vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

வழி நானே

யோவான் 14 : 4-7                                                                       10 ஜூலை, 2018 செவ்வாய்

“இயேசு அவனிடம் வழியும், சத்தியமும் ஜீவனும் நானே என்றார்.” – யோவான் 14 : 6

கடவுள் உலகத்தைப் படைத்தபோது பிரயாணம் செய்வதற்குப் பாதைகள், சாலைகள் ஏற்படுத்தப்படவில்லை. பூமி மலைகளால், மரங்களால் காடுகளால், பாலைவனங்களால், கடலால் ஒழுங்கற்று இருந்தது. வழிகள் ஒன்றும் உருவாக்கப்படாத நிலையில் மனிதர்கள் நடந்த பாதைகளே வழிகளாயின! பின்னர் சாலைகள் தோன்றி, விரிவடைந்து நான்கு வழிச்சாலைகளாக உருவெடுத்துள்ளதை அறிவோம்.

பாதை போடுகிறவர் கடவுள். உலக மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி பரப்பிட உலகமெங்கும் தேசங்களை இணைக்கும் பாதைகளை கடல் வழியாகவும் தந்தவர் கடவுளல்லவா! இன்று வர்த்தகங்கள் வியாபாரங்கள் செழிக்க தரை, கடல், வான் என உருவான பாதைகளும் வழிகளும் கடவுளின் புகழையே சொல்கின்றன.
கடவுளோடு இணைந்து வாழும்படி நாம் படைக்கப்பட்டோம். பாவத்தினால் இந்த வாழ்வை நாம் இழந்துபோனோம். கடவுளோடு இணையும் வழிகளை மனிதன் தன் அறிவுக்குட்பட்டுக் காண முயற்சித்துத் தோல்வியடைந் தான். கடவுள் நம்மீது அன்பு கூர்ந்து தம்மை அடையும் வழியாக இயேசுவைத் தந்தார். கடவுள் நமக்குத் தந்திருக்கிற மிகப்பெரிய வழி இயேசுகிறிஸ்துவே! உலகில் இன்று காணப்படும் அத்தனை வழிகளையும் மனிதகுல நன்மைக்காக கடவுள் இயேசுவில் அமைத்துத் தந்திருக்கிறார்.

இன்று வழிதெரியாதவர்கள் விலாசத்துடன் அலைகிறார்கள். பிழைக்க வழி தெரியாதவர்கள் பள்ளங்களில் வீழ்ந்து கிடக்கிறார்கள். நானே வழி என்று கூறி நம்மை வழி நடத்தும் கிறிஸ்துவை மறந்து விட்டீர்களா? இயேசு கிறிஸ்து நடந்து வந்த பாதையிலும் முட்கள் கிடந்தன. விழுதல் இருந்தது. வேதனைகள் இருந்தன எனினும் கடவுளோடுள்ள உறவிலும் அவர் வார்த்தையின்படியும் இயேசு வாழ்ந்தார். எனவே அவரின் வாழ்வு வெற்றியாக இருந்தது. அவர் மகிமையும் மேன்மையும் அடைந்தார்.

இயேசு கிறிஸ்துவே நம் வழி! அந்த வழியில் சிறிதும் தடம் புரளாமல் நடந்து செல்வோம். இயேசு நடந்த வழிகளில் நம் கால்கள் நடந்து முடிவில் நித்திய பேரின்பம் காண்போம்.

வழிகாட்டும் இறைவா! ஏதும் அறியாத எங்களுக்கு பாதை தவறிய எங்களுக்கு, வழிகளைத் திறந்து தந்து ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.

வழி நானே2018-07-09T10:30:57+00:00

மனுஷகுமாரன் நானே

யோவான் 3 : 12-15                                                          ஜூலை, 2018 புதன்

“மனுஷகுமாரனும், விசுவாசமாயிருக்கிறவன் எவனும் அவருக்குள் நித்திய ஜீவனைப் பெறும்படி உயர்த்தப்படவேண்டும்.” – யோவான் 3 : 15

ஆதாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டான். பாவத்தில் விழுந்ததால் கடவுளின் சாயலை இழந்தான். எனினும் கடவுள் தனது சாயல் முழுவதையும் இயேசு கிறிஸ்துவில் வைத்து அவரை தேவகுமாரனாகவும் மனித குமாரனாகவும் நமக்குத் தந்தார். இயேசு கிறிஸ்துவும் அநேக தருணங்களில் தன்னை மனித குமாரன் என்று வெளிப்படுத்தவே விரும்பினார் என்பதைத் திருமறை விளக்குகிறது. மனித குமாரன் சிலுவையில் உயர்த்தப்படவேண்டும் (யோவான் 3:14) என்றும் பரலோகம் சென்ற மனித குமாரன் மறுபடி வருவார் என்றும் (மாற்கு 13:26) தன்னைப்பற்றி கூறினார்.

பொதுவாக இயேசுகிறிஸ்து மனித குமாரன் என்று பெயர் பெற்றிருந்தாலும் மனித குமாரனின் ஆளுகையே நமக்கு ஆசீர்வாதமாகும். மனித குமாரனின் நித்யகால ஆளுகையை கடவுள் அவரிடத்தில் கொடுத்திருக்கிறார். அவரது ராஜரீக ஆளுகையில் தான் நாம் நீதியையும் சமாதானத்தையும் பெற்று வாழ்கிறோம். அவர் மனித குமாரனாக இருக்கிறபடியால் நமக்கு ஊழியம் செய்கிறவராகவும் இருக்கிறார்.

இயேசுவில் கடவுள் நமது தேவைகளைச் சந்திக்கிறார். நமக்குத் துணை நிற்கிறார். நம்மைப் பராமரித்துக் கொள்கிறார். இதன்மூலம் மனிதகுமாரன் ஊழியம் செய்கிறவராக வந்தாரே தவிர ஊழியம் கொள்ளுகிறவராக வரவில்லை என்ற உண்மையை அறிந்து கொள்ளலாம். உலகோரை மீட்கும் பொருட்டு வந்த இந்த மனித குமாரனாலே இயேசுகிறிஸ்து நம்மை மீட்க ஆளுகை செய்திட நம்மை அவர் கரங்களில் ஒப்புவிப்போம்.

நித்திய கடவுளே! நீர் மனித குமாரனாக கிறிஸ்து இயேசுவை தந்ததற்காக நன்றி செலுத்துகிறோம். அவரில் எங்களுக்கு இன்றும் என்றும் உதவிகள் தந்து வழி நடத்தும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! ஆமேன்.

மனுஷகுமாரன் நானே2018-07-04T05:23:46+00:00

சீர்படு – சீர்படுத்து

1 இராஜாக்கள் 15 : 12-15                                                        26 ஜுன், 2018 செவ்வாய்

“நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் செய்கைகளையும் குறைவறச் சீர்ப்படுத்தி…” – எரேமியா 7 : 5

எரேமியாவின் ஏழாம் அதிகாரம், எரேமியாவின் `ஆலயப்பிரசங்கம்’ எனப்படுகிறது. யூதர்களில் பலர் தேவாலயத்தை தங்கள் பாவங்களை மறைக்கும் முகமூடியாக்கிக் கொண்டனர். இஸ்ரவேலருக்கு சமய வாழ்வில் இருந்த ஈடுபாடு சமூக வாழ்வில் இல்லாமல் போயிற்று. வறியவன் என்றும், எளியவன் என்றும் இல்லாதவன் என்றும், இருப்பவன் என்றும் ஏற்றதாழ்வு மலிந்து கிடந்தது. ஆதரவற்றவர்கள் கவனிக்கப்படவில்லை. சமூகக் கேடுகளுக்கும் `கடவுளின் ஜனமாகிய’ பரிசுத்த மக்களுக்கும், சம்பந்தம் இல்லை என நினைத்தனர்.

இன்றும் இதே நிலை தொடருகிறது. சமய வாழ்வும், சமூக வாழ்வும் இரண்டறக் கலந்ததே! ஆனால், இரண்டும் கலந்ததே இறைவன் விரும்பும் வாழ்வு என்பதை நாமும் மறந்துவிட்டோம்.

கிறிஸ்தவன், திருச்சபை, இரட்சிக்கப்பட்டவன் எனும் பரிசுத்தப்போர்வைக்குள் முடங்கிக் கொள்ளப் பார்க்கிறோம். சமூகச் சீர்கேடுகளைச் செய்ய அங்கீகாரமாக, சமய வாழ்வு சிலருக்குப் பக்திப் போர்வையாய் மாறிவிடுகிறது.

நமது வழிகளையும் செயல்களையும் முதலாவது சீர்படுத்துவோம். பிறருக்கு நலமானதை, நன்மையானவைகளை நியாயமாய் அவர்களுக்குரியதை அவர்கள் பெற வழிகாணுவோம். சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் குரல் கொடுக்கிறோமா? எளியோருக்கு அநீதி இழைக்கும்போது, அவர்களுக்காக நாம் போராடுகிறோமா? இவ்வாறு அநீதியை எதிர்த்து குரல்கொடுப்பதும் ஆலயத்திருப்பணிக்குச் சமமானதே. சமூகம் நம் வாழ்வின் பின்னணி! நம் வழிகளைச் சீர்படுத்தி, மக்களின் நல்வாழ்வுக்கு நாம் பின்பலமாக இருப்பதைக் கடவுள் விரும்புகிறார். செம்மையான சமூக நலத்திற்குக் கடவுள் தமது கிருபையைத் தருகிறார். இன்று நாம் செய்யப்போகும் சமூக நலம் என்ன?

பரிசுத்தமுள்ள கடவுளே! என்னை உமது வார்த்தைக்கு இசையச் சீர்படுத்தும். பாதிக்கப்பட்டவரைப் பரிவுடன் கவனித்து என்னாலான உதவியைச் செய்ய என்னைப் பயன்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

சீர்படு – சீர்படுத்து2018-06-25T05:17:20+00:00

புறங்கூறல்

நீதிமொழிகள் 18 : 1-8                                                                       19 ஜுன், 2018 செவ்வாய்

“கோள் சொல்பவனின் சொற்கள்…. வயிற்றுக்குள்ளே சென்று தங்கும்.” – நீதிமொழிகள் 26 : 22

இன்றைய நமது தியானப் பகுதியிலும், வாசிப்புப் பகுதியிலும், கோள் சொல்பவனைப் பற்றியும் அவனது வார்த்தைகளின் தீயவிளைவுகள் பற்றியும் அறிகிறோம்.

ஒருசிலரைக் கோள் சொல்லி என்று கூறுவார்கள். இவர்கள் நாவை அடக்காதவர்கள், பிறர் மீது அன்பில்லாதவர்கள்! தூற்றித் திரிகிறவர்கள், இரகசியங்களை வெளியிடுகிறவர்கள், சண்டையை உண்டுபண்ணிப் பிரிவினையை உண்டாக்குகிறவர்கள்… என நாம் அறிவோம். கோள் சொல்பவன் சொற்கள் இனிய உணவைப் போன்றவை! வயிற்றுக்குள்ளே போய் தங்கும்! இது தியான வாக்கின் விளக்கம். இதில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கோள் `இனிய உணவு’ எனப்படுகிறது. அதாவது கோள் சொல்வது எல்லாருக்கும் பிடிக்கும். கோள் கேட்பதும் எல்லாருக்கும் பிடிக்கும். நான் கோள் சொல்லவில்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் கோள் கேட்கவில்லையா? கோள் சொல்வதைக் கடவுள் வெறுக்கிறார். அதுபோன்றே கோள் கேட்பதையும் கடவுள் வெறுக்கிறார். கோள் கேட்பதில் பிரியம் காட்டுகிறீர்களா? யாரைப் பற்றிக் கோள் சொல்லப்படுகிறதோ, அவரை நீங்கள் பகைக்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

அடுத்தவன் தவறு செய்தால், அவனிடம் பேச தைரியம் இல்லையா உங்களுக்கு? அப்படியானால் இதைப்பற்றி யாரிடமும் பேசாதீர்கள். `அயலானைப் பற்றி நன்மையானவைகளைப் பேசி, அவனுக்குப் புகழ் சேர்த்து…’ என்று நமக்கு லுத்தர் ஆலோசனை கூறுகிறார். ஆம்! எந்த மனிதனும் கடவுளின் சாயல், கடவுளால் நேசிக்கப்பட்டவன். கடவுளின் சாயலில் உள்ள ஒரு மனிதன் மற்றொரு கடவுளின் பிள்ளையைப் பற்றிப் புறங்கூறலாகாது. புறங்கேட்கலாகாது.

இறைவா! நீர் எங்களுக்குக் கிறிஸ்துவில் காட்டிய அன்பை எப்போதும் உணர்ந்து, பிறர் நன்மைக்கு ஏற்ற நல்லவைகளையே பேசி வாழ தினமும் எமக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

புறங்கூறல்2018-06-19T05:46:59+00:00

இனிய வேதனைகள்

புலம்பல் 1 : 20-22                                               11 ஜுன், 2018 திங்கள்

“நீதிமானுக்கு நேரிடும் தீங்குகள் அநேகம், அவைகளெல்லாவற்றினின்றும் கர்த்தர் அவனை விடுவிப்பார்.”
– சங்கீதம் 34 : 19

நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றன. அது ஏன்? இறைவன் நல்லவர்களில் அன்பு வைக்கவில்லையா? நெருங்கிய உறவில் துன்பத்தின் வழியாகவும் நல்லவர்களைத் தம்முடன் இன்னும் நெருக்கமாகச் சேர்ப்பது இறைவனின் நோக்கம். எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாய் ஒத்து நடக்கச் செய்வேன் என இறைவன் வாக்குக் கொடுத்திருக்கிறாரே. கர்த்தர் தமது தாசரை மீட்டுக் கொள்ளுகிறார் என இச்சங்கீதத்தில் வாசிக்கிறோம்.

தமது பிள்ளைகளுக்கு துன்பம் துயரம் வருங்காலத்தில், அவர்களை விடுவித்துக் காப்பதோடு மட்டுமல்ல, அச்சமயங்களில் தமது பிள்ளைகள் பாவம் – தவறு செய்யாதபடிக்கும் பாதுகாக்கிறார் கடவுள். இயேசு கிறிஸ்துவுக்குள் இறைவன் நம்மையும் அவரது பிள்ளைகளாக்கி நீதிமான்களாக்கியிருக்கிறார். அவரது பிள்ளைகளின் இலட்சணத்தோடு நாம் வாழ முற்படும்போது, சோதனை, துன்பம், துயரங்கள் நம்மையும் அணுகலாம். ஆனாலும் அவர் நம்மைப் பாதுகாப்பார், அல்லது அவற்றைத் தாங்கும் சக்தி தருவார்.

ஆண்டவரின் சித்தத்திற்கேற்ப நாம் வாழாமல், நமது இச்சைக்கேற்ப வாழும்போது, சிலபொழுது அமோகமாக வாழ முடியும். இத்தகைய வாழ்க்கையின் வீழ்ச்சிகளிலிருந்து கடவுள் நம்மைக் காக்கத் துணை செய்வதில்லை. நமது அழிவு நிச்சயம். ஆனால் தவறு செய்யாமலேயே துன்புறுதல் – `கடவுள் நீதிமானாக்கியவர்களின் அடையாளம்’ எனும் உண்மையை உணருவோம். அன்பு காட்டினதால் பிறர் உங்களைக் கேலி செய்யலாம். உதவி செய்ததற்காக நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டியதிருக்கலாம். நியாயத்தைச் சொன்னதற்காக உங்களுக்கு `ட்ரான்ஸ்பர்’ வந்திருக்கலாம். இவை இனிய வேதனைகள்.

நீதிக்காகத் துன்புறும் நீங்கள் பாக்கியவான்கள். `இனிய வேதனைகள்’ இறைவன் அருகில் இருக்கிறார் என்ற உண்மைக்கு அடையாளங்கள்.

கிறிஸ்துவுக்குள் எங்களை நீதிமான்களாக்கிய இறைவா! துன்பங்களைச் சகிக்கத் துணை செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இனிய வேதனைகள்2018-06-08T06:26:38+00:00

கடவுளுக்குப் பகைஞர்

யோவான் 9 : 16                                         21 மே, 2018 திங்கள்

“உலக சினேகம் கடவுளுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா?” – யாக்கோபு 4 : 4

`வானத்தை மட்டும் பார்க்காதீர்கள், பூமியையும் பாருங்கள்’ என்று நேற்று படித்த தியானம் நினைவிற்கு வருகிறதா? கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுக்கு உரியவர்கள், உலகத்துக்கு உரியவர்கள் அல்ல என்பது, யாக்கோபின் கருத்து. `பிதா என்னை அனுப்பினார்… நான் உங்களை அனுப்புகிறேன், நீங்களோ உலகத்துக்குரியவர்கள் அல்ல.’ இவை இயேசுவின் சொற்கள்.

எல்லா உயிர்களும் பிராண வாயுவால் பிழைக்கின்றன. எந்த உயிரினமும் பிராணவாயு இல்லாவிட்டால் இறந்துவிடும். ஆனால் மரஞ்செடி கொடிகள் தரையில் இருந்தாலும் கரியமல வாயுவை சுவாசித்து, பிராணவாயுவை உற்பத்தி செய்கிறது, உலகுக்கு அளிக்கிறது. மரம் தரையில் நின்றாலும் உலகத்தை வாழவைக்கிறது. இது உலகச் செழிப்பின் விளக்கம். இயேசு உலகில் வாழ்ந்தாலும் உலகத்தை வாழவைத்தார். இதுதான் உலக மீட்பின் விளக்கம். அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும்போது, பெருவயிற்றுச் சோம்பேறிகள் ஆகும்போது, புகழை நாடி ஓடும்போது நாம் கிறிஸ்தவன் என அழைக்கப்படலாம். ஆனால் தாலி கட்டின புருஷனுக்கு (கிறிஸ்தவன்) துரோகம் செய்து, ஒன்றுக்கு மேற்பட்ட புருஷர்களைக் கொண்ட விபச்சாரிகள் நாம். கடினமான சிந்தனை, ஆனால் யாக்கோபு தான் இப்படிக் கூறுகிறார்.

`கடவுளின் பிள்ளையென்று சொல்லிக்கொண்டு பிறரைக் குறித்த கவலையை இல்லாமல் வாழுவது, இயேசுவின் அன்புக் குரலுக்கு கீழ்படியாமை. `இயேசு என்னை அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்லி இயேசுவின் பெயரில் சொத்து சேர்த்து உலகச் சினேகிதன் ஆவது யாக்கோபின் கூற்றுப்படி விபசாரம்.

அப்படியானால் நாம் எப்படி வாழ்வது? நாம் உலகத்திற்குள் அனுப்பப்பட்ட கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்துவிற்குரியவர்களாகவே வாழ அழைக்கப்பட்டவர்கள். இதை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

என் உரிமையாளராகிய இயேசுவே, உலகத்தை என் உடமை ஆக்குவதே என் லட்சியம் என நினைக்காதிருக்க அருள்தாரும். உலகத்தை வாழவைக்க நானும் பணி செய்ய பலம் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

கடவுளுக்குப் பகைஞர்2018-05-17T12:23:31+00:00

மீண்டும் பிழைத்தல்

யோவான் 14 : 7-11                                                           30 ஏப்ரல், 2018 திங்கள்

“மாண்ட மானிடன் மீண்டும் பிழைப்பதுண்டோ? பிழைத்தால்… நாளெல்லாம் காத்திருப்பேன்.” – யோபு 14 : 14

யோபு தன் சொத்துக்களை இழந்தான், பிள்ளைகளை இழந்தான். அவனுடைய உடல் அவனுக்கு எதிரியானது. மனைவியும் அவனைப் பழித்தாள், இந்நிலையில் மரணமே ஆசீர்வாதமான நிலைபோலாயிற்று. கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்று கூறிய யோபு பின்னால், `நான் பிறந்த நாள் அழிவதாக’ என்று கூறி சஞ்சலமடைந்தான். நண்பர்களின் ஆலோசனைகள் புத்திமதிகள் அவனை விரக்தியுடையவனாக்கின. மரணத்தை எதிர்பார்த்து நிற்கின்றான், கடவுளே, மனமுவந்து தன்னை அழித்துவிட வேண்டுமென விரும்பினான். உயிரை வெறுத்தான், மரணம் அவனை நெருங்கிற்று என்று நம்பினான். என்றாலும் ஒருநாள் தான் உயிரோடு எழுவோம் என்ற நம்பிக்கையுமிருந்தது. கடவுளின் பிரசன்னத்திலிருந்து அவன் என்றென்றும் அகன்று போக முடியாது என்ற நம்பிக்கையும் இருந்தது.

மாண்ட மனிதன் மீண்டும் பிழைப்பான், தனக்கும் ஒரு நாள் விடுதலைவரும். நோயிலிருந்து மரணத்தின் மூலமாக – மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் வழியாக விடுதலை வருமளவும் போர்ச்சேவை செய்து கொண்டு நான் காத்திருப்பேன் என்று கூறுகிறார்.

மனிதனுக்கு எத்தனை பெரிய துன்பம் ஏற்பட்டாலும், அவன் கடவுளைப் பற்றிக்கொண்டிருக்க முடியும். ஏனென்றால் கடவுள் எந்த மனிதனையும் கைவிடுவதில்லை. துன்பங்களிலிருந்து விடுதலையளிக்கும் கடவுள் நாம் எதிர்பார்க்கும் விதத்தில், முறையில் விடுதலையருள வேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கிறோம். ஆகவே ஏமாற்றமடைகிறோம். ஆயினும், கடவுள் தமது சித்தத்திற்கிசைய நமக்கு விடுதலையைக் கொடுக்கிறார்.

ஆனால் கடவுள் அருளும் விடுதலை அற்புதமானது அதிசயமானது. துன்பங்களிலிருந்து, பாவத்திலிருந்து இயேசு அருளும் விடுதலையைப் பெற்றவர்களாய் வெற்றி வாழ்க்கை வாழ்வோம்.

விடுதலை வீரரான கடவுளே, இயேசுவின் மூலம் நாங்கள் பெற்ற விடுதலையின் மேன்மையை உணர்ந்து வாழ எங்களுக்குத் துணை செய்யும். இயேசுவின் வழியே ஆமேன்.

மீண்டும் பிழைத்தல்2018-04-30T09:56:34+00:00

மிகைப்படுத்திக் காட்டும் சட்டம்

சங்கீதம் 1 23                                                           ஏப்ரல், 2018 திங்கள்

“பாவம் எங்கே பெருகினதோ அங்கே கிருபை அபரிமிதமாய்ப் பெருகிற்று.” – ரோமர் 5 : 21

`நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்’ என்னும் பழமொழியை நாம் அறிவோம். இதுபோல், பெரியதொரு தண்டனையில் இருந்து தப்பும்போது தான், சட்டத்தின் கடுமை புரியும்.

விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்ணை நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் யூதமதத் தலைவர்கள் மரணத் தீர்ப்பிடச் சொல்கிறார்கள். இயேசுகிறிஸ்து அவளுக்கு இரக்கங்காட்டி, மன்னித்து, `போ… இனி பாவம் செய்யாதே’ என்றார்.

மன்னிக்கப்பட்ட இவளுக்குத்தான், சட்டத்தின் கடுமை தெரிந்திருக்கும். நீதிச்சட்டம் ஒழுக்கத்திற்கு நல்லதுதான், சட்டத்தால் மனிதர்களை ஒழுக்கமுள்ளவர்களாக்க முடியாது. அதனால் நம்மை ஆளமுடியாது. கடவுளின் கிருபை நம்மை மன்னிக்கிறது, மாற்றி அமைக்கிறது. ஒழுக்கத்தை நமக்கும் வளர்க்கிறது. ஆகவே கடவுளின் கிருபை நம்மை ஆளமுடியும். கிறிஸ்துவின் கிருபையும், அன்பும், பாவ மன்னிப்பும், நீதிச்சட்டம் சுட்டிக்காட்டும் தண்டனையை இல்லாமலாக்குகிறது. அப்போஸ்தலன் பவுல், `பாவம் எங்கே பெருகினதோ அங்கே கிருபையும் அபரிமிதமாய்ப் பெருகுகிறது’ என்று கூறுவதின் கருத்து இதுதான்.

கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாக மனிதரின் சார்பாக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, அதன் கொடுமைக்கும் தன்னை உட்படுத்தி தண்டனையை ஏற்றதால், நம்மை மீட்டுக்கொண்டார். ஆகவே நாம் நியாயப் பிரமாணத்துக்கு இனி அடிமைகள் அல்ல.

நீதிச்சட்டத்தின் கொடுமையை அறியாமலேயே கடவுளின் அன்பை அதிகமாய்ப் பருகினவர்கள் நாம். ஆகவே பாவம் நம்மை பயமுறுத்துவதில்லை, தண்டனை நம்மை அச்சுறுத்துவதில்லை. ஆகவே பாவம் செய்ய நாம் தயங்குவதில்லை. நாம் பாவம் செய்யாமலிருக்க கிருபை பெருகுகிறது என்பதை இன்றைக்கு இப்பொழுதே நினைத்துப் பார்த்து `பாவத்தை வெறுக்கத்’ துவங்குவோம்.

அன்புள்ள இறைவா! உமது மன்னிக்கும் அன்பு, பெரியது. இதற்கு நன்றி கூறுகிறோம். இந்த மன்னிப்பை மற்றவர்கள் புரிந்து கொள்ள எங்களைக் கருவிகளாக்கும். இயேசுவின் வழியே ஆமேன்.

மிகைப்படுத்திக் காட்டும் சட்டம்2018-04-23T06:39:53+00:00

இயேசு என்னும் இலக்கு

எபிரேயர் 12 : 1-6 4                                            ஏப்ரல், 2018 புதன்

“இயேசுகிறிஸ்து ஆண்டவரென்று நாவுகள் யாவும்… அறிக்கை பண்ணும்படிக்கும் கடவுள் அவரை உயர்த்தி…” – பிலிப்பியர் 2 : 11

தியானப்பகுதி, ஆரம்பகாலத் திருச்சபையின் விசுவாச அறிக்கையின் ஒரு பகுதி போல் தெரிகிறது. இயேசுவின் வீழ்ச்சி உலக மக்களின் எழுச்சிக்குக் காரணம். தாழ்மையால், மரணத்தால் இயேசு மீட்பை நிறைவேற்றுவதால் உயர்த்தப்படுகிறார். இயேசுவின் பாடு, மரணம், அடக்கம் யாவற்றோடும் இயேசுவின் உயிர்ப்பையும் சேர்த்தே நாம் தியானிப்பது அவசியமாகிவிடுகின்றது. எருசலேமுக்குள் இயேசு நுழைந்த பொழுது குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு மக்கள் இயேசுவை வாழ்த்தினார்கள் என நாம் அறிவோம். இன்றைய தியானமும் இயேசுவை வாழ்த்த – அறிக்கையிட நம்மை அழைக்கிறது.

வாழ்த்து வாயிலிருந்து மட்டும் வரலாம். அறிக்கை மனப்பூர்வமான உணர்ச்சியின் வெளிப்பாடு.
`நாவுகள் யாவும் அறிக்கையிட! நாவுகள் யாவும் என்றால் உலகில் பிறந்த எவரும் அறிக்கையிடத்தக்க பெயர் இயேசுகிறிஸ்து. இயேசு உயர்த்தப்பட்டார், சகல முழங்கால்களும் முடங்கும்படி உயர்த்தப்பட்டார். முடங்காத முறட்டுக்கால்களுக்கும் இயேசுதான் ஆண்டவர். வானத்திலும் பூமியிலும் எனக்குறிப்பிடுகிறது வசனம், அதாவது வாழ்ந்தவர்கள், வாழுகின்றவர்கள், இனி வாழப் போகிறவர்கள் யாவருக்கும் இரட்சிப்பின் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவே. இதை யாரும் மறுக்க முடியாது. இது கடவுள் எடுத்த முடிவு. `பத்தோட பதினொண்ணு… அத்தோட இது ஒண்ணு’ என்று ஏனோ தானோ என இயேசு கிறிஸ்துவை நினைக்கவேண்டாம். பெயரளவில், பாரம்பரியமாக கிறிஸ்தவர் ஆக இருப்பதில் பயனில்லை. மனப்பூர்வமாக இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என நம்பி ஏற்கின்றீர்களா? உங்கள் அறிக்கை நாவிலிருந்து வராமல், நெஞ்சிலிருந்து புறப்பட கடவுளின் ஆவியானவர் துணை செய்யட்டும்.

கர்த்தாவே, எருசலேம் நகரில் நுழைந்த இயேசு என் மனதிலும் நுழைந்து, மனப்பூர்வமாக நான் அவரை அறிக்கையிட என்னை ஆட்கொள்ளும். இயேசுவின் வழியே ஆமேன்.

இயேசு என்னும் இலக்கு2018-04-03T11:14:16+00:00

வெற்றி பெற்றவர்

தரிசனம் 12 : 7-12                                               27 பிப்ரவரி, 2018 செவ்வாய்

“நீங்கள் கடவுளால் உண்டானவர்கள்; …உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” – 1 யோவான் 4 : 4

இந்தத் தியானப் பகுதியில் கடவுளைச் சார்ந்த மக்கள், அவர்களின் நம்பிக்கை, அவர்களின் வெற்றி பற்றியும் யோவான் குறிப்பிடுகின்றார். நீங்களோ அவர்களை ஜெயித்து விட்டீர்கள் என்ற யோவான், உறுதியாகக் கூறுகின்றது என்னவெனில் நன்மைக்கும், தீமைக்கும் நடைபெற்ற போராட்டத்தில் நன்மை வென்றது என யோவான் வாசிப்பு பகுதியில் விளக்குகிறார்.

கிறிஸ்துவைப் பின்பற்றி வாழும் மக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு இடம் கொடுக்காமல் அவர்களை வென்று வாழ வேண்டும். ஏனெனில் கடவுளுடைய பிள்ளைகள் ஜெயத்துக்குரிய பிள்ளைகளாக வாழுகின்றனர். வெற்றியைத் தருகின்றவர் பெரியவர். மனுக்குலத்திற்கும் முதன்மையானவர். உலகோர் விரும்பும் போதனைகளை இன்றைய ஊழியர்கள் தருகின்றார்கள். சரீரசுகம், உத்தியோக உயர்வு, வேலை வாய்ப்பு, பெண், மாப்பிள்ளை பார்த்தல் இவை பற்றியே தரிசனங்கள், அற்புதங்கள் அடையாளங்கள் பல பாஷைகள் சாட்சியங்கள் கூறப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் கிருபை, ஆண்டவர் தரும் இணையற்ற இலவச பாவமன்னிப்பு மறைக்கப்படுகின்றது. மனந்திருந்துதல், விசுவாசம் கடவுளின் வரம் என்பதை மறந்துவிட்டோம். இவை மனிதத் திறமைகளாக கூறப்படுகின்றன.

இக்குழப்ப வெள்ளத்தில் நாமும் அடித்துச் செல்லப்படாமலிருக்க கடவுள் அருள் தரட்டும். சத்தியத்துக்கு விரோதமான கொள்கைகள், அசைவாடும் அற்புதங்கள் போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து கடவுள் நமக்கு விடுதலை தரட்டும். இவற்றை ஜெயிக்கும் சக்தியை கடவுளே எங்களுக்குத் தாரும் எனத் தினமும் ஜெபிப்போம்.

எங்கள் தந்தையாகிய இறைவனே! தவறான போதகத்தினின்று எங்களைக் காப்பாற்றும். சரியான போதனைக்கு செயல்முறை வடிவம் தர அருள்தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

வெற்றி பெற்றவர்2018-02-26T10:05:57+00:00
Go to Top