கொரிந்தியர் 8 : 1-6                                               13 ஆகஸ்ட், 2018 திங்கள்

“விக்ரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தில்…. விக்கிரகமானது ஒன்றுமில்லை.” – 1 கொரிந்தியர் 8 : 4

பல தெய்வ வணக்கமுள்ள கொரிந்து நகரில் கிறிஸ்தவர்களும் வாழ்ந்தனர். கிறிஸ்தவ மக்கள் கடவுள் ஒருவரேயன்றி வேறில்லை. ஆண்டவர் இயேசுவே மக்களைப் பாவத்தினின்று மீட்கிறவர் என்ற பற்றுறுதியைக் கொண்டவர்கள். ஆனாலும் கொரிந்து நகரக் கிறிஸ்தவ மக்களில் சிலர், சிலை வணக்கம் என்பது ஒன்றுமில்லையென்றும் அந்நிய தேவர்களுக்குப் படைத்த பொருட்களைச் சாப்பிடுவதில் தவறில்லை என்றும் எண்ணினர்.

கடவுள் ஒருவரே என்பதில் பற்றுறுதிக் கொண்ட யூதமதத்திலிருந்து மனம்மாறிய கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு பல தெய்வ வணக்கம் சார்ந்த சில பழக்கங்கள் இடறலாக இருந்தன என்பதைப் பவுல் புரிந்து கொண்டார்.

பண்பட்ட விசுவாசி ஒருவர் பிறமதச் சகோதரர் ஒருவரோடு பழகலாம். அவர்கள் பண்டிகைகளில் அவர்கள் வீட்டில் விருந்துண்ணலாம். இது பண்பட்ட விசுவாசியைப் பாதிக்காமலிருக்கலாம். ஆனால் பலவீன விசுவாசியொருவர் இதனை எப்படிப் புரிந்து கொள்வார்? இத்தகைய பழக்கம் புதிய கிறிஸ்தவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடுமே. விசுவாசத்தில் பலப்படாதவருக்கு இடையூறாக இருப்பது, அவர்கள் விசுவாசத்தைக் குழப்புவது பண்பட்ட விசுவாசிக்கு சரிதானா? இதையா ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார்? அதேசமயம், வேற்று மதத்தவர் என்பதால், ஒருவரோடு பழகாமல் விலகி நிற்பதும் ஆண்டவரின் அன்பிற்கு எதிரானது என்பதையும் உணருவோம்.

கிறிஸ்துவையும், அவரது மீட்பையும் மனதில் நிறுத்தி, பிற சமயத்தவர்களின் கலாச்சாரத்தில் பண்பாட்டில் நாட்டம் காட்டுவது சரியா தவறா என்ற முடிவு எடுங்கள். நீங்கள் எடுக்கின்ற முடிவு, பிற சமயத்தவரைப் பகைக்கக் காரணமாக அமைதல் கூடாது. கிறிஸ்தவரைக் குழப்பத்தில் ஆக்காதிருக்க வேண்டும். குறிப்பாக ஆண்டவர் மகிமைப்பட வேண்டும். இறையன்பே நம்மை ஆளவேண்டும். முயற்சி செய்யுங்கள். ஆவியானவர் துணை செய்வார்.

ஒன்றான மெய்க்கடவுளே, எங்களை இக்காலத்தில் பொருளாசை போன்ற பலதெய்வ ஆராதனைக்குத் தப்புவியும். இயேசுவின் பெயரில் கேட்கிறோம். ஆமேன்.