சார் இடிக்கிறவரையில் ஆலய தலைவாசல் பூட்டப்படவில்லை என்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். மக்கள் இரவு பகலாக வந்து ஜெபித்து, பலி செலுத்தி சென்றார்கள். கடவுளின் ஆலயம் எல்லாருக்கும் ஜெபவீடு. இதை இஸ்ரவேலர் அறிந்திருந்தார்கள். அன்னாள் கணவனை இழந்தவள், வயது முதிர்ந்தவள், வேறு ஆறுதலும் அரவணைப்பும் இல்லாதவள். விதவைகளுக்கும் அநாதைகளுக்கும் வீடுவாசல் ஏற்படுத்துகிறவர் கடவுள். அன்னாள் இந்த மனநிலையில் ஆலயத்தைவிட்டு நீங்காமல் இருந்தாள். அத்துடன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உபவாசம் பண்ணினாள். அதனால் தான் இரவும் பகலும் என்று வாசிக்கிறோம். ஆலயம் எல்லாருக்கும் ஜெபவீடு. அன்னாளும் ஜெபத்திலே தன் நேரத்தைக் கழித்தாள். கடவுளோடு ஆராதனையில் ஈடுபட்டதால் தான் சிமியோன் கண்டு அதிசயித்த இயேசு பாலகனை, இரட்சண்யத்தை பார்க்கிற பாக்கியம் அன்னாளுக்கும் கிடைத்தது. கடவுளின் வாக்குறுதிகள் பொய்த்துப் போவதில்லை. அவை நிச்சயம் நிறைவேறும் என்பதை எப்பொழுதும் நினைவில் நிறுத்த வேண்டும். கடவுளின் ஆலயத்தில் ஐக்கியமாயிருப்போம். நம் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் ஆலயத்தோடும், ஆலயப் பணிகளோடும் இணைந்திருக்க இசைந்திருக்க உற்சாகப்படுத்துவோம். அவை நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாக அமையும்.

தாவீது அரசன் கடவுளின் ஆலயத்தைக் கட்ட விரும்பினார். ஆனால் கட்டவில்லை என்றாலும் ஆலயத்திற்கான பொருட்களை சேகரித்தார். கடவுள் நாத்தான் தீர்க்கரிடம் தாவீது என் வீட்டைக் கட்ட விரும்பினபடியால் நான் அவன் வீட்டைக் கட்டுவேன் என்றார்.

ஆலய தொழுகை போன்ற நிகழ்வுகளிலும் ஆலயப் பணிகளிலும் ஈடுபடுவோம். பிறரை ஈடுபடுத்தச் செய்வோம். அவை நமக்கு ஆசீர்வாதமாக அமையும்.

எங்கள் மத்தியில் வாழுகிற கடவுளே! உம் வாசஸ்தலத்தை எங்கள் நடுவில் ஏற்படுத்தியிருப்பதற்காக நன்றி. உம் ஆலயப் பணிகளிலும் தொழுகைகளிலும் உற்சாகத்தோடு பங்கடைந்து ஆசீர்வாதங்களைப் பெற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.