லூக்கா 11 : 33-36 25 டிசெம்பர், 2017 திங்கள்
“ உன் சரீரம் வெளிச்சம் நிறைந்திருக்கும்.” – லூக்கா 11 : 36
கிறிஸ்துமஸ் தினம் இன்று. உங்கள் இல்லங்களைப் போலவே உங்கள் உள்ளங்களும் இறையொளியால் நிறைந்திருக்கிறதா?
தன்னைச் சுற்றிலும் வாழும் மக்களை அடையாளம் கண்டு கொள்ளத் தாவீது சங்கீத நூலில் முயற்சி செய்கிறார். தன்னை அவமானப்படுத்துபவர்கள், பொய்யை நாடுகிறவர்கள், நெஞ்சில் பயமற்றவர்களாய் பாவம் செய்கிறவர்கள், கடவுளை நம்பாதவர்கள், தங்கள் தானியத்தால், பெருகிவரும் திராட்ச ரசத்தால் இறுமாப்புடையவர்கள்… இவர்கள் பரந்து விரிந்து இருக்கிறார்கள். இவர்களை நன்றாக அறிந்துகொள்ளவும், இவர்கள் தாவீது யார் என்று அறிந்து கொள்ளவும், கர்த்தரின் ஒளி தன் மேல் உதிக்க வேண்டும் என்று வேண்டுகிறார் தாவீது.
நமது தியான வசனம் ‘உன் சரீரம் வெளிச்சம் நிறைந்திருக்கும்’ என்கிறது. இது இயேசு கூறிய வாக்கு. நமது சரீரம் எப்படி வெளிச்சம் நிறைந்ததாயிருக்கும் என்று சிந்தனை செய்தேன். நான் சிறுவயது உடையவனாயிருந்த பொழுது, இரவில் ஒரு ஒற்றையடிப்பாதையில் வீட்டுக்குச் செல்ல நேர்ந்தது. இருபுறமும் கள்ளிச் செடிகள். எதிரில் ஒரு உருவம் வந்தது. மனதில் பயம். தப்பித்து ஓட வேண்டுமானால் அந்தப் பாதையில் இரண்டு கல் தூரமாவது திரும்பி ஓட வேண்டும். கையிலிருந்த சிறிய டார்ச் லைட்டை அவர் முகத்துக்குத் திருப்பினேன். வந்தவர் என் தந்தை. மனதில் பயம் நீங்கிற்று. ஆனால், அப்பா கோபத்துடன் “யாரடா என் முகத்தில் லைட் அடிப்பது” என்று கேட்டார். “அப்பா நான்தான்” என்றேன். “மகனே! இருட்டில் எதிரில் வருபவர் யார் என்று அறிய வேண்டுமானால், டார்ச் லைட்டை உன் நெஞ்சுக்கு நேராக வைத்து ஒளி வீசு. அந்த ஒளியின் பிரதிபலிப்பில் இருவரும் ஒருவரையொருவர் காணலாம்” என்றார்.
இந்த உலகத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாவம் செய்து வாழ்கிறவர்கள் பங்களாக்களில் வாழுகிறார்கள். நேர்மையாக வாழ வேண்டுமென்போர் வெறும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள். இருள் நிறைந்த உலகுக்குள் வாழ்கிறேன் என்பது மட்டும் தெரிகிறது. ‘அந்தகாரத்திலும், மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானமான வழியில் நடத்தவும், அவ்விரக்கத்தினால் உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது’. இயேசு எனும் ஜீவ ஒளி எனது முகத்தில் படுகிறது. ‘கர்த்தரின் முகத்தின் ஒளி’ இயேசுவாகி, என் மேல் உதிக்கிறது. அந்த ஒளி பிரகாசமானது. என் மேல் படும் அந்த ஒளி பிரதிபலிக்கிறது. இருளில் இருக்கும் உலகம் இப்பொழுது நன்றாகத் தெரிகிறது. மேடு, பள்ளம், நன்மை, தீமை, எனக்குத் தெரிகிறது. அவர் ஒளி என் மேல் எப்பொழுதும் பாய்ச்சப்பட வேண்டும். அப்பொழுது என் சரீரம் வெளிச்சம் நிறைந்ததாயிருக்கும். அந்த ஒளியின் பிரதிபலிப்பால் உலகை அறிந்து, ஆபத்தின்றி, அமைதியும், ஆனந்தமும், நிறைந்தவனாய் நான் வாழ முடியும். இந்த ஜீவ ஒளியாம் இயேசு, என்னைச் சமாதானமான வழிகளில் நடத்தட்டும்.
உலகின் ஒளியாக உதித்தவரே, நானும், இன்னும் பலரும் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். வறுமையில் வாடுகின்றவருக்கும் நோயில் துடிப்பவருக்கும் நாங்கள் வெளிச்சமாகிட உமது ஒளி எங்கள் மீது படட்டும். இயேசுவின் வழியே ஆமேன்.
