vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

உங்களுடன் உலவுகிறவர்

மார்க்கு 6 : 45-52 19                           பிப்ரவரி, 2018 திங்கள்

“அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசமென்று எண்ணிச் சத்தமிட்டு அலறினார்கள்.” – மார்க்கு 6 : 49

இப்பகுதியைத் திரும்பவும் ஒருமுறைப் படித்துப் பாருங்கள். சில வினைச் சொற்கள் தொடர்ந்து வருகின்றன. கண்டார்கள், கலக்கமடைந்தார்கள், ஆவேசமென்றார்கள், சத்தமிட்டார்கள், அலறினார்கள். இத்தனையும் ஏன் நடந்தது? அவர்கள் எல்லாரும் இயேசுவைக் கண்டார்கள். இயேசு கடலின் மேல் நடக்கிறதைக் கண்டார்கள்.

வலைகிழியும் அளவுக்கு பேதுரு என்பவருக்கு அற்புதமாக மீன் கிடைக்கச் செய்தார் இயேசு. பேதுரு பயந்து, என்னைவிட்டுப் போய்விடும் என்றார். கதரேனர் எனும் ஊரில் கல்லறையில் திரிந்த, பேய் பிடித்தவனைச் சுகப்படுத்தச் சென்றார் இயேசு. பேய் பிடித்தவன் இயேசுவிடம் எங்களை வேதனைப்படுத்தவா வந்தீர் என்றான்.

கப்பர்நகூம் எனுமிடத்தில் ஓர் ஜெபாலயம். அங்கே அசுத்த ஆவி பிடித்தவனைக் குணப்படுத்த இயேசு சென்றார். ‘எங்களைக் கெடுக்கவா வந்தீர்’ என்று அவன் கேட்டான்.

அற்புதத்தைக் காண மனிதமனம் தவிக்கின்றது. கண்டால் அச்சப்படுகின்றது. இயேசு மனிதனை அச்சப்படுத்த விரும்பாமல் தான், தமது இரட்சிப்பின் பணியைச் சாதாரண சாமானிய வழியில், சிலுவையில் சாவில், அவமானத்தில் சாதித்து முடித்தாரோ!

ஆவேசம் என நீங்கள் அலறாமல் இருக்க மிகச்சாதாரணமாக இயேசு உங்களோடு உலவுகிறார். குழந்தையில், அண்டை அயல்வீட்டாரில், ஆசிரியரில், சபை குருவில், வேத வசனத்தில், தியானமலரில் அமைதியாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு. அமைதியான முறையில் உங்கள் அச்சம் போக்குகிறார். சாதாரண வழியில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். இயற்கையான முறையில் உங்களை வளரச் செய்கிறார். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் கிருபையாக இயேசு உங்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்! செயல்படும் ஆண்டவரோடு எப்போதும் இணைந்திருங்கள்.

ஆண்டவரே! நீங்கள் அற்புதமாகச் செயல்படும் பொழுது எங்கள் அச்சத்தை நீக்குங்கள். அமைதியாய் செயல்படும்போது உங்களை அடையாளங் காட்டுங்கள். இயேசுவின் வழியே ஆமேன்.

உங்களுடன் உலவுகிறவர்2018-02-16T06:01:25+00:00

நிறைவாழ்வு அறிமுகம்

1 கொரிந்தியர் 15 : 35-38                                       16 பிப்ரவரி, 2018 வெள்ளி

“என் தோல் முதலானவை அழுகிப் போனபின் தசையில்லாதவனாகவே நான் கடவுளைத் தரிசிப்பேன்.” – யோபு 19 : 26

யோபு என்றொரு பக்தன், உத்தம வாழ்க்கையை நடத்தி வந்தான். அவரை பிசாசு சோதித்தான். குடும்பத்தில் பலர் இறந்தனர். ஆஸ்திகள் அழிந்தன. சரும வியாதியும் யோபுவை விட்டு வைக்கவில்லை. ஆனால் யோபு, விசுவாசத்தைத் தெளிவாக உறுதியாக அறிக்கையிட்டார். `என் தோல் முதலானவை அழுகிப்போனபின் தசையில்லாதவனாகவே நான் கடவுளைத் தரிசிப்பேன்’ என்றார். மரணத்திற்குப் பின்பும் இறைவனைக் காண்பேன் என உறுதியாக நம்பினார். மனிதன் மரணத்தின் மூலம் சரீரத்தை இழக்கிறான். மரணத்திற்குப் பின்பும் மனிதன் கடவுளோடு வாழ்கின்றான். இதுவே அழியாத பேரின்ப வாழ்வு! இதை யோபு அறிந்திருந்தார். நமக்கும் சொல்கின்றார். விதை நிலத்தில் விழுந்தால் அது அழிந்து புதுச்செடியாக முளைப்பது போல, மனிதனும் புத்துயிரோடு எழும்புகிறான், இந்நிலையே உயிர்த்தெழுதல். உயிர்த்தெழுதலின் முதற் பலன் இயேசுகிறிஸ்து. அழியா வாழ்வின் துவக்கம் இங்கேயே! இப்பொழுதே! துன்பம் இருக்கலாம். தொல்லை இருக்கலாம், வியாதி இருக்கலாம். ஆனால் இவற்றோடு உயிர்த்த இயேசு இருப்பதால், நம்மிடம் அழியாப் பெருவாழ்வு துவங்கியிருக்கிறது. பாவமேதும் செய்யாத ஆண்டவர் நமக்காக ஏற்றுக்கொண்ட வலிகளை வேதனைகளை நினைத்துப் பார்ப்போம். ஆண்டு முழுவதும் நாம் அனுபவிக்கும் சமாதானம் சிலுவையை நினைத்துப் பார்க்கும் இந்த நாட்களில் நமக்குள் உருவாகட்டும்.
அழிவற்ற நிறைவான வாழ்க்கையை இயேசு நமக்கு அறிமுகப்படுத்திவிட்டார். அழியாப் பெருவாழ்வு இன்று இங்கே இப்பொழுதே கடவுளின் அருளால் துவங்குகின்றது. நம்புகிறீர்களா? சாவுக்குப் பின் கடவுளைத் தரிசிக்குமுன்பு, இப்பொழுதே கடவுளைத் தரிசிக்கிறீர்களா? நீங்கள் பாக்கியவான்.

கர்த்தாவே, குறைவுள்ள வாழ்க்கையிலும் நிறைவுள்ள வாழ்வின் துவக்கத்தை தந்தவரே, அவ்வாழ்வினை முழுமையாக அனுபவிக்க எங்களை ஆயத்தப்படுத்தும். இயேசுவின் வழியே ஆமேன்.

நிறைவாழ்வு அறிமுகம்2018-02-16T05:58:28+00:00

நாம் சார்ந்து வாழ இயேசு

மத்தேயு 3 : 13-17 7                                           பிப்ரவரி, 2018 புதன்

“கடவுள் அவரோடிருந்தபடியால் அவர் நன்மை செய்கிறவராயும்…. குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார்.” – அப்போஸ்தலர் 10 : 38

பண்டைத் தமிழ் நாட்டில் பாரி என்னும் மன்னர் ஒருவர் பரிவும், இரக்கமும் கொடைத்தன்மையும் உடைய மன்னனாக விளங்கினார். முல்லைக் கொடி ஒன்று படர இடமின்றி தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். தான் ஓட்டிவந்த தேரை முல்லைக் கொடி படர்வதற்கு தானமாகக் கொடுத்தார் என்பது கதை.

சார்ந்து வாழ்வது மனித இயல்பு. சார்ந்து வாழ வழி இல்லையெனில் மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதும் உண்மை. நாம் சார்ந்து வாழத் தகுந்த ஆதாரம் இயேசு. இயேசு நமக்காக, நமது பாவங்களின் பதிலாளாக இறந்தவர். நம்மைப் புரிந்து கொண்டவர் இயேசு. என்றும் நம்முடன் வாழ்பவர் இயேசு. பரிதவிக்கக் கூடிய விதத்தில் நமது வாழ்வு அமைந்துள்ளது. நமது நிலைமைகளைப் பரிவோடு கவனிப்பார் இல்லை. நமக்கு உதவியும் ஆதாரமும் காட்டுவோர் இல்லை. இப்படி நாம் நினைக்கிறோம். சாய்ந்து அழ ஓர் தோளும், முகம்புதைத்து அழ ஓர் மடியும் கிடைக்காதா என ஏங்குகிறோம். மனித வாழ்வை ஓர் திராட்சைக் கொடியாக இயேசு கண்டார். திராட்சைச் செடி நானே என்றார் இயேசு. இயேசுவிலிருந்து வளரும் கொடிகள் அச்செடியிலேயே படர்ந்து வாழ்வதும் இயல்புதானே.

கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாம், அவரிடமிருந்து மீட்பைப் பெற்ற நாம் எவற்றைச் சார்ந்து வாழுகின்றோம். பணம், பதவி, சாதி, அதிகாரம், குடும்பப் பெருமை இப்படி நாம் சார்ந்திருக்கும் சக்திகள், இயக்கங்கள் எத்தனையோ அல்லவா? ஒரு சிலர் பிறரைச் சேராமல், பிறரைச் சேர்க்காமல் இயங்கும் சுயநலபாண்டங்களாகவும் இருக்கிறார்கள். அவர்களாலும் யாருக்கும் நன்மை கிடைக்காது.

இயேசு கிறிஸ்துவைச் சார்ந்து வாழ்வதால் அவர் நம்மை முழுமைப்படுத்துகிறார். நமக்கு நன்மை செய்கிறார். நமது வாழ்வியல் சவால்களைச் சகிக்கவும், தாங்கவும் தாண்டிவரவும் நமக்கு பலம் தருகிறார். நாம் பிறருக்கும் பயன்படும் மக்களாகவும் வாழ, நாம் சார்ந்துள்ள இயேசு நம்மைத் தினமும் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறார்.

ஆண்டவரே எங்கள் வாழ்வில் நீர் ஓர் பிடிப்பாய் ஆணிவேராய், சுமைதாங்கியாய் இருப்பதற்காக நன்றி செலுத்துகிறோhம். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே ஆமேன்.

நாம் சார்ந்து வாழ இயேசு2018-02-06T04:51:41+00:00

வந்து கொண்டே இருக்கின்ற அரசு

லூக்கா 11 : 11-13 30                                         ஜனவரி, 2018 செவ்வாய்

“உம்முடைய ராஜ்யம் வருவதாக….” – மத்தேயு 6 : 10

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள் ஜனவரி 30. காந்தீயத்தை நாம் வாழ்ந்து காட்டுவதே அண்ணல் காந்தியை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதின் பொருளாகும். சுதந்திர அரசில் வாழுகின்ற குடிமக்களாகிய நாம், இறைவனின் அரசில் வாழுகின்றோம் என்பதையும் நினைவு கூருவோம். இறைவனின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டபோது படைப்பினங்கள் யாவற்றோடும் மனிதனுக்கு நல்லுறவு இருந்தது. இது இறை அரசின் துவக்கம். துவக்ககால மனிதர், கீழ்ப்படியாமையால் இறை அரசின் மேன்மையை இழந்தனர். பாவத்திலிருந்து மனிதரை மீட்க வந்த இயேசு, திரும்பவும் இறை அரசின் அனுபவமாக உலகில் வந்தார். ஆகவே இறை அரசு `வந்தது’ என்பது உண்மை. `வந்து கொண்டே இருக்கிறது’ என்பதுவும் உண்மை. `இனியும் வரும்’ என்பதுவும் உண்மை.

இறை அரசை மக்கள் புரிந்துகொள்ள இயேசு விரும்பினார் என்பதை `உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என்ற சொற்றொடர் விளக்குகிறது. அவருடைய ராஜ்யம் நாம் கேட்காமலே தானாகவே வரும். ஆனால் அது என்னிடத்தில் வந்திருக்கின்றதா? அதாவது நான் கடவுளின் ஆளுகைக்குள் இருக்கிறேனா? என் வழியாக கடவுளின் ஆளுகை மற்றவருக்கும் விரிவடைகிறதா? அருள், அன்பு, இரக்கம், கருணை நிறைந்த இறை அரசு எங்கும் பரவ வேண்டும். இறை அரசின் அனுபவம் பிறர் பெற, இன்று ஏதாயினும் ஒரு சிறு செயலைச் செய்வோம்.

அருள் நிறைந்த ஆண்டவரே, உமது அரசில் என்னைச் சேர்த்திருப்பதற்காக நன்றி. அதில் நிலைத்து வாழவும், பிறரை இணைத்து வாழவும் எனக்குப் பலம் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

வந்து கொண்டே இருக்கின்ற அரசு2018-01-29T06:40:43+00:00

ஒளி நிறைக

லூக்கா 11 : 33-36                                                           25 டிசெம்பர், 2017 திங்கள்

“ உன் சரீரம் வெளிச்சம் நிறைந்திருக்கும்.” – லூக்கா 11 : 36

கிறிஸ்துமஸ் தினம் இன்று. உங்கள் இல்லங்களைப் போலவே உங்கள் உள்ளங்களும் இறையொளியால் நிறைந்திருக்கிறதா?

தன்னைச் சுற்றிலும் வாழும் மக்களை அடையாளம் கண்டு கொள்ளத் தாவீது சங்கீத நூலில் முயற்சி செய்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள், பொய்யை நாடுகிறவர்கள், நெஞ்சில் பயமற்றவர்களாய் பாவம் செய்கிறவர்கள், கடவுளை நம்பாதவர்கள், தங்கள் தானியத்தால், பெருகிவரும் திராட்ச ரசத்தால் இறுமாப்புடையவர்கள்… இவர்கள் பரந்து விரிந்து இருக்கிறார்கள். இவர்களை நன்றாக அறிந்துகொள்ளவும், இவர்கள் தாவீது யார் என்று அறிந்து கொள்ளவும், கர்த்தரின் ஒளி தன் மேல் உதிக்க வேண்டும் என்று வேண்டுகிறார் தாவீது.

நமது தியான வசனம் ‘உன் சரீரம் வெளிச்சம் நிறைந்திருக்கும்’ என்கிறது. இது இயேசு கூறிய வாக்கு. நமது சரீரம் எப்படி வெளிச்சம் நிறைந்ததாயிருக்கும் என்று சிந்தனை செய்தேன். நான் சிறுவயது உடையவனாயிருந்த பொழுது, இரவில் ஒரு ஒற்றையடிப்பாதையில் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. இருபுறமும் கள்ளிச் செடிகள். எதிரில் ஒரு உருவம் வந்தது. மனதில் பயம். தப்பித்து ஓட வேண்டுமானால் அந்தப் பாதையில் இரண்டு கல் தூரமாவது திரும்பி ஓட வேண்டும்.  கையிலிருந்த சிறிய டார்ச் லைட்டை அவர் முகத்துக்குத் திருப்பினேன். வந்தவர் என் தந்தை. மனதில் பயம் நீங்கிற்று. ஆனால், அப்பா கோபத்துடன் “யாரடா என் முகத்தில் லைட் அடிப்பது” என்று கேட்டார். “அப்பா நான்தான்” என்றேன். “மகனே! இருட்டில் எதிரில் வருபவர் யார் என்று அறிய வேண்டுமானால், டார்ச் லைட்டை உன் நெஞ்சுக்கு நேராக வைத்து ஒளி வீசு. அந்த ஒளியின் பிரதிபலிப்பில் இருவரும் ஒருவரையொருவர் காணலாம்” என்றார்.

இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாவம் செய்து வாழ்கிறவர்கள் பங்களாக்களில் வாழுகிறார்கள். நேர்மையாக வாழ வேண்டுமென்போர் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள். இருள் நிறைந்த உலகுக்குள் வாழ்கிறேன் என்பது மட்டும் தெரிகிறது. ‘அந்தகாரத்திலும், மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானமான வழியில் நடத்தவும், அவ்விரக்கத்தினால் உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது’. இயேசு எனும் ஜீவ ஒளி எனது முகத்தில் படுகிறது. ‘கர்த்தரின் முகத்தின் ஒளி’ இயேசுவாகி, என் மேல் உதிக்கிறது. அந்த ஒளி பிரகாசமானது. என் மேல் படும் அந்த ஒளி பிரதிபலிக்கிறது. இருளில் இருக்கும் உலகம் இப்பொழுது நன்றாகத் தெரிகிறது. மேடு, பள்ளம், நன்மை, தீமை, எனக்குத் தெரிகிறது. அவர் ஒளி என் மேல் எப்பொழுதும் பாய்ச்சப்பட வேண்டும். அப்பொழுது என் சரீரம் வெளிச்சம் நிறைந்ததாயிருக்கும். அந்த ஒளியின் பிரதிபலிப்பால் உலகை அறிந்து, ஆபத்தின்றி, அமைதியும், ஆனந்தமும், நிறைந்தவனாய் நான் வாழ முடியும். இந்த ஜீவ ஒளியாம் இயேசு, என்னைச் சமாதானமான வழிகளில் நடத்தட்டும்.

உலகின் ஒளியாக உதித்தவரே, நானும், இன்னும் பலரும் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். வறுமையில் வாடுகின்றவருக்கும் நோயில்  துடிப்பவருக்கும் நாங்கள் வெளிச்சமாகிட உமது  ஒளி எங்கள் மீது படட்டும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஒளி நிறைக2017-12-22T23:04:17+00:00

எதிர்பார்ப்பு

ஏசாயா 9 : 6-7                                              11 டிசெம்பர், 2017  திங்கள்

“அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா.” – ஏசாயா 9 : 6

ஆதிப் பெற்றோர் பாவத்தில் வீழ்ந்த நாளில் இருந்தே, மனுக்குலம், மீட்பர் ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. எதிர்பார்த்தவர்கள், அந்த மீட்பரைப் பற்றி அற்புதமான கருத்துக்களைத் தீர்க்கதரிசனமாக உரைத்து வந்தார்கள். குறிப்பாகக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தீர்க்கதரிசிகள், எதிர்காலத்தில் ஒருநாள் வரும். அந்த நாள் கர்த்தரின் நாள் என்று அழைக்கப்படும். அந்த நாளில் இருளில் நடக்கிற ஜனங்கள் வெளிச்சத்தைக் காண்பார்கள். அடிமைத்தனத்தில் அழுத்தியிருக்கும் பாவச் சக்திகளிலிருந்து மீட்பு கிடைக்கும் என்று கூறினார்கள். நமது தியான வசனமும் அப்படிப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தில் ஒரு பகுதியாகும். `அதிசயமான ஆலோசனைக் கர்த்தா’ என்ற பெயர் எனக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறது.

பாவச் சிந்தனைகளால், பாவச் சிந்தனை நிறைந்த மக்கள் மத்தியில் வாழும் நாம் ஒவ்வொருவரும்; தவறுக்கு மேல் தவறு இழைத்து வருகிறோம். மனிதனிடத்திலிருந்து வரும் சிந்தனைகள் பாவக் கறைபட்டவை. இந்தச் சூழ்நிலையில், மனிதனைத் தேடிவரும் மீட்பர் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தாவாக வருகிறார் என்பது ஆறுதல்தானே! இவரது ஆலோசனைகள் தெய்வீகமானவை. கடவுளின் சித்தத்தை, வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் வெளிப்படுத்தி, நம்மை வழிநடத்தக்கூடியவை தெய்வீக ஆலோசனைகள்.

இருந்தாலும் என்னுடைய சுயநீதி, சுய ஞானம், சுய அறிவு, அவருடைய ஆலோசனையைக் கேட்க முடியாமல் என் மனதை மந்தப்படுத்தி விடுகிறது. எனவே என் தீய வழிகளிலிருந்து மீள முடியாமல், தீய சிந்தனைகளைப் பலமாகப் பற்றிப் பிடிக்கிறேன். ஏழை எளியவர்கள் முதல், இவ்வுலகை ஆளும் பெரிய தேசத் தலைவர்கள் வரை, ஒவ்வொருவரும் தங்கள் சிந்தனை ஆலோசனைக் கர்த்தாவாகிய இயேசுவின் சிந்தனையோடு இணைந்திருக்கிறதா, என்று தினமும் நினைத்துப் பார்த்தால், இந்த உலக மக்களின் வாழ்வு ஒளி நிறைந்த வாழ்வாக மாறும். இந்த வாழ்வு நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்க சமாதானப் பிரபுவும், ஆலோசனைக் கர்த்தாவுமான இயேசு அருள் புரியட்டும்.

கர்த்தாவே,சொந்த ஆலோசனைகளால், நிம்மதி கெட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களிடம் பலமும் சமாதானமுமில்லை. அதிசயமான ஆலோசனைக் கர்த்தாவே, என்னை முற்றிலும் மாற்றி அமைத்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

எதிர்பார்ப்பு2017-12-08T05:29:22+00:00

களிகூருங்கள்

லூக்கா 1 : 46-55                                              1 டிசெம்பர், 2017 வெள்ளி

“என் ஆவி என் இரட்சகராகிய கடவுளில் களி கூர்ந்திருக்கிறது.” – லூக்கா 1 : 47

மகிழ்ச்சியின் செய்தி உங்களைத் தேடி வருகிறது! திருமணமாகாத நிலையில், கர்ப்பவதியான மரியாள், தன் உறவினள் எலிசபெத்தை நாடிச் சென்றார். “என் ஆண்டவருடைய தாயார்” என்று மரியாளை வாழ்த்தினார் எலிசபெத்து. வயதான எலிசபெத்தின் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரு பெண்களின் மனநிலையை, உள்ளத்தின் உணர்வுகளை எண்ணிப் பார்க்கிறேன். கர்ப்பந்தரித்துள்ள வயதான பெண், திருமணமாகாமல் கர்ப்பந்தரித்திருக்கும் பெண். இருவர் மனதிலும் மனக்குழப்பம், சஞ்சலம்,வெட்கம், பிறர் அவமதிப்பார்களோ என்ற அச்சம்…ஆனால் இருவரும் அளவிட முடியாத ஆனந்தக்களிப்பில் ஒருவரையொருவர் வாழ்த்துகிறார்கள். “என் ஆண்டவரின் தாயார்”, ‘ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்’….‘உன் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப் பட்டது’…என்று ஆவியினால் நிறைந்தவர் மாத்திரமே சொல்லக் கூடிய வாழ்த்துரைகளை மரியாளிடம் எலிசபெத்து கூறினார்.

எலிசபெத்து கூறிய வாழ்த்துரையைக் கேட்ட மரியாள், தியான வசனத்தைக் கூறி ஒரு அருமையான அழகான பாடலைப் பாடுகிறார். மரியாளின் கீதம் அது. அதை முழுமையாகப் படித்தேன். ஒரு அற்புத உண்மையைக் காண்கிறேன். உலக மீட்பராம் தேவ குமாரனைப் பெற்றெடுக்கும் பெரும் பாக்கியம், ஒப்புவமையற்ற ஆசீர்வாதம் கிடைத்ததே என்பதற்காக மாத்திரம் மரியாள் களிகூரவில்லை. இரட்சகர் இயேசுவின் தாய், ‘இது முதல் எல்லாச் சந்ததியினரும் என்னைப் பாக்கியவதி’ என்பர்கள் என்பதினால் மாத்திரம் மரியாளின் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்தவில்லை.

தாழ்வானவர்கள் உயர்த்தப்படுகிறார்கள். பசியுள்ளவர்கள் நன்மைகளினால் நிரப்பப்படுகிறார்கள். வல்லமையுடையவர் பெரிதானவைகளைச் செய்துவிட்டார். பரிசுத்த நாமமுடையவர் தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார். புது உலகம், புது வாழ்வு மலர்ந்து விட்டது. எல்லாம் மரியாளின் கருவிலிருக்கிற தேவமைந்தன் இயேசுவினால் நிகழப்போகிறது. ஆகவே மரியாள் துதி கீதம் பாடினார்.

இயேசு எனக்கு, இந்த உலகின் மக்களுக்கு, மீட்பை அருள வருகிறார், வந்தார், வருவார். என் உள்ளமும் துதியுடன் கூடிய கீதம் பாடுகிறது. இவ்வுலகத்துக்கு இயேசுவின் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கும் இறைஅன்பு, இரக்கம், தயவு, பாவமன்னிப்பு, சமாதானம், சந்தோஷம் என்னைத் துதி கீதம் பாட வைக்கிறது. பாடுவேன். இயேசுவைத் துதித்துப் பாடுவேன். நீங்களும் என்னோடு சேர்ந்து பாடுங்கள். களிகூருங்கள்.

இறைவா! எனது ஆவியும் எனது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் மகிழ்ந்து, நிறைவுடன் புதிய வாழ்வைக் கண்டுகொள்ளக் கிருபை தருவீராக.  இயேசுவின் வழியே ஆமேன்.

களிகூருங்கள்2017-11-30T12:59:09+00:00

ஓய்வில்லா பணி

மார்க்கு 6 : 30-32                                           31 அக்டோபர், 2017 செவ்வாய்

“அங்கே ஒரு வீட்டுக்குட் சென்று; ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும் அவர் மறைவாயிருக்க முடியவில்லை.” – மார்க்கு 7 : 24

இயேசு கிராமம் கிராமமாக நற்செய்திப் பணி செய்தார். தியான வசனம் தீரு பட்டணத்தில் நடந்த நிகழ்வு. இயேசு இரவு பகலாக நடந்து பணி செய்தார். அவரது உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வுக்காக இயேசு கப்பலின் அடித்தட்டில் இளைப்பாறினார்.  இயேசு ஓய்வுக்காக ஒரு வீட்டுக்குள் சென்றதே இன்றைய ஆதார வசனம்.

இந்த நாள் திருச்சபை சீர்திருத்தப்பட்டதை நினைவு கூறும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வசனத்தை வாசிக்கும் பொழுது லுத்தரின் வாழ்வு நினைவுக்கு வருகிறது. வார்த் புருக் கோட்டையில் லுத்தர் மறைந்திருந்தார். அந்தக் காலத்திய திருச்சபைத் தலைமை லுத்தரைக் கொன்றுவிடத் திட்டமிட்டது. கர்த்தரோ லுத்தரின் நண்பர்களைக் கொண்டு அவரைக் காத்துக் கொண்டார். வார்த் புருக் கோட்டையில் ஒருவரும் அறியாதிருக்க விரும்பினார். ஆனால் லுத்தரும், அவரது செயல்களும் மறைவாயிருக்கவில்லை. இந்தக் கோட்டையில் இருந்த காலத்தில் அநேக கடிதங்கள், துண்டுப் பிரதிகள் எழுதினார். அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இலத்தீன் மொழியில் இருந்த வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்தார். லுத்தர் மறைந்திருந்தாலும் அவர் செயல்கள் மறைந்திருக்கவில்லை. இயேசு பிறர் அறியாதிருக்க விரும்பினாலும் இயேசுவால் மறைந்திருக்க முடியவில்லை.

தீரு பட்டணத்தில் இயேசு ஓய்வுக்காக மறைந்திருந்தார். ஆனால் சிரோபேனிக்கேயா கிரேக்கப் பெண் இயேசுவைத் தேடிக் கண்டுபிடித்து தன் மகளைப் பிடித்திருந்த பேயைத் துரத்தும்படி வேண்டிக் கொண்டாள். இயேசு அந்தப் பெண்ணின் தொடர் விசுவாச ஜெபத்தைக் கேட்டு மகளிடமிருந்த பேயை நீக்கிச் சுகப்படுத்தினார்.

மார்டின் லுத்தர் திருச்சபை சீர்திருத்த செம்மலாக செயல்பட்டார். இயேசு புது மானிடத்தின் முதல் கருவாக சீர்திருத்தவாதியாகச் செயல்பட்டார். எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற அநீதி, காசு பரிமாற்றம், வியாபாரம் இவற்றை எதிர்த்து ஆலயத்திலுள்ளவர்களைச் சாட்டையால் அடித்துத் துரத்தி `என் வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்று எழுதியிருக்கிறதே. அதை நீங்கள் கள்ளர் குகையாக்கினீர்கள்’ என்று  சீர்படுத்தினார்.

நாம் அன்பு, சாந்தம், இச்சையடக்கம், பொறுமை, மன்னிப்பு, தன்னடக்கம், ஈகை, தியாகம் போன்ற நற்குணங்களால் பலரது வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். பாவத்தில் சீர்கெட்ட என்னை இயேசு தனது இரத்தத்தினால் சீர்ப்படுத்தி புது வாழ்வு தந்தார். பாவியான அகஸ்டின் இயேசுவால் புனித அகஸ்டினாக சீர்திருத்தப்பட்டார். நாம் சீர்பட்டவராக வாழவும் சீர்கெட்ட தனி மனிதன், குடும்பம், சமூகம், திருச்சபையை சீர்ப்படுத்த நம்மை ஒரு லுத்தராக அர்ப்பணிப்போம். நம்மைச் சீர்திருத்தும் பணியில் இறையவர் செயல்பட அனுமதிப்போம்.

சீர்கெட்ட என்னைச் சீர்ப்படுத்தின இறைவா! நான் சீர்பட்டவனாக வாழவும் சீர்கெட்ட பிறருக்காக ஜெபிக்கவும், திருத்தவும் உதவும். இயேசுவின் மூலம் பிதாவே ஆமேன்.

ஓய்வில்லா பணி2017-10-30T10:52:30+00:00

அக்கினி மதில்

ஏசாயா 10 : 27-34                                            23 அக்டோபர், 2017 திங்கள்

“நானே அதற்கு சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பேன்.” – சகரியா 2 : 5

இஸ்ரவேலர்கள் சர்வ வல்ல கடவுளின் மக்கள். கடவுளின் ஜனம் பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் அந்நிய அரசனால் சிறைபட்டனர். 70 வருடங்கள் பாபிலோன் சிறையிருப்பில் இருந்தனர். பின்பு ஆயிரக்கணக்கான யூதர்கள் எருசலேம் நகருக்குத் திரும்பினர். அதற்குப் பின்பு இந்தத் தீர்க்கதரிசனம் சகரியா தீர்க்கரால் கூறப்பட்டது. இதுவே நமது தியானப்பகுதி. சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதர்கள் கண்ட காட்சி, எருசலேம் நகரம் உருக்குலைந்து கிடந்தது. நேபுகாத்நேச்சர் என்ற அரசனால் எருசலேம் நகரத்தின் சுவர்கள் பல வருடங்களுக்கு முன்னே இடிக்கப்பட்டிருந்தது. ஆலயம் முழுவதும் அழிக்கப்பட்டிருந்தது. சிறை வாழ்வில் இருந்து திரும்பிய யூதர்கள் செருபாபேல் என்பவரின் தலைமையின் கீழ் இந்த ஆலயத்தை மறுபடியும் கட்டும் பணியில் இறங்கினர். பல தடைகள் வந்தன. ஆனாலும் ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் கர்த்தர் அவர்களுக்கு அக்கினி மதிலாக இருந்தார். கடவுளின் தயவால் ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள்.

கடவுள் சத்துருக்களிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார். உடைந்து போன, உருக்குலைந்து போன குடும்பங்கள், திருச்சபைகளை மீண்டும் கட்ட, புதுப்பிக்க கர்த்தர் அக்கினி மதிலாயிருந்து செயல்படுகிறார். அவருடைய சித்தத்திற்கு பூரணமாக நாம் இணங்கி வாழ்வதற்கே அவர் அக்கினி மதிலாக இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் வனாந்தர வழிப் பயணத்தில் அக்கினி ஸ்தம்பம், மேகஸ்தம்பமாக கர்த்தர் பிரசன்னமாகி வழிநடத்திப் பாதுகாத்தார் என்பதை அறிவோம். கடவுள் இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மைப் பாதுகாக்கிறார். இயேசு நமது மேகஸ்தம்பம். இயேசு கிருபையும் சத்தியமுமுள்ளவராக நம்மிடம் தங்கியிருக்கிறார். அக்கினியாகவும் மேகமாகவும் நம்மைச் சுற்றிலுமிருந்து பாதுகாத்து நடத்துகிறார். அந்த கடவுளின் பாதுகாப்பில் மறைந்து வாழ்வோம்.

ஆபத்து, துன்பம், அழிவு நேரங்களில் அரணாக, கோட்டையாக இருக்கும் கடவுளே! நாங்கள் எப்போதும் உமது பாதுகாப்பில் வாழ உதவும். எல்லா சத்துருக்களின் தீமைக்கும் எங்களை விலக்கி உமது செட்டைகளின் மறைவில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

அக்கினி மதில்2017-10-23T04:32:34+00:00

இல்லத்தில் நற்செய்தி

மத்தேயு 10 : 1-8                                             16 அக்டோபர், 2017  திங்கள்

“காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.” – மத்தேயு 10 : 6

இறையியல் கல்லூரியில் பட்டப்படிப்பு முடிந்த பிறகு கிராமங்களில் நற்செய்திப் பணியிடங்களில் பணியமர்த்துவார்கள். அங்கு ஏழை எளிய மக்களுடன் நற்செய்திப் பணியாற்றி நல்ல பயிற்சி அனுபவம் பெற்ற பின் திருச்சபைகளில் நியமனம் செய்வார்கள்.

இயேசு பன்னிருவரை அழைத்து பயிற்சி கொடுத்து சொந்த கிராம, இன மக்களிடம் அனுப்பினார். இயேசு பாரபட்சம் உள்ளவரா என்ற கேள்வி எழலாம். இயேசு பாரபட்சம் உள்ளவர் அல்ல. உலகில் உள்ள அனைத்து மக்களும் மீட்பு பெற வந்தவர். `இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவும் இயேசு வந்தார்.’ ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லோரும் மீட்பு பெற வேண்டும் என்பது கடவுளின் திருச்சித்தம் ஆகும். இயேசு சொந்த மக்களிடம் அனுப்பக் காரணம் முதல் பயிற்சி காலத்தில் எளிய முறையில் எளிய பயிற்சி கொடுத்தார். சீடரும் இஸ்ரவேலர் என்பதால் அவர்களுக்கு இறைச்செய்தி சொல்வது எளிது. முதலில் நாம் ஒழுக்கமாக இருந்தால் தான் பிற மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்க முடியும். எனவே தனது வீட்டு மக்களாகிய இஸ்ரவேலருக்கு முதலில் நற்செய்தியை கொண்டு சென்றார். புறஜாதி மக்கள் இயேசுவை இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் சொந்த மக்கள் இயேசுவை வெறுத்தனர். ஆனாலும் நற்செய்தியைச் சொந்த மக்களாகிய இஸ்ரவேலருக்கு அறிவிக்கச் செய்தார்.

மிஷனரிமார் வழியாக நற்செய்தியைப் பெற்றவர்கள் நற்செய்திக்கு ஏற்ப வாழ்ந்து அருகாமையிலுள்ள மக்களுக்கு அறிவித்தனர். இயேசுவின் கடைசிக் கட்டளை `உலகெங்கும் சென்று நற்செய்தி சொல்லி சீஷராக்குங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து உபதேசம் பண்ணுங்கள். இதோ யுக முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களோடு இருக்கிறேன்’ என்பதாகும். இயேசு தனது வாழ்வு, பணி, செயல்களின் வழியாக ஜீவனைக் கொடுத்து நற்செய்திப் பணியாற்றி உலகத்திற்கு மீட்பைக் கொண்டு வந்தார். அதனால் நாம் சரீர, ஆன்மீக வளங்களைப் பெற்றுள்ளோம். இறைவனால் மீட்புப் பெற்ற நாம் பிறருக்கு நற்செய்தி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். கடவுளை அறிந்தும் அறியாமலும் வாழ்கின்ற மக்களுக்கு நமது வாழ்வு, நற்செய்தி வழியாக இயேசுவை அறிவிப்போம். அது மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கு `போ’ அல்லது `அனுப்பு’ என்ற நோக்கத்துடன் இறைப்பணியாற்றுவோம்.

நித்திய வாழ்வை அருளும் கடவுளே! உமது குமாரனின் நற்செய்தியின் வழியாக உமது மீட்பைப் பெற்றுக் கொண்டோம். இந்த மீட்பை வார்த்தை மற்றும் வாழ்வின் வழியாக அறிவிக்க பெலன் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

இல்லத்தில் நற்செய்தி2017-10-13T07:37:46+00:00
Go to Top