பிரசங்கி 3 : 20-23 15 அக்டோபர், 2018 திங்கள்
“மார்த்தாளோ… எனக்கு உதவி செய்ய அவளுக்குச் சொல்லும் என்றாள்.” – லூக்கா 10 : 40
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் முழுக் கவனத்தோடு ஈடுபட்டிருக்கும்போது, கவனமின்மையால் அதிலும் மேலான நல்ல காரியத்தைச் செய்யும் வாய்ப்பை சிலபொழுது இழந்துவிடுகிறோம். நல்ல காரியங்கள் செய்வதிலும் `முதலிடம் எதற்குத் தரப்படவேண்டும்’ என்று நாம் கவனிப்பது நல்லதல்லவா?
மார்த்தாள் தனது வீட்டிற்கு வந்த விருந்தினராகிய இயேசுவுக்கும், அவரது சீடருக்கும் அறுசுவை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அது நல்ல காரியம் தான். வீட்டிற்கு வந்த விருந்தாளியைக் கவனிப்பது தவறு இல்லை. ஆனால், மார்த்தாள் தன் சகோதரி மரியாள் மீது எரிச்சல் கொண்டாள். மரியாள் தவறு செய்வதாக மார்த்தாள் நினைத்தாள். மரியாள் தனக்கு உதவி செய்ய வரவில்லையே எனக் குற்றஞ்சாட்டினாள். அப்போதுதான் இயேசு, மார்த்தாளை விட மரியாள் `நல்ல காரியம்’ செய்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அறுசுவை உணவும் தேவை. அது போன்றே ஆண்டவரது வார்த்தைகளும் அவசியந்தானே. எதற்கு முதலிடம்? அருட்சுவையா? அறுசுவையா? அருட்சுவைக்குள் அறுசுவை உள்ளடங்கும். அறுசுவையில், அருட்சுவைக்கு இடமில்லை.
இதுபோன்ற அனுபவம் நமது `வீட்டு ஜெபக்கூட்டங்களிலும்’ நடைபெறுகிறதே! வீட்டார் டிபன் செய்வதிலும், பரிமாறுவதிலும் கவலை கொள்வர். உபசரிப்பதில் குடும்பப் பெருமை நிலைநாட்டுவதற்கு முதலிடம் தந்துவிடுவதால், போதிக்கப்படும் தேவ வசனத்தை வீட்டுமக்கள் கேட்கமுடியாமற் போகிறது. சுய பெருமைக்கு முதலிடம் தந்து, பிறர் நலத்தைப் பின்பற்றுகிறீர்களா? நம் வீட்டுக்காரியத்துக்கு முதலிடம் தந்து தேவ வீட்டுக் காரியங்களை `அப்புறம் பார்க்கலாம்’ என ஒத்திவைக்கிறீர்களா? ஆண்டவரை மறந்துவிட்டு, அழிந்து போகிற பணம், புகழ் ஆகியவைகளுக்கு முதலிடம்தர வேண்டாம். ஆண்டவர் வந்திருக்கிறார். இவைகளையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் என்ற துணிவு உங்களுக்கு வரட்டும்.
அன்புள்ள இறைவா, உமக்காக நாங்கள் பல காரியங்களைச் செய்ய நீர் செய்யும் கிருபைக்கு நன்றி. உம்மோடுள்ள உறவை நீக்கி எக்காரியத்தையும் நாங்கள் செய்யாதபடி எங்களை விலக்கிக் காத்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.
