யாக்கோபு 4 : 2-3 26 நவம்பர், 2018 திங்கள்
“…இராப்பகல் அவரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் விஷயத்தில் அவர் தாமதித்தாலும் நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?” – லூக்கா 18 : 7
என்னுடைய நண்பர் திரு. சிகாமணி. இவர் சென்னையில் பெயர்பெற்ற பள்ளி ஒன்றில் தன் பிள்ளைக்கு இடம் வாங்க ஆசைப்பாட்டார். பள்ளியின் முதல்வரை போய் சந்தித்தார். முதல்வர் யார் உங்களை உள்ளே அனுமதித்தார்? இங்கே இடமில்லை என்று அனுப்பிவிட்டார். வேதனையோடு வெளியே வந்தார். ஆனாலும் அவர் விடவில்லை. ஒருவாரம் பொறுத்து மீண்டும் போய் முதல்வரை சந்தித்தார். முதல்வரிடமிருந்து அதே பதில். மீண்டும் வேதனை. நண்பர் விடவில்லை மீண்டும் ஜெபத்தோடு ஒரு வாரத்திற்கு பிறகு சந்தித்தார். முதல்வரிடமிருந்து அதே பதில். இவரும் விடல்லை. எல்லோரும் பெரிய ஆட்களோடு வருவார்கள். எனக்கு வேறு யாருமில்லை. ஆனால் நான் ஒருவருடன் வந்திருக்கிறேன் என்றார். உடனே முதல்வர் யார் அவர் என்று கேட்டார் சற்று பதட்டத்துடன். உடனே நண்பர் நான் நம்புகிற என் ஆண்டவர் இயேசு என்றார். உடனே முதல்வர் சீட் கொடுத்துவிட்டார்கள்.
இந்நாளின் சிந்தனை வாக்கியத்தில் இயேசுவும் கடவுளிடம் கேட்கின்ற காரியத்தில் இப்படிப்பட்ட பிடிவாதம் அவசியம் என்பதை எடுத்துரைக்கின்றார். பதில் கிடைப்பதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து மன்றாடவேண்டும். நிச்சயம் பதில் கிடைக்கும். நியாயமும் கிடைக்கும். சிலநேரத்தில் ஒரு காரியத்திற்காக ஆண்டவரிடம் இரண்டுமுறை ஜெபிக்கிறோம். மூன்றாம் முறை விட்டுவிடுகிறோம். புனித ஜான் மரிய வியான்னி அவர்கள் கூறும்போது, தொடர்ந்து ஜெபிக்கிற மனிதர் கடவுளை முடியும் என்று சொல்ல வைக்கிறார். எப்படி நாம் தொடர்ந்து கேட்க வேண்டும் என்பதற்காக இயேசு ஒரு உதாரணத்தை முன்வைக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாத, மனிதனை மதிக்காத நியாயாதிபதி ஒருவர் இருந்தார். ஒரு ஏழை விதவை இந்த நியாயாதிபதியைச் சந்திக்க வருகிறார் நியாயத்திற்காக. ஆனால் நியாயதிபதி கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த விதவை தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தார். நாட்கள் கடந்து போகிறது, கால்வலி அதிகமாகிறது, அலைச்சல் கூடுகிறது எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. நியாயாதிபதி பார்த்தார் வேறு வழியில்லை. இவளின் பிடிவாத குணத்திற்காக நியாயத்தை செய்தார். ஒரு கிறிஸ்தவ துறவியிடம் சீடன் கேட்டான் பாவங்களில் மிக பெரிய பாவம் எது? என்று, அதற்கு குரு கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டு ஜெபிக்காமல் இருப்பதுதான் பாவம் என்றாராம். ஒரு வேளை நாம் நினைக்கலாம், நான் பிடிவாதமாக கேட்கிறேன். ஆனால் கடவுள் என் மன்றாட்டைக் கேட்கவில்லையே என்று. சில நேரங்கள் நம் மன்றாட்டு அங்கீகரிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் நம் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக தகாதவிதமாய் கேட்கிறோம். சில நேரத்தில் இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள் என்கிறார் ஆண்டவர். ஆகவே கடவுளிடம் கேட்கின்ற காரியத்தில் பிடிவாதத்தைக் குறைக்கவேண்டாம். கடவுள் நிச்சயம் பதில் தருவார்.
கேளுங்கள் தரப்படும் என்றவரே! நாங்கள் உம்மோடு கேட்கும் காரியத்தில் பொறுமையிழந்துபோகாமல் நல் விசுவாசத்தோடு ஜெபித்து போராட அருள்புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
