ஆதியாகமம் 12 : 1-5 7 செப்டெம்பர், 2018 வெள்ளி
“ நீ ஆசீர்வாதமாயிருப்பாய்… பூமியின் வம்சங்களெல்லாம், உன்னில் ஆசீர்வதிக்கப்படும்.” – ஆதியாகமம் 12 : 3
பிறந்தநாள், மணநாள், தேர்ச்சி மற்றும் பட்டம் பெறும் நாள் போன்றவற்றில், நம்மைப் பலர் வாழ்த்துகின்றனர். நம்மை வாழ்த்துகிறவர்கள், கடவுளின் வழியே நமக்குக் கிடைத்த ஆசீர்வாத வாய்க்கால்கள்… இதை நாம் நம்புகிறோமா?
“நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை நான் ஆசீர்வதிப்பேன். பூமியின் வம்சங்கள் எல்லாம் உன்னில் ஆசீர்வதிக்கப்படும்” என்று கடவுள் ஆபிரகாமுக்குக் கூறினார். பிறருடைய ஆசீர்வாதமான வாழ்க்கைக்கு ஆதாரமாக வாழ்க்கை அமைய வேண்டும் என்பது கடவுளின் திட்டம். ஆபிரகாம், கடவுளின் வார்த்தையை நம்பினார், ஏற்றுக்கொண்டார், கீழ்ப்படிந்தார், பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்ந்தார்! ஆபிரகாமின் சந்ததிகளில் ஒருவர் இயேசுகிறிஸ்து. இயேசுகிறிஸ்துவில் பூமியின் வம்சம் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுகிறது. ஆகவே, இயேசுவை விசுவாசிக்கிற எவரும் உலகத்தின் ஆசீர்வாதம். மன்னிப்பைப் பெற்ற சகேயு என்பவனை, `இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனே’ என இயேசு வாழ்த்தினார். சகேயு மன்னிக்கப்பட்டான். ஆசி பெற்ற சகேயு அனேகருக்கு ஆசீர்வாதக் காரணர் ஆனான். கிறிஸ்துவினால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டது உண்மையானால், நாம் பிறருக்கு ஆசீர்வாதங்களாக வாழ வேண்டுமல்லவா?
கடவுளின் ஆசிகளை நாமே பதுக்கிக் கொண்டு, பிறரை வெறுமையாக அனுப்பாமல் பிறருக்கும் ஆசீர்வாதமாக இருப்போம். `புறப்பட்டுப் போங்கள், சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள், நான் உங்களுடனே இருக்கிறேன்.’ இதுதான், அனேகர் நம் வழியாக ஆசீர்வாதம் பெற, நமக்கு ஆண்டவர் காட்டிய வழிமுறை. நாம் இயேசுவின் சீஷராக வாழ்வதன் வழியே, இன்னும் பலர் இயேசுவின் சீடராகிட வழியாகலாமே. இயேசுவின் வழியே இது உங்களால் முடியும். ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஆசீர்வாதமாகயிருங்கள்.
அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் அனேக மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் பொருட்டாக கிறிஸ்துவில் நீர் எங்களை அழைத்தீர். இன்றைக்கும், இந்தக் கட்டளையை நிறைவேற்ற ஆவியின் அருளை எங்களுக்குத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
