vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

தொழுகையில் உபவாசம்

எரேமியா 36 : 1-8                       11 மார்ச், 2019 திங்கள்

“….ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்கள் கேட்க வாசி;…” – எரேமியா 36 : 6

தற்காலத்தில் மக்கள் ஆலயத்திற்கு வருவதைப் பார்க்கிறோம். சிலர் முதல் மணி அடிப்பதற்கு முன்பே வந்து விடுகின்றனர். பலர் இரண்டாவது மணி அடிக்கும் போது உள்ளே அமர்ந்து விடுகின்றனர். ஒரு சிலர் அப்போது தான் வீட்டிலிருந்து புறப்படுவர். பலர் போதகர் பிரசங்கம் பண்ணும் வரை உள்ளே வந்து கொண்டிருப்பர். ஒரு நாளில் ஒரு பெண் பிரசங்கம் முடிந்ததும் உள்ளே வந்து அமர்ந்தார். போதகர் கோபமடைந்து, ‘பிரசங்கத்திற்கு முன்பு வரமுடிந்தால் ஆலயம் வாருங்கள். இல்லையெனில் வரவே வேண்டாம்’ என்றார். நம்மில் பலர் இப்படித் தான் இருக்கிறோhம். ஆராதனையில் எது முக்கியம் என்பதை அறியாமல் கலந்து கொள்கிறோம். ஆராதனையில் முக்கியம் இறைச் செய்தியே. கடவுளின் வார்த்தையே. இஸ்ரவேலருடைய வாழ்விலும் ஆராதனை ஒரு சடங்காக மாறிவிட்டது. பலி ஒன்றே பிரதானமாக இருந்தது. உபவாசம் ஜெபம் போன்றவை கடமைகளாக மாறிப்போயின. எரேமியா தீர்க்கதரிசி இதைக் கண்டித்தார். அவ்வாறு கண்டித்த நேரம் அவர்கள் உபவாசத்திற்காக கூடி வந்த நேரம். இஸ்ரவேலர் தங்கள் சமயக் கடமையை நிறைவேற்ற அடிக்கடி தேவாலயத்தில் கூடுவதுண்டு. அப்படி ஒரு உபவாச நாளில் அவர்கள் கூடி வந்தனர். கூடி வந்ததற்கு நோக்கம் எதுவும் இல்லை. வழக்கமான ஒன்று என்பதே அவர்களின் நிலை. அவ்வாறு கூடி வந்த மக்களிடம் எரேமியா தான் கடவுள் வார்த்தையாக முதலில் உரைத்தது முதல் தற்போது வரையிலும் எழுதி பாரூக் என்பவரிடம் கொடுத்தார். அவர் ஜனங்களுக்கு முன்பாக வாசித்தார்.

கடவுளின் வார்த்தை நமக்கு ஒரு உரைகல் போன்றது. நம்முடைய பாவத் தன்மையை வெளியரங்கப்படுத்துகிறது. உண்மையான மனஸ்தாபத்திற்கும் வேண்டுதல்களுக்கும் நம்மை வழி நடத்துகிறது. இறை வார்த்தையைக் கேட்காமல் நாம் செய்யும் ஒவ்வொரு சமயக் கடமையும் வீண். நமது உபவாசமும் வீணே. ஆலயம் கடவுள் நமக்குத் தந்திருக்கிற கொடை. அதில் கூறப்படும் வார்த்தைகள் நமது வாழ்வுக்குரியவை. அவர் வார்த்தையை முதன்மைப்படுத்துவதன் வழியாக கடவுளின் பிரசன்னத்தை உணருகிறோம். நமது உபவாசம் அர்த்தத்தோடு அமையட்டும். நமது ஜெபங்கள் கடவுளின் சமூகத்தில் எட்டட்டும். அவர் நம்மை ஆசீர்வதித்து பலப்படுத்துவார்.

வார்த்தையான ஆண்டவரே. உமது வார்த்தையை கேட்காமல் நாங்கள் ஜெபிப்பதும் உபவாசிப்பதும் பலி செலுத்துவதும் வீணே. எங்கள் பாவத் தன்மையை உணரச் செய்யும். உமது வார்த்தைகளை கேட்கும் நல் உணர்வைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

தொழுகையில் உபவாசம்2019-03-08T07:48:54+00:00

பூமிக்கு உப்பு இயேசுவே

யோவான் 3 : 12-17              27 பிப்ரவரி, 2019 புதன்

பூமிக்கு உப்பு நீங்களே;  உப்பு சாரமற்றுப் போனால் எதினால் சாரமேற்றப்படும்?” – மத்தேயு 5 : 13

குறைந்த செலவில், அதிக அளவில் பயன் தருவது உப்பு. உணவுக்கு உப்பு சுவையூட்டுகிறது, பாதுகாக்கிறது. இதற்காகத் தன்னையே கரைத்துக் கொள்ளுகிறது. நாம் உலகிற்கு உப்பாக இருக்கிறோம் என்கிறார் இயேசு.  மனிதன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய இயேசு இதைக் கூறினார். மனிதனுக்கு இறைவன் தன்னையே வெளிப்படுத்தியும் இருக் கிறார். சுயநலத்துடன் வாழ மனிதனைக் கடவுள் படைக்கவில்லை. தமது அன்பை உலகுக்குக் காட்டவே மெய்யான மனிதனாகத் தம் குமாரனை, கடவுள் உலகுக்குள் அனுப்பினார். உப்பைப் போன்று தன்னை அழித்து, பிறர் வாழ்வுக்குச் சுவை தந்தார் கடவுளின் குமாரனாம் இயேசு.

பாவத்தினால் கெட்டுப் போன மனிதனைப் பாதுகாக்க, இயேசு உப்பாகி மனித வாழ்வுடன் கலந்துவிட்டார். பாவக் கிருமிகளைக் கொன்று, மனித உள்ளங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறார். இயேசுவின் வழியே பாவ மன்னிப்பைப் பெற்ற மனிதனும், உப்பைப் போன்று கரைந்து பிறருக்குச் சுவை தந்து பிறரைப் பாதுகாப்பவனாகிறான்.

ஏழ்மையினால், சாதி வேறுபாட்டினால், ஒடுக்கப்பட்டதினால், ஆதரவற்றதினால், வாழ்வில் வெறுப்படைந்திருக்கும் அன்பர்களை நினைத்துப் பார்ப்போம். நமது அன்பினால், அரவணைப்பினால், உதவியினால் நீங்களும் வாழப் பிறந்தவர்களே என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் உருவாக்கி, அவர்கள் வாழ்வைச் சுவையாக்குவோம். தீய வழிகளினின்று விலகி நடக்க, அவர்களுக்கு உதவுவோம். பிறருக்கு வாழ்வளிக்கும் முயற்சியில், நமது வாழ்வு கரையலாம், கரைய வேண்டும். இது இழப்பல்ல. இதுதான் சாரமுள்ள அர்த்தமுள்ள வாழ்வு. தன்னை அழித்து வாழும் வாழ்வு முறையை வழங்குவதில்தான் கிறிஸ்தவம் தனித்து நிற்கிறது. நீங்கள் உலகுக்கு உப்பாகுங்கள். கடவுள் உங்களை வாழவைப்பார்.

கர்த்தாவே, உம்மை இழந்து, எங்கள் வாழ்வுக்குப் பொருள் தந்த இயேசுவே, என்னை இழந்து பிறர் வாழ்வில் நான் சுவையூட்ட அருள் தாரும். இயேசுவின் வழியே  ஆமேன்.

பூமிக்கு உப்பு இயேசுவே2019-02-27T08:56:27+00:00

ஓய்வு நாள் – தவறாதே

யாத்திராகமம் 31 : 12-15                                  20 பிப்ரவரி, 2019 புதன்

“நீங்கள் என் ஓய்வுநாட்களைத் தவறாமல் ஆசரிக்கவேண்டும்….” – யாத்திராகமம் 31 : 13

கணவன் மனைவி உறவு மிகவும் அன்னியோன்யமானது. திருமணம் என்கிற பவித்திரமான தேவ ஏற்பாட்டின் மூலம் ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியாக இணைக்கப்படுகின்றனர். மரணம் அவர்களைப் பிரிக்கும் வரை சுக, துக்கங்களைச் சமமாய் பங்கிட்டு வாழ உறுதி எடுத்துக் கொள்கின்றனர். திருமணத்திற்கு பின்பு, தேவகிருபையால் இவற்றை நிறைவேற்றி வாழுகின்றனர். அன்புப் பாலமான இல்லற வாழ்வில் கணவன் மனைவி உறவை ஏற்படுத்தித் தந்தது கடவுளின் அன்பின் திட்டத்தில் ஒரு பகுதி.

இப்படி ஒரே மாமிசமாகக் கடவுளால் இணைக்கப்பட்ட ஆதி மனிதர், பாவச் சேற்றில் விழுந்தனர். பாவம் அவர்ளைக் கட்டிப் போட்டது. இது மட்டுமல்ல, பெற்றோரின் சில நோய்கள் பிள்ளைகளுக்கும், சந்ததிகளுக்கும் பாரம்பரிய நோய் ஆகின்றது. இதுபோல பாவம் பாரம்பரிய நோய் ஆகிவிட்டது. அதிலிருந்து விடுபட முடியாமல் ஆதிமனிதரும், அவர் பின்னடியார்களாகிய மனித இனமும் தவிக்கிறது. நமது வேதனையும் இதுதான். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பாவத்தால் ஒரு* இடைவெளி ஏற்பட்டு விட்டது. இயேசு கிறிஸ்து தனது தூய ரத்தம் மூலம் இந்த இடைவெளியைத் தகர்த்தெறிந்து கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நல்லுறவு எனும் அன்புப் பாலத்தை ஏற்படுத்தினார். இந்த கடவுளின் அன்பைத் திரும்பத்திரும்ப ருசித்து, வாழ தேவன் ஏற்படுத்திக் கொடுத்ததே ஓய்வுநாள்.

மனைவி, மக்களுடன் ஒன்றாகக் கடவுளுக்கு நன்றி செலுத்த நாம் ஓய்வுநாளில் ஒதுக்குகிற நேரம் மிகக் குறைவு. அதிலும் ஓய்வுநாளை சரியாக ஆசரிப்பதில் பல தடவை நாம் தவறியதும் உண்டு அல்லவா? பிற காரியங்களுக்கு, பொருளாதார தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவே வாழ்கிறோம். ஆன்ம நேசராம் இயேசுவின் பிரசன்னத்தை ஓய்வுநாளில் தேடுவதில் நாம் தவறுவது ஏன்? தியான வாக்கியத்தில் கடவுள் வலுவான, உறுதியான, திட்டமான கட்டளையாக நீ தவறாமல் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்கிறார்.

ஓய்வு நாள் பணிகளிலிருந்து விடுபட்டு, சரீரம் ஓய்வெடுப்பதோடு மட்டுமின்றி, கடவுள்-மனிதன்-மனிதர் ஆகிய முக்கூட்டு நல்லுறவை பலப்படுத்துகிற நாள். ஆன்ம நோக்கிற்காக கடவுளால் தனிமைப்படுத்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு மனிதரின் அனுசாரத்துக்காக நமக்கு கட்டளை இடப்பட்ட நாள் இது. இதை உரியமுறையில் கடைப்பிடித்தே ஆக வேண்டும். எக்காரணம் கொண்டும் உதாசீனப்படுத்தலாகாது. ஓய்வு நாளில் வேலை இல்லை, பாரம் இல்லை, வேதனை இல்லை. ஆசீர்வாதம், தேவப் பிரசன்னம் மட்டுமே இருக்கிறது என்ற உண்மையை மீண்டும் மீண்டும் தியானியுங்கள்.

தூய தெய்வமே! உமது திட்டமான கட்டளையை ஏற்று ஓய்வு நாளில் களிகூர உதவி செய்யும். ஓய்வு நாளை உதாசீனப்படுத்துவதால் உம்மை மட்டுமே நாங்கள் ஒதுக்கவில்லை. எங்களை நாங்களே ஒடுக்குகிறோம். பிறரை நேசிக்கவும் மறந்து விடுகிறோம் என்ற உணர்வு தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஓய்வு நாள் – தவறாதே2019-02-19T07:49:54+00:00

ஓய்வு நாள் ஒடுக்குக

லேவியராகமம் 16 : 29-31                                      11 பிப்ரவரி, 2019 திங்கள்

“…ஓய்வு நாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களை ஒடுக்க வேண்டும்;” – லேவியராகமம் 16 : 31

சுகம் துக்கம் இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்க கற்றுக் கொள். இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அதிலிருந்து சரியான பாடம் கற்றுக் கொண்டால் தெளிவு, பிறக்கும். அந்தத் தெளிவு ஆனந்தத்தைக் கொடுக்கும். தியானவாக்கியம் ஒரு அற்புத உபதேசத்தை நம்மிடம் வைக்கிறது. ஓய்வு நாள் என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது அல்ல. ஆத்துமாக்களை ஒடுக்கக் கற்றுக் கொள்தல் தான் ஓய்வு நாளின் நோக்கம்.

மனம் ஒரு தெருநாய் போன்றது. எங்கெங்கோ சுற்றும். எவர் பின்னாலெல்லாம் செல்லும். எதை எதையோ தின்னும். நினைத்தபொழுது படுத்துக் கொள்ளும். இந்த மனம் தெளிவு பெற வேண்டுமா? மனம் எதிலாவது நிலைத்திருக்க வேண்டுமா? கர்த்தரிலே நிலைத்திருப்பது தான் ஒடுங்கியிருத்தல். மற்ற சிந்தைகளிலிருந்து ஒடுங்கி, கர்த்தரிலே தரித்திருப்பது அவசியம்.

படைத்த கர்த்தருக்கும் படைக்கப்பட்ட மனிதருக்குமிடையேயான நல்லுறவின் மேன்மை பற்றிய சிந்தை இதயத்தில் பிரகாசிக்கும் போது மனம் கர்த்தருக்கு நன்றியைச் செலுத்தும். இதனால் தேகமெங்கும் ஆனந்தம் பரவும், பரவசநிலை அடைய முடியும். இத்தனையும் ஆன்ம ஒடுக்கத்தில், ஆவியானவரால் நடைபெறுகிற விளைச்சல்கள். ஓய்வு நாளை அனுசரிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு யாதொரு வேலையும் செய்யாமல் வீட்டிலே உறங்கிக் கிடப்பது சோம்பேறியாகத் திரிவது, ஒன்றும் செய்யாமல் வீணாக இருப்பது ஓய்வு நாளைத் தந்த கர்த்தரைத் தூஷிப்பதாகும்.

இறைவனின் அருட் சன்னிதியில் தன்னைத்தான் உணர ஓய்வு நாள் மனிதனுக்குத் தரப்பட்டுள்ளது. தன் மனதினை ஒடுக்க, சுய பரீட்சை செய்து கொள்ள கிடைத்த ஓய்வு நாள் ஓர் பெரிய ஆசீர்வாதம். சிலர் ஓய்வுநாள் காலையில் சாப்பிடுவதில்லை. உபவாசிக்கிறார்கள், நல்ல பழக்கந்தான். ஆத்துமத்தை ஒடுக்கிறவர்கள் எத்தனை பேர்? உபவாசம் இருக்கிறவர்கள்கூட விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துக்கொண்டு ஆலயம் செல்கிறார்களே! இது உபவாசமா? ஒடுக்கமா?

நமது கடந்த காலத்தை, பாவம் நிரம்பிய வாழ்க்கையை எண்ணி ஆத்துமாவை ஒடுக்க இந்த நாளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். `நான் ஒன்றுமில்லை நீர் என்னில் கிரியை செய்கிறவர்’ என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

கர்த்தாவே, நாங்கள் உடைந்த பாத்திரங்கள். எங்களைச் செப்பனிட்டு, காக்கிறவர் நீர். எங்கள் ஆத்துமாவை ஓய்வு நாளிலே ஒடுக்கி, வாழ எங்களை வழி நடத்தும். ஓய்வு நாளின் உயர்ந்த கருத்தைப் புரிந்து கொள்ள ஞானம் தாரும். இயேசுவின் வழியே. ஆமேன்.

ஓய்வு நாள் ஒடுக்குக2019-02-08T11:08:48+00:00

ஓய்வு நாள் இறைத்திட்டம்

யாத்திராகமம் 20 : 4-8                                         1 பிப்ரவரி, 2019 வெள்ளி

“கர்த்தர் ஆறு நாளுக்குள்ளே……… எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்…” – யாத்திராகமம் 20 : 11

இது கம்ப்யூட்டர் யுகம். மின்னல் வேகத்தில் பல காரியங்களை ஆற்றுகின்ற வல்லமை கம்ப்யூட்டருக்கு இருக்கிறது. ஆனாலும் அதன் அறிவு வரையறைக்குட்பட்டதே. ஆனால் கம்ப்யூட்டருக்கும் ஓய்வு தேவையாக இருக்கின்றது. இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் இயக்கத்தை, குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு தடவை சில நிமிடங்கள் நிறுத்த வேண்டி உள்ளது.

கடவுள் மனிதர்களாகிய நம் மீது அளவற்ற இரக்கமும், கருணையும் கொண்டவர். உலகின் படைப்புகள் எல்லாவற்றையும் `உண்டாகுக’ என்றார். தனது வார்த்தையின் மூலமே கர்த்தர் இவற்றைப் படைத்துவிட்டார். ஓர் உயர்ந்த நிலையை மனிதருக்குப் படைப்பின் நிலையிலேயே தர எண்ணினார் கர்த்தர். மண்ணைத் தனது கையில் எடுத்தார். அதிலிருந்து தனது சாயலாக மனிதனைப் படைத்தார். ஜீவ சுவாசத்தை மனிதனின் நாசியில் ஊதினார். மனிதன் `ஜீவாத்மா’ ஆனான். மனிதன் வாழ அவனுக்கு ஒரு உத்யோகம் – தொழில் தந்தார். வாழ்ந்திட ஒரு தோட்டம் தந்தார். ஒரு துணையையும் கொடுத்தார். தினமும் காலையில் மனிதனோடு உரையாடினார். இன்றைய மனிதரின் நிலை என்ன? காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையில் கண்ணயருகின்ற வரை பணம் தேடும் முயற்சியில் நாம் எந்திரமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நமக்கும் ஓய்வு கட்டாயத் தேவை என்பதை கர்த்தர் அறிந்து இருக்கிறார். அதற்கு ஒரு செயல்முறைத்திட்டத்தைத் தன் வாயிலாகவே நமக்குக் காட்டியும் இருக்கிறார்.

ஆறு நாட்களில் உலகிலுள்ள யாவற்றையும் படைத்து ஏழாம் நாளிலே கடவுள் ஓய்வில் இருந்தார். `மனிதனே, நீயும் என்னைப் பின்பற்றி ஓய்வாகயிரு, இளைப்பாறு’ என்று வழிகாட்டும்படி தான், கடவுள் ஓய்ந்திருந்தாரோ?
`இளைப்பாறுதல் தருவேன்’ என்றவர் இயேசு. வருத்தப்பட்டுப் பாரம் சுமப்பது தினப்பாடுகள் மட்டுமல்ல. இத்தகைய பிரயாசைகளில், சுமைகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றால் போதாது. பாவம் செய்தேன் எனும் குற்ற உணர்வில் இருந்தும் இளைப்பாறுதலும் ஓய்வும் வேண்டுமே. இயேசு பாவமன்னிப்பாம் ஓய்வைத் தருகிறார். ஏழாம் நாளில் அல்லது ஏதாவது ஒரு நாளில் ஓய்ந்திருப்போம். இயேசு அருளுகிற பாவமன்னிப்பாம் அழியாத ஓய்வை தினமும் அனுபவிப்போம்.

கர்த்தாவே! நீர் எங்களுக்குக் காட்டி இருக்கும் செயல் திட்டத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வை எமக்குத் தாரும். உண்மையுடன் உத்தமத்துடன் இவற்றைப் புரிந்து பின்பற்றிட அருள்தாரும். ஓய்வுநாள் உமது நாள். இந்த நாளை எனது சொந்த நாளாக்கிவிடாமலிருக்க எனக்குத் துணை செய்திடும். இயேசு வழியே ஆமேன்.

ஓய்வு நாள் இறைத்திட்டம்2019-01-31T04:59:56+00:00

ஞானஸ்நானம் – ஒர் அபிஷேகம்

2 கொரிந்தியர் 1 : 20-22                                       26 ஜனவரி, 2019 சனி

“…கிறிஸ்துவுக்குள்ளாக ஸ்திரப்படுத்துகிறவரும் நம்மை அபிஷேகம் பண்ணினவரும் கடவுளே.” – 2 கொரிந்தியர் 1 : 21

முதல் நூற்றாண்டு. ஆதிகால திருச்சபையின் ஒரு எளிய கிறிஸ்தவரை ஒருமுறை நீதிபதியின் முன்பாக கொண்டு வந்து நிறுத்தினர். அவன் மீது வைத்த குற்றச்சாட்டு என்னவெனில் அவன் எதைச் செய்தாலும் ‘கடவுள் இதைப் பார்க்கிறார். நாம் கடவுளுக்கு உண்மையாய் இருந்தால் கடவுளும் உண்மையாய் இருப்பார் என்று கூறுகிறார்’ என்று கூறப்பட்டது. நீதிபதி கிறிஸ்தவனை நோக்கி உண்மையிலேயே நீ அப்படி நம்புகிறாயா? என்று கேட்டார். அதற்கு கிறிஸ்துவன் நான் அப்படி நினைக்கவில்லை என்று சொல்லி மறுதலித்தான். ஆனால் நீதிபதியோ ‘நான் அப்படி நம்புகிறேன்’ என்றார். அப்போதுதான் கிறிஸ்தவனுக்குப் புரிந்தது நம்மைவிட நீதிபதி உண்மையான கிறிஸ்தவர் என்று.
அநேக சமயங்களில் திரியேகக் கடவுளின் நாமத்துக்குள்ளாக திருமுழுக்குப்பெற்ற கிறிஸ்தவர்கள் திருமுழுக்கின் மூலம் நமக்கு கிடைத்த அபிஷேகம் மற்றும் வாக்குத்தத்தங்களில் உண்மையற்றவர்களாகவும் உறுதியற்றவர்களாகவுமிருக்கிறோம். திருமுழுக்கில் கடவுளின் வாக்குத் தத்தங்களை திருவசனத்தின் மூலம் வாக்களித்து அவற்றை இயேசுகிறிஸ்துவின் மூலம் ஆம் என்றும் ஆமேன் என்றும் நிறைவேற்றியுள்ளார் கடவுள். அதற்கு மேலாக பரிசுத்த ஆவியைக் கொண்டு, நம்மை முத்தரித்து ஆவியின் அச்சாரத்தையும் நமக்குத் தந்துள்ளார். ஆகவே திரியேக கடவுளின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், கடவுளின் சித்தத்தை அதிகாரத்தோடும், வல்லமையோடும் நிறைவேற்ற தகுதியுடையவர்களாகிறோம்.

அப்போஸ்தலர்களை அபிஷேகித்து அனுப்பிய அதே ஆண்டவர், கிறிஸ்து வழியாக நம்மையும் ஞானஸ்நானத்தில் அபிஷேகித்து முத்தரித்து ஸ்திரப்படுத்தி வழிநடத்துகிறார். கிறிஸ்துவுக்காக நாம் அனுபவிக்கிற பாடுகள் இயேசுகிறிஸ்துவை பிறர் காணும் வண்ணம் நாம் வாழ்ந்து காட்டுகிற கிறிஸ்துவுக்கான நம் வாழ்க்கை யாவும் கடவுளின் ஆற்றலினால் மட்டுமே என்பதில் உறுதி கொள்வோம். வல்லமையானவர் நம்மை ஞானஸ்நானத்தில் அபிஷேகித்திருக்கிறார். உண்மையுள்ளவர் நம்மை நடத்துகிறார். ஊக்கமுடைய ஆவியானவர் நம்மை கடைசிவரை நடத்துவார். இதுவே கிறிஸ்தவ வாழ்வில் நமது நிச்சயம். இந்த நிச்சயத்தோடு வாழுவோம்.

அன்புமிக்க நல்ல கடவுளே! பரிசுத்த ஆவியானவரால் திருவசனத்தைக்கொண்டு எங்களை வரவழைத்து ஞானஸ்நானத்தில் அபிஷேகித்து ஆவியின் அச்சாரத்தை தந்தவரே, தொடர்ந்து உமக்கென்று வாழ எம்மை ஆற்றல்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே. ஆமேன்.

ஞானஸ்நானம் – ஒர் அபிஷேகம்2019-01-24T13:16:06+00:00

சமாதான உடன்படிக்கை

ஏசாயா 54 : 7-10                                                   21 ஜனவரி, 2019 திங்கள்

“ …என் சமாதானத்தின் உடன்படிக்கை அசையாமலும் இருக்கும்…”  – ஏசாயா 54 : 10

‘ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துதலே உலகத்தில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்யவேண்டிய கடமை ஆகும். ஒருவரால் மற்றவர்களை எளிதாக மனம் சோர்ந்து போகச் செய்யலாம். இந்த உலகம் பெரும்பாலும் மனச்சோர்வு உண்டாக்குகிறவர்களால் நிறைந்திருக்கிறது. கடவுளின் பிள்ளைகளாக கிறிஸ்தவர்களின் பிரதான கடமை, நாம் ஒருவருக்கொருவர் ஊக்கம் அளிப்பதே ஆகும்’ – வில்லியம் பார்க்.

ஏசாயா 54 : 6ல் கணவனால் கைவிடப்பட்டு மனம்நொந்து நிற்கும் ஸ்திரீயைப் போலவும், இளம் வயதில் கணவனால் தள்ளப்பட்ட மனையாளைப் போலவும் இருக்கும் கடவுளின் மக்களைப் பார்த்து கடவுள் சொன்ன வார்த்தை ஊக்கமளிப்பதாய் உள்ளது. இமைப்பொழுது எனது முகத்தை மறைத்தேன் எனினும் நித்ய கிருபையுடன் இரங்குவேன் என நம்பிக்கை ஊட்டுகின்றார். அந்த நம்பிக்கையின் ஆதாரமாய் அமைவது, அவர் நம்மோடு செய்து கொண்டிருக்கும் சமாதான உடன்படிக்கையின் அடிப்படையே ஆகும்.

மாறாதக் கடவுள் மாற்றமில்லாத தமது சமாதான உடன்படிக்கையை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் நம்மோடு செய்திருக்கிறார். அந்த உடன்படிக்கையின் தொடர்ச்சியை நாம் ஞானஸ்நானத்தில் அனுபவிக்கிறோம். ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொருவருக்கும் கிருபையின் வார்த்தையாக இந்த வார்த்தைகள் சொல்லப்படுகிறது. கடவுள் ஞானஸ்நானத்தின் வழியாக நம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இதனால் நாம் அவருடைய கோபாக்கினைக்குத் தப்பி, அவரது கிருபையின் மறைவுக்கு வந்திருக்கிறோம் என்பதற்கு இந்த வார்த்தைகளே சாட்சி. கடவுள் என்மேல் இரக்கமாய் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வழியாக நான் அவரில் நல்ல உறவில் வாழமுடியும் என்பதே நமக்கிருக்கும் சமாதான உடன்படிக்கையின் நிச்சயம். எந்தச் சூழ்நிலையிலும் இந்த நம்பிக்கையுடன் சமாதானமாய் வாழுவோம்.

கிருபையுள்ள கடவுளே, உமது சாட்சியுள்ள திருவசனத்தைக் கொண்டு எங்களை உடன்படிக்கை உறவில் உண்மையாய் வாழ உதவிபுரியும். எல்லா நிலையிலும் உமது சமாதானத்தைப் பெற்றுக் கொண்டவர்களாய் உலகிற்கு முன் உமது சமாதானத் தூதுவர்களாய் வாழ எங்களை ஆற்றல்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே. ஆமேன்.

சமாதான உடன்படிக்கை2019-01-21T05:18:52+00:00

கிறிஸ்மஸ்

எபேசியர் 3 : 9-13                                                       25 டிசெம்பர், 2018 செவ்வாய்

“கடவுளின் சகல பரிபூரணமும் கொள்ளுமட்டும் நிரப்பப்பட வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறேன்.” – எபேசியர் 3 : 19

இறைவன் மனிதனாகப் பிறந்தார். இதுவே கிறிஸ்மஸ்! இறைவன் பல்லாண்டுகளுக்கு முன்பே செய்த தீர்மானம். இறைமக்கள் வாயிலாக காலாகாலத்தில் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தது. இறைவனின் தீர்மானம் இயேசுவின் பிறப்பில் உண்மையானது. இறைவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. முழுத்தூய்மையும் ஆற்றலும் நிறைந்த இறைவனை, மனிதனாகி வந்த இறைவனாம் இயேசுவே நமக்கு வெளிப்படுத்தினார். வல்லமையுள்ள, தூய்மையுள்ள இறைவன், மனிதனை வாழ்விக்க மனிதனாகப் பிறந்தார். இந்த மகிழ்ச்சிதான் கிறிஸ்மஸ் நாளின் சிறப்பு.

இயேசுவின் பிறப்பு அனைவர் வாழ்விலும் முழுமையைச் சுட்டிக்காட்டுகிறது. எனக்காக ஒரு மீட்பர் பிறந்திருக்கிறார். இது நமக்கு புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. இயேசுவின் பிறப்பு சமாதானம், மகிழ்ச்சி, தூய்மை மன்னிப்பு ஆகியவற்றை மனிதருக்கு தருகிறது. சகலமும் இயேசுவில் அடங்கி இருக்கிறது. அவரை ஏற்றுக்கொள்ளும் நமக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் இயேசுவே. நாட்டின் தலைவர்கள் பிறந்தநாளில் அன்னதானமும், வஸ்திரதானமும் செய்கிறோம். ஏன்? மகிழ்ச்சியை பிறருடன் பங்கிட்டுக் கொள்ளவே பரிசுகளைக் கொடுக்கிறோம், பெறுகிறோம். உலகில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தவர் இயேசு. இல்லாமையால் மகிழ்ச்சியைக் காணமுடியாத பலர் இன்றைக்கும் நம்மோடு வாழ்கின்றனரே. நீங்கள் இப்போது கிறிஸ்மஸ் நாட்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். இல்லாதவர்களைக் குறித்து இன்றைக்கு நினைக்கிறீர்களா? இவர்களுக்கு எதையாவது கொடுக்க விரும்பினால் இப்பொழுதே செய்யுங்கள். தாமதித்தால் நமது மனம் மாறிவிடும்.

கடவுள் சகல நன்மைகளையும் நமக்குப் பூரணமாக அருளுகிறார். குறைவுள்ளவர்களுக்கும் கொடுத்து கிறிஸ்மஸ் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ளுங்கள். கொடுங்கள்…. மகிழ்ச்சி இரண்டு மடங்காகும்.

அன்புள்ள கடவுளே! உமது மைந்தன் இயேசுவை எங்களுக்காக உலகத்தில் அனுப்பினதற்காக உமக்கு நன்றி. நீர் எனக்கு அருளும் மகிழ்ச்சியும் சமாதானமும் பிறர் வாழ்விலும் கலந்திட எங்களை செயல்பட வைத்தருளும். ஆமேன்.

கிறிஸ்மஸ்2018-12-21T10:59:19+00:00

கேளுங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள்

மத்தேயு 7 : 7-11                                         19 டிசெம்பர், 2018 புதன்

“அப்பத்தைக் கேட்கும் மகனுக்குக் கல்லைக் கொடுக்கும் மனுஷன் எவனாகிலும் உங்களில் உண்டோ?” – மத்தேயு 7 : 9

பிள்ளைகள் கேட்பதையும், கேட்காததையும் அவசியப்படும்போதெல்லாம் தருபவர் பெற்றோர். சிலபொழுது பிள்ளைகள் கேட்பதை, தராமல் இருப்பவர்களும் தாய் தந்தைதான். பிள்ளைக்குப் பொருத்தமில்லாததைத் தருவது ஆபத்தை உருவாக்கும் எனப் பெற்றோர் அறிவர். உண்ண உணவு கேட்கும் பிள்ளைக்கு, சோத்துக்கு பதில், தகப்பன் மண்ணைத் தந்தால் இது தவறல்லவா? இப்படி எந்தத் தந்தையும் செய்யமாட்டார்.

இறைவன் நமது பரம தந்தை. நாம் கடவுளின் பிள்ளைகள். இந்த உறவால் இறைவனிடம் கேட்க நாம் உரிமைப்பட்டவர்கள். நாம் கேட்காமலே இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவை உலகுக்கு பரம தகப்பன் கொடுத்திருக்கிறார். பேரரசன் சாலமோன் இறைவனிடம் ஞானம் கேட்டான். யாக்கோபு ஆண்டவரிடம் ஆசீவாதம் கோரினான். கள்ளன் இயேசு சுவாமியிடம் அவர் `இராஜ்ஜியத்தில்’ இடம் கேட்டான். இவர்களெல்லாம் கேட்டதைப் பெற்றுக் கொண்டனர். கொடுக்கின்றவர் கடவுள். கொடுக்கிற கடவுளைப் பற்றி இவ்வளவு ஆழமாகப் பேசின காரணம் உங்களுக்கு விளங்குகிறதா? கடவுள் நமது தகப்பன் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.. நம்மில் அக்கறை கொண்டுள்ள தகப்பன், ஜெபிக்கச் சொன்ன தகப்பன், ஜெபிக்கச் சொல்லிக் கொடுத்த தகப்பன்! ஜெபிப்போம்.

மீனைக் கேட்டால் பாம்பையோ… பன்னுக்கு பதில் பாறாங்கல்லையோ இந்த பரம தகப்பன் கொடுக்க மாட்டார் என்று ஆதாரப்பகுதி விளக்குகிறது. இந்த பரம தகப்பனிடம் நமக்காகவும் பிறருக்காகவும் கேட்டுக்கொண்டே இருப்பதில், பிடிவாதமாக ஜெபிப்பதில் அக்கறை காட்டுவோம். கேட்போம்… கடவுளின் விருப்பம் அறிந்து கேட்போம். ஜெபிப்போம், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபிப்போம்.

அன்றன்று வேண்டிய ஆகாரத்தைத் தரும் இறைவா, உமது சித்தத்திற்கிசைய நாங்கள் கேட்பதை பல வேளைகளில் தருகிறீர். நாங்கள் கேட்பது எங்களுக்கு தீமையைத் தரும் என நீர் அறிந்தால்இவற்றை மறுக்கிறீர். உம்முடைய சித்தமே ஆகக்கடவது. இயேசுவின் வழியே ஆமேன்.

கேளுங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள்2018-12-18T10:21:22+00:00

இயேசுவை அறிகின்ற அறிவு

2 பேதுரு 1 : 2-8                                       14 டிசெம்பர், 2018 வெள்ளி

“கடவுளையும் … ஆண்டவராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் … கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.” – 2 பேதுரு 1 : 2

நாம் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும், எப்படியோ போலிப் பொருட்களை, தரம் கெட்ட பொருட்களை வாங்கி ஏமாந்துவிடுகின்றோம்.

கடவுளை அறிகிற அறிவிலும், பல நேரங்களில் போலியான போதனைகளைக் கேட்டு ஏமாந்து விடுகிறோம். தேவ மைந்தன் இயேசு கிறிஸ்துவின் வழியாக மனிதன் பெறும் மன்னிப்பும் சமாதானமுமே உண்மையானது, நிலையானது என்பதை ஒரு வாழ்த்துதலாக தியானப் பகுதியில் சொல்லுகிறார் பேதுரு. பேதுரு உற்சாகமுள்ள இயேசுவின் சீடர். ஆயினும் சிலபொழுது கோழையாகவும் நடந்து கொண்டார். இவரிடம்தான் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இயேசு கூறினார். கோழையான பேதுரு இயேசுவின் ஆணை பெற்று, பலங்கொண்டார். வேறொருவராலும் இரட்சிப்பில்லை. நாம் இரட்சிப்பைப் பெறுவதற்கு வானத்தின் கீழ் மனுஷருக்குள் அருளப்பட்ட வேறொரு நாமமில்லை என்று அன்றைய உலகுக்கு உறுதிபடக் கூறினார் பேதுரு. ஆண்டவராகிய இயேசுவை அறிகின்ற அறிவுதான் மனிதனுக்கு தெய்வீக சமாதானத்தைத் தரும். பாவத்தை மன்னித்து, நம்மைத் திரும்பவும் கடவுளின் குடும்பத்தின் உறுப்பினர் ஆக்குவது இயேசுதானே. நாம் தேவகுடும்பத்தின் உறுப்பினர் என்பதால், நாம் கிருபையை அனுபவித்துக் கொண்டேயிருப்பவர்கள். இந்த தெய்வீக சமாதானத்தை நாம் பெற்றிருப்பதால், `இயேசுவே ஆண்டவர்’ என்று அறிக்கை செய்ய, பரிசுத்த ஆவியானவரின் துணையையும் நாம் பெறுகிறோம்.

ஆண்டவரை அறிந்திருக்கிறீர்களா? கடவுளின் கிருபையைச் சரியாகப் புரிந்திருக்கிறீர்களா? தெய்வீக சமாதானத்தைப் பெற்றவர்களா நீங்கள்? அல்லது `ஆண்டவரை அறிவேன்’ என்று சொல்லும் போலியா நீங்கள்? பதில் உங்களுக்குத் தான் தெரியும். பதிலை ஆண்டவரிடமே கூறுங்கள்.

அன்புள்ள கர்த்தாவே, நாங்கள் உம்மை அறிந்து கொள்வதற்கு நீர் எங்களுக்குக் கிருபை தந்ததற்காக நன்றி. போலித் தனமில்லாமல் உமது கிருபையையும், சமாதானத்தையும் அன்றாட வாழ்வில் அனுபவித்து வாழுகின்ற அருளைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயேசுவை அறிகின்ற அறிவு2018-12-14T05:13:19+00:00
Go to Top