vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

பரிசுத்த ஆவி சாட்சியிடுபவர்

ரோமர் 8 : 12-17                                                    25 ஏப்ரல், 2019 வியாழன்

“நாம் கடவுளின் பிள்ளைகளென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியோடுகூடச் சாட்சி கொடுக்கிறார்.” – ரோமர் 8 : 16

நீதிமன்றத்தில் சாட்சிகளின் வாய்மொழியை ஆதாரமாகக் கொண்டுதான் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. அதுபோல, `கிறிஸ்துவே’ ஆண்டவர் என்று ஒரு விசுவாசி நம்பவும், அறிக்கையிடவும் ஆவியானவர் நம்முடைய உணர்வோடு – ஆவியோடு சேர்ந்து சாட்சி கொடுத்து உறுதிப்படுத்துகிறார். `நான் கடவுளின் பிள்ளை’ என்று என் ஆவி, உணர்வு மனம் உறுதியாகச் சொல்லுகிறது. இதற்குக் காரணம் என்ன தெரியுமா? பரிசுத்த ஆவியானவர் எனக்கு என்னைப் பற்றி சாட்சி கொடுத்திருக்கிறார்.

தூய ஆவியானவரின் சாட்சி நமது உணர்வை, ஆவியைத் தூண்டி விடாவிட்டால், இயேசு ஆண்டவராய் இருக்கிறார், நான் கடவுளின் பிள்ளை என்று யாராலும் நம்பவும் சொல்லவும் இயலாது. நமக்குத் துன்ப துயரங்கள் ஏராளம் உள்ளன. விசுவாசப் போராட்டங்களும் எனக்கு இருக்கிறது என்றாலும் பாடுகளைத் தாங்க பரிசுத்த ஆவியானவர் எனக்குப் பலம் தருகிறார். பாடுகளின் மத்தியிலும், என் மீட்பர் கிறிஸ்துவை எனக்குச் சுட்டிக்காட்டி, எனது விசுவாசத்தை உறுதிபடுத்துகிறார். பவுல் தீமோத்தேயுவுக்குக் கூறியது போல, நாம் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவர் நம்மை அடிமைகளாக்கி அச்சத்தில் நம்மை அழிக்கும் ஆவியன்று. பலமும் அன்பும் நிதானபுத்தியும் நிறைந்த ஆவியானவர் அவர். நாம் கடவுளின் மைந்தர்கள் என்னும் பாக்கியத்தை ஆவியானவர் நமக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறார்.

தூயாவியானவரால், கடவுளின் சகல ஆசிகளையும் பெறும் பங்குதாரர்கள் ஆகிறோம் நாம். கடவுளின் வாரிசுகளாகவும், கடவுளின் உரிமைகளில் உடன் பங்காளிகளாகவும் ஆக்கப்படுகிறோம். இவை அனைத்திற்கும், ஆவியானவரின் `சாட்சிக்குரல்’ திருவசனத்தின் வழியாகத் தினமும் நம்மைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஆவியின் சாட்சியைப் பெற்றவர்களுக்கு, ஆவியின் வரங்கள் கிருபையாக அருளப்படுகின்றன. ஆவியின் வரங்கள் சுய திறமையால் நாம் சம்பாதிப்பவை அல்ல. ஆவியின் வெவ்வேறு வரங்கள், பொது நலத்திற்கென்று விசுவாசிக்கு அருளப்படுகிறது. வரப்பிரசாதம், ஆவியின் சாட்சியின் வெளிப்படை நிரூபணம். நான் கடவுளின் பிள்ளை. இயேசுவின் கிருபை என்னைச் சந்தித்திருக்கிறது. பரிசுத்த ஆவி என் ஆவியில் – மனதில் – உணர்வில் பேசுவதை நான் அறிகிறேன். தோத்திரத்தோடு ஆவியில் தரித்திருப்பேன்.

பாடுகளின் மத்தியிலும் எங்களுக்காகப் பரிந்து பேசுகிற இறைவா! சுமையை எளிதாக்கும் உமது சிலுவைச் சுமையைவிட பாரமான சிலுவை என்னை அணுகவிடாதேயும். `நான் கடவுளின் பிள்ளை’ என்ற ஆவியின் சாட்சியக் குரலை தினமும் நான் கேட்க செய்யும். இயேசுவின் வழியே  ஆமேன்..

பரிசுத்த ஆவி சாட்சியிடுபவர்2019-04-24T06:57:38+00:00

பரிசுத்த ஆவி

1 சாமுவேல் 16 : 10-18                                                12 ஏப்ரல், 2019 வெள்ளி

…அந்நாள் முதல் கர்த்தருடைய ஆவி தாவீதின் மேல் வல்லமையோடு வந்து இறங்கினது…” – 1 சாமுவேல் 16 : 13

இஸ்ரவேலின் முதல் அரசர் சவுல். சவுலை அபிஷேகம் செய்த சாமுவேல், புதிய அரசனையும் ஏற்படுத்தக் கடவுளிடம் கட்டளை பெற்றார். கடவுளின் விருப்பத்திற்கு மாறான மன்னனாக வாழ்ந்தார் சவுல். ஆகவே சவுலின் அரசாட்சிக்கு முற்றுப் புள்ளி போடப்பட்டது. கடவுளின் அருளால் சவுலின் இடத்தில் தாவீது தெரிந்து கொள்ளப்பட்டார். தீர்க்கர் சாமுவேலால், இஸ்ரவேலின் அரசராகத் தாவீது அபிஷேகம் செய்யப்பட்டார்.

தாவீது கடவுளின் ஆவியால் நிரப்பப்பட்டார் என்று தியானப் பகுதியில் விளங்குகிறது. ஈசா என்பவரின் இளைய மகன் தாவீது. மனிதர் பார்வையில் இவர் பலவீனமானவர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர். போர் தளவாடங்களைப் பயன்படுத்தத் தெரியாதவர். மனிதர் புற அழகை எடை போடுகின்றனர். ஆனால் கடவுள் மனிதரின் வெளித் தோற்றத்தையல்ல, உள்ளத்தை அறிகிறவர். தாவீதின் மனதைக் கடவுள் அறிந்தார். தாவீது பிற்காலத்தில் நல்ல போர் வீரனாக, அரசனாக, திட்டமிட்டுச் செயல்படும் தலைவனாக விளங்கினார். இதற்கும் மேல் அவர் ஒரு கவிஞர், பாடகர், இசைக்கருவி மீட்டுபவர். ஆடு மேய்க்கும் அற்பமான வேலையின் வழியே, அற்புதமான அர்த்தமுள்ள பல திறமைகளைக் கடவுள் தாவீதிடம் வளர்த்தார். தாவீது என்றைக்கு மன்னராக அபிஷேகம் செய்யப்பட்டாரோ, அன்று முதல் கர்த்தருடைய ஆவியானவர் அவரிடம் இறங்கியிருந்தார். கடவுளின் ஆவி தாவீதின் மேல் இருந்தது. பிற வளங்களுடன் – கவிதை புனையும் வளத்தால் அவர் கடவுளின் சித்தம் செய்ய ஆவியானவர் அவரில் இறங்கினார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

கடவுளைச் சார்ந்து வாழுகிற எவருக்கும் ஆவியானவர் அருளப்படுகிறார். ஆவியானவர் தருகிற வல்லமைகள், திறமைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. என்றாலும் அத்தனை நல்ல வளங்களும், தேவனை மகிமைப்படுத்தவும், தேவ ஜனத்தை வழி நடத்தவும் பயன்படுகின்றன. நாம் தூய ஆவியைப் பெற்றவர்கள். கடவுளுக்குப் பயன்பட நம்மை ஆவியானவர் பலப்படுத்துகிறார். பிறருக்குப் பயன்படவும் ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார். எழுதுகிற, பாடுகிற, வரைகிற, பேசுகிற எந்த நல்ல வரத்தையும் கடவுளின் ஆவி நமக்கு அருளுகிறார். இந்த வளங்களை தேவ மகிமைக்காகப் பயன்படுத்துவோம்.

பலவீனமான எம்மை, உமது பணிக்கென்று தெரிந்தெடுத்த பரமபிதாவே! உமது ஆவியின் வல்லமை பல வகைகளில் வெளிப்படுவது புரிகிறது. என்னிடம் நீர் தந்திருக்கிற ஆவியின் வரத்தைப் புரிந்துகொள்ள, எனக்கு நீர் தருகிற வசனத்தின் வழி நடத்துதலை உணரச் செய்யும். வார்த்தையாம் இயேசு வழியே ஆமேன்.

பரிசுத்த ஆவி2019-04-11T11:26:12+00:00

ஞானத்தின் ஆவி

உபாகமம் 34 : 5-9                                      8 ஏப்ரல், 2019 திங்கள்    

“…மோசே தன் கைகளை வைத்தப்படியினால் அவன் ஞானத்தின் ஆவியால் நிறைந்தவனானான்.” – உபாகமம் 34 : 9

உயர் பதவியிலிருப்போர் அடிக்கடி பணிமாறுதல் பெற்று வேறு இடங்களுக்குச் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் போது புதிதாய் வருகிறவர்களிடம் தங்கள் பொறுப்புகளை, கோப்புகளை ஒப்படைப்பர். இது வழக்கமான செயல். ஏற்கனவே இருந்தவர்களின் ஆசியோடு புதியவர்கள் பணியைத் தொடர்வது ஆசீர்வாதமாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் அமையும்.

மோசே இவ்வுலக வாழ்வை விடும் காலம் வந்த போது, தனக்குப் பின் தன் இடத்திலிருந்து இஸ்ரவேலரை வழி நடத்தப்போகும் யோசுவாவை சந்தித்தார். அவர் மேல் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தார். அவருடைய ஆசீர்வாதத்தை கடவுள் அங்கீகரித்து யோசுவாவை ஞானத்தினால் நிறைத்தார்.

மக்களை வழிநடத்துவது எவ்வளவு கடினம் என்பதை யோசுவா நன்கு அறிந்திருந்தார். ஏனெனில் செங்கடல் பிரிந்தது முதல் மோசேயின் மரணம் வரை இவர் மோசேயுடன் இருந்தார். இவருக்கு மக்களின் மனநிலை நன்கு தெரிந்திருந்தது. எப்படி இவர்களை வழிநடத்தப் போகிறோம் என்ற பயமும் இருந்தது. அதே சமயம் மோசேயுடன் இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்ற கடவுளின் வாக்கும் அவருக்கு கிடைத்திருந்தது. யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட பணி எளிதன்று. மக்களை வழிநடத்த வேண்டும். கானான் நாட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தவர்களைத் துரத்த வேண்டும். நாட்டைத் தன் மக்களுக்கு எவ்விதப் பிரச்சனையுமின்றிப் பங்கிட வேண்டும். இப்படிப்பட்ட கடினமான பணிகளைச் செய்ய ஞானம் தேவை. கடவுள் அதை அவருக்குக் கொடுத்தார்.

கடவுளின் திருப்பணிகளில் நாட்டை ஆள்வதும் ஒன்று. ஆவியானவரின் செயல்பாடுகளின் வழியே நாட்டையும் மக்களையும் சரியான பாதையில் கொண்டு செல்வோரும் உண்டு. அரசியல் வேறு ஆலயம் வேறு என்று எண்ணாமல், நமக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பணியையும் கடவுளின் மகிமைக்கென்று ஞானத்தோடு செயல்படுத்தக் கவனமாயிருப்போம்.

அன்புள்ள கடவுளே! நாம் பெற்றிருக்கும் பல வேலைகள் கடவுளுக்குரியதா உலகுக்குரியதா என்று பிரித்துப் பார்க்காமல் அவற்றை கடவுளின் பணியாகக் கருதும் எண்ணத்தைத் தாரும். அனைத்தையும் ஞானத்தோடு செயல்படுத்த உமதாவியைக் கொடும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஞானத்தின் ஆவி2019-04-05T11:15:14+00:00

திறமை தரும் ஆவி

யாத்திராகமம் 3 : 1-11                                           4 ஏப்ரல், 2019 வியாழன்

“சகலவித வேலைகளையும் செய்வதற்கு வேண்டிய அறிவும்…. உண்டாகும்படி கடவுளின் ஆவியினால் அவனை நிரப்பினேன்.” – யாத்திராகமம் 31 : 3

ஒரு காலத்தில் வீடு கட்ட வேண்டுமெனில் கொத்தனாரைப் பார்க்க வேண்டும், ஆசாரியைத் தேடவேண்டும். மின்சார வேலைக்கு வேறொருவரைத் தேட வேண்டும். இப்படி ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொருவரைத் தேடித்தான் வேலையை முடிக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அப்படி அல்ல எல்லா வேலைகளையும் ஒருங்கிணைத்து செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். சொன்னால் போதும். வேலை அனைத்தும் முடிந்து வீடு தயாராகி விடும்.

இஸ்ரவேலர் தங்களுக்கென்று ஆலயம் கட்டப்படும் வரை இறைவனைத் தொழ ஒரு வேலைப்பாடு நிறைந்த கூடாரத்தை செய்துகொள்ள கடவுளிடமிருந்து கட்டளை பெற்றனர். அதன் வடிவம், அமைப்பு, கலை சிற்பங்கள், வேலைப்பாடு நிறைந்த திரைச் சீலைகள் போன்றவற்றை அமைக்க தகுதியான ஆட்களை எதிர்பார்த்தனர். அதற்கும் கடவுளே ஏற்பாடு செய்தார். அவர் இஸ்ரவேலரை வழிநடத்திய மோசேயிடம், பெசலேல் என்பவரை சுட்டிக் காட்டினார். அவர் சகலவித வேலைகளையும் செய்யும் அறிவும் திறமையும் வாய்ந்தவர் என்று கூறினார்.

கடவுள் சொன்னபடியே மோசே பெசலேல் என்பவரை திரைக் கூடாரம் செய்ய ஏற்பாடு செய்தார். அவரும் குறித்த நாட்களில் செய்து முடித்தார். பெசலேல் சகல வேலைகளை செய்யும் திறமைகளை எவ்வாறு பெற்றார் என்பதை தியானப் பகுதி விளக்குகிறது. கடவுள் தம் ஆவியினால் அவனை நிரப்பி அறிவையும் திறமையையும் கொடுத்தார். கடவுளின் ஆசியாலும் அருளாலும் அவர் அத்திறமைகளைப் பெற்று பணியாற்றினார்.

கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் திறமைகளையும் கலையாற்றலையும் அருளுகிறார். நம்மில் பலர் பல துறைகளில் வல்லுநர்களாக விளங்குவது கடவுள் நமக்கு தந்த திறமைகளாலே ஆகும். இத்திறமைகளைக் கொண்டு நாம் பணம், புகழ் வாழ்வுக்குத் தேவையான வசதிகளைச் சம்பாதிப்பது தவறல்ல. அதே சமயம் இத்திறமைகள் இறைவனின் ஆலயத்திற்கென்றும் அவர் பணிக்கென்றும் பயன்படட்டும். நமது வளங்களின் முதல் பயன்பாடு அதுவாகவே இருக்கவேண்டும். இறைவனிடம் பெற்றதை இறைவனுக்கென்று பயன்படுத்துவதே அவருக்கு நாம் செய்யும் கைமாறு. அதன் வழியே கடவுளை மகிமைப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல கடவுளே! நீர் எமக்குத் தரும் நல்ல திறமைகளையும் வரங்களையும் உமது ஆலயத்தின் வளர்ச்சிக்கென்றும் உமது பணிக்கென்று பயன்படுத்தத் துணை புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

திறமை தரும் ஆவி2019-04-03T11:34:24+00:00

உறவை விரும்பும் ஆவி

ஆதியாகமம் 6 : 1-8                                       2 ஏப்ரல், 2019 செவ்வாய்

…என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனில் தங்குவதில்லை…” – ஆதியாகமம் 6 : 3

நமக்கு பிடிக்காத வேலையை விட்டுவிட நினைக்கிறோம். பிடிக்காத இடத்தை விலை பேச விரும்புகிறோம். பிடிக்காத கூட்டத்திலிருந்து விலக எண்ணுகிறோம். கசக்கும் உறவுகளை வெட்டிவிடத் துடிக்கிறோம். இணைபிரியாத நண்பர்கள் கூட சில சமயங்களில் தங்கள் தொடர்பை குறைத்துக் கொள்கிறார்கள் என்றால் காரணம் எதுவாக இருக்கும்? அவர்களிடையே ஏதோ பிடிக்காத செயலோ, வார்த்தைகளோ காரணமாக இருக்கலாம் அல்லவா?

மனிதரிடையே தங்கிய கடவுளின் ஆவியானவர் இனி தங்குவதில்லை என்ற முடிவிற்கு வருகிறார். ஒரேயடியாய் என்றும் கூறலாம். என்றென்றும் தங்குவதில்லை என்று கூறுகிறார். காரணம் கடவுளுக்குப் பிடிக்காத பல காரியங்களை மனிதன் செய்யத் துணிந்துவிட்டான் என்பதே.

நோவா காலத்தில்தான் கடவுள் இந்தத் தீர்மானத்தை எடுத்தார். இறைவனோடு வாழும் வாழ்க்கையை மனிதன் தன் அக்கிரமங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டான். ஆதாமிலிருந்து ஆரம்பித்த பாவ வாழ்க்கை தொடர்ந்து பெருகினதேயொழிய குறைந்தபாடில்லை. கடவுள் மனம் வருந்துகிற அளவிற்கு மனிதனின் அக்கிரமம் பெருகியது. கடவுள் நீதியுள்ளவர், அக்கிரமத்தை வெறுக்கிறவர், பாவத்தை விரும்பாதவர், பரிசுத்தமுள்ளவர். அவர் தமது பிள்ளைகளும் அவரைப் போலவே வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் விருப்பம் நிறைவேற மனிதன் இடங்கொடாத நிலையில் அவர் மனிதனை விட்டுச் சற்று விலகி நிற்கிறார். முற்றிலுமாக அல்ல. கடவுள் தம்மை, நம்மை விட்டு விலக்குவதால் துன்பம் நமக்குத் தான். அவரின்றி வாழ எவராலும் இயலாது. துன்புறும் நிலை வரும் போது நாம் கடவுளை நிச்சயம் தேடுவோம். அவரும் இரங்கி வந்து நம்மை அரவணைத்துக் கொள்வார்.

கடவுளின் அன்பு மகத்தானது. அவர் நம்மை கைவிடுகிறதில்லை. தனது பிரசன்னத்தை மறைத்து நம்மை சிட்சிக்கிறார். அவர் விருப்பத்தை புரிந்து அவருக்கு ஏற்புடையவர்களாக வாழ அவர் ஆற்றலை நாடுவோம்.

மன்னிக்கிற ஆண்டவரே, எங்கள் அக்கிரமம் உம்மை எங்களோடு தங்க தடுக்கிறது. நீர் இல்லாமல் எங்களுக்கு வாழ்வு இல்லை. எங்கள் பாவத்தை மன்னித்து உமது உறவில் வாழச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

உறவை விரும்பும் ஆவி2019-04-01T14:09:18+00:00

செயலாற்றும் ஆவியாகிய கடவுள்

சங்கீதம் 104 : 25-30                                                           1 ஏப்ரல், 2019 திங்கள்

…கடவுளின் ஆவி தண்ணீர் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது.” – ஆதியாகமம் 1 : 2

திருமறையில் சொல்லப்படும் பன்னிரெண்டு சிறிய தீர்க்கர்களில் ஒருவர் ஆபகூக். இவர் கடவுளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். பொல்லாதவன் தன்னை விட நல்லவனை விழுங்கும் போது நீர் மௌனமா யிருக்கிறதென்ன? என்பதே அக்கேள்வி. இவர் மட்டுமல்ல நம்மில் அனைவரும் இப்படியே கேட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுள் செயல்படாத நிலையில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் செயல்படுகிற இறைவன் என்பதை நமது தியானப்பகுதி உறுதிப்படுத்துகிறது. அவர் தண்ணீர் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். மனுக்குலம் படைக்கப்பட்டதற்கு முன்பே கடவுள் இருந்தார். அவர் ஆவி அசைவாடிக் கொண்டிருந்தது. அசைவு உயிரோடிருப்பதற்கும் செயல்படும் தன்மைக்கும் ஆதாரமாக உள்ளது. படைப்பின் வரலாற்றைப் படிக்கும் போது அவர் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

அசைவாடிக் கொண்டிருந்தவர் வாய் திறந்து பேசினார். பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் புதிய புதிய படைப்புகளை தந்தன. வெளிச்சம் உண்டாகுக என்றார். உண்டாயிற்று. வானத்துச் சுடர்கள் உண்டாகுக என்றார். உண்டாயிற்று. பறவைகள் உண்டாகுக என்றார். உண்டாயிற்று. ஒழுங்கற்று வெறுமையாயிருந்த பூமிக்கு புது வடிவம் கொடுத்து நாம் இப்போது காண்கிற அனைத்தையும் அவர் தம் வார்த்தையால் படைத்தார். படைப்பின் மகுடமாக மனிதனைப் படைத்தார். அவனுக்கு இணையாக மனுஷியையும் படைத்து உலகை அவர்கள் கையில் ஒப்படைத்தார். ஆண்டுகொள்ளுங்கள் என்றும், பண்படுத்திப் பாதுகாத்து வாருங்கள் என்றும் கட்டளை கொடுத்தார்.

செயலாற்றல் மிக்க இறைவன் நம் கையில் இயற்கையை ஒப்படைத்திருக்கிறார். ஒழுங்கற்ற உலகை ஒழுங்குபடுத்தித் தந்திருக்கிறார். நாம் என்ன செய்கிறோம். இறையவர் நமக்காக உருவாக்கிய இயற்கையை அழித்து உலகை ஒழுங்கற்றதாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு நாமே தீமையை வருவித்துக் கொண்டிருக்கிறோம். பல நேரங்களில் பழியைக் கடவுள் மேல் போடுகிறோம். இருப்பினும் செயல்படும் கடவுள் நம்மைக் கொண்டு உலகை இன்னும் சிறப்பாக மாற்ற விரும்புகிறார். அவர் விருப்பப்படி செயலாற்றுவோம்.

படைக்கும் ஆற்றல் பெற்றவரே, படைப்பை அழிக்கும் எங்கள் எண்ணங்களை மாற்றி உலகுக்கு புதுவடிவம் கொடுக்க எங்களை உமது கருவிகளாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.

செயலாற்றும் ஆவியாகிய கடவுள்2019-03-29T13:35:05+00:00

சேர்ந்தே உபவாசம்

1 கொரிந்தியர் 7 : 1-7                                  29 மார்ச், 2019 வெள்ளி

ஜெபத்திற்கு வசதியாயிருக்கும்படி,….. மறுபடியும் கூடி வாழுங்கள்.” – 1 கொரிந்தியர் 7 : 5

ஆதித் திருச்சபையின் முக்கிய குணாதிசயங்களில் ஜெபமும் ஒன்று. ஒருமனப்பட்டு அனைவரும் ஜெபிக்கும் வழக்கம் சபையாருக்கு இருந்தது. அதற்கு இடையூறாக இருக்கும் அனைத்தையும் விலக்கி வைத்தனர். ஒரு மனப்பட்டு முழு இருதயத்தோடு ஜெபிப்பதில் கணவன் மனைவி சேர்ந்திருப்பதும் ஒரு தடையாக கருதப்பட்டது. அவர்கள் சேர்ந்திருப்பதை தடையாக கருதியதால் அக்காலங்களில் பிரிந்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுவர்.

இந்த வழக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கிற ஆபத்தை பவுல் புரிந்து கொண்டார். ஏனெனில் கொரிந்து நகரில் விபச்சாரமும் வேசித்தனமும் மக்களிடையே சர்வ சாதாரணமாக இருந்தன. வாய்ப்புகள் ஏற்படும் போது எவருமே இத்தீய காரியத்திற்கு தப்ப இயலாது. சாத்தான் தனிமையாயிருக்கிறவர்களையே அதிகம் சோதிப்பான். ஏதேன் தோட்டத்தில் தனிமையாக இருந்த ஏவாளை சோதித்து முழு மனுக்குலமும் பாவத்தில் விழ காரணமானானே. வீடுகளில் தனித்திருக்கும் பெண்களை தடம் புரளச் செய்யும் சோதனைகள் இக்காலத்திலும் உள்ளனவே. தனிமை ஆணையோ, பெண்ணையோ தவறு செய்ய தூண்டிவிடக்கூடாது என்று பவுல் பயந்தார். எனவே இச்சையடக்கம் இல்லாதவர்கள் பிரிந்து இருக்க கூடாது; அவர்கள் சேர்ந்தே இருக்கவேண்டும். சேர்ந்தே ஜெபிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

கணவன் மனைவியைச் சேர்த்து வைத்தவர் கடவுள். திருமணத்தின் போது கடவுள் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்க கடவன் என்று போதகர் கூறுவார். விபச்சாரம், வேசித்தன பாவங்கள் இவர்களை நிச்சயம் பிரிக்கும். எனவே இவை குடும்பத்திற்குள் நுழைந்து விடாதபடி நாம் எச்சரிக்கையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

குடும்பத்தில் பெண்களை தனியாக வழியனுப்பவதில், வாழச் செய்வதில் கவனம் தேவை. ஜெபம், உபவாசக்கூட்டம் என்று தெருத்தெருவாக சரியான பாதுகாப்பின்றி போகாதபடி எச்சரிக்கையோடு வாழ்வோம். ஊழியர்கள்கூட இக்காலத்தில் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கூற முடியாது. குடும்பத்தை குறித்த எச்சரிக்கையோடு ஜெபங்களில் நிலைத்திருப்போம். ஆண்டவர் தாமே நமது குடும்பங்களை காத்து நடத்தட்டும். இச்சையோடு பார்க்கிறவர்களை இறையவரே கட்டுப்படுத்தட்டும்.

பாதுகாப்பின் கடவுளே! எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும். குடும்ப உறுப்பினர்களின் தனிமையை பயன்படுத்தி சாத்தானின் தீமையை குடும்பத்திற்குள் புகுத்தாதபடி எங்களை காத்தருளும். கணவன் மனைவி எப்போதும் சேர்ந்தே வாழ துணைபுரியும். இயேசுவின் வழியே  ஆமேன்.

சேர்ந்தே உபவாசம்2019-03-28T13:14:16+00:00

கடவுளிடம் திரும்ப உதவும் உபவாசம்

யோவேல் 2 : 12-18                                         26 மார்ச், 2019 செவ்வாய்

இப்பொழுதும் நீங்கள் உபவாசித்து அழுது புலம்பி…. என்னிடத்தில் திரும்புங்கள்…” – யோவேல் 2 : 12

ஆலயத்திற்கு வராத ஒருவரை கண்டு ஏன் வரவில்லை என்றேன். வெறுங்கையாய் வர மனம் இடந்தரவில்லை என்றான். இன்னொருவனிடம் ஏன் திருவிருந்து எடுக்கவில்லை என கேட்டேன். காணிக்கை இல்லை என்றான். நம்மில் பலர் ஆலயம் வராதிருப்பதற்கு பல காரணங்களைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவைகளெல்லாம் சாக்குபோக்குகளேயொழிய வேறில்லை.

எனக்கு சரியான ஆடை இல்லை. காணிக்கை செலுத்த பணமில்லை என்றெல்லாம் கூறும் நாம் இவற்றைத் தருபவர் கடவுள் என்பதை மறந்து போகிறோம். நாம் தேட வேண்டியவர் நமது கடவுளே. முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தை தேடுங்கள். பின்னர் நாம் நமக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நமது ஆண்டவர் கூறியிருக்கிறார்.

யோவேல் தீர்க்கத்தரிசியின் காலத்தில் மக்கள் ஆலயத்தையும் அதில் செய்யப்பட வேண்டிய பலியையும் மறந்து போயினர். உபவாசம் போன்ற சமய கடமைகளும் அவர்கள் வாழ்வில் இல்லை. முதலாவது அத்தகைய சமயக் கடமைகளை ஏற்படுத்த வழிவகை செய்த யோவேல் இப்போது உபவாசித்து கர்த்தரிடம் திரும்ப அழைக்கிறார். அவர் கர்த்தருக்கு செலுத்த வேண்டிய பலிக்கு வேண்டிய ஆசீர்வாதங்களை அருள்வார் என்கிறார். நமது ஆசீர்வாதங்களுக்குத் தடையாக இருப்பது நமது பாவங்களே. இவை நம்மேல் கடவுளின் கோபத்தையே கொண்டு வருகிறது. அவர் கோபத்துக்குத் தப்ப ஒரே வழி அவர் பாதத்தில் சரணடைவதுதான். நம்மை ஒடுக்கி, உபவாசித்து அவரிடம் திரும்புவோம். அவர் நமக்கு மன்னிப்பையும் இதர ஆசீர்வாதங்களையும் அருள்வார்.

நமக்கு துன்பங்களைத் தருவது அவர் நோக்கமல்ல. ஆனால் நெருக்கத்தை தந்து விடுதலையையும் தந்து `நானே கர்த்தர் என்பதை நாமறியச் செய்கிறார். அவரிடமே திரும்புவோம்.

அன்புள்ள கடவுளே! எங்கள் தேவைகளை நிறைவேற்ற எங்கெல்லாமோ செல்கிறோம். ஆனால் உம்மைத் தேடுவதில்லை. இது எங்களில் காணப்படும் குறைபாடே. இதை நீக்கி எப்போதும் உம்மை ஜெபத்திலும் உபவாசத்திலும் தேடி உமது ஆசியை பெற துணை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளிடம் திரும்ப உதவும் உபவாசம்2019-03-25T13:38:21+00:00

இறையுறவு பலப்பட உபவாசம்

யோவேல் 1 : 11-14                              25 மார்ச், 2019 திங்கள்

உபவாசத்தை நியமியுங்கள்…” – யோவேல் 1 : 14

சட்டங்கள் ஏற்படுத்தப்படும் போது முதலில் மக்கள் கண்ணும் கருத்துமாய் செயல்படுத்துவர். நாளாக நாளாக அச்சட்டத்தை நிறைவேற்றுவதில் தளர்வு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அப்படிப்பட்ட சட்டம் உண்டா என்று கேட்கிற நிலை வந்துவிடும். மக்கள் மனதை விட்டே அச்சட்டம் அகன்று விடும்.

இஸ்ரவேலரின் சமய வாழ்க்கை தேவாலயத்துடன் இணைந்திருந்தது. அன்றாட பலிகள், தூபங்கள், ஜெபங்கள், உபவாசங்கள் போன்றவை நேரத்துக்கு நேரம் செய்யபட்டு வந்தன. ஆனால் ஆசாரியர்கள் மற்றும் அரசர்களின் நிசாரம் மற்றும் குறுக்கீடுகளால் ஆலய முறைகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. காணிக்கைகள் தவறாக பயன்படுத்தல், ஆசாரியர்களின் சுயநலம் போன்றவை மக்களுக்கு தேவாலயத்தின் மீது நாட்டத்தைக் குறைத்தன. போதாத குறைக்கு சில அரசர்கள் தேவாலயத்தையே பூட்டிப் போட்டனர். விளைவு இஸ்ரவேலரின் சமயக் கடமைகள் அவர்களுக்கு மறந்து போக ஆரம்பித்தன. கடவுளைத் தேடுவோர் குறைந்தனர். இதனால் எண்ணற்ற பிரச்சனைகள் நாட்டில் குவிந்தன. இவற்றினின்று விடுபட யோவேல் தீர்க்கத்தரிசி மக்களிடம் அறைகூவல் விடுத்ததே நமது தியானபகுதி. உபவாசத்தை நியமியுங்கள்.

சமயக் கடமைகளை நிறைவேற்ற யோவேல் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். கடவுளோடுள்ள உறவு சரியாகும் வரைக்கும் தங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடையாது என்பது அவருடைய நம்பிக்கை. அந்த உறவு சீர்பட உபவாசத்தை ஏற்படுத்தக் கட்டளையிட்டார்.

நம் வாழ்வில் நாம் செய்வதென்ன? ஆலய காரியங்களில் ஆரம்பத்தில் உற்சாகமுள்ளவர்களாயிருக்கிறோம். போகப்போக அது உற்சாகமின்றிப் போகிறது. ஆராதனைகளை மறக்கிறோம், ஈடுபாட்டைக் குறைக்கிறோம். ஜெபம், உபவாசம் தேவையா என்று எதிர் கேள்வி கேட்கிறோம். ஆலயக் காரியங்களில் குறைவுபடாதபடி பார்ப்பது நமது கடமை. இறையுறவு சிறக்க நம்மையும் தான் ஒடுக்கிப் பார்ப்போமே. ஆண்டவரை மறவாதிருப்போம். அவர் தந்த நியமங்களை மாற்றாதிருப்போம். அவர் ஆசியைப் பெறுவோம்.

எல்லாம் வல்லவரே! உம்மோடுள்ள உறவு தொடரவே நீர் ஆலயத்தையும் உம்முடைய வார்த்தைகளையும் எங்களுக்குத் தந்திருக்கிறீர். இவற்றையும் சமயக் கடமைகளையும் மறந்து வாழும் எங்களை மன்னியும். ஆலயத்தை, அதில் நிறைவேற்ற வேண்டியவைகளை நிறைவேற்ற உதவி செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

இறையுறவு பலப்பட உபவாசம்2019-03-22T11:12:07+00:00

பிறருக்கான உபவாசம்

தானியேல் 10 : 1-9                                                      19 மார்ச், 2019 செவ்வாய்

“அந்த மூன்று வாரங்கள் முடியுமட்டும் ருசிகரமான ஆகாரத்தை நான் புசிக்கவுமில்லை,….” – தானியேல் 10 : 3

வேலைக்குப் போன அப்பா விபத்தில் சிக்கி விட்டார் என்ற செய்தி அறிந்து குடும்பத்தார் மருத்துவமனைக்கு ஓடினர். கண்ணீரோடு சென்ற அவர்கள் அவரை சுயநினைவிழந்தவராய் கண்டு திகைத்து நின்றனர். வீடு அவரை நம்பியே இருந்தது. வீட்டில் அம்மா, அக்கா, தங்கை மகன் என அனைவருமே அவர் சம்பாத்தியத்தை நம்பியே இருந்தனர். அவர் நிலையைக் கணிக்க ஒரு நாள் ஆகும் என்று மருத்துவர் கூறிவிட்டார். அந்த நேரம் முழுவதும் வீட்டு மக்கள் அனைவரும் அன்ன ஆகாரம் எதுவுமின்றி முடங்கிக் கிடந்தனர்.

தானியேல் தான் கண்ட தரிசனத்தை மனதில் கொண்டு மூன்று வார காலம் உபவாசம் இருந்தார். அது துக்கமான காரியத்தின் வெளிப்பாடாக இருந்தது. நாட்டின் எதிர்காலத்தைக் குறித்த காரியம் அது. அந்நிய நாட்டில் தானியேல் வாழ்ந்தாலும் அந்நாட்டின் அழிவையும் அவரால் தாங்க முடியவில்லை. எனவே ருசியான ஆகாரம் இன்றி மூன்று வார காலம் அமைதியாய் இருந்தார். தானியேல் எதிராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்டு பாபிலோனியில் தங்க வைக்கப்பட்டார். எதிராளிகளை மேற்கொண்ட பாரசீக மன்னர்கள், தானியலின் மக்களுக்கு விடுதலை கொடுத்து தங்கள் சொந்த நாட்டுக்கு செல்ல வழி வகை செய்தனர். பலர் அங்கேயே வாழ தலைப்பட்டனர். அதில் தானியேலும் ஒருவர். தானியேல் பாரசீக மன்னர்களால் உயர்த்தப்பட்டு நாட்டின் உயர்ந்த பதவியில் அமர்த்தப்பட்டிருந்தார். அந்நிய நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டின் ராஜாக்களுக்காக ஜெபித்த தானியேல் இங்கு உயர்ந்து நிற்கிறார்.

மேன்மையான அதிகாரங்களுக்கு கீழ்ப்பட்டிருங்கள் என்று பவுல் கூறுகிறார். நாட்டில் நாம் சமாதானமாய் வாழ ராஜாக்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்றும் அவர் எழுதியிருக்கிறார். நாட்டின் தலைவர்கள் நமக்கு விருப்பமானவர்களோ, விருப்பமில்லாதவர்களோ அவர்களுக்காக ஜெபிப்பதும் உபவாசிப்பதும் கடவுள் பார்வையில் மேன்மையானது. நாம் நமது தலைவர்களுக்காக ஜெபிக்கிறோமா? நாம் நன்றாக வாழ அவர்களுக்காக இறைவனிடம் உபவாசித்து ஜெபிப்போம்.

சர்வ வல்ல கடவுளே! நாங்கள் சுகத்தோடும், நலத்தோடும் வாழ நல்லாட்சி அவசியமாகிறது. இவ்வாட்சியைத் தரும் தலைவர்கள் நலமுடன் வாழ அவர்களுக்காக ஜெபிக்கிறோம். அவர்களை சுகத்துடன் வாழச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

பிறருக்கான உபவாசம்2019-03-18T10:06:16+00:00
Go to Top