vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

நாம் காண்கிற கடவுள்

யோவான் 10 : 22-30                                     10 டிசெம்பர், 2018 திங்கள்

“கடவுளை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; ” – யோவான் 1 : 18

காற்றை நாம் கண்டதில்லை. ஆனால் காற்றை உணருகிறோம், சுவாசிக்கிறோம். கடவுளை ஒருவரும் கண்டதில்லை. ஆனால் கடவுளின் செயல்களைக் கண்ணாரக் காண்கிறோம். பூமியைச் சுழலச் செய்கிறார். பகலில் ஒளி தந்து உயிர் காக்கும் சூரியனையும், இரவில் குளிர் தரும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்திருக்கிறார். மன்னுயிர் காக்க மழையைத் தருகிறார். நாம் காணும் இத்தனை நன்மைகளும் கடவுளின் கரங்களில் கிரியைகளல்லவா? இவை எல்லாவற்றிற்கும் சிறப்பாக, இறைவன் தம்மை இயேசுவில் வெளிப்படுத்தியிருப்பதை தியானப்பகுதி விளக்குகிறது.

ஒரே பேறான குமாரனாக கிறிஸ்து இயேசுவை மனிதனாகப் பிறக்கச் செய்தார் கடவுள். இயேசுவின் வாழ்வின் வழியாக இறைவனின் அன்பு, கருணை, தியாகம், மன்னிக்கும் மாண்பு ஆகியவை உலகுக்கு உணர்த்தப்பட்டன. `இயேசுகிறிஸ்துவே உலக மீட்பர்’ என்ற சத்தியத்தை உலகத்தில் அறியாதவர்களே இல்லை எனலாம். இந்த உண்மை எல்லாருக்கும் தெரியும். தெரிந்தும் சிலர் மறுக்கின்றனர். தெரிந்தும் சிலர் எதிர்க்கின்றனர். இவர்களுக்கு `வெளிப்படுதல்’ கிடைத்துவிட்டது. இதை இவர்கள் உணர்ந்தால் போதும். சிலர் இயேசுவை அறிந்து உணர்ந்திருந்தும், கிறிஸ்தவன் எனப் பெயர் வைத்திருந்தும் கிறிஸ்தவனாகத் தன்னை வெளிப்படுத்துவதில்லை. இவர்களும் திருந்த வேண்டியவர்களே.

கடவுளை வெளிப்படுத்தும் நடமாடும் சான்றுகள் நாம்தான். இயேசுவை உலகிற்கு தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் உயிருள்ள சான்றுகள் நாம்தான். வாருங்கள், கடவுளின் சான்றுகளே புறப்படுங்கள். கடவுளை வெளிப்படுத்தும் பேறு பெறுவோம்.

இயேசுவில் உம்மை உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கும் கடவுளே, உமது செயல்பாடுகளை உணரும் உள்ளத்தைத் தாரும். உம்மைப் பிறருக்கும் காண்பிக்க அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

நாம் காண்கிற கடவுள்2018-12-06T14:28:00+00:00

வெற்றி தரும் வல்லமை

1 பேதுரு 1 : 3-9                                                             5  டிசம்பர், 2018 புதன்

“கர்த்தர் தமது ஜனத்திற்கு வல்லமையளிப்பார்;” – சங்கீதம் 29 : 11

வாழ்க்கை ஒரு போர்க்களம். துன்பங்கள், சோதனைகள், இடையூறுகள் இவற்றைச் சந்திப்பதுதான் தினவாழ்வு. போராட்டங்களைச் சந்திக்கும் போது, பலர் சோர்ந்து விடுகிறார்கள். பலர் மனநிம்மதி இழந்து விடுகிறோம். போராட்டங்களைச் சமாளிக்க நமக்குப் போதிய பலமில்லையே. இறைக்கும் நீரின் அளவைவிட, சுரக்கும் நீரின் அளவு குறையும் போது, தண்ணீர் வற்றிப்போகும்! கிணறு வறண்டுவிடும்.

தியான வசனத்தைக் கவனியுங்கள். மனிதனுக்கு ஜீவ ஊற்றாக வற்றாத நீரோடையாகப் பாய்ந்து வருபவர் கடவுள். வல்லமையைக் கொடுத்து சமாதானம் தந்து ஆசீர்வதிப்பவர் கடவுள் என்பதை அனுபவித்து இச்சங்கீதத்தை எழுதினார் தாவீது. `கர்த்தர் என் மேய்ப்பர், எனக்கு ஒன்றும் குறைவில்லை’ என்று பாடும் மன நிறைவை தாவீதுக்குக் கொடுத்தவர் கடவுள். இந்த ஆசிகளையெல்லாம் தாவீது பெற தாவீதின் புனிதத் தன்மை காரணம் இல்லையே. முற்றிலும் கடவுளின் வல்லமையில் சார்ந்திருந்ததுதான்…. தாவீதின் கெட்டிக்காரத்தனம். என்ன முயன்றாலும் பாவத்தை மேற்கொள்ள, பாவத் தண்டனையை மாற்றி அமைக்க மனிதனால் முடியுமா? முடியாதே! ஆனால், இறைவனால் இதுவும் முடிந்தது.

இயேசு கிறிஸ்து, சிலுவையில் உலகத்தவரின் பாவத்தையும், அதன் தண்டனையான மரணத்தையும் வென்றார். அவரில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு இந்த வெற்றியில் இலவசமாகப் பங்கும் தருகிறார். நம்மில் பலமில்லை! நம் ரட்சகரில் பலம் கொட்டிக் கிடக்கிறது. இரட்சகரை ஏற்றுக் கொள்ளுவோம், சார்ந்திருப்போம்! அவரது பலத்தை அனுபவிப்போம், நாம் பலசாலிகளாவோம்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் சமாதான உறவை சம்பாதித்துத் தந்த கர்த்தாவே, உமது பலத்தை மட்டும் சார்ந்திருக்கும் சிந்தையை அடியார்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

வெற்றி தரும் வல்லமை2018-12-04T10:39:15+00:00

பிடிவாதம்

யாக்கோபு 4 : 2-3                                                    26 நவம்பர், 2018 திங்கள்

“…இராப்பகல் அவரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் விஷயத்தில் அவர் தாமதித்தாலும் நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?” – லூக்கா 18 : 7

என்னுடைய நண்பர் திரு. சிகாமணி. இவர் சென்னையில் பெயர்பெற்ற பள்ளி ஒன்றில் தன் பிள்ளைக்கு இடம் வாங்க ஆசைப்பாட்டார். பள்ளியின் முதல்வரை போய் சந்தித்தார். முதல்வர் யார் உங்களை உள்ளே அனுமதித்தார்? இங்கே இடமில்லை என்று அனுப்பிவிட்டார். வேதனையோடு வெளியே வந்தார். ஆனாலும் அவர் விடவில்லை. ஒருவாரம் பொறுத்து மீண்டும் போய் முதல்வரை சந்தித்தார். முதல்வரிடமிருந்து அதே பதில். மீண்டும் வேதனை. நண்பர் விடவில்லை மீண்டும் ஜெபத்தோடு ஒரு வாரத்திற்கு பிறகு சந்தித்தார். முதல்வரிடமிருந்து அதே பதில். இவரும் விடல்லை. எல்லோரும் பெரிய ஆட்களோடு வருவார்கள். எனக்கு வேறு யாருமில்லை. ஆனால் நான் ஒருவருடன் வந்திருக்கிறேன் என்றார். உடனே முதல்வர் யார் அவர் என்று கேட்டார் சற்று பதட்டத்துடன். உடனே நண்பர் நான் நம்புகிற என் ஆண்டவர் இயேசு என்றார். உடனே முதல்வர் சீட் கொடுத்துவிட்டார்கள்.

இந்நாளின் சிந்தனை வாக்கியத்தில் இயேசுவும் கடவுளிடம் கேட்கின்ற காரியத்தில் இப்படிப்பட்ட பிடிவாதம் அவசியம் என்பதை எடுத்துரைக்கின்றார். பதில் கிடைப்பதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து மன்றாடவேண்டும். நிச்சயம் பதில் கிடைக்கும். நியாயமும் கிடைக்கும். சிலநேரத்தில் ஒரு காரியத்திற்காக ஆண்டவரிடம் இரண்டுமுறை ஜெபிக்கிறோம். மூன்றாம் முறை விட்டுவிடுகிறோம். புனித ஜான் மரிய வியான்னி அவர்கள் கூறும்போது, தொடர்ந்து ஜெபிக்கிற மனிதர் கடவுளை முடியும் என்று சொல்ல வைக்கிறார். எப்படி நாம் தொடர்ந்து கேட்க வேண்டும் என்பதற்காக இயேசு ஒரு உதாரணத்தை முன்வைக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாத, மனிதனை மதிக்காத நியாயாதிபதி ஒருவர் இருந்தார். ஒரு ஏழை விதவை இந்த நியாயாதிபதியைச் சந்திக்க வருகிறார் நியாயத்திற்காக. ஆனால் நியாயதிபதி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த விதவை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தார். நாட்கள் கடந்து போகிறது, கால்வலி அதிகமாகிறது, அலைச்சல் கூடுகிறது எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. நியாயாதிபதி பார்த்தார் வேறு வழியில்லை. இவளின் பிடிவாத குணத்திற்காக நியாயத்தை செய்தார். ஒரு கிறிஸ்தவ துறவியிடம் சீடன் கேட்டான் பாவங்களில் மிக பெரிய பாவம் எது? என்று, அதற்கு குரு கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டு ஜெபிக்காமல் இருப்பதுதான் பாவம் என்றாராம். ஒரு வேளை நாம் நினைக்கலாம், நான் பிடிவாதமாக கேட்கிறேன். ஆனால் கடவுள் என் மன்றாட்டைக் கேட்கவில்லையே என்று. சில நேரங்கள் நம் மன்றாட்டு அங்கீகரிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் நம் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக தகாதவிதமாய் கேட்கிறோம். சில நேரத்தில் இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்கிறார் ஆண்டவர். ஆகவே கடவுளிடம் கேட்கின்ற காரியத்தில் பிடிவாதத்தைக் குறைக்கவேண்டாம். கடவுள் நிச்சயம் பதில் தருவார்.

கேளுங்கள் தரப்படும் என்றவரே! நாங்கள் உம்மோடு கேட்கும் காரியத்தில் பொறுமையிழந்துபோகாமல் நல் விசுவாசத்தோடு ஜெபித்து போராட அருள்புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

பிடிவாதம்2018-11-25T11:29:55+00:00

தொடர்ந்து தேடு

ஏசாயா 55 : 6-9                                                                21 நவம்பர், 2018 புதன்

“…நீ அவரைத் தேடுவாயானால், அவர் உனக்கு வெளிப்படுவார்;…” – 1 தினவர்த்தமானம் 28 : 9

1622-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்பேனிஷ் கப்பல் புயலில் சிக்கி மூழ்கியது. இந்த கப்பலில் சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட தங்கம் நிரப்பப்பட்டிருந்தது. 1969-ம் ஆண்டு மெல்விஸ்ஸர் என்ற அமெரிக்கர் இக்கப்பலைத் தேடத் திட்டமிட்டார். இதற்காக ஒரு கப்பலை ஏற்பாடு செய்தார். 5, 10 வருடங்கள் என்று தேடல் நீண்டது. இறுதியில் 16 ஆண்டுகளுக்கு பின் கப்பலின் பெரும்பகுதியை கண்டுபிடித்தார்.

இந்த நாளின் சிந்தனை வசனம் தேடலை வலியுறுத்துகிறது. அரசன் தாவீது தன் மகன் சாலமோனுக்கு கொடுத்த முக்கிய ஆலோசனைகளில் ஒன்றுதான் இந்நாளின் சிந்தனை வாக்கியம். `தேடுதல்’ என்ற காரியத்தில் நேரம், முயற்சி, உழைப்பு அடங்கியிருக்கிறது. கடவுளை தேடுகின்ற காரியத்திற்கும் இது விதிவிலக்கல்ல. கடும் போராட்டங்களையும் சந்திக்க நேரிடலாம். ஆனால் நிச்சயம் கடவுள் வெளிப்படுவார். கடவுளை கண்டுகொள்ளுவதற்கு சிலர் குறுக்கு வழிகளை நாடுகிறார்கள். அதிக காணிக்கை கொடுத்தால் மிக எளிதாக கடவுளை கண்டுபிடித்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அது தப்புகணக்கு. கடவுளைத் தேடுவதற்கு அடிப்படைத் தேவை மனந்திரும்புதல். இஸ்ரவேல் மக்கள் பாவம் செய்தபோது கடவுளின் பிரசன்னம் அவர்களை விட்டு விலகியது. மனந்திரும்பியபோது மீண்டும் கடவுளின் வழிநடத்துதல் அவர்களுக்குக் கிடைத்தது.

இரட்சகராகிய இயேசு தேடுதலின் முக்கியத்துவத்தை பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் (மத் 7:7) என்று மலைப்பிரசங்கத்தில் வலியுறுத்தினார். தேடுங்கள் என்று வலியுறுத்தின இயேசுவே நம்மைத் தேடிவந்தார். நாம் அவரைத் தேடுவதில் தளர்ந்து போய் இருக்கிறோமா? தொடர்ந்து தேடுவோம். அவர்மூலம் நமக்கு பாவமன்னிப்பு, விடுதலை, மோட்ச வாழ்வு உறுதி.

தேடுங்கள் என்றுரைத்த இறைவா! உம்மை தேடுவதற்கு ஒரு அற்புதமான காலத்தை தந்திருக்கிறீர். இதை பயன்படுத்தி உண்மையான மனமாற்றத்தோடு தேடி உம்மை கண்டுகொள்ள கிருபை புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

தொடர்ந்து தேடு2018-11-20T08:05:42+00:00

தேன்

எசேக்கியேல் 3 : 1-5                                                    13 நவம்பர், 2018 செவ்வாய்

“உம் வசனம் என் நாவுக்கு எவ்வளவோ இனிமை! என் வாய்க்கு அது தேனிலும் இனிமையானது.” – சங்கீதம் 119 : 103

கென்யா நாட்டைச் சார்ந்தவர் கிமானி மருகே. இவர் ஒரு விவசாயி. படிப்பறிவே இல்லாதவர். 2003-ல் அந்நாட்டு அரசு ஆரம்பக் கல்வியை இலவசமாக்கியது. 90 வயது நிரம்பிய கிமானியும் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டார். பள்ளியில் சேர்ந்தார். சிறுபிள்ளைகளோடு எழுதப் படிக்கக் கற்றுகொள்ளத் தொடங்கினார். ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஒருமுறை இவரை பேட்டி கண்டது. இந்த வயதில் எதற்காக படிக்கிறீர்கள்? அதற்கு அவர் வேதத்தை நான் படிக்கவேண்டும் என்ற பதிலை கூறி ஆச்சரியப்படுத்தினார். உலகிலேயே மிகவும் வயதான மாணவன் என்ற பெயரையும் பெற்றார்.

இந்நாளின் சிந்தனை வசனம் இறைவார்த்தையின் இனிமையை வெளிப்படுத்துகிறது. தேன் மிகவும் சுவையானது, இனிமையானது, மருத்துவ குணம் கொண்டது. அதேபோல உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. ஆனால் இதைவிட இறைவார்த்தை நாவுக்கும் வாய்க்கும் இனிமையானதாக உள்ளது என்பதை இன்றைய தியான வசனம் கூறுகிறது. இறைவார்த்தை நம் ஆத்துமத்தை சக்திப்படுத்துகிறது. ஆகையினால் தேனைவிட சுவைமிகுந்த இறைவார்த்தைகளை உட்கொள்ள நாம் ஆர்வம் கொள்ளவேண்டும். பக்தியில் வளருவதற்கு முதற்படி வேதத்தை ஆராய்ந்து படிப்பதுதான். இயேசு சோதிக்கப்பட்டபோது இறைவார்த்தையின் மேன்மையை உலகிற்கு எடுத்துகாட்டினார். ஜெபத்தின் மூலமாக நாம் கடவுளோடு பேசுகிறோம். அதேநேரத்தில் வேதத்தின் வழியாக கடவுள் நம்முடன் பேசுகிறார். உண்மையான வேதவாசிப்புதான் நம்மை அர்த்தமுள்ள ஆராதனைக்கு வழிநடத்துகிறது.

இன்று எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது. முகநூலில் (Facebook) வாட்ஸ்அப்பில் பல மணிநேரத்தை ஒவ்வொருநாளும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். திருமறையைத் தொட்டுப்பார்க்க நமக்கு போதிய நேரமில்லை. ஒவ்வொரு நாளும் நம்மை அலங்கரிக்க நேரம் கிடைக்கிறது. வேதத்தை வாசிக்க நேரமில்லை. மூன்று வேளை சாப்பிட நேரம் கிடைக்கிறது. திருமறையைச் சுவைக்க நேரமில்லை. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்தவர். ஒருமுறை தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் இப்படிக் குறிப்பிட்டார்… “நான் வேதம் வாசிப்பதினால் மிகுந்த பலனை காண்கிறேன். மற்றெல்லா புத்தகங்களையும் எடுத்துவைத்துவிட்டு விசுவாசத்தோடு வேதத்தைப் படித்தால் நீ ஒரு பயனுள்ள மனிதனாக வாழமுடியும், சாகமுடியும்.” இவ்வளவு சிறப்பு மிக்க வேதம் என்ற தேனை ஒவ்வொரு நாளும் சுவைப்போம். சத்தியவேதம் பக்தரின் கீதம் என்பதை மறவாதிருப்போம்.

அன்பு நிறை கடவுளே! நீர் உலகிற்குத் தந்திருக்கிற உன்னத பரிசாகிய வேதத்திற்கு நன்றி. எங்கள் விசுவாச ஓட்டத்திற்கு தேவையான ஆற்றலை ஒவ்வொரு நாளும் இதிலிருந்து பெற்றுவாழ அருள்புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

தேன்2018-11-15T11:31:26+00:00

நடப்பதெல்லாம் நன்மைக்கே

எஸ்தர் 8 : 1-7                                                    12 நவம்பர், 2018 திங்கள்

“கடவுளிடம் அன்புகூருகிறவர்களுக்கு,….. சகலமும் நன்மைக்கு ஏதுவாக ஒத்து நடக்க அவர் செய்கிறாரென்று…” – ரோமர் 8 : 28

ஒரு குடும்பம் ஊருக்குச் சென்று திரும்பும் வழியில் வாகனம் விபத்திற்குள்ளானது. மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள். மகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த கணவன் அவளைப் பார்க்க வருகிறான். அந்நேரத்தில் ஆஸ்பத்திரியில் நின்ற நர்ஸ் இவனை உற்றுப்பார்த்தாள். அடையாளம் கண்டுகொண்டாள். தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றவன் என்று. காயம்பட்டு கிடந்த மகளிடம் சென்று விவரித்தாள். உனக்கு நியமிக்கப்பட்ட கணவன் ஏமாற்றுக்காரன் என்று. அப்போதுதான் தாயும், தந்தையும் இந்த விபத்து காரணத்தோடு தான் நிகழ்ந்தது என்று.

இந்நாளின் சிந்தனை வாக்கியத்தில் பவுலின் கூற்றும் இதுதான். கடவுளிடம் அன்பு கூறுகிறவர்களுக்கு வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நன்மைக்குத் தான். உலகப் படைப்பாக இருக்கட்டும், இரட்சிப்பின் திட்டமாக இருக்கட்டும். இவையெல்லாம் கடவுளுடைய நேர்த்தியான திட்டத்தின்படி நடந்தது. அதேபோன்றே கிறிஸ்துவை நம்புகிறவன் வாழ்வில் கடவுளின் தீர்மானத்தின்படி காரியங்கள் நடைபெறுகின்றன. சில காரியங்கள் தீயவையாகத் தோன்றலாம். ஆனால் நன்மைக்காகத் தான் இருக்கமுடியும். இதைப் பல நேரங்களில் நாம் உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். இதன் விளைவு தீமைகள் சந்திக்கின்ற நேரத்தில் எதிர்மறையான கேள்விகளை கடவுளிடம் எழுப்புகின்றோம். எனக்கு மட்டும் ஏன் இந்த நிந்தை? எனக்கு மட்டும் ஏன் இந்தத் தோல்வி அல்லது வீழ்ச்சி? எங்கள் குடும்பத்தில் மட்டும் ஏன் இந்த கண்ணீர்? இதன் பின்னணியில் கடவுள் ஒரு ஆதாயம் வைத்திருக்கிறார் என்பதை நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஒருமுறை அரசன் தாவீதை சீமேயி என்பவன் தூஷித்தான். இவன் மன்னன் சவுலின் வம்சத்தை சேர்ந்தவன். தாவீதை தூஷித்த விதம் யாராலும் பொறுத்துகொள்ள முடியாது(2 சாமுவேல் 16 :7). அப்போது அபிசாய் என்பவன் தாவீதைப் பார்த்து ‘சீமேயின் தலையை எடுத்துவர அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டான். அதற்கு தாவீது, என்னைத் தூஷிக்க வேண்டும் என்று கர்த்தர் சீமேயிக்கு சொன்னார். ஆகையினால் அவன் தூஷிக்கிறான் என்றார். கடவுள் அனுமதித்த காரியம் மனதைக் காயப்படுத்தியிருந்தாலும் அதன் பின்னணியத்தில் கடவுளின் திட்டம் இருக்கும் என்று ஆழமாக நம்பினார் தாவீது. நம் வாழ்வில் எதிர்மறையான காரியங்கள் நிகழ்கின்றனவா! கலங்க வேண்டாம். துவளவேண்டாம். அதில் ஒரு நன்மையான காரியத்தை வைத்திருக்கிறார் கடவுள். நாம் செய்யவேண்டியது கடவுளோடு உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்வதுதான்.

இரக்கம் மிகுந்தவரே! உம் சிந்தையை அறிந்தவன் யாருமில்லை. எங்கள் வாழ்வில் நீர் அனுமதிக்கும் காரியம் தீயவையாக இருக்கலாம். ஆனால் முடிவு நன்மையாக இருக்கும் என்ற விசுவாசத்தைத் தாரும். பலப்படுத்தும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே2018-11-09T09:57:50+00:00

தாய்

ஏசாயா 49 : 13-15                                            5 நவம்பர், 2018 திங்கள்

“…உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்.” – நீதிமொழிகள் 23 : 25

ஐரோப்பா கண்டத்தை அதிரச் செய்தவர் அஞ்சா நெஞ்சன் நெப்போலியன். இவர் ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் இளைஞர்கள் நல்லமுறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு அவருக்குக் கிடைத்த விடை நல்ல தாய்மார்கள். இதைக்கேட்ட நெப்போலியனின் நெஞ்சம் குளிர்ந்தது. நெப்போலியன் சொன்னார் `தாய்’ என்கிற ஒரு வார்த்தையிலேயே ஒரு கல்வித்திட்டமே பொதிந்து கிடக்கிறதே என்று.

இந்த உலகத்தில் நாம் அடியெடுத்து வைத்தது முதல் மரணத்தைச் சந்திக்கின்ற வரையில் பல உறவுகளைச் சந்திக்கிறோம். சில உறவுகள் சிலகாலம் மட்டுமே. சில காரியத்திற்காகச் சார்ந்திருக்கும் உறவுகள். சில ஏமாற்றும் உறவுகள். எல்லாவற்றையும் கடந்து உண்மையான அன்பு, கரிசனை, அக்கறை உள்ள உறவு `தாய்’. தாயின் சிறப்பை `தாயிற் சிறந்த கோயிலும் இல்லை’ என்ற பாடல்வரி படம்பிடித்து காட்டுகிறது. இளம் ஊழியனான தீமோத்தேயு நல்லவனென்று மதிப்பு பெற்றவன். பவுல் அடிகளாரால் அதிகமாக விரும்பப்பட்டவன். இப்படிப்பட்ட சிறப்பான வளர்ப்பிற்கு தீமோத்தேயுவின் தாயின் விசுவாச நடத்தையும் இருந்தது.

கடவுள் தம் மக்களை தேற்றும் விதத்தை `தாய்’க்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். இப்பேற்பட்ட சிறப்புப் பெற்ற தாயை நம் வாழ்க்கையில் அற்பமாய் எண்ணக்கூடாது. உதாசீனப்படுத்தக் கூடாது. இந்நாளின் சிந்தனை வசனத்தில் ஞானி இவ்வாறு கூறுகிறார். உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய் என்று. இன்றைய மனிதன் பணம் பணம் என்று ஒடிக் கொண்டிருக்கிறான். உறவுகளை பொருட்டாக எண்ணுவதில்லை. பின் சொந்த தாயை கவனிக்க எங்கே நேரம். ஆகையினால் தாயை இறுதியில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான். மாதா மாதம் காசை சரியாக அனுப்பிகொடுத்துவிட்டு மனநிறைவு அடைகிறான். சிலுவையில் தொங்கின இயேசு அந்தக் கொடிய வேதனையிலும்கூட தாயை மறக்கவில்லை. `இதோ உன் தாய்’ என்று யோவானிடத்தில் தாயை ஒப்படைத்தார். இதைச் சிலுவையின் அடிவாரத்தில் இருந்த அத்தனைபேரும் பார்த்து வியந்திருப்பார்கள். தாய்மேல் எத்தனை அன்பு என்று எதிரிகள்கூட பாராட்டியிருந்திருப்பார்கள். நம் செயல்கள் தாயை வேதனைப்படுத்தகூடியதாக இருக்கின்றதா? அவர்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக நமது செயல்பாடுகள் அமையட்டும்.

தாயினும் மேலான அன்பு நிறைந்தவரே! தாயின் அன்பையும் மேன்மையையும் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறீர். இதை உணர்ந்து பெற்ற தாயின் மேல் நாங்கள் அன்பு பொழிந்து அவர்களை களிக்கூரசெய்து உம் அன்புக்கு சாட்சியாக திகழ அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

தாய்2018-11-02T12:56:33+00:00

நீ

ரோமர் 14 : 1-8                                                           29 அக்டோபர், 2018 திங்கள்

“ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துக் கடவுளுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.” – ரோமர் 14 : 12

அடுத்தவர்களது குறைகளைச் சுட்டிக் காட்டுவது எல்லாருக்கும் விருப்பம். கணக்குக் கேட்பதில் இருக்கும் உற்சாகத்தை நாம் கணக்குக் கொடுப்பதில் காட்டுகிறோமா? வேத வசனமெனும் கண்ணாடி முன்நின்று நாம் பார்க்கும்போது, நமது குறைகள் பளிச்செனத் தெரியுமே. நீங்கள் தீர்ப்புப் பெறாதபடி தீர்ப்பிடாதிருங்கள். உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை நினையாமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன என்றெல்லாம் இயேசு சொன்னார்.

குற்றஞ்சாட்டும் கடவுளல்ல நம் கடவுள். குறை தீர்க்கும் கடவுளே நமது கடவுள். குறைதீர்க்கவே இயேசு தன்னைக் குற்ற நிவாரணமாக ஒப்புக் கொடுத்தார் என்பதை மறக்க வேண்டாம். நமது குறைவு நிறைவுகளைப் பற்றிய கணக்கை ஒப்படைக்கும் பொறுப்பு தான் நம்மிடம் இருக்கிறது. மற்றவற்றைக் கடவுள் பார்த்துக் கொள்வார். அன்பினால், உறவினால், கரிசனையினால், திருந்துவதற்காக பிறர்குறைகளைச் சுட்டிக்காட்டுவது தவறாகாது. ஆனால் பிறரது தவறுகளினிமித்தம் அவர்களைப் பாவி பொல்லாதவன் முரடன் என்று தீர்ப்பிடுவது சரியல்ல. பிறரையும் நம்மையும் ஒப்பிட்டு `நான் யோக்கியன்’ எனத் தீர்ப்பிடுவதையும் கடவுள் விரும்புவதில்லை. கடவுளின் தீர்ப்பு, கருணையின் தீர்ப்பு என்பதை மறந்துவிடலாகாது. ஆண்டவன் நமது அக்கிரமங்களை நினைத்துத் தண்டனை அளிப்பவராக இருந்தால் நிலைநிற்கக் கூடியவர்கள் யார்? இயேசு கிறிஸ்துவின் வழியே யாவரையும் மன்னிக்க, கடவுள் ஆவலாயிருக்கும்போது, அந்த மன்னிப்பைப் பெற நமது கணக்கைச் சரியாகத் தெரிவிக்க முன்வருவோமா?

நமது கணக்கு `பாவ மூட்டைதான்.’ எங்கே போகிறீர்கள்? கணக்கு ஒப்புவித்துவிட்டு, திரும்பப் பாவம் செய்யப் போகிறீர்களா? கணக்கு ஒப்புவிப்பதின் இன்னொரு அர்த்தம் `கணக்கைத் தீர்ப்பது.’ ஆம், நமது பாவக் கணக்குகள் தீர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்க்க திரும்பிச் செல்ல வேண்டாம்.

மன்னிக்கும் ஆண்டவனே! எங்கள் கணக்குகள் தவறானவை. தவறைத் திருத்தி எங்களைச் சரி செய்யும். இனியும் பாவத்தில் தொடராதபடி கருணை பெருக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.

நீ2018-10-26T05:49:07+00:00

கிருபையின் உடன்படிக்கை

எரேமியா 31 : 31-34                                                     23  அக்டோபர், 2018 செவ்வாய்

“நான் அவர்கள் கடவுளாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.” – எரேமியா 31 : 33

மனிதன் ஆள் பார்த்து தகுதி, அந்தஸ்து பார்த்து ஒப்பந்தங்களைச் செய்கின்றதைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் கடவுள் தகுதி, அந்தஸ்து, பார்க்காமல் மனிதர்களிடம் உடன்படிக்கை செய்கின்றார் என்பதை இப்பகுதியில் அறிய முடிகின்றது. கடவுளின் மேலான ஆசீர்வாதங்களை மறந்து, அவர் வழிநடத்துதலை ஏற்க மறுத்து வழி விலகி பாவத்தினால் அடிமையாக்கப்பட்டு அல்லல்படுகிறான் மனிதன். வாழ்விழந்த மக்களுக்கு கடவுள் மீண்டும் புதிய வாழ்வு அளிக்க அவர்களுடன் புதிய உடன்படிக்கை செய்கின்றார். கடவுள் அனைவரையும் நேசிக்கின்றார், ஏற்றுக் கொள்கிறார். தமது இரக்கத்தைப் பொழிந்து, புதிய வழிநடத்துதலுக்கு அழைத்துச் செல்லுகின்றார் என்ற உறுதிப்பாட்டை மக்களுக்குத் தருவதும் கடவுளின் உடன்படிக்கைதான்.

பாவக்கட்டுகளினால் வாழ்விழந்து, சமாதானமின்றி தவிக்கின்ற நமக்கும் இந்த உடன்படிக்கை சொந்தமானது. இயேசுவின் வழியாக நம்மையும் உடன்படிக்கையில் இணைத்திருக்கிறார். அவருடைய இரட்சிப்பின் பிள்ளைகள் என்ற அந்தஸ்தை உடன்படிக்கை வழியே கொடுத்திருக்கின்றார். உயர்ந்தவராக இருந்தும் கேடுகெட்ட பாவிகளாகிய நம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும் கடவுளுடைய கிருபையை எண்ணி மகிழுவோம். நாம் கடவுளைத் தெரிந்தெடுக்கவில்லை! கடவுள் நம்மைத் தெரிந்தெடுத்திருக்கிறார். இது பெரிய ஆசீர்வாதம். அதே நேரத்தில் நாம் கடவுளின் மக்களாக வாழ வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது. நான் கடவுளின் பிள்ளை. கடவுள் என் தந்தை. இந்த உரிமையைக் கடவுள் கொடுத்திருக்கிறார். திரும்பத் திரும்ப இந்த உண்மைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் அருமை உங்களுக்குப் புரியும்.

பரிசுத்தமுள்ள இறைவா, உமது பரிசுத்தத்தின் மக்களாக வாழ எங்களைத் தகுதிப்படுத்தி, உமது உடன்படிக்கையின் மக்களாக வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்த அருள்புரியும். இயேசுவின் வழியே ஆமேன்.

கிருபையின் உடன்படிக்கை2018-10-22T08:37:22+00:00

அருட்சுவை? அறுசுவை?

பிரசங்கி 3 : 20-23                                                              15 அக்டோபர், 2018 திங்கள்

“மார்த்தாளோ… எனக்கு உதவி செய்ய அவளுக்குச் சொல்லும் என்றாள்.” – லூக்கா 10 : 40

ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருக்கும்போது, கவனமின்மையால் அதிலும் மேலான நல்ல காரியத்தைச் செய்யும் வாய்ப்பை சிலபொழுது இழந்துவிடுகிறோம். நல்ல காரியங்கள் செய்வதிலும் `முதலிடம் எதற்குத் தரப்படவேண்டும்’ என்று நாம் கவனிப்பது நல்லதல்லவா?

மார்த்தாள் தனது வீட்டிற்கு வந்த விருந்தினராகிய இயேசுவுக்கும், அவரது சீடருக்கும் அறுசுவை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அது நல்ல காரியம் தான். வீட்டிற்கு வந்த விருந்தாளியைக் கவனிப்பது தவறு இல்லை. ஆனால், மார்த்தாள் தன் சகோதரி மரியாள் மீது எரிச்சல் கொண்டாள். மரியாள் தவறு செய்வதாக மார்த்தாள் நினைத்தாள். மரியாள் தனக்கு உதவி செய்ய வரவில்லையே எனக் குற்றஞ்சாட்டினாள். அப்போதுதான் இயேசு, மார்த்தாளை விட மரியாள் `நல்ல காரியம்’ செய்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அறுசுவை உணவும் தேவை. அது போன்றே ஆண்டவரது வார்த்தைகளும் அவசியந்தானே. எதற்கு முதலிடம்? அருட்சுவையா? அறுசுவையா? அருட்சுவைக்குள் அறுசுவை உள்ளடங்கும். அறுசுவையில், அருட்சுவைக்கு இடமில்லை.

இதுபோன்ற அனுபவம் நமது `வீட்டு ஜெபக்கூட்டங்களிலும்’ நடைபெறுகிறதே! வீட்டார் டிபன் செய்வதிலும், பரிமாறுவதிலும் கவலை கொள்வர். உபசரிப்பதில் குடும்பப் பெருமை நிலைநாட்டுவதற்கு முதலிடம் தந்துவிடுவதால், போதிக்கப்படும் தேவ வசனத்தை வீட்டுமக்கள் கேட்கமுடியாமற் போகிறது. சுய பெருமைக்கு முதலிடம் தந்து, பிறர் நலத்தைப் பின்பற்றுகிறீர்களா? நம் வீட்டுக்காரியத்துக்கு முதலிடம் தந்து தேவ வீட்டுக் காரியங்களை `அப்புறம் பார்க்கலாம்’ என ஒத்திவைக்கிறீர்களா? ஆண்டவரை மறந்துவிட்டு, அழிந்து போகிற பணம், புகழ் ஆகியவைகளுக்கு முதலிடம்தர வேண்டாம். ஆண்டவர் வந்திருக்கிறார். இவைகளையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்ற துணிவு உங்களுக்கு வரட்டும்.

அன்புள்ள இறைவா, உமக்காக நாங்கள் பல காரியங்களைச் செய்ய நீர் செய்யும் கிருபைக்கு நன்றி. உம்மோடுள்ள உறவை நீக்கி எக்காரியத்தையும் நாங்கள் செய்யாதபடி எங்களை விலக்கிக் காத்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

அருட்சுவை? அறுசுவை?2018-10-12T05:28:32+00:00
Go to Top