செயலில் வெளிப்படும் அன்பு
சங்கீதம் 102 : 1-8 5 அக்டோபர், 2018 வெள்ளி
“இயேசு கண்ணீர் விட்டார்.” – யோவான் 11 : 35
ஒருநாள் மத்தியானம் 2 மணி. ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். ஒரு வீட்டில் மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர். விசாரித்தேன். நான் அதிகமாக நேசித்த எட்டு வயதுச் சிறுவன் இறந்து போனான் என்று தெரிந்தது. அருகில் சென்றேன். என்னை அறியாமல் என் கண்களிலிருந்து நீர் வடிந்தது. நான் அழுவதைக் கண்ட சிலர் `போதகர் அழுகிறார்’ என்றனர்.
லாசரு இறந்து போனான். இவனுடைய சகோதரிகளாகிய மார்த்தாளும், மரியாளும், உறவினர்களும் தாங்கவொண்ணா துக்கத்தில் இருந்தனர். இயேசு அவ்வீட்டிற்குச் சென்றார். அவர்களது துக்கத்தில் இயேசு பங்கேற்றார். இயேசு கண்ணீர் விட்டார். இயேசுவின் கண்ணீர் அன்பின் ஆழத்திலிருந்து புறப்பட்டது. அவர்களது துக்கத்தில் பங்கு கொண்டதின் அடையாளம் கண்ணீர் தவிர வேறு எதுவுமில்லையே. உண்மை அன்பு, செயலில் வெளிப்பட்டது. அன்பை விளக்கிய கண்ணீரும், அவரது ஆறுதல் வார்த்தைகளும், அவர்களுக்கு மிகவும் சமாதானம் கொடுத்தது. இயேசு அக்குடும்பத்தின் மீது வைத்திருந்த பாசம் அங்கே பேசியது.
துயரப்படுகிறவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது பெரிய சேவையாகும். விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும் துக்க வீட்டிற்குப் போவது நலம் என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்து மக்களை நேசிக்கிறார் என்று சொல்வதின் விளக்கம் நமது வாழ்க்கைதானே. கடவுளின் அன்பைக் காட்ட நாம் பிறரில் அன்பு காட்டுவோம். துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலைக் கொண்டு செல்லுங்கள். அழுகின்றவர்களோடு அழுங்கள். வேதனைப்படுகிறவர்களைத் தேற்றுங்கள். உங்கள் சொல்லிலும் செயலிலும் `கண்ணீர் விடும்’ கர்த்தர் இயேசுவை பிறர் காணட்டும்.
எங்களை நேசிக்கும் இறைவா, பிறரில் அன்பு கூர எங்களை வழி நடத்தும். துன்புறுவோருக்கு நாங்கள் ஆறுதலாகிட உமது அருளைத்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
