லூக்கா 14 : 12-14 13 மே, 2019 திங்கள்
“நீ விருந்து செய்யும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழை;…” – லூக்கா 14 : 13
விருந்து என்ற சொல் ஐக்கியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும். திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் விருந்து நிச்சயம் இடம் பெறும். பல சமயங்களில் விருந்து ஆடம்பரமாக மாறுகிறதையும் காண்கிறோம்.
நாம் வாசித்த திருமறைப் பகுதியில் விருந்துக்கு அழைக்கிறவருக்கும், அழைக்கப்படுகிறவருக்கும் நம் ஆண்டவர் சொல்லும் போதனை அடங்கியிருக்கிறது. அதன் உச்சகட்டமாக அதை விளக்குவது இன்றைய தியான வாக்கியப் பகுதியாகும். ஏழைகள் விருந்தளிக்கும் அளவுக்கு செல்வமும் வசதியும் இல்லாதவர்கள். அதுபோலவே வசதியற்ற மாற்றுத்திறனாளிகளையும் விருந்துக்கு அழைத்தால் அவர்களால் மறுபடி கைமாறு செய்ய முடியாது. இவர்களை விருந்துக்கு அழைப்பது பிரதிபலன் எதிர்பாராத அழைப்பாக மாறும். மேலும் நம்மை விட எளிய நிலையிலுள்ள மக்களுடன் நெருங்கி உறவாடவும் அன்பைப் பரிமாறவும் இதன் வழியே வாய்ப்பு ஏற்படும். இதற்கு மனத்தாழ்மையும் தன்னலமற்ற அன்பும் வேண்டும். இது நம்மை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.
அதே வேளையில் நம் நிலையிலுள்ளவர்களை விருந்துக்கு அழைத்தால், அவர்களும் நம்மை விருந்துக்கு அழைப்பார்கள். நாம் செய்த காரியத்திற்கு கைமாறு கிடைத்துவிடும். இதனால் விருந்தோம்பலின் சிறப்பு கெட்டுவிடும்.
விருந்து எதற்காக என்பதை உணரவேண்டும். அது ஆடம்பரமா? விளம்பரமா? இதை அறிய வேண்டும். நாம் விருந்து கொடுக்கும்போது ஏழைகளும் அதில் இடம்பெறவேண்டும். நம் ஆண்டவர் விருந்தளிக்கும்போது அதன் பலன் நமக்கு கிடைக்கும் படி ஏழைகளையும் ஊனமுற்றோரையும் அழைக்கச் சொல்லுகிறாரே. இதனால் நாம் பாக்கியவான்கள் ஆகிறோம். நாம் விருந்தளிக்கும் போது ஒரு நேர உணவுக்குக்கு வழியில்லாதோர், நல்ல அறுசுவை உணவு கிடைக்காதோரை பங்கு பெறச் செய்வோம். அவர்கள் உண்டு மகிழ்வர். இவர்கள் மகிழ்ச்சி நம்மை பாக்கியவான்கள் ஆக்கும். கடவுளின் வார்த்தைகளில் நிலைநிற்போம். ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
மனதுருக்கமுள்ள கடவுளே! நாங்கள் உம்மில் வைக்கிற விசுவாசத்தில் நிலைத்திருந்து தரித்திரருக்கு தர்மம் செய்து வாழ அருள்புரியும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
