ரோமர் 8 : 26-27 11 செப்டெம்பர், 2018 செவ்வாய்
“அப்படியே ஆவியானவரும்… சொல்ல முடியாத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்கிறார்.” – ரோமர் 8 : 26
இறைவனிடம் எவற்றை, எப்படி, எப்போது கேட்கவேண்டுமென்பதை அறியாதவர்கள் நாம். சில வேளைகளில் தவறான நோக்கத்தோடு, சில காரியங்களை அவரிடம் கேட்டுவிடுகிறோம். நமது உற்ற நண்பராம் பரிசுத்த ஆவியானவர், நமக்காக, நம்மோடு சேர்ந்து வேண்டுதல் செய்கிறார் என்று தியானப் பகுதி விளக்குகிறது.
நாம் ஒழுங்காக ஜெபிக்கிறோமா? கடமைக்காக ஏனோதானோ என்று ஜெபித்ததில்லையா? பெரியவர்களின் கட்டாயத்திற்காக ஜெபித்ததில்லையா? இந்த பலவீனமான ஜெபங்களைக்கூட ஆமோதித்து வழிமொழிந்து, நம்மோடு தூயாவியானவர் ஜெபிக்கிறார். இந்தக் கருத்து நமக்கு ஆறுதலையும், நாம் ஜெபிக்க உற்சாகத்தையும் தருகிறது. ஆவியானவர் இறைவனின் திருஉளத்தை அறிகிறவர். நமது ஜெபங்களில் தவறுகள் இருக்கும்… தவறானவைகளுக்காக ஜெபித்து, தவறானவற்றைப் பெற்று, கஷ்டங்களை நாம் அனுபவித்துவிடக்கூடாதே! ஆகவே பரிசுத்த ஆவியானவர், நமது தவறான விண்ணப்பங்களைத் திருத்துகிறார்..! இல்லை இல்லை இவனுக்கு இதுதான் வேண்டும்… அவன் தெரியாமல், யோசிக்காமல் `அது வேண்டும்’ என ஜெபிக்கிறான் என பிதாவாகிய கடவுளிடம், பெருமூச்சுடன் நமக்காகப் பரிந்துரை செய்கிறார் பரிசுத்த ஆவியானவர்.
`பிதாவாகிய கடவுள் நமது ஜெபத்தைக் கேட்கக் காத்திருக்கிறார். இயேசு கிறிஸ்து வழியாக நாம் ஜெபிக்கிறோம். தூயாவியானவர் நம்மோடு சேர்ந்து ஜெபிக்கிறார்.’ கடவுள் நமக்கு ஏவலாளராகும் காட்சியைப் பார்த்தீர்களா? இப்படிப்பட்ட மேலான சகாயரை, நமக்காக ஜெபிக்கும் தூயாவியானவரைக் கொடுத்திருக்கும் இறைவனை நமது வாழ்நாளெல்லாம் துதிப்போம். இறைவனிடம், நமது சரியான தேவைகளைக் கேட்போம். அவர் நமது நன்மைக்கானவைகளை நிச்சயம் தருவார். ஏனெனில் நம்மோடு சேர்ந்து ஜெபிப்பவர் பரிசுத்த ஆவியானவர்.
எங்களோடு இணைந்து ஜெபிக்கும் ஆவியானவரே, எங்கள் பலவீனங்களை அறிந்திருக்கிறதற்காக நன்றி. எங்கள் தேவைகளை இறைவனிடம் எங்களோடு சேர்ந்து கேட்டு பெற்றுத் தர தினமும் எங்களை வழி நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.
