ரோமர் 14 : 1-8 29 அக்டோபர், 2018 திங்கள்
“ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துக் கடவுளுக்குக் கணக்கு ஒப்புவிப்பான்.” – ரோமர் 14 : 12
அடுத்தவர்களது குறைகளைச் சுட்டிக் காட்டுவது எல்லாருக்கும் விருப்பம். கணக்குக் கேட்பதில் இருக்கும் உற்சாகத்தை நாம் கணக்குக் கொடுப்பதில் காட்டுகிறோமா? வேத வசனமெனும் கண்ணாடி முன்நின்று நாம் பார்க்கும்போது, நமது குறைகள் பளிச்செனத் தெரியுமே. நீங்கள் தீர்ப்புப் பெறாதபடி தீர்ப்பிடாதிருங்கள். உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை நினையாமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன என்றெல்லாம் இயேசு சொன்னார்.
குற்றஞ்சாட்டும் கடவுளல்ல நம் கடவுள். குறை தீர்க்கும் கடவுளே நமது கடவுள். குறைதீர்க்கவே இயேசு தன்னைக் குற்ற நிவாரணமாக ஒப்புக் கொடுத்தார் என்பதை மறக்க வேண்டாம். நமது குறைவு நிறைவுகளைப் பற்றிய கணக்கை ஒப்படைக்கும் பொறுப்பு தான் நம்மிடம் இருக்கிறது. மற்றவற்றைக் கடவுள் பார்த்துக் கொள்வார். அன்பினால், உறவினால், கரிசனையினால், திருந்துவதற்காக பிறர்குறைகளைச் சுட்டிக்காட்டுவது தவறாகாது. ஆனால் பிறரது தவறுகளினிமித்தம் அவர்களைப் பாவி பொல்லாதவன் முரடன் என்று தீர்ப்பிடுவது சரியல்ல. பிறரையும் நம்மையும் ஒப்பிட்டு `நான் யோக்கியன்’ எனத் தீர்ப்பிடுவதையும் கடவுள் விரும்புவதில்லை. கடவுளின் தீர்ப்பு, கருணையின் தீர்ப்பு என்பதை மறந்துவிடலாகாது. ஆண்டவன் நமது அக்கிரமங்களை நினைத்துத் தண்டனை அளிப்பவராக இருந்தால் நிலைநிற்கக் கூடியவர்கள் யார்? இயேசு கிறிஸ்துவின் வழியே யாவரையும் மன்னிக்க, கடவுள் ஆவலாயிருக்கும்போது, அந்த மன்னிப்பைப் பெற நமது கணக்கைச் சரியாகத் தெரிவிக்க முன்வருவோமா?
நமது கணக்கு `பாவ மூட்டைதான்.’ எங்கே போகிறீர்கள்? கணக்கு ஒப்புவித்துவிட்டு, திரும்பப் பாவம் செய்யப் போகிறீர்களா? கணக்கு ஒப்புவிப்பதின் இன்னொரு அர்த்தம் `கணக்கைத் தீர்ப்பது.’ ஆம், நமது பாவக் கணக்குகள் தீர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்க்க திரும்பிச் செல்ல வேண்டாம்.
மன்னிக்கும் ஆண்டவனே! எங்கள் கணக்குகள் தவறானவை. தவறைத் திருத்தி எங்களைச் சரி செய்யும். இனியும் பாவத்தில் தொடராதபடி கருணை பெருக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.
