யோவான் 18 : 36-40 11 ஜூலை, 2018 புதன்
“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல.” – யோவான் 18 : 36
தமிழக அரசின் சின்னத்தில் குறிக்கப்பட்டிருக்கும் இரண்டு சொற்களை நினைவிற்கு கொண்டு வருவோம். வாய்மையே வெல்லும். இந்த உயரிய வார்த்தைகளின்படி நம் மாநிலம் இருக்கிறதா? தேசப்பிதா காத்திஜி வாழ்வில் சத்தியத்திற்கு மிகப்பெரிய இடம் அளித்ததை வரலாறு பேசுகின்றது.
சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறவர்கள் மனிதர்கள் எனினும் `சத்தியபரன்’ என்று நாம் இறைவனை மட்டும்தான் சொல்லமுடியும். இயேசு கிறிஸ்துவும் இந்த உண்மையை உறுதிப்படுத்தினார். அனைத்து சத்தியங்களும் அவருக்கு மட்டுமே தெரியும். மனிதர்கள் பெரும்பாலும் உண்மையை மறைத்தே வாழ்ந்து வருகிறார்கள். இதுவும் இயேசுகிறிஸ்துவுக்கு தெரியும். போலியான வாழ்வு பொய்யான நம்பிக்கை இவற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதகுலத்திற்கு `சத்தியமாக’ இயேசுகிறிஸ்து வந்தார். பலருக்கு வாழ்வின் உண்மைகள் தெரியாது. தேசத்தின் அதிபதி பிலாத்து இயேசு கிறிஸ்துவை விசாரித்தான். அவரிடம் இயேசுகிறிஸ்து, சத்தியத்தைக் குறித்து சாட்சி சொல்லவே நான் உலகத்திற்கு வந்தேன் என்று கூறினார். சத்தியமாவது என்ன என்று கேட்ட பிலாத்து சத்தியம்தான் தன் முன்னால் நிற்கிறது என்பதை உணரத் தவறிவிட்டான்.
நாம் எப்படி சத்தியத்தை அறிந்து வாழ்கிறோம்? உண்மை அல்லது சத்தியத்தை அறியாமல் வாழும்போதும் சரி, மறைத்து வாழும் போது சரி நாம் அடிமைத்தனத்திலும் அச்சத்திலும் வாழும் சூழ்நிலை உருவாகும். இதனால் தான் இயேசு கிறிஸ்து சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். கடவுளின் வார்த்தைகள் அனைத்தும் சத்தியம் என்று கூறினார். இயேசுவும் அவரது வார்த்தைகளும் வாழ்வில் இல்லாதவர்கள் உண்மையில்லாதவர்களே. நாம் சத்தியமாகிய கிறிஸ்து இயேசுவை நம்பி அவரைப் பின்பற்றி வாழ்வோம்.
சத்திய பரனாகிய கடவுளே! நாங்கள் சத்தியமாகிய இயேசுவை அறிந்து உண்மையாய் வாழ்ந்து முடிவில் ஜீவகிரீடம் பெற்றுக்கொள்ள கிருபை தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.
