ஏமாற்றமா? எதிர்பார்ப்பா?
ஏசாயா 40 : 28-31 16 ஆகஸ்ட், 2018 வியாழன்
“யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்கு நான் காத்திருப்பேன் நம்பிக்கையோடே அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.” – ஏசாயா 8 : 17
பல நாட்களாக சுகவீனப்பட்டிருந்த நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன். முன்பு பார்க்கச் சென்றபொழுது, குடும்பத்தினர் பலர் அருகிலிருந்தனர். இப்போது யாருமில்லாமல் தனியாக இருந்தார். `கடவுள் என் விஷயத்திலே கண்ணை மூடிகிட்டிருக்காரேன்னு தான் சந்தேகமாயிருக்கு’ என்று திக்கித்திணறிக் கூறினார். அத்துடன்….ம் கடவுள் சித்தத்துக்குக் காத்திருக்கேன் என்றார்.
தியானப் பகுதியில், ஏசாயா தீர்க்கர் கடவுள் தன்னை இஸ்ரவேலருக்கு மறைத்துக் கொண்டதாகக் கருதுகிறார், அதன் எதிரொலிப்புதான் இந்நாளின் சிந்தனை வசனம். இஸ்ரவேல் மக்கள் கடவுளை மறந்தனர். தனது கண்டிப்பைக் காட்ட கடவுள் திட்டமிட்டார். வரப்போகும் தண்டனையைக் குறித்து, தீர்க்கன் வழியே தமது மக்களை எச்சரிக்கிறார். கடவுள் `தன்னை மறைக்கும்’ விளக்கம் இதுதான். கடவுள் தன் மக்களின் நிலையைக் காணாதிருக்கிறார் என்று பொருளல்ல. தீமையில் நிலைத்திருக்கும் மனிதரின் கேடுகளைத் தடுக்க, கடவுள் மறுத்துவிடுகிறார் சில சந்தர்ப்பங்களில் என்று பொருள். ஆனால் கடவுள் நிச்சயம் மக்களைக் கருணையுடன் சந்திப்பார். எதிர்காலத்தில் கடவுளின் மக்களுக்கு வாழ்வு கிடைக்கும் என்று ஏசாயா நம்பினார்.
உங்கள் வாழ்வில், கடவுள் தன் முகத்தை மறைத்துக் கொண்ட அனுபவம் உண்டே! காத்திருப்பு உங்களில் நம்பிக்கையை வளர்த்திருக்கலாம், அல்லது அளவுக்கு மீறிக் காத்திருந்து காத்திருந்து `என்ன குடும்பம், என்ன வாழ்க்கை’ என்று விரக்தியடைந்திருக்கலாம். விரக்தியடைய வேண்டாமே. நீங்கள் வீணாகக் காத்திருக்கவில்லையே! கடவுளின் சித்தம் நிறைவேறத்தானே காத்திருக்கிறீர்கள். முற்றிலும் கைவிடாதவர் நமது இறைவன். வாக்குறுதிகளை மறக்காதவர் அவர். அவரிடம் மீட்பு உண்டு. விடுவிக்க வல்லவர் கடவுள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். ஏமாற்றம் தவிர்ப்போம். விடுதலை வந்துகொண்டிருக்கிறது.
நன்மைகளை அருளும் இறைவா! நீர் கண்டிக்கிறவராக இருந்தாலும் அன்புள்ளவராகவும் இருக்கிறீர். எங்களுக்கு `நன்மை வரும் நேரத்தைத் தாரும்’! காத்திருந்து வாழத் துணைபுரியும். இயேசுவின் வழியே ஆமேன்.
