2 இராஜாக்கள் 7 : 3-11                                                24 ஆகஸ்ட், 2017 வியாழன்

“சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.” – எபேசியர் 2 : 17

மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது. விண்ணரசு நெருங்கிவிட்டது என்பது நல்ல செய்தி மட்டுமல்ல. உலகம் தர முடியாத சமாதானமும் இது தான். நற்செய்தி அறிவிப்பு, விடுதலை, அகப்பார்வை அத்தனையும் இன்றைக்கு நிறைவேறிற்று. நாசரேத்து ஊரில் இருந்த தொழுகைக் கூடத்தில் அருளுரை ஆற்றியதும் சமாதான நற்செய்தி தான்.

`மௌனம் சர்வார்த சாதகம்’ என்பது வடமொழி வரி. பேசாமலிருப்பது பல காரியங்களுக்கு அனுகூலம். பல நிலைகளில் சமாதானம் நிலவச் செய்யும். இதே பார்வை சாணக்கிய நீதியிலும் காணப்படுகிறது. மௌனே கலக நாஸ்தி… மௌனம் இருக்கும் இடத்தில் கலகத்திற்கு இடமில்லை. சமாதானம் நிலவும் என்பது பொருள். சமாதானம் தான் எப்பொழுதும் எங்கேயும் சாதகநிலை.

பயப்படாதிருங்கள். உங்களுக்குச் சமாதானம். இவை இயேசு விருப்பமுடன் கையாண்டவரிகள். இறையவரின் அருகாமை. இறை அரசின் நெருக்கம் தான் மனித குலத்திற்கான சமாதானத்தின் காரணம். இந்த சமாதானம், சாந்தி, அமைதி தான் வாழ்க்கைக்குத் தேவையான பாதுகாப்பு நிம்மதி.

பணத்தால், பதவியால், புஜபலத்தால் சமாதானத்தை அனுபவிக்க முடியாது. இந்த மூன்றும் தொடர்ந்து நிலைத்திட பரபரப்புடன் உழைத்துக் கொண்டே இருப்பது அவசியம்.

வாசிப்புப் பகுதியில் ஒரு நிகழ்வு. எலிசா ஒரு தீர்க்கர். நாளைக்கு இதே நேரத்தில் ஒன்று நடைபெறும். சமாரியா ஊரின் வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிப் பணத்திற்குக் கிடைக்கும். இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக்குக் கிடைக்கும் என்றார். சிரியா, நாட்டின் மன்னனால் சமாரியா ஊர் முற்றுகை இடப்பட்டிருந்தது. ஊரில் உணவுப் பொருள் பஞ்சம். இப்படிப்பட்ட நிலையில் எலிசாவின் செய்தி சமாதானச் செய்தி ஆயிற்று. இப்படி நடக்குமா என்றார் இஸ்ரேலியர் படைத்தலைவன். நடக்கும் நீ பார்ப்பாய். ஆனால் அனுபவிக்கமாட்டாய் என்றார். சமாதானம் அனுபவத்தில் உணரப்படல் அவசியம். அப்பொழுது தான் வாழ்க்கை நிலை சாதகமாகும். சமாதானத்தை நற்செய்தியாக நமக்கு அறிவித்த இயேசு ஆண்டவரின் பிள்ளைகள் நாம். அவருடைய சமாதானத்தில் வாழ்ந்திருப்போம்.

சமாதான காரணரே, எந்த நிலையிலும் நாங்கள் நீர் தந்த சமாதானத்தை இழந்துவிடாதிருக்க ஆவியானவர் துணைசெய்யட்டும். இயேசுவின் வழியே ஆமேன்.