ஆதியாகமம் 6 : 1-8 2 ஏப்ரல், 2019 செவ்வாய்
“…என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனில் தங்குவதில்லை…” – ஆதியாகமம் 6 : 3
நமக்கு பிடிக்காத வேலையை விட்டுவிட நினைக்கிறோம். பிடிக்காத இடத்தை விலை பேச விரும்புகிறோம். பிடிக்காத கூட்டத்திலிருந்து விலக எண்ணுகிறோம். கசக்கும் உறவுகளை வெட்டிவிடத் துடிக்கிறோம். இணைபிரியாத நண்பர்கள் கூட சில சமயங்களில் தங்கள் தொடர்பை குறைத்துக் கொள்கிறார்கள் என்றால் காரணம் எதுவாக இருக்கும்? அவர்களிடையே ஏதோ பிடிக்காத செயலோ, வார்த்தைகளோ காரணமாக இருக்கலாம் அல்லவா?
மனிதரிடையே தங்கிய கடவுளின் ஆவியானவர் இனி தங்குவதில்லை என்ற முடிவிற்கு வருகிறார். ஒரேயடியாய் என்றும் கூறலாம். என்றென்றும் தங்குவதில்லை என்று கூறுகிறார். காரணம் கடவுளுக்குப் பிடிக்காத பல காரியங்களை மனிதன் செய்யத் துணிந்துவிட்டான் என்பதே.
நோவா காலத்தில்தான் கடவுள் இந்தத் தீர்மானத்தை எடுத்தார். இறைவனோடு வாழும் வாழ்க்கையை மனிதன் தன் அக்கிரமங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டான். ஆதாமிலிருந்து ஆரம்பித்த பாவ வாழ்க்கை தொடர்ந்து பெருகினதேயொழிய குறைந்தபாடில்லை. கடவுள் மனம் வருந்துகிற அளவிற்கு மனிதனின் அக்கிரமம் பெருகியது. கடவுள் நீதியுள்ளவர், அக்கிரமத்தை வெறுக்கிறவர், பாவத்தை விரும்பாதவர், பரிசுத்தமுள்ளவர். அவர் தமது பிள்ளைகளும் அவரைப் போலவே வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவர் விருப்பம் நிறைவேற மனிதன் இடங்கொடாத நிலையில் அவர் மனிதனை விட்டுச் சற்று விலகி நிற்கிறார். முற்றிலுமாக அல்ல. கடவுள் தம்மை, நம்மை விட்டு விலக்குவதால் துன்பம் நமக்குத் தான். அவரின்றி வாழ எவராலும் இயலாது. துன்புறும் நிலை வரும் போது நாம் கடவுளை நிச்சயம் தேடுவோம். அவரும் இரங்கி வந்து நம்மை அரவணைத்துக் கொள்வார்.
கடவுளின் அன்பு மகத்தானது. அவர் நம்மை கைவிடுகிறதில்லை. தனது பிரசன்னத்தை மறைத்து நம்மை சிட்சிக்கிறார். அவர் விருப்பத்தை புரிந்து அவருக்கு ஏற்புடையவர்களாக வாழ அவர் ஆற்றலை நாடுவோம்.
மன்னிக்கிற ஆண்டவரே, எங்கள் அக்கிரமம் உம்மை எங்களோடு தங்க தடுக்கிறது. நீர் இல்லாமல் எங்களுக்கு வாழ்வு இல்லை. எங்கள் பாவத்தை மன்னித்து உமது உறவில் வாழச் செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.
