vaanmalar

About vaanmalar

This author has not yet filled in any details.
So far vaanmalar has created 621 blog entries.

சிறிய நாவு

யாக்கோபு 3 : 8-10                                                9 அக்டோபர், 2017 திங்கள்

“நாவும் சிறிய அவயவமாயிருந்தும் வீம்பானவைகளைப் பேசும்…. நாவும் நெருப்புத்தான்.” – யாக்கோபு 3 : 5

சிறிய செயல்கள், சிறிய வார்த்தைகள், சிறிய பாவங்கள், மனித வாழ்வில் பெரிய மாற்றங்களையும், ஆசீர்வாதங்களையும், சாபங்களையும் கொண்டு வருகிறது. முதல் மனிதன் ஆதாமின் சிறிய செயலான கீழ்ப்படியாமை உலக மக்கள் அனைவருக்கும் பாவத்தைக் கொண்டு வந்தது. தாவீதின் சிறிய பாவம் அவனுக்கு மனவேதனையையும் ஆசீர்வாத இழப்பையும் கொண்டு வந்தது. சீரியா தேசத்து அடிமைப் பெண்ணின் சிறிய நாவின் வார்த்தை நாகமானுக்கு பெரிய விடுதலையைக் கொடுத்தது. சிறிய பையனின் சிறிய உணவு ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு உணவளித்தது.

சிறிய கடிவாளம் குதிரையின் முழு சரீரத்தையும் வழிநடத்துகிறது. சிறிய சுக்கான் பெரிய கப்பலைச் சரியாக நடத்துகிறது. சிறிய நெருப்பு, பெரிய காட்டையும், அதிலுள்ள மரங்களையும், விலங்குகளையும் அழித்துவிடுகின்றன என்று வாசிப்புப் பகுதி குறிப்பிடுகிறது. நாவு நமது உணர்வுகளையும் நினைவுகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஆண்டவர் நமக்குக் கொடுத்த அற்புதமான அவயம். மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. இதயத்தின் நிறைவை நாவு பேசும். நாவைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது அழிவை உண்டாக்கும் நெருப்பு. ஒரு மனிதனைக் கோபமூட்டினால் அவன் நல்லவனா, கெட்டவனா என்பது தெரியும். அவன் வாயிலிருந்து அக்கினி கந்தகமான வார்த்தைகள் வரும். இதனாலே பிற மனிதனை சபிக்கிறான். இயேசு கிறிஸ்துவைக் கவனித்துப் பாருங்கள். அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் வல்லமையுடையதாய், அதிகாரமுடையதாய், மனிதனுடைய தேவையைச் சந்திப்பதாய், கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருவதுமாய் இருந்தது. இயேசுவின் ஒரே வார்த்தையில் நாயீன் ஊர் விதவையின் மகன் மரணத்தினின்று உயிர் பெற்றான். நூற்றுக்கதிபதியின் வேலைக்காரன் ஒரு வார்த்தையினால் சுகமானான். மரித்து நான்கு நாளான லாசரு, இயேசுவின் வார்த்தையினால் உயிர் பெற்றான். இயேசு இறையரசைப் பற்றிய உண்மைகளை எளிய உவமை வார்த்தைகளால் எளியவர், கல்லாதவரும் புரிந்துகொள்ளும்படிச் செய்தார். இயேசு தமது நாவின் திறமையினால் பரிசேயர், சதுசேயர் வேதபாரகரின் வாயை அடைத்தார். இயேசுவின் வார்த்தை, நம்பிக்கை, புது வாழ்வு, நித்திய ஜீவனைக் கொடுத்தது. நமக்கு இறைவன் கொடுத்த நாவினால் படைத்த, மீட்ட கடவுளைப் போற்றுவோம், துதிப்போம், நன்றி செலுத்துவோம். நமது நாவு பிறரைத் திட்டவோ, சபிக்கவோ, தூஷிக்கவோ தடுமாறட்டும், அஞ்சட்டும். நமது நாவு விசுவாச நெருப்பை மூட்டி சான்று பகர்ந்து கடவுளை மகிமைப்படுத்தட்டும்.

கடவுளே, நீர் கொடுத்த சிறிய நாவுக்காக நன்றி. அதைச் சரியாகப் பயன்படுத்த உதவி செய்யும். உம்மைப் புகழ்ந்து பாட, ஆராதிக்க உதவும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

சிறிய நாவு2017-10-06T13:12:51+00:00

இயேசு இனிய நண்பர்

தீத்து 1 : 1,2                                                                  4 அக்டோபர், 2017 புதன்

“தீத்து யாரென்றால் அவன் எனக்குக் கூட்டாளி, … கிறிஸ்துவின் மகிமை” – 2 கொரிந்தியர் 8 : 23

நாம் நமது குணத்திற்கேற்ற நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம். ஒத்த மனம், ஒத்த வயது, ஒத்த சுவை, ஒத்த தொழில், ஒரே இனம் போன்றவற்றின் அடிப்படையில் கூட்டாளிகளை அமைத்துக் கொள்கிறோம். பவுல் நண்பனாகிய தீத்துவைப் பற்றிக் கூறுகிறார். தீத்து ஒரு விசுவாசி பிற இனத்தை சார்ந்தவர். பவுலுடன் மூன்றாம் பிரயாணத்தில் உடன் இருந்தவர், கிரேத்தா தீவின் ஆயர், சபைகள் இவரால் வளர்ச்சி அடைந்தன. மேலும் எல்லாராலும் புகழப்பட்டவர். வழித் துணையானவர், ஊக்கமுள்ளவர், இளைஞன், உடன் ஊழியன், கடவுளின் மகிமை எனக் குறிப்பிடுகிறார்.

நண்பனில்லாத வாழ்வு குறைவுள்ள வாழ்வு. மனித வாழ்வு, வளர்ச்சி, உதவிக்கு நண்பர்கள் தேவை. என் நண்பன் நல்லவனாக இருந்தால், என் வாழ்வும் செயல்களும் நன்றாக இருக்கும். நான் தெரிந்தெடுத்த நண்பன் கெட்டவனாக இருந்தால் என் வாழ்வும் செயல்களும் கெட்டதாக இருக்கும். உன் நண்பனைச் சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்லுகிறேன் என்பது பழமொழி. திருமறையில் கடவுள் ஆதாமோடு, இளங்காற்று வீசின வேளையில் நண்பனோடு பேசுவது போல உறவாடினார். இஸ்ரவேல் மக்களுக்கு நல்ல நண்பனாயிருந்து விடுவித்து, வழிநடத்தி, போஷித்து, பாதுகாத்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானைக் கொடுத்தார்.  யோனத்தானும் தாவீதும் உயிரைக் கொடுக்கின்ற அளவுக்கு நேசித்து நல்ல நண்பர்களாயிருந்து சவுலின் கைக்கு தாவீதைத் தப்புவித்தார். இயேசு தன்னுடைய 3 1/2 ஆண்டுப் பணியில் தமது சீடர்களுக்கும், தம்மை தேடி வந்த மக்களுக்கும் சுகம் கொடுத்து, பாவத்தை மன்னித்து, மன அமைதி வழங்கி, நல்ல நண்பனாயிருந்தார். இயேசு சீடர்களை நோக்கி நான் இனி உங்களை வேலைக்காரன் எனச் சொல்லமாட்டேன், நண்பன் என்று அழைக்கிறேன் என்றார் ஒருமுறை. மத்தேயு 26 : 50-ல் தன்னைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாசை நோக்கி `சிநேகிதனே, முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்’ என்றார்.

நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்ட நல்ல நண்பர்களை நண்பர்களாக்குவோம். அவர்களோடு இணைந்து கடவுளின் மகிமைக்காகப் பணியாற்றுவோம். நமது நண்பர்கள் கிறிஸ்துவின் சிந்தையாகிய ஆத்ம ஆதாயம், சேவை, தியாகம், அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். முதலில் இயேசுவை நமது நண்பராக்குவோம். இயேசுவே நமது இனிய நண்பர்.

கர்த்தாவே, நீர் கொடுத்த நல்ல நண்பர்களுக்காக நன்றி. அவர்களோடு இணைந்து கடவுளுக்குச் சான்று பகர உதவி தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமேன்.

இயேசு இனிய நண்பர்2017-10-03T13:17:38+00:00

கரிசனை கொள்ளுகிற கடவுள்

யாத்திராகமம் 13 : 17-22                                               28 செப்டெம்பர், 2017 வியாழன்
“விடியற்காலமாகவே இயேசு கரையில் நின்றார்.” – யோவான் 21 : 4

கடவுள் கானான் நாட்டை இஸ்ரவேலருக்கு இலவசமாகக் கொடுத்தார். முற்பிதாக்களில் ஒருவராக யாக்கோபின் காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பஞ்சம் பிழைக்க இவர்கள் எகிப்து நாட்டில் குடியேறினார்கள். எகிப்தில் ஆரம்ப நாட்களில் மேன்மையுடன் வாழ்ந்தார்கள். காலஞ்செல்லச் செல்ல இஸ்ரவேலர் அடிமைகளாக்கப் பட்டார்கள். நானூற்று முப்பது வருட அடிமைத்தனம் இவர்கள் வாழ்வைக் கசந்து போகச் செய்தது. கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டார்கள். கடவுள் இந்த மக்களின் கூக்குரலைக் கேட்டார், வேதனைகளை அறிந்தார், மீட்கும்படி இறங்கி வந்தார்.

மோசேயை எழுப்பி, அவனை அரச அரண்மனையில் தலைமைத்துவப் பயிற்சி பெறச் செய்து, அவர் தலைமையில் விடுதலை பெறச் செய்து அழைத்து வந்தார். பத்து வாதைகள் எகிப்தில் ஏற்படச் செய்தார். பத்தாவதில் தலையீற்றுகள் அனைத்தும் மாண்டுபோயின. ஆனால் ஆண்டவரின் வார்த்தையின்படி தங்கள் வீட்டு வாசல்களில் ஆட்டுக் குட்டியின் இரத்தம் பூசப்பட்ட வீடுகளில் இத்தகைய உயிர் இழப்புகள் ஏற்படவில்லை. இஸ்ரவேலர் விடுதலைப் பயணத்தை ஆரம்பித்தார்கள். இரவோடு இரவாக இஸ்ரவேலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதை அரசன் அறிந்தான். அதிக கோபங்கொண்டான். இஸ்ரவேலரை அழித்து ஒழிக்க படைகளோடு புறப்பட்டான். மக்கள் வனாந்தரத்தில் வெயிலின் கொடூரத்தால் பயணிக்க முடியாத நிலையை கடவுள் அறிந்தார். இரவு நேரத்திலும் தங்குவது ஆபத்தாக முடியும் என்பது கடவுளுக்குத் தெரியும் எனவே மக்கள் சூரிய ஒளியில் சோர்ந்து போகாதிருக்க மேகஸ்தம்பத்தில் அவர்களுக்கு நிழல் தந்தார். இரவுப் பயணம் தொடர அக்கினிஸ்தம்பத்தில் அவர்களுக்கு வெளிச்சம் காட்டினார்.

கடவுளின் பிரசன்னத்தை இதன் வழியாகக் காண்பித்து இஸ்ரவேலரை இந்த மேகக் குடையில் காத்து வழி நடத்தினார். இஸ்ரவேலர் மேகத்திலும் அதில் காணப்பட்ட மகிமையிலும் கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்தார்கள்.

நமது ஆண்டவர் சிலுவையில் மரித்து உயிர்த்தார். சீடர்களுக்கு தரிசனமானார். ஆனாலும் முழுமையான நம்பிக்கை கொள்ளாமல் பேதுரு தம் தொழிலுக்குத் திரும்பினார். மற்ற சீடர்களும் அவரோடு மீன் பிடிக்கச் சென்றார்கள். இரவெல்லாம் முயற்சித்தார்கள். ஒன்றும் அகப்படவில்லை. அதிகாலை கரைக்குத் திரும்பினார்கள். கடற்கரையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அவர்களைப் பார்த்து வலையை படகின் வலப்பக்கம் போடுங்கள் என்றார். கீழ்ப்படிந்து போட்டார்கள். அதிக மீன்கள் கிடைத்தன. இத்தகைய நிகழ்வை முன் கண்ட அவர்கள் அதோடு இதை இணைத்துப் பார்த்தார்கள். சொன்னவரை உற்றுப் பார்த்தார்கள். அவர் இயேசு என்று கண்டார்கள். அதுமட்டுமல்ல சீடர்களுக்கு உணவாக அப்பமும் மீனும் ஆயத்தம் செய்து வைத்திருந்தார்.

கடவுள் நம்மையும்  அழைத்து தமது பிள்ளைகள் என்ற தகுதியை தந்து  வாழ்விக்கிறவர். நாம் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் நம்மோடிருக்கிறார். அதனால் தான் இம்மானுவேலராக நம்முடன் வாழ வந்தார். வனாந்தரப் பயணம், ஆபத்தா, பயமா, சோர்வா? ஏமாற்றமா? கடவுள் நம்மோடிருக்கிறார். கடந்த கால அனுபவங்கள் வழியாக அவரில் நம்பிக்கை கொள்ளுவோம். துணிவோடும் தைரியத்தோடும் வாழுவோம்.

எல்லாவற்றையும் ஆளுகிற கடவுளே! எங்களை இயேசுவில் அழைத்திருக்கிறீர். அழைப்பில் நிலைத்திருந்து துணிவோடு வாழ, உம்மைப் பின்பற்ற உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.

கரிசனை கொள்ளுகிற கடவுள்2017-09-28T07:47:14+00:00

ஏற்றுக்கொள்ளுவோம்

ரோமர் 14 : 7-10                                          31 ஆகஸ்ட், 2017 வியாழன்

“கிறிஸ்து… போல… நீங்களும்… ஏற்றுக்கொள்ளுங்கள்.” – ரோமர் 15 : 7

நாம் ஆண்டவருக்கு உரியவர்கள். வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் தான். குற்றம் குறையுள்ள உடன் பிறப்புகளாகிய விசுவாசிகள் இழிவானவர்களல்ல. பலவீனர்கள் அவ்வளவே. குற்றமற்ற மனிதர் உலகில் இல்லை என்பதுவே இன்றுவரையில் நடைமுறை. இவர்களுக்காகவும் இயேசு இரத்தம் சிந்தினார், மரித்தார், உயிர்த்தெழுந்தார்.

நம் எல்லாருமே இயேசுவுக்கு முன்பு நிற்கிறவர்கள் என்ற கருத்து எப்பொழுதும் நம்மை விட்டு அகலாதிருக்கட்டும்.  ரோமருக்கு எழுதப்பட்ட இப்பகுதி உறுதியான, திடமான விசுவாசிகளுக்கு எழுதப்பட்டது. பலவீனரை பலமுள்ள கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளுதல் சிறப்பு என்கிறார் பவுல். பலமற்ற கொடியை பலமுள்ள கம்பு அல்லது இன்னொரு தாவரம் தாங்கி நிற்றல் இயற்கையின் இயல்பு தானே?

பலவீனரை அற்பமாக கருதுவது இறையவர் விருப்புக்கு ஏற்புடையதல்ல. ஏனெனில் நாம் ஒவ்வொருவருமே பலவகையில் பலவீனர்கள் தான். விழுந்தவனை ஆண்டவர் நிலைநிறுத்துவார். பூமியை விட சூரியன் பெரியது. நமது கண்களுக்குச் சிறியதாகத் தெரிகிறது. இறையவரை விட்டுத் தூரமாக இருக்கிறவர்கள் நமது கண்களுக்கு அற்பமாகத் தெரியலாம். ஆனால் அது உண்மையல்ல. அவர்கள் ஆண்டவருக்கு அருகில் இருப்பவர்கள் தான். ஆண்டவரின் பார்வையில், அவருடைய சித்தத்திற்கேற்ப அவர்கள் அற்புதமாகத் தெரியலாமல்லவா? எனவே அனைவரையும் ஆண்டவருக்குள்ளாக ஏற்கவும் சரிசமமாகப் பார்க்கப் பழகவும் நாம் முன்வரவேண்டும். ஏனென்றால் சாதி சமய இன வேறுபாடின்றி, இவ்வுலக மக்கள் அனைவரும் ஆண்டவரின் பிள்ளைகள். இவர்கள் அனைவருக்காகவும் தான் கிறிஸ்து சிலுவையைச் சந்தித்தார் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் பெற்றுத் தந்த மீட்பு நம் அனைவருக்கும் பொதுவானது.

உலகின் அதிபதியே, எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் யாரையும் வெறுக்காமலும், உம்மைப் பற்றி அறியும் அறிவுக்குத் தடையாக இருக்காமலும் இருக்க எங்களுக்கு ஞானத்தைத் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

ஏற்றுக்கொள்ளுவோம்2017-08-31T17:47:34+00:00

சாதகம்

2 இராஜாக்கள் 7 : 3-11                                                24 ஆகஸ்ட், 2017 வியாழன்

“சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.” – எபேசியர் 2 : 17

மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. விண்ணரசு நெருங்கிவிட்டது என்பது நல்ல செய்தி மட்டுமல்ல. உலகம் தர முடியாத சமாதானமும் இது தான். நற்செய்தி அறிவிப்பு, விடுதலை, அகப்பார்வை அத்தனையும் இன்றைக்கு நிறைவேறிற்று. நாசரேத்து ஊரில் இருந்த தொழுகைக் கூடத்தில் அருளுரை ஆற்றியதும் சமாதான நற்செய்தி தான்.

`மௌனம் சர்வார்த சாதகம்’ என்பது வடமொழி வரி. பேசாமலிருப்பது பல காரியங்களுக்கு அனுகூலம். பல நிலைகளில் சமாதானம் நிலவச் செய்யும். இதே பார்வை சாணக்கிய நீதியிலும் காணப்படுகிறது. மௌனே கலக நாஸ்தி… மௌனம் இருக்கும் இடத்தில் கலகத்திற்கு இடமில்லை. சமாதானம் நிலவும் என்பது பொருள். சமாதானம் தான் எப்பொழுதும் எங்கேயும் சாதகநிலை.

பயப்படாதிருங்கள். உங்களுக்குச் சமாதானம். இவை இயேசு விருப்பமுடன் கையாண்டவரிகள். இறையவரின் அருகாமை. இறை அரசின் நெருக்கம் தான் மனித குலத்திற்கான சமாதானத்தின் காரணம். இந்த சமாதானம், சாந்தி, அமைதி தான் வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பு நிம்மதி.

பணத்தால், பதவியால், புஜபலத்தால் சமாதானத்தை அனுபவிக்க முடியாது. இந்த மூன்றும் தொடர்ந்து நிலைத்திட பரபரப்புடன் உழைத்துக் கொண்டே இருப்பது அவசியம்.

வாசிப்புப் பகுதியில் ஒரு நிகழ்வு. எலிசா ஒரு தீர்க்கர். நாளைக்கு இதே நேரத்தில் ஒன்று நடைபெறும். சமாரியா ஊரின் வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிப் பணத்திற்குக் கிடைக்கும். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்குக் கிடைக்கும் என்றார். சிரியா, நாட்டின் மன்னனால் சமாரியா ஊர் முற்றுகை இடப்பட்டிருந்தது. ஊரில் உணவுப் பொருள் பஞ்சம். இப்படிப்பட்ட நிலையில் எலிசாவின் செய்தி சமாதானச் செய்தி ஆயிற்று. இப்படி நடக்குமா என்றார் இஸ்ரேலியர் படைத்தலைவன். நடக்கும் நீ பார்ப்பாய். ஆனால் அனுபவிக்கமாட்டாய் என்றார். சமாதானம் அனுபவத்தில் உணரப்படல் அவசியம். அப்பொழுது தான் வாழ்க்கை நிலை சாதகமாகும். சமாதானத்தை நற்செய்தியாக நமக்கு அறிவித்த இயேசு ஆண்டவரின் பிள்ளைகள் நாம். அவருடைய சமாதானத்தில் வாழ்ந்திருப்போம்.

சமாதான காரணரே, எந்த நிலையிலும் நாங்கள் நீர் தந்த சமாதானத்தை இழந்துவிடாதிருக்க ஆவியானவர் துணைசெய்யட்டும். இயேசுவின் வழியே ஆமேன்.

சாதகம்2017-08-23T13:11:49+00:00

அக்கினிப் பரீட்சை

லூக்கா 4 : 1-13                                               22 ஆகஸ்ட், 2017 செவ்வாய்

“எல்லாம் உம்முடையதாகும்.” – லூக்கா 4 : 7

பிசாசு இயேசுவைப் பலவகை ஆசைகள் காட்டி மயங்கிடச் செய்ய முயன்றான். இயேசு தனது காலடியில் விழுந்துவிட்டால் இந்த உலகமும் அதன் நிறைவும் அவருடையதாகும் என்று சொன்னான். அக்கினிப் பரீட்சையில் இயேசு தேறினார். சாத்தான் தோற்று ஓடினான். வானதூதர் இயேசுவுக்குப் பணிவிடை செய்தனர்.

நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு. அப்பொழுது நாட்டை ஆண்டவர்கள் இங்கிலாந்து நாட்டவர். ஜஸ்டிஸ் முத்துசாமி என்பவர் ஒரு நீதிபதி. அன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு ஆஸ்திரேலியர். இந்த நீதிபதி தனது இந்திய வேலையாளைக் கடுமையாகத் தண்டித்துவிட்டார். இதனால் துன்புற்ற வேலையாள் வழக்குத் தொடுத்தார். வழக்கு ஜஸ்டிஸ் முத்துசாமி அவர்களின் கோர்ட்டுக்கு வந்தது. நீதி நிலைத்திட, ஆங்கிலேய நீதிபதி குற்றவாளி எனத் தீர்ப்பிட்டு மூன்று ரூபாய் அபராதம் விதித்தார். நீதி உயிர்பெற்றது. ஜஸ்டிஸ் முத்துசுவாமி சோதனையில் தேறினார். ஆங்கில அரசு முத்துசாமியைப் பாராட்டியது. நீதி நடுநிலையில் உறுதியாயிருந்தார் முத்துசுவாமி.

ஆசை காட்டுதல், அன்றன்று நம்மை தொட்டுக் கொண்டிருக்கிறது. நமது குடும்பங்களில், பணித்தளங்களில் நம்மைப் பணிய வைக்க அல்லது நம்மை நெறிபிறழ வைக்க எத்தனையோ விதமான ஆசைகாட்டுதல்கள் நடக்கின்றன. அல்லது பிறரை வீழ்த்த நாம் நடத்துகிறோம்.  பல ஆசைகள் நம்மைத் தீமைக்கு வழிநடத்துகின்றன. ஆனால் அவை தீமைபோலத் தெரியாமல் பகட்டான நன்மைகளைப்போலத் தெரிகின்றன. நமது புத்தியை மழுங்கச் செய்கின்றன. ஆனால் ஆசைக்கு அடிபணியாமல் வாழுதல் விசுவாச வீரம். இதையே கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பிசாசினால் நாற்பது நாள் இயேசு சோதிக்கப்பட்டார். நாற்பது நாள் ஒன்றும் உண்ணவில்லை. உடலும் உள்ளமும் சோர்ந்து மெலிந்து தள்ளாடிய நிலை. அற்புதம் செய். கல்லை அப்பமாக்கு, உன் பசியை தீர்த்துக் கொள் என ஆசைகாட்டினது பிசாசு. இதுபோன்று இன்னும் இரண்டு வகை பரீட்சைகள். அனைத்திலும் இயேசு தேறினார்.  திருவசனங்களை உச்சரித்து சாத்தானை வென்றார். நமது வாழ்விலும் இதுபோன்ற பரீட்சைகளை அடிக்கடி சந்திக்கவேண்டியிருக்கிறது. அந்தச் சூழல்களிலும் நமக்கு வேத வசனங்களே வெல்லும் வழியைக் காட்டுகின்றன. திருமறை வரிகள் தான் திறன்மிகு வாழும் வழிகளாகின்றன. ஜீவ வசனங்கள் தான் நமது சோதனை காலத்துப் பலம் என்பதை மறவாதிருங்கள். பரீட்சைகளற்ற வாழ்வு சாத்தியமல்ல. இதில் முன் அனுபவமுள்ள ஆண்டவரின் கரம் பிடித்து பரீட்சைகளை வெல்வோம்.

சர்வ வல்லவரே, உலக வாழ்வின் எல்லா சோதனைகளையும் உமது பலத்தாலே மேற்கொண்டு வாழ எங்களுக்குத் தேவையான ஞானத்தைத் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.

அக்கினிப் பரீட்சை2017-08-21T06:17:00+00:00

என்ன சொல்வேன்?

லூக்கா 5 : 1-11                                              16 ஆகஸ்ட், 2017 புதன்

“அடியேன் யாது பதிலுரைப்பேன்.” – யோபு 40 : 4

தமிழக அரசியல் கட்சிகளை நாளிதழ் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். காலில் விழுவது, போலியாகக் குனிந்து நிற்பது, வாயைப் பொத்திக் கொண்டு உட்காருவது போன்ற காட்சிகள் வழியே தங்கள் தகுதியின்மையை வெளிப்படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள்.

வாசிப்புப் பகுதியில் திரளான மீன்பிடிக்கப்பட்ட புதுமையான அற்புதமான நிகழ்ச்சி நடைபெற்றது. பேதுரு என்பவர் இந்த நிகழ்வில் தொடர்பு கொண்டிருந்தார். அற்புதம் நடத்தியவர் இயேசு. இயேசுவின் பாதங்களில் பேதுரு விழுந்தார். நான் பாவி என்றார். இயேசுவே, நீர் என்னை விட்டுப் போய்விடும் என்றார். யோபு என்பவரின் வாழ்க்கையின் அனுபவம் இன்றைய வாசிப்புப் பகுதி. நான் செத்தால் நலம் என்ற நிலைக்கு யோபு தள்ளப்பட்டார். இவர் பெருந்தனக்காரர். சொத்து, சுகம், மனைவி, பிள்ளைகள் அத்தனையும் அவரைவிட்டுப் போனது. வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இறையவரோடு, சர்வ வல்லவரோடு யோபு வழக்காடியதாக எழுதப்பட்டிருக்கிறது. இறையவர் தன்னைச் சந்தித்த உடனே யோபு ‘நான் நீசன்… ஐயோ அடியேன் யாது பதிலுரைப்பேன்’ என்றார் என்கிறது திருவசனம்.

உலகத் தேவைகளுக்காக நாம் ஏராளமாகப் படித்திருக்கலாம். பெரிய பதவிகளில் இருக்கலாம். நிறைய செல்வங்கள் சேர்த்திருக்கலாம். ஆனால் இவையேதும் இறைவனின் முன்னே மதிப்புள்ளவையல்ல. நீங்கள் பெரும் பணக்காரர் என்பதற்காக ஆண்டவர் அழைக்கும்போது உங்கள் வேலைக்காரரை அனுப்ப முடியாது. இறையவரின் ஆற்றலுக்கு முன்னே நானும் நீங்களும் ஒன்றுமில்லை. இறையவரின் அன்புக்கும் கருணைக்கும் நிகர் வேறு யாரும் இல்லை. நான் என்னைத் தாழ்த்துகிறேன். சிரம் தாழ்த்துவேன், கரம் கட்டுவேன், பணிவுடன் அவர் சொல்வதைக் கேட்பேன். நீங்களும் உங்களைத் தாழ்த்துங்கள். தலை குனிந்து கர்த்தரின் குரல் கேளுங்கள். நமக்காக, நமது பாவங்களுக்காகத் தன்னையே பலியாகத் தந்தவரின் குரல் அது. அதற்குரிய மரியாதையோடு பணிந்துகொள்ளுங்கள்.

வனாந்திரத்தின் குரலே, நாங்கள் உம்மைத் தொழவும், தாழ்மையுடன் வாழ்ந்திருக்கவும் தேவையான ஞானத்தைத் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

என்ன சொல்வேன்?2017-08-15T07:03:32+00:00

புதியது புகட்டும்

2 கொரிந்தியர் 5 : 16-18                                  7 ஆகஸ்ட், 2017  திங்கள்

“கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்… புதிதாயின.” – 2 கொரிந்தியர் 5 : 17

பழையன கழிதலும் புதியன புகுதலும் மனிதர்களால் மிகவும் விரும்பப்படுகிற ஒன்று. புதிய உணவு, புதிய உடை, புதிய உறவு இப்படி பல புதியன வாழ்வில் அடிக்கடி நம்மைச் சந்திக்கின்றன. நம்மை ஆனந்தப் படுத்துகின்றன. புலர் காலைப் பொழுதும் ஒரு புதிய நாளின் பிறப்புதானே. புதியன விரும்பாதார் எவர்? கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், பிறந்த நாள் எதுவாயிருந்தாலும் புதியன தரித்தல் தான் மவுசு என்று நினைக்கிறோம். புத்தாடை, புதுமனம், புதியபொருட்களின் வாசனை, புதிய மழைத்துளிகள் பிறப்பிக்கின்ற மண் மணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.  புதிய ருபாய் தாள்களை சிலர் பயன்படுத்த மனசின்றி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். உங்களுக்கும் இது போன்ற சில ‘புதியவை’களைப் பிடித்திருக்கலாம். தமிழர் திருநாளான பொங்கல் என்றவுடனே போகியும் நினைவுக்கு வரும். பழையன கழிதல் முதலில். பின்பு தான் புதியன போற்றப்படும்.

இந்தப் புதிய விஷயங்களில் ஒன்று தான் நாமும். வியப்பாக இருக்கிறதா? ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்து வாழ்ந்தால் அவர் தினமும் புதியதாகப் படைக்கப்படுகிறார் என்கிறது திருவசனம். பழையவை கழிந்தன. புதியன பிறந்தன, புகுந்தன. புதியன புகுதல் மட்டுமல்ல பழையன கழிதலும் இறையவரின் இன்ப ஆசிதான். தினம் தினம் புதுப்பிக்கப்படும் பாக்கியம் பெற்றவர்கள் நாம்.  

என் தந்தை ஒரு துப்பாக்கி வைத்திருந்தார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதை சுத்தம் செய்வார். நீண்ட குழலை கரிமருந்து வாடை இல்லாமல் ஈரத்துணி நுழைத்து பலமுறை துடைப்பார். காய வைப்பார். முகர்ந்து பார்ப்பார். தேவையானால், திரும்பவும் கழுவுவார். துப்பாக்கி எப்பொழுதும் புதிது போல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் குறி இலக்கு தப்பாது என்பர்.
இரட்சிப்பு, மீட்பு, பாவமன்னிப்பு என்பவை இறையவரின் புத்தாக்கப் பணியின் பலன்கள். இவை அனைத்தும் பாவிகளான நமக்காக கர்த்தர் தமது அளவற்ற அன்பின் அடையாளமாக உருவாக்கப்பட்டவை. இயேசுகிறிஸ்து சிலுவையில் துவங்கி வைத்த இப்பணி தினந்தோறும் வேதவசனங்களின் வழியே நம்மில் நடைபெறக் காத்திருக்கிறது. பழையன கழிய, புதுப்பிக்கப்பட ஆயத்தப்படுவீர். தினந்தோறும் வேதம் வாசிப்பீர், புதுப்பிக்கப்படுவீர்.

சம்பூரணரே, எமது பாவ அழுக்கை மாற்றி, தினந்தோறும் உம்மால் புதுப்பிக்கப்பட எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

புதியது புகட்டும்2017-08-05T07:35:52+00:00

செல்வம்

சங்கீதம் 14                                                         2 ஆகஸ்ட், 2017 புதன்

“நீ சேர்த்து வைத்தது யாருடையதாகும்…” – லூக்கா 12 : 20

`முன்னர் நாம் விரும்பிப் பிறந்தோமில்லை.’ முன்னும், நடுவிலும், பின்னும் நம் வசத்திலில்லை’,-

எங்கோ படித்தது, நினைவில் நின்றது, எழுதினேன். ஒருவேளை சிறிய பிழை இருக்கலாம். இது மனித வாழ்வு பற்றியது. மனித வாழ்வின் நிலையாமை, முகவரியற்ற தன்மையைக் குறிப்பிடுவது.
நம் பிறப்பு நம் விருப்புக்குள் இல்லை. நமது இறப்பும் நம் வசத்தில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் நாம் வாழுகிறோம். வாழ்க்கைச் சாமர்த்தியங்கள் என்று சொல்லி செல்வத்தைக் குவிக்கிறோம், பிறரை ஏமாற்றி, சுரண்டி சொத்துக்கள் சேர்க்கிறோம். சிலபொழுது வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி பொருளை ஈட்டிப் பாதுகாக்கிறோம். நாம் உயிருடன் இருக்கும்போது சேர்க்கிற இந்த சொத்துக்களால் அல்லது செல்வங்களால் செத்தபின் என்ன பயன்?

ஒரு பெண்மணி அதிகம் அழகுணர்ச்சி உடையவர். அவர் தான் இறந்தால் அழகான பட்டுச் சேலை கட்டி, உதட்டுச் சாயம் இட்டுத்தான் தன்னைப் புதைக்கவேண்டும் என்று தன் உறவுகளைக் கேட்டுக்கொண்டாராம். மனித வாழ்வு மற்றும் மரணம் பற்றி இந்த அம்மையாரின் மனநிலை என்னவாக இருக்கும்?

ஒரு செல்வந்தர் பற்றி இயேசு உவமைகளைக் கூறினார். அந்த உவமையின் கடைசி வரிதான் நமது தியான வரி. இதன் முடிவுரையில் இறையவரிடம் செல்வந்தனாயிரு என்றார் இயேசு. தனக்காக சொத்து சேர்ப்பவர் இறையவர் பார்வையில் வறியவர் ஆவர். இற்றுப் போகாத பணப்பையையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் சேருங்கள்’ என்கிறது வேத வசனம்.  நிலையில்லா செல்வம் பற்றி லூக்கா 3, 6, 11, 14, 16, 18, 19 அத்தியாயங்களில் இன்னும் அதிகம் எழுதப்பட்டுள்ளது. பிறருக்குக் கொடுங்கள். கொடுத்ததைத் திரும்பக் கேட்காதீர். கொடுத்தல் உங்களைச் சுத்தப்படுத்தும். ஏழைகளுக்கு விருந்திடு. செல்வத்தால் சினேகிதரைச் சேர். தரித்திரருக்குப் பங்கிட்டுக் கொடு அத்தனையும் லூக்கா எழுதியிருப்பவை.

இவற்றை உற்று நோக்குங்கள். ஆழமாகச் சிந்தியுங்கள். ஆண்டவர் அருளால் தியானியுங்கள். நமது வாழ்வு நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களுடன் இணைந்தது. அனைவருடனும் பகிர்ந்துண்டு வாழ வேண்டிய நாம் நாலுபேர் உடமையை நாமே வைத்துக்கொள்ள விரும்பலாமா? அப்படி வைத்துக்கொள்ளும் எந்தச் செல்வமாவது நமக்கு இயேசுகிறிஸ்துவின் மீட்பை வாங்கித் தரப்போகிறதா? இயேசுவின் சிலுவை வழியே நமக்கு இலவசமாகக் கிடைத்த மீட்பு ஒன்றே நமது இவ்வுலக வாழ்விற்குப் போதுமானது. இதை உணர்ந்து விண்ணுலகில் செல்வம் சேர்ந்திடும் வழியறிய இறையருள் பெறுவீர்.

பிதாவே, நாங்கள் உமது கருவிகளாக இவ்வுலகிற்குள் வந்திருக்கிறோம் என்பதை உணராமல் சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னியும். உம் சித்தப்படி வாழ எங்களைப் படிப்பியும். இயேசுவின் வழியே ஆமேன்.

செல்வம்2017-08-01T13:44:53+00:00

நேசிக்கப்படுவீர்

2 இராஜாக்கள் 17 : 38-41                                       28 ஜூலை, 2017 வெள்ளி

“அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைப் பற்றிக்கொண்டிருந்து…” – 2 இராஜாக்கள் 18 : 6

வாசிப்புப் பகுதியை வாசித்துப் பாருங்கள். வேறு தேவர்களுக்கு அஞ்சாதீர். தேவ உடன்படிக்கையை மறவாதீர் என்று இஸ்ரவேலருக்கு கர்த்தர் சொல்லியிருந்தார். ஆனால் யூத மக்கள் கர்த்தர் சொல்லைக் கேட்டு நடக்கவில்லை. ஒரு பக்கம் கர்த்தருக்குப் பயந்தனர். இன்னொரு பக்கம் விக்கிரகங்களையும் சேவித்தனர். பூரண நம்பிக்கையின்மை. தள்ளாடும் விசுவாசம். இதே நிலை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வரை அதாவது பல தலைமுறைகளையும் பாதித்தது.

தியானப் பகுதியில், எசேக்கியா என்ற அரசன் பற்றி எழுதப்பட்டுள்ளது. இவர் ஆண்டவரிடம் பற்று கொண்டிருந்தார். கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார். ஆண்டவரும் அவரோடிருந்தார். அவர் காலத்தில் மக்கள் செழித்திருந்தனர். அரசரும் எல்லாவற்றிலும் சித்தி பெற்றார். எந்த நிலையிலும் ஆண்டவரைப் பற்றிக்கொண்டிருத்தல் நமது வாழ்வைப் பாதுகாக்கும்.

ஒரு ஊரில் ஒரு நல்ல செல்வந்தர் இருந்தார். அவர் ஏழைகளுக்குத் தான தருமம் செய்தார். ஒருநாள் இரவில் ஒரு கனவு கண்டார். கனவில் ஒரு தேவதை ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதுகிறீர்கள் என்று இவர் தேவதையைக் கேட்டார். இறையவரை நேசிக்கிறவர்கள் பெயர் பட்டியலை எழுதுகிறேன் என்றார் தேவதை. அந்தப் பட்டியலில் என் பெயர் இருக்கிறதா என்று செல்வந்தர் கேட்டார். உன் பெயர் இங்கே இல்லை என்றார் தேவதை. அடுத்த இரவு வெகு நேரம் செல்வந்தர் விழித்திருந்தார். இறைவனை நேசிக்கிறவர் பட்டியலில் தன் பெயர் இல்லையே என்று வருந்தினார். எப்படியோ தூங்கிவிட்டார். அன்றைக்கும் அதே கனவு. தேவதை எழுதியதைப் பார்த்தார். எதுவுமே கேட்க விரும்பவில்லை. ஆனால் தேவதை அவரிடம் இறையவரை நேசிக்கிறவர்கள் பட்டியலில் இன்றைக்கு உன் பெயர் இருக்கிறது என்றார்.

இறையவரை நேசிக்கிறதை மெய்ப்பிக்க நற்செயல் செய்து பயனில்லை. இறையவர் அருள் தருகிறார்! வளம் தருகிறார்!  ஆவியரின் துணை இருக்கிறது! ஆகவே நல்லவை நாடு! நன்மை செய்! இயேசுவின் சிலுவை மரணத்தால் நாம் பெற்ற மீட்பிற்குக் காரணமான அளவற்ற அன்பு நமது செயல்களில் வெளிப்படட்டும். இறையவர் உன்னை நேசிக்கிறார். இறையவரால் நேசிக்கப்படுவதே பெரிய பேறு. தெய்வீகப் பேறுபெற்று வாழ்வீர்.

அளவற்ற அன்புகொண்டவரே, நாங்களும் உம்மில் நிலைத்திருந்து, உமது நேசத்தை அனுபவித்து, பிறருடனும் பகிர்ந்து கொள்ள எமக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.

நேசிக்கப்படுவீர்2017-07-27T11:42:25+00:00
Go to Top