கொலோசேயர் 3 : 5-8 24 செப்டெம்பர், 2018 திங்கள்
“இப்பொழுதோ கோபம், மூர்க்கம், துர்க்குணம், தூஷணம்… ஆகிய இவைகளெல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்.” – கொலோசேயர் 3 : 8
கோபம், மூர்க்கத்தனம், துர்க்குணம், அவலட்சணமான பேச்சுக்கள் போன்றவை மனித வாழ்வை அசுத்தப்படுத்துகின்றன. காயீனின் கோபம், அவனுடைய சகோதரன் ஆபேலைக் கொல்லும் அளவிற்கு அவனை ஆட்டிப்படைத்தது. ஏரோது அரசனின் மூர்க்கத்தனம், யோவானின் தலையைத் துண்டிக்கக் காரணமானது.
நமது சிந்தனை, பேச்சு, செயல் அனைத்தும் தூயவைகளாக இருத்தல் வேண்டும் எனவும் கோபம், சாபம், மூர்க்கம், பரிகாசப் பேச்சுக்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்த தீயகுணங்கள் எனவும் தியானப் பகுதியில் பவுல் கூறுகின்றார்.
கோபம், உலகில் எத்தனை பேரழிவை ஏற்படுத்தினது என்பதை உலகப் போர்களின் வாயிலாக அறியலாம். இன்றும் நமது கோபம் மூர்க்கம் போன்ற தீயகுணங்களால் குடும்பத்தில், ஊரில், நாட்டில் ஏற்படும் தீமைகளை நாமே அறிவோம். நோவாவின் காலத்தில் இறைவன் மக்களின் பாவச் செயல்களைக் கண்டு வேதனையுற்று, மனித குலத்திற்கு ஓர் எச்சரிப்பாக ஜலப்பிரளயத்தால் மக்களை அழித்தார். இதன் பின்பு, உலகை இனி அழிக்க மாட்டேன் என வாக்களித்தார். ஏன்? கடவுளின் கோபம் மிகப் பயங்கரமானது. கடவுள் கொடுத்த ஒரே எச்சரிப்பு நிகழ்ச்சியில், கடவுளின் கோபத்தின் வேகத்தை மனிதர் உணர்ந்து கொள்ளுவது நன்று.
கடவுளின் அன்பையும் மன்னிப்பையும் மனிதன் தினமும் அனுபவிக்கத்தான் இயேசுகிறிஸ்துவை கடவுள் உலகில் அனுப்பினார். நீங்கள் கிறிஸ்துவோடு எழுப்பப்பட்டவர்கள், கிறிஸ்துவால் மன்னிக்கப்பட்டவர்கள், தூயவர்கள். கோபத்தையும் துர்க்குணத்தையும் களைந்து, நன்மையான மேலானவைகளை நாடுவோம். கடவுளின் அன்பு உங்களை ஆண்டு கொள்ளுகிறது. கோபம் உங்களுக்கு வரக்கூடும். ஆனால் கோபம் போன்ற துர்க்குணங்கள் உங்களை ஆண்டு கொள்ள முடியாது. ஏனெனில் நீங்கள் இயேசுவால் ஆளப்படுகிறீர்கள்.
பரிசுத்தமுள்ள கடவுளே! தீய செயல்களை நான் விட்டுவிட எனக்கு உதவி செய்யும். தூய சிந்தனை, தூய பேச்சு, தூய நடத்தை என்னை ஆட்கொள்ள என்னை நடத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.
