லூக்கா 4 : 16-21 3 அக்டோபர், 2018 புதன்
“கர்த்தருடைய ஆவி என்மேலிருக்கிறது……….” – லூக்கா 4 : 18
உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு வாக்களியுங்கள், `தேர்தல் நடைபெறுவதற்கு முன் ஒவ்வொரு கட்சியினரும் கொள்கைகளையும், ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர். ஒவ்வொரு கட்சியும் தனக்கே உரிய சில சிறப்பு அம்சங்களை வலியுறுத்திக் கூற முயற்சிக்கின்றன. இன்றைய தியானப்பகுதியில் இயேசு தமது திருப்பணியைப் பற்றிய அறிக்கை ஒன்றை, ஏசாயா தீர்க்கன் நூலிலிருந்து ஒரு பகுதியை தமது பணியின் அறிக்கையாக வெளியிட்டு, தமது பணியின் நோக்கம், முறை, தன்மை இவைகளை விளக்கிக் கூறுகின்றார். கடவுள் இந்த உலகத்திற்கு தன்னை அனுப்பியதை மனதில்கொண்டு, அவர் சித்தத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்து எளியவர்களுக்கு பாவமன்னிப்பின் இனிய வாழ்வு அளிக்கின்றவராகத் தன்னை விளக்கினார்.
தரித்திரருக்கு, சிறைப்பட்டோர்களுக்கு, குருடர்களுக்கு, நொறுங்குண்டவர்களுக்கு புதுவாழ்வு கொடுக்க இயேசு தம் வாழ்வையே சிலுவையில் இழந்தார். மீட்பு, இரட்சிப்பு, விடுதலை தேவைப்பட்ட எவருக்கும் இன்றைக்கும் இயேசு வாழ்வு அருளும் தெய்வமாக விளங்குகின்றார். கல்வியின்மை, அறியாமை, பட்டினி, வறுமை ஆகிய பலவற்றால் அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களின் அடிமைத்தளைகளை அவிழ்த்துவிடும் சேவை செய்ய அவருடைய சீடர்களாகிய நம்மை இயேசு ஊக்கப்படுத்துகிறார். சேவை செய்ய, நமக்கும் இயேசு ஆவியைத் தருகிறார்! அன்பின் சேவை செய்ய ஆண்டவரின் ஆவி அருளப்படுகிறது! பட்டினியைப் போக்க, வியாதியை நீக்க, உடல் ஊனமுற்றவருக்கு துணைசெய்ய ஆவியானவர் நம்மை ஆற்றல்படுத்துகிறார்.
சேவை செய்துபாருங்கள். உங்களிடத்தில் ஆவியின் அனுக்கிரகம் இருப்பதைப் புரிந்துகொள்வீர்கள். முயன்று பாருங்கள்.
எளியோரின் தோழனாகிய எங்கள் கடவுளே, நலிந்த மக்களின் நலனுக்காக, உழைக்கின்ற நல்மனதைக் கொடுத்து உமது ஆவியினால் நற்பணி செய்ய என்னை பலப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.
